பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்கக் கருமுகைப் பூச் சூட்ட வாராய் 190
வானுலகத்தில் உள்ள தேவர்களெல்லாம் ஒன்றாக கூடிச் சூந்திருக்க, வைகுண்டத்தில் அழகிய அத்தானி மண்டபத்தில் வீற்றிருப்பவனே! அடியார்கள் மனத்தில் குடி கொண்டவனே! ஸ்ரீதேவியின் மணாளனே! ஊழிக்காலத்தில் ஏழு உலகங்களையும் உண்டு ஓர் ஆலிலையில் யோக நித்திரை கொண்டவனே! நீ பூச்சூடுவதைப் பார்த்து நான் ஆனந்திக்க வேண்டும். இந்த கருமுகைப் பூவைச் சூட நீ வருவாயாக என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஸ்ரீமந்நாராயணனின் புகழைப் பாடுவதற்காக வானத்து விண்ணோர்கள் கூடியுள்ளார்கள். அசுர பயத்தினால் தேவர்கள் அனைவரும் பெருமானைப் புகலிடம் அடைவார்கள். அவரைச் சுற்றியே அனைவரும் இருப்பார்கள். அது போன்று அடியார்கள் நெஞ்சங்களிலும் பெருமான் நினைந்திருப்பார். எனவே பக்தி நிறைந்த சான்றோர்களின் பகையை மறந்தும் தேடிக் கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். அடியார்களுக்கு தீங்கிழைப்பது இறைவனையே எதிர்ப்பது போலாகும். எனவே அடியார்களின் அடிதொழுவதே சிறந்த பண்பு என்று கூறுவர்.
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரைமன்னன் நந்த
கோன் இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்ப
தேன் அளவு செறி கூந்தல் அவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே 277
ஆதிசேஷனின் மடியில் சயனித்திருப்பதாலும், கருடனின் முதுகில் அமர்ந்திருப்பதாலும் கோவிந்தன் வைகுந்தத்தின் இளவரசன் எனப்படுகிறார். சனகாதி முனிவர்களுக்கு அவர் குழந்தை. வசுதேவருக்கு அவர் பிள்ளை. வடமதுரைக்கு அவர் அரசன். நந்தகுமாரன் என்ற பெயர் பெற்றவன். ஆயர்பாடி மைந்தனான கோவிந்தன் புல்லாங்குழலில் இனிய கீதம் எழுப்பிய போது தேவலோகத்து மங்கயைர்கள் திரள் திரளாக வந்தனர். அவர்களின் மனம் உருகியது. ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. ஓடி வரும் வேகத்தில் கூந்தல் கலைந்துபோய், நெற்றியில் முத்து முத்தாய் வியர்க்க அக்குழலோசை கேட்டு மயங்கி நின்றனர். பூவுலகில் கண்ணன் குழல் வாசிக்க வானத்து மங்கையர்கள் அதைக் கேட்டு மயங்குகின்றனர். இந்த மயங்குதல் என்பது மெய்ப்பொருளை அடைவதற்காக ஏற்படும் மயக்கம் என்பதை உணர்த்தவே தேவ மங்கையரும் கண்ணனின் குழலோசை கேட்டு மயங்கினர் என்பது இதன் கருத்தாகும்.
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே. 399
வடதிசையிலுள்ள மதுரையும், புனிதமே வடிவான சாளக்கிராமமும், வைகுண்டமும், துவாரகையும், திருஅயோத்தியும், இடமுடைத்தாயிருந்துள்ள ஸ்ரீபத்ரிகாச்ரமம் போன்றவைகளை பெருமானின் வாசஸ்தலமாக கொண்டுள்ளவனாய் உள்ளது. எமக்குப் பெருமானாக அருள்பாலித்து புருஷோத்தமனாய்த் திகழ்கின்ற ஸ்வாமியின் இருப்பிடமானது, மந்திரம் முதலான பெரிய மலைகளானவை தொடர்ந்து அதிரவும், பூமியானது பிளவுபட்டு இடிந்து விழவும், மாங்கனிகளுடைய தலையளவும் கிளம்பிக் கரையில் நிற்கின்ற மரங்களில் மோதி முறித்தும், எதற்காகவும் எள்ளளவும் கலங்காத கடலும்கூட கலங்கும்படியாக வேகமாய் கொண்டு இழியா நின்றுள்ள கங்கைநதி தீரத்தில் கண்டமென்னும் கடிநகராகத் திகழ்கின்றது என்ற கருத்தில் அமைகின்றது.
தட வரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல்
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ!
வட தடமும் வைகுந்தமும் மதில் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே. 472
மிகப் பெரிய மலையுச்சியில் தெளிவாய் நாட்டப்பட்டக் கொடியை எல்லோரும் சுலபமாகப் பார்ப்பார்கள். என் இதயத்தில் தீப ஒளி போல் விளங்கும் என் ஒளியுடைய நம்பியே! வடதிசையில் உள்ள துவாரகையும், ஸ்ரீவைகுண்டமும், திருப்பாற்கடலும் இவையெல்லாம் தள்ளிவிட்டு என் இதயத்தில் வசிக்க இடம் செய்து கொண்ட உன் அருளை என்ன சொல்லிப் போற்றுவது என்று ஆழ்வார் நெக்குருகிப் பாடுகிறார்.
இப்பாசுரத்தில் பெருமான் தீப ஒளியாகத் திகழ்கிறார் என்று கூறுகிறார் ஆழ்வார். அந்த ஒளியைக் காண்பது உலகத்தவரின் இலட்சியமாகும். அந்த இலட்சியத்தை தான் அடைந்து விட்டதாகக் கூறுகிறார் ஆழ்வார். மலையுச்சியின் கொடி போன்று துவாரகை, ஸ்ரீவைகுண்டம், திருப்பாற்கடல் விளங்குவதாக உள்ளன என்கிறார். அவர் எழுந்தருளியுள்ளதை நாம் காண முடியாது. ஆனால் உணர முடியும். எனவே நம் உள்ளத்தில் உள்ள பரம்பொருளின் கூறான தீப ஒளியை கிடைத்தற்கரிய இம்மானிடப் பிறவி கொண்டு நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்
தூபம் கமழத் துயில் அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக் கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய் 482
பரிசுத்தமான வைர வைடூரியங்கள் பதிக்கப்பெற்ற மாடத்தில், நாற்புறமும் தீபங்கள் ஒளிரவும், அகில் போன்று நறுமணப்புகை எங்கும் வீசவும், மெண்மையான படுக்கையில் உறங்கும் மாமன் மகளே! மணிகள் பதித்தக் கதவினைத் திறப்பாயாக! மாமியாரே! துயிலுறும் உங்கள் மகளை எழுப்புமாட்டீர்களோ? அவள் என்ன ஊமையோ, செவிடோ? சோம்பல் மிக்க பெண் இவளோ? அல்லது எழுந்திராதபடி காவலில் வைக்கப்பட்டுள்ளாளோ? ஏதேனும் பெரிய மந்திரத்திற்கு உட்பட்டுள்ளாளோ? இப்பெண்ணை எழுப்பி பாவை நோண்பிற்கு நான் கூட்டிச் செல்வதற்கு ‘வியத்தகு கல்யாண குணங்களை உடையவனே! வைகுண்டத்தில் உறைபவனே! திருமகளின் நாயகனே! என்றெல்லாம் எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை உறக்கச் சொல்வோம்! இனியாவது உன் மகள் இதனை உணர்ந்து துயில் எழலாமே! என்று ஆண்டாள் தன் தோழியை எழுப்ப முயல்கிறாள்.
கொல் சேயை கொல் அனந்தன் மேல் கிடந்த எம்
புண்ணியா புனந்துழாய் அலங்கல் அம் புனிதனே! 796
ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் புண்டரீகா! வனமாலை அணிந்த மார்புடைய பரம பாவனனே! நீ ஸ்ரீராமபிரானாய், கிருஷ்ணனாய் பூமியில் நெடுங்காலம் வாழ்ந்திருப்பாய். அதே சமயம் வைகுண்டத்தில் அடியார்களுக்குக் காட்சி தருகிறாய். இவ்வுலக மாயையில் சிக்கியுள்ளவர்கள் நினைக்கின்ற நினைப்புக்கு அகப்படாமல் இருக்கிறாய். உன்னிடம் பக்தியுள்ள அன்பர்கள் கண்ணிலேயே வாழ்கிறாய். உன் பக்தர்களின் எதிரிகளுக்கு வெகு தூரத்தில் இருக்கிறாய். இது என்ன அற்புதம்? இப்பாடலில் பகவானின் மாயக் காட்சிகளின் பெருமைகளை வெகு அழகாக ஆழ்வார் கூறுகிறார். இவ்வுலக மக்கள் மாயையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களுக்கு காட்சி தராமல் இருக்கிறார். அவ்வமயம் பக்தர்களின் கண்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பக்தர்களின் எதிரிகளுக்கு வெகு தொலைவில் இருக்கிறார். எனவே பக்தர்களுக்கு தீங்கிழைத்தால் அதன் பலனை உடனே அனுபவிக்குமாறு பகவான் செய்து விடுகிறார்
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
நாக் கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆகத்
தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு 2456
நெருப்பு போன்ற சிவந்த சடையைக் கொண்ட சிவபெருமான் பரந்தாமனைப் போற்றிப் பாடுகிறார். ஸ்ரீ வைகுண்டத்தில் பெருமானின் திருப்பாதங்களை நாளும் போற்றுவனேயன்றி, திருப்பாசுரங்களைப் பாடும் நாவால் இவ்வுலக மாந்தர்களைப் பற்றி ஒரு நாளும் பாட மாட்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார். மனிதர்களைப் போற்றிப் பாடுவதனால் நமது எண்ணங்கள் சிதறிப் போகின்றன. ஒருவி எதிர்ப்பார்ப்புக்காக மனிதனைப் பாடும் அவசியம் ஏற்படுகிறது. அதனால் நாம் ஒரு சிறு வட்டத்திற்குள் சுழல்பவராக மாறி விடுகிறோம். பகவான் ஒருவரையே பாடுவேன் என்பது மனிதனின் உண்மையான பக்தி நிலை. அந்த நிலையானது சுயநலம் கலப்பில்லாத ஒன்றாகும். ஆழ்வாரின் இத்தகைய தெளிவு, உறுதி, வைராக்கியம் நமக்கு வரவேண்டும் என்பதே ஆழ்வாரின் அவா ஆகும்.
ஆய்ந்துகொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் *ஏய்ந்த தம்
மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து. 2460
உலகங்களையெல்லாம் ஆதியான பெருமானை, அன்போடு வணங்கி, தமது பாங்கான மனத்திலே நிலைநிறுத்திக் கொள்ள வல்லவர்கள் தங்களுக்குப் பரமபதம் நிச்சயம் என அறிந்திருந்தும் விரைந்து அங்கு சேர ஆசைப்பட்டு உடம்பையே ஒரு வித்தியாசமாக நினைத்து இது எப்போது போகும் என்று எண்ணியிருப்பார் என்கிறார் ஆழ்வார். இவ்வுடலைக் காப்பதற்கு மாந்தர்கள் எத்தகைய பாடுகளைப் படுகிறார்கள். மனித வாழ்வு நிலையற்றது, அதில் சாரம் இல்லை என்று கூறுபவர்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்தவரிடம் ஓடுகிறார்கள். ஆனால் ஆழ்வாரோ இந்த உடலே ஒரு நோய்தான் என்கிறார். வைகுண்டம் செல்லும் ஆர்வலர்கள் இந்நோய் என்று தீரும் என்று நினைப்பார்கள். உடலே தொடர்ந்து பிறவிகளை அதிகப்படுத்துகிறது. உடலே பகைவன். தனது இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள உடலை ஒரு கருவியாக மனிதன் பயன்படுத்துகிறான். எனவே இவ்வுடலை அழிக்க வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன்
கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை
இடம் நாடு காண இனி. 2476
புண்ணிய பலனால் காத்திருக்கும் சொர்க்கமும் எனக்கு வேண்டாம். இப்பூலோகமும் எனக்குத் தேவையில்லை. அடியார்கள் கூடியிருக்கும் பரமபதத்தையே அடைய விரும்புகிறேன். பூலோக வாழ்வு என்பது பிறப்பு இறப்பு என்ற வகையைச் சார்ந்ததாக உள்ளது. சுவர்க்கம் என்பது நல்வினைப் பயனால் கிடைப்பது. சுகங்களை அங்கே அனுபவிக்கலாம், ஆனால் நல்வினைப் பயன்கள் தீர்ந்தவுடன் மீண்டும் இப்பூவுலகில் பிறவிகள் எடுக்க வேண்டும். ஆகவே இவ்விரண்டும் எனக்குத் தேவையில்லை. பரமபதம் ஒன்றே நான் விரும்புவதாகும் என்கிறார்.
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே 927
எந்தவிதமான குற்றம் குறைகள் சிறிதும் இல்லாதவனாய், உலகுக்கெல்லாம் காரண கர்த்தாவாய், மாயை என்னும் வலைய¤ல் மயங்கிக் கிடக்கும் என்னை தன் அடியார்க்கு அடியனாக்கி பேரொளி தருபவனாய், தேவர்களின் தலைவனாய், மணமுள்ள அழகிய சோலைகள் நிறைந்த திருமலையில் வந்து அருள்பவனாய், நான் எத்தகைய உபயமும் செய்யாதிருக்கும் போதே என்னை தரிசனம் செய்ய வைத்தவனாகிறான். பரிசுத்தனாய், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அனைவரையும் காப்பவனாய், உயர்ந்த மதிள்களையுடைய திருவரங்கத்தில் கண்வளரும் எம்பெருமானின் திருவடித் தாமரைகளை காணும்போது அவை என் விழிகளுக்குள் புகுந்தது போல் தோன்றுகிறது.
பகவானின் கருணையின்றி மாயையில¤ருந்து நாம் விலக முடியாது. மாயை நம்மை துன்புறச் செய்ய வந்ததல்ல. பகவான் நடத்தும் விளையாட்டில் இதுவும் ஒன்று. நமது வினைப்பயனே மாயை ஆக¤ன்றது. மாயையைக் கொடுப்பவன்தான் அதனை விலக்கவும் செய்கிறான். நாம் அவனையே பற்றினால் மாயை அகன்று போகும்.
திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம்
தொண்டு எல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டம் ஆய் எண் திசைக்கும் ஆதி ஆய் நீதி ஆன
பண்டம் ஆம் பரம சோதி நின்னையே பரவுவேனே 2042
நாங்கள் செய்த பாவங்களையெல்லாம மன்னித்து, எங்களை என்றென்றும் காப்பாற்றும் எம்பெருமானே! உன்னிடத்தில் பணிந்து, மலர் மாலை சாற்றுவதற்காக உனக்கு மலர் தொடுத்து, சந்தனம் அரைத்து, கோயில் திருப்பணிகள் செய்வது மற்றும் எல்லா வகையான அடிமைகளையும் கைங்கர்யங்களையும் செய்ய வேணும். உன்னையே நாளும் வணங்கி, உன் பெருமைகளையே வாயாரப்பேசி உந்தன் திருவடிகளிலே பணிவிடை செய்யும்படிகளை மநோரதித்து, உன்னைக் கண்ணாரக் கண்டு பக்தி மணத்துடன் தொழுவதே என் மனக் கவலைகளை தீர்க்க வல்லதாகும் என்கிறார் ஆழ்வார். அண்டங்களில் உள்ளோர்க்கு எல்லாம் தலைவனாய் எட்டுத் திசைகளிலும் தேவதைகளுக்கும் காரண பூதனாய், முறைமையான செல்வமாயிருப்பவனான பரஞ்சோதியே! நின்னை ஸ்தோத்திரம் பண்ணுவேன். எங்ளை என்றென்றும் காப்பீராக என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
உணர்வார் ஆர் உன்பெருமை? ஊழிதோறு ஊழி
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை உணர்வார் ஆர்
விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப்
பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்? 2149.
பரமபதத்திலிருந்து எழுந்தருளியிருப்பவனே! இந்தப் பூமியை அளந்து கொண்டவனே! திருவேங்கடத்தில் நின்றருள்பவனே! பண் அமைந்த நான்கு மறைகளாலும் அறியப்படுபவனே! உன் பெருமையை முழுமையாக அறிந்தவர்கள் யார் இருக்கிறார்கள்? அளவெடுத்துக் காண முடியுமா? காலம் காலமாக ஆராய்ந்தாலும் உன் வடிவழகு இதுதான் என்று அளவெடுத்துக் காண முடியுமா? நீ துயில்கொள்ளும் திருப்பாற்கடலை கண்டறிபவர்கள் யார் இருக்கிறார்கள்? என்று பலவாறு கேட்கிறார் ஆழ்வார். அறிவுக்கு எல்லை நிலம் எம்பெருமானல்லது இல்லை என்றிருந்தாலும் அவன் தன்மையை யார் அறிவார். இவ்வாறிருப்பது பொருட்களின் பாவமேயன்றி அறிவின் குறையென்பது அறியத்தக்கதாகும். ‘தனக்கும் தன் தன்மையறிவறியான்’ என்று நம்மாழ்வாரும் இதனை உணர்த்தியுள்ளார். எனவே பகவானை உள்ளபடியாக அறிய யாராலும் இயலாது என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர் 2158.
திருவேங்கடமும், வைகுந்த மாநகரும், திருவெஃகாவும், மலர்கள் நிறைந்த நீர் நிலைகளைக் கொண்ட எழில்மிக்க திருக்கோவலூர் தலமுமான நான்கு புனிதத் தலங்களிலும் பகவான் முறையே நின்றருள்வதும், வீற்றிருப்பதும், சயனித்திருப்பதும், நடப்பதுமாய் தரிசனம் தருகிறார். எனவே நமது இடரெல்லாம் நீங்கிவிடும் என்று கூறுகிறார் ஆழ்வார். எம்பெருமான் ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் எழுந்தருளியுள்ளவாறு நாம் பாசுரங்களை அநுஸந்தித்தால் (சொன்னால்) நமது துன்பங்களெல்லாம் நீங்கிவிடும் என்கிறார். அவனது திருப்பதிகளில் நிற்பதும், இருப்பதும், கிடப்பது, நடப்பதும் போன்ற நிலைகளை நாம் சொல்ல சொல்ல நாம் செய்த பாவங்கள் நம்மை விட்டு அகலும். பகவான் நீக்கமற நிறைந்த போதிலும் மனதை ஒருமுகப்படுத்த ஆலய தரிசனம் செய்தல் வேண்டும். அந்த கட்டத்தில் மனம் முழு ஒருமைப்பாட்டுடன் விளங்கும். அந்நிலையில் மனமே கோவிலாக மாறி அதில் பெருமான் வீற்றிருப்பார் என்ற உயரிய தத்துவத்தை ஆழ்வார் நமக்கு அருளியுள்ளார்.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பும் வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி
இறை பாடி ஆய இவை 2311
திருப்பாற்கடல், திருக்குடந்தை, திருவேங்கடம் இத்தலங்களை எப்போதும் நினைக்கும் என் சிந்தனை, நிறைவான வைகுண்டம், திருமாலின் புகழ் சொல்லும் வேதம், திருப்பாடகம், அனந்தாழ்வான் ஆகிய இவைகளெல்லாம் அழகிய திருத்துழாய் மாலையணிந்திருக்கும் ஸ்ரீமந் நாராயணன் குடியிருக்கும் வாசஸ்தலமாகும் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
ஆழ்வார் தனது சிந்தனையை பகவான் குடியிருக்கும் வாசஸ்தலம்த்துடன் இணைத்திருக்கிறார். காய்கதிர் செல்வனை வலிவற்ற மேகங்கள் மறைப்பது போல் நமக்குள்ளிருக்கும் பகவானை அறியாமை என்னும் மேகம் மறைக்கின்றது. ஆழ்வாரின் சிந்தனை எப்போதும் பகவானை நினைப்பதால் அறியாமை என்ற மேகம் அவரை சூழ்வதில்லை. நாம் எல்லோரும் அப்பேற்றினை அடைவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் 2313
குருந்த மரத்தை வேரோடு பறித்து முறித்தழித்த கோபலான் திருப்பாற் கடலையும், திருவேங்கடத்தையும், ஆதிசேஷனுடன், குளிர்ச்சியான வைகுண்டத்தையும், கடல் போன்ற இதிகாச, புராண நூல்களையும் நுட்பமான இதயக் கமலத்தையும் உன்னை நிறுத்தி தவம் செய்பவர் மனத்தையும் தான் உறையும் கோயிலாகக் கொண்டிருக்கிறான் என்கிறார் ஆழ்வார். திருப்பாற்கடல், திருவேங்கடம், திருவனந்தாழ்வானுடன் கூடியிருக்கும் பரமபதம், வேதவேதாகமங்கள் உருவாகும் யோகிகளின் திருக்கமல உள்ளம் ஆகியவற்றின் உறைந்துள்ளான். சம்சாரத்தில் படும் துன்பங்களையெல்லாம்
ஆற்றி குளிர்விக்கும் திருப்பரமபதத்தில் உறைகிறான். கண்ணனைக் கொல்ல கம்சனால் ஏவிவிடப்பட்ட அசுரன் ஒருவன் குருந்த மரமாக மாறி கண்ணன் அதில் ஏறும்போது கிளை ஒடிந்துவிழுந்து அழிக்க வேண்டும் என்பதாக நினைத்தான். ஆனால் கண்ணன் அந்த மரத்தினை வேரோடு பிடிங்கி அதனை முறித்து அவனைக் கொன்றழித்தான். அத்தகையவன் திருமலையில் உறைகின்றான் என்பது இதன் கருத்தாகும்.
பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர். 2342
பரமபதத்தில் நித்தியவாசம் செய்து, அவ்விடத்தில் கோவில் கொண்டுள்ள எம்பெருமானுக்கு திருப்பாற்கடலும், திருமலையும், வண்டுகள் மிகுந்துள்ள அழகிய சோலைகளையுடைய இனிய திருக்கடிகை என்னும் சோள¤ங்கபுரம் திவ்யதேசத்தில் நித்ய வாசம் செய்பவனும், திருவிண்ணகரம் என்னும் ஒப்பிலியப்பன் கோவிலில் வாசம் செய்கிறான். என்னை அடிமை கொள்வதற்கு முன்பே இவைகள் கோவில்களாக இருந்தன. இப்போது எம்பெருமான் வாசம் செய்யும் இடமான என் நெஞ்சமே கோயிலாக உள்ளது.
இப்பாடல் திருக்கடிகை குன்றை சிறப்பித்துப் பாடியுள்ளார். மற்ற இரு திவ்யதேசங்களை விட ‘வண்டு விளங்கிளரும் நீள் சோலை வண்பூங்கடிகையில்’ ஆதாரமாகக் கொண்டு அதனையே கோவிலாகக் கொண்டுள்ளார். அதைவிட சிறந்ததாக பெருமான் ஆழ்வாரின் நெஞ்சினிலே குடிகொண்டுள்ளார் என்ற கருத்தை விவரிக்கின்றார். இதனையே நாமும் கொண்டு நம் உள்ளத்திலும் பெருமான் நித்யவாசம் செய்யுமளவு நாம் நம்மைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.
நம்மாழ்வார் திருவிருத்தம்
உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான்
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்
கண் ஆய் அருவினையேன் உயிர் ஆயின காவிகளே 2543
இப்பாசுரத்தில் பெண்களின் வடிவத்தை அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறார். பெண்ணானவள் நெருப்பும், நீரும், காற்றும், ஆகாயமும், பூமியுமான பஞ்ச பூதங்களின் வடிவமான பரந்தாமனது வைகுண்டத்தைப் போல் இனியவளாய் இருக்கிறாள். செங்கழுநீர் மலர்கள் போன்ற இவள் கண்கள் கொடிய தீவினை கொண்ட அடியேனின் உயிராய் இருக்கின்றன. உண்ணாமலும், உறங்காமலும் தவம் செய்யும் யோகிகளுக்கும் அந்த தியானத்தை விட்டு தன்னையே நினைக்க வைக்கும் ஆற்றல் உடையன் பெண்களின் கண்களானதை சித்தரித்துக் காட்டுகிறார்.
பெண்களின் கண்கள் தவத்தைக் கலைக்கக் கூடியதாகும். இத்தகைய கண்களைப் பார்ப்பதால் பகவானின் காரியங்களை செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். நமது இலக்கு ஆத்ம தரிசனத்தைப் பெறுவதாகும். அதற்கும் தடையாக உள்ள இத்தகைய கண்களை நாம் பார்ப்பதிலிருந்து விலகி இருக்க வேண்டும். வைராக்கியத்தினால் எதனையும் விலக்கி வைக்கும் ஆற்றல் நமக்கு உண்டு. இதனை சிந்தித்து நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்பதை ஆழ்வார் நமக்குக் கூறும் அறிவுரையாகும்.
மலர்ந்தே ஒழிந்தில மாலையும் மாலைப்பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல்சூழ்
நிலந்தாவிய எம்பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்!
கலந்தார் வரவெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே 2545
கடல்சூழ்ந்த நில உலகினைத் தாவி அளந்த பரந்தாமனுடைய வைகுண்டத்தைப் போல் இனிமையானவளே! வலிமையான கொன்ற மரங்கள் உன்னைக் கலந்து பிரிந்த தலைவனின் வரவை எதிர்ப்பார்த்துள்ளன. அதனால் மழைக்காலம் வராத போதும் கருவடைந்து அரும்ப ஆரம்பித்து விட்டன. ஆனால் அவைகளெல்லாம் மாலைகளையும், பொன் போன்ற அருள் மாலை வட்டங்களையும், தழைகளாகிய பந்தலிலே கொப்புகளில் நெருங்க தொங்கவிட்டுக் கொண்டு முற்றிலுமாக மலர்ந்து விடவில்லை என்று கூறுகிறார் ஆழ்வார்.
தலைவியை வைகுண்டத்திற்கு நிகராகப் பாவித்து அவளை வர்ணிப்பது போல் இப்பாடல் அமைந்துள்ளது. கார்காலம் வந்துவிட்டது. இன்னும் நாயகன் வரவில்லையே என்று ஏங்குகிறாள். அதற்கும் தோழி பிரிந்து சென்ற நாயகனின் வரவையொட்டி கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும் காலம் முற்றிலும் வரவில்லையே. எனவே நீ கவலை கொள்ள வேண்டாம் என்று தலைவியைத் தேற்றுகிறாள். இதனைக் கண்ட கொன்றை மலர்கள் தலைவியின் நிலையைக்கண்டு, தான் மலர்ந்தால் தலைவி துன்பம் கொள்வாளோ என்று அஞ்சி மலர்வதற்கும் தயங்குகின்றது என்றும் வியாக்யானத்தில் கொள்ளலாம்.
உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம் ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் குனி சங்கு இடறிப்
புலாகின்ற வேலைப் புணரி அம் பள்ளி அம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே? 2552
ஒளிமயமான வதனமுடையவர்களே! காதளவு வரை உலவுகின்ற கெண்டை மீன் போல உங்கள் கண்கள் அம்பு போல் என் உயிரைத் துளைக்கின்றன. உங்கள் முகத்துப் புருவங்கள் கொடிய வில் போல் உள்ளன. வளைந்த வடிவ சங்குகள் ஒன்றுக்கொன்று மோதி சப்தம் செய்யும், மீன்களுள்ள கடலைப் படுக்கையாகக் கொண்ட பகவான் அடியார்கள் வாழும் வைகுண்டமா? அல்லது பூலோகமா? எது உங்கள் இருப்பிடம்? என்று வினவுகிறார் ஆழ்வார்.
பெண்களின் பார்வை என்பது எல்லா நிலைகளையும் மறக்கச் செய்யக்கூடியவை. அவர்களுடைய கண் வீச்சில் சிக்கியவர்கள் வேறு செயல்களைச் செய்ய முடியாது. அவர்கள் வாழ்வது அடியார்கள் வாழும் வைகுண்டமாக இருந்தாலும் சரி, அடியார்கள் வாழும் பூலோகமாக இருந்தாலும் சரி அப்பெண்களின் கண்கள் உயிரைத் துளைக்கின்றன என்று கூறுகிறார். எனவே பெண்களின் கண்வீச்சில் சிக்கிவிடாதீர்கள் என்று இப்பாசுரத்தின் மூலம் ஆழ்வார் நமக்கு அறிவுரை கூறுகிறார்.
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி
கல்லும் கனை கடலும் வைகுந்த வான் நாடும்
புல் என்று ஒழிந்தனகொல்? ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்து அகம் 2652
திருவேங்கடமலை, ஆரவாரிக்கும் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இவை பகவானுக்கு வேண்டாத சிறிய இடங்களாகிவிட்டன. ஐயோ பாவம்! மண்ணளக்க உயரந்தவன், கரிய நிறத்தவனான கண்ணபிரான் என் மனதில் புகுந்து நீங்காமல் குடியிருக்கிறான். அடியேன் இதற்கு என்ன பாக்கியம் செய்தேன்? என்று கேட்கிறார் ஆழ்வார். எம்பெருமான் தனது திவ்யமங்கள விக்ரகத்துடன் ஆழ்வாரின் நெஞ்சில் புகுந்துள்ளார். நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாதிருப்பவன். ஒருவராலும் வெல்ல முடியாதவன் என் மனதில் வந்து புகுந்தானே என்று வியப்புடன் கேட்கிறார். பிராட்டியானவள் எம்பெருமானை என்றும் பிரியாமல் ‘அகலகில்லேனிறையும்’ என்று கூறுவது போல் பெருமான் என்னுள்ளில் பிரியாமல் இருக்கிறான். பெருமானும் நான் இதனை விட்டு அகலேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். இப்பாசுரத்தில் கண்டுள்ள ஈரச்சொற்கள் பாவியாகிய நம்முடைய வாயிலிருந்து புறப்படப் பெறுகிறதே. ஆழ்வார் எங்கே நாம் எங்கே என்று வருந்தி தமது ஸ்ரீவசனபூஷத்தில் பிள்ளைலோகாச்சாரியார் வியாக்யானமாகத் தமது கருத்துக்களை அருளியிருக்கிறார்.
நம்மாழ்வார் திருவாய்மொழி
திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய்
எண்ணின் மீதியன் எம் பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே. 2796
திண்மையுடைய வைகுண்டம் முதலிய எல்லா உலகங்களும் நிச்சயமாக உரியவனாய் நினைவிற்கு அப்பாற்பட்டவனாய், நற்குணங்கள் உடையவனாய், பூலோகும், விண்ணுலகம், மற்றுமுள்ள எல்லா உலகங்களையும், உண்டவனாய், ஊழிக்காலத்தில் ஆலிலைக் கண்ணனாய் விளங்கிய பகவானை அல்லாது காப்பாற்றுபவர் வேறு எவரும் இல்லை என்று கூறுகிறார் ஆழ்வார்.
கண்ணபிரான் இவ்வுலகத்தையெல்லாம நிர்வகிப்பவர். மோட்சம் முதலிய எல்லா புருஷார்த்தங்களையும் அருளித் தருபவர். அவனது திருக்குணங்களைக் காட்டி என்னை ஈடுபடுத்திக் கொண்டவனாக இருக்கிறான். பிரளய காலத்தில் அனைத்து உலகங்களையும் தனது திருவயிற்றில் வைத்துக் காத்து நம்மை அருளியவன். ஒருநாளும் அழியாத பரமபதம் முதலிய சகல லோகங்களையும் தன் விபூதியாக உடையவன். பெருமான் எண்ணங்களுக்கு அப்பாறபட்டவனாக விளங்குபவன் என்பது இதன் கருத்தாகும்.
அணைவது அரவு அணைமேல் பூம்பாவை ஆகம்
புணர்வது இருவர் அவர் முதலும் தானே
இணைவன் ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே 2864
ஆதிசேஷன் மேல் பகவான் பள்ளி கொண்டுள்ளான். அழகிய தாமரைப் பூவில் பிறந்த தாயார் மகாலட்சுமியின் திருமேனியில் கலந்தவனாக உள்ளான். இவை நித்ய விபூதியில் எம்பெருமானுடைய காரியங்களாகும். நான்முகனான பிரம்மனைப் படைத்து அவன் மூலம் மற்ற எல்லா தேவர்களையும் படைத்தவன் அவனே.! எல்லாப் பொருட்களுக்கும் ஜீவனாய் இருக்கிறான். மோட்சத்திற்கு காரணமானவனும் அவனே. பிறவியென்னும் கடலை நீந்த நினைப்பவர்களுக்கு தெப்பமாக இருப்பவனும் இவனே! என்று கூறுகிறார் ஆழ்வார்.
சேஷசயனத்தில் பள்ளி கொள்ளுதல், பெரிய பிராட்டியின் திருமார்பில் அணையப்பெறுதல், லீலாவிபூதியை நிர்வகித்து பிரம்மா சிவன் ஆகியோரை உற்பத்தி செய்வதற்கு காரணமாக உள்ளான். உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் பாதுகாவலனாகத் திகழ்கிறான். சம்சாரக் கடலை நீந்திக் கடந்து கரையேற வேண்டுபவர்க்கு உறுதுணையாக உள்ளான். சம்சாரம் என்பது பெருங்கடல். அதனைக் கடப்பதற்கு எங்களால் இயலாது. வல்லவனான நீயே அதனைக் கடத்தித் தரவேண்டும் என்று ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் இதனையே வேண்டுகின்றனர். இதனையே எல்லா மக்களும் பெருமானிடம் வேண்டி உய்வு பெறவேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.
நீந்தும் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும்
நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம்
பூந் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த
பூந் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே 2865
என் ஒப்பற்ற தலைவன் பூக்கள் நிறைந்த குளிர்ந்த தண்ணீரையுடைய தடாகத்திலே கஜேந்திரன் பட்ட துன்பத்தை நீக்கியருளியவன் அணிந்திருப்பது குளிர்ச்சியான திருத்துழாய் மாலை. அவனது சம்பந்தம் உழலும் துயர் நிறைந்த இப்பிறவி உட்பட மற்ற எல்லா துன்பங்கையும் நீக்கி மோட்சம் கிடைக்கச் செய்து அருளியவன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில் ஆழ்வார் குறிப்பிடுவது பெருமான் எனக்கு வேண்டும் என்பதில்லை. அவனது சம்பந்தம் இருந்தால் அதுவே போதும் என்ற கருத்தினை வலியுறுத்துகிறார். பெரும் துக்க லேசமுமில்லாத முக்தியை தனக்கு அளிக்கும்படி வேண்டுகிறார். அபாரமான துயரங்களை விளைவிக்கக்கூடிய பிறவியினை தனக்கு அளிக்க வேண்டாமென்றும் வேண்டுகிறார். கஜேந்திரனைக் காத்தருளியது போல் பக்தர்களையும் காக்குமாறு வேண்டுகிறார். இத்தகையவனின் திருவடி சம்பந்தத்தால் தனக்கு துக்கமற்ற பண்பினை அளித்து அதனால் பரமானந்தம் பெற்று முக்தி அளிக்க வேண்டுகிறார்.
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலம் முந்து சீரில் படிமின் ஓவாதே. 2867
பஞ்சேந்திரியங்களின் விஷயத்தில் இருக்கும் ஐம்புலன்களையும் இஷ்டப்படி மேயவிடாமல் சப்தாதி விஷயங்கிலும் கட்டுப்படுத்தி ஆனந்தம் அதிகமாக உள்ள முடிவற்ற நன்மை தரும் வீடாகிய வைகுண்டம் போக எண்ணுகிறவர்களே! நீங்கள் அசுரர்களை குடல் குழம்பித் தாக்கித் தடுமாற வைத்து அழித்த பரந்தாமனிடம் மனம் செலுத்தி இடைவிடாமல் அவன் பெருமையில் மூழ்குங்கள் என்கிறார் ஆழ்வார்.
அற்பமான விஷய சுகங்களை விட்டுவிட்டு, அற்புத இன்பமயமான மோட்ச புருஷார்த்தத்தைப் பெற்று களிப்புற வேண்டியிருப்பீர். எம்பெருமானுடைய திருக்குணங்களில் இடைவிடாமல் அவகாஹித்துச் செல்லுங்கள். ஐம்புலன்களை கட்டுப்படுத்தாமல் உயர் நிலையை அடைய முடியாது. ஐம்புலன்கள் நமக்குத் தரப்பட்டிருப்பது கீழான இச்சைகளை நாம் நுகர்வதற்காக அல்ல. தூயோனாகிய ஸ்ரீமந் நாராயணனின் நினைவில் என்றும் மூழ்குவதற்குத்தான். அவனுடைய பராக்கிரமங்களைச் செவிகுளிரக் கேட்பதற்காகத்தான். அவனுடைய திருவடிகளில் நம் தலையினை வைப்பதற்காகத்தான். இதனை அறியாது, துன்பம் வந்து நம்மைத் தாக்கும் போது வெகுவாகப் புலம்பித் தவிக்கிறோம். இம்மாயையினை அகற்றி அவன் அருள் பெறுவோமாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை? என் காணுமாறு?
ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா
சேண் பால வீடோ உயிரோ மற்று எப் பொருட்கும்
ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே. 2871
பகவானாகிய கண்ணன் முழுவதுமாகக் கண்டு சொன்னவர் எவர்? காணும் விதம்தான் எவ்வாறு? அவன் உண்ணும்போது உலகமெல்லாம் ஒரு கவளம்கூட இல்லை. அவன் குடியிருக்கும் வைகுண்டமோ, திருப்பாற்கட்டலோ எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்டது. அவனோ எல்லாப் பொருள்களுக்கும் நித்ய அந்தராத்மாவாக இருந்து கொண்டு எட்டு திக்குகளில் ஒன்றையும் விடாமல் எல்லா இடங்களிலும் பரந்திருக்கிறான் என்கிறார் ஆழ்வார். எம்பெருமானது அற்புதத் தொழில்கள் எப்படிப்பட்டவர்க்கும் எல்லை காண முடியாமல் இருக்கிறது. சர்வேஸ்வரமாயிருந்து கண்ணனாய் அவதரித்து எனக்கு கையாளானவனை, அவன் தன்னைக் காட்ட நான் அவனைக் கண்டது போலாகியது. பகவானாகிய கண்ணனை முழுமையாக கண்டது எவருமில்லை. அத்தகையவனின் இருப்பிடம் உலகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதாக உள்ளது. அதனை எவரும் அறிந்தவர் இல்லை. தூணில் உள்ள பகவான் மனிதனின் உள்ளத்தில் இருக்கிறான். இதனை சிந்தித்து ஞானியாகுதல் நலம். நம்முள்ளில் பகவான் இருக்கிறான் என்று நம்பாதவர்கள் தோல்வியை தழுவுகிறார்கள். ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள். இத்தகைய சிந்தனைகளை ஆழ்வார் நமக்குத் தெரிவிக்கிறார்.
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப் பொருட்கும்
வேர் முதல் ஆய் வித்து ஆய்ப் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே 2873
மேன்மை பொருந்திய பரமபதம், சுவர்க்கம், நரகம் இவற்றிற்கு முடிவாக மேலெல்லையாக ஈர நெஞ்சுடையரான அன்பான அமரர்களை நடுவாகக் கொண்டிருக்கிறான். மற்றைய எல்லாப் பொருள்களுக்கும் மூவகைக் காரணமாக, வேராக விதையாக எங்கும் வியாபித்து தனித்தன்மை பெற்று உள்ளான். கரிய மேகம் போன்ற நிறமுடைய என் கண்ணனை நான் தரிசனம் செய்தேன்.
சம்சாரிகள் எம்பெருமானை மறந்து எப்படியாவது தொலையட்டும். அவர்களில் ஒருத்தரான நானும் அவர்களைப் போல் பாழ்பட்டு அழியாமல் உஜ்ஜீவிக்கப் பெற்றேனே என்று தனக்கு நேர்ந்த பயனை எண்ணி மகிழ்கிறார் ஆழ்வார். விண்ணுலகங்களுக்கு அதிபதியாகவும், தேவாதி தேவர்களுக்குத் தலைவனாகவும், அனைத்திற்கும் காரணபூதனாய் ஸ்ரீவைகுண்டத்தில் கார்கால கார்மேகமாய்த் திகழ்கின்றான். அழகிய திருமேனியைக் கொண்ட கிருஷ்ணனாய் இவ்வுலகில் அவதரித்து எனக்கானவனாக இருந்தவனை நான் மிகவும் கண்டு அனுபவித்தேன் என்கிறார் ஆழ்வார். இத்தகைய நிலையினை நாமும் அனுபவிக்க வேண்டும்.
கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன்
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே 2874
கரிய மேனியும் சிவந்த திருவிழிகளும் கொண்ட பரந்தாமனை வண்டுகள் ரீங்கரிக்கும் சோலைகள் சூழ்ந்த திருவழுதி நாட்டில் தோன்றிய நம்மாழ்வார் இசைத் தமிழில் பாடிய ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்துப் கொண்டிருப்பதற்குக் காரணம் பகவான் நம் மீது பொழியும் கருணை மழை எனலாம். அவன் திருவடி போற்றுதலே நம தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும்.
இப்பத்து பாசுர்ங்களும் அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் நிலையில் உள்ளது. பகவான் எல்லா இடங்களிலும ஊடுருவி உலகை நடத்துகின்றான். ஒரு அளவிற்கு மேல் சென்றால் அவன் பகவானால் அடக்கப்படுகிறான். அவனை மீறி ஒரு துரும்பும் அசைக்க முடியாது. அவன் நம்மீது கருணை மழை பொழிவதால்தான் பல குற்றங்கள் புரிந்தும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவன் திருவடி பணிதலே உய்வதற்கான வழியாகும்.
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம் மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே ! 2875
துதிக்கையையுடைய யானையினது துன்பத்தை விரைந்து நீக்கிய பகவானே! தாயைப் போல் பரிவு காட்டுபவனே! மோட்சத்தின் தன்மையைப் பற்றி பேச மாட்டோம். தேவரீருடைய சிவந்த பெருமை நிறைந்த பாதத் தாமரைகள் என் சிரசின் மீது வைத்தருள வேண்டும். அடியேன் வேண்டுவது இத்தகைய பேறேயாகும் என்கிறார் ஆழ்வார்.
பிரானே! உனது திருவடிகளை என் தலைமீது வைக்கும் இதனையே நான் வேண்டுதவதாகும். எந்த விதத்திலும் விலக்ஷனமான மோட்சத்தை நான் விரும்பவில்லை. நின் செம்மாபாதபற்பை என் தலைமேல் சேர்த்தால் நான்கு விதமான மோட்ச சாம்ராஜ்ஜியங்களுக்கு இதிலேயே அடங்கி விட்டனவாகும் என்பது இதன் கருத்தாகும். மோட்சத்தைக் காட்டிலும் நமக்கு பேரின்பத்தைத் தரக்கூடியது பகவானின் திருவடி தீட்சையே! என்பதை ஆழ்வார் நமக்கு உணர்த்துகிறார். போகங்கள் அலுத்துவிடும், சுகமான வாழ்வு தேவையில்லை. பகவானின் திருவடித் தாமரைகளின் கீழ் பணி செய்வதே நமக்கு நீங்காத இன்பத்தைக் கொடுக்கும்.
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே 2879
என் உடலை விட்டு இந்த ஜீவன் பிரியும்போது சிறப்பான மோட்சமோ, சுவர்க்கமோ, நரகமோ எது வேண்டுமானாலும் கிடைக்கட்டும், அல்லது கிடைக்காமல் போகட்டும். ஆயினும் நான் கர்ம வசத்தால் பிறப்பெடுக்காமல் இருக்க என்னுள் வந்து பிறக்கும் பரந்தாமனை நாளும் மறக்காமல் எப்போதும் போற்றி மகிழ்வுறுவேன் என்கிறார் ஆழ்வார்.
தேகமே ஆத்மாவாக இருக்கட்டும், அன்றி தேகத்தைக் காட்டிலும் வேறொருவனின் ஆத்மவாவாக இருக்கட்டும், சுவர்க்கம் நரகம் இதில் எது கிடைத்தாலும் எனக்கு எந்தவித நிர்ப்பந்தமுமில்லை. தேவரீர் கர்மங்கள் காரணமான பிறப்பு அல்லாதவராயிருந்து பல பிறவிகள் பிறந்தாயினும் பெருமானே! நினது அவதாரங்களையும், சேஷ்டிதங்களையும் மறவாமல் என்றும் அனுபவிக்கப் பெறுவனாக வேணும். பகவானை நாம் நம் மனதுள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டால் அதுவே நமக்கு பெருவாழ்வு எனலாம். அதற்கு நம் மனத்தினை தூய்மையாக வைத்து அதனுள் அமரச் செய்தல் வேண்டும்.
விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல்
விடல் இல் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே 2885
எப்போதும் சுதர்சனத்தை விடாமல் தரித்திருக்கும் பகவானை குறித்து திருக்குருகூர் சடகோபன் அருளிச் செய்த கேடில்லாத அழிவற்ற ஆயிரம் பாமாலைகளுள் இந்தப் பத்துப் பாடல்களையும் குற்றமில்லாமல் பக்தியுடன் படிப்பவர்களுக்கு வைகுண்ட வாசம் கிட்டும் என்பது நிச்சயம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இத்திருவாய்மொழியை ஓதவே, இதுதானே புருஷார்த்தத்தை பெற்றுத் தரும் என்று கூறுகிறார். சென்ற பாடலில் ஆழ்வார் என்னை விட்டுவிட வேண்டாம் என்று வேண்ட, பெருமானோ, ஆழ்வார்! நாம் உம்மை விட்டு விடுவோம் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது. நாம் உம்போல்வாரை கைவிடுவதற்காக சக்கரப்படைத் தரித்துக் கொண்டிருப்பது? ‘எப்போதும் கையழலாநேமயான நம்மேல் வினைக்கடிவான் என்று நீரே கூறிவிட்டு இவ்வாறு கூறுவது நன்றுதானா என்று தனது திருவாழியைக் காட்டியவாறு பெருமான் கூறுகிறார். இப்பதிகத்தை அநுசந்தித்தால் எம்பெருமான் திருவுள்ளம் மிகவும் உவப்பு உண்டாகி அதனால் அவன் மோட்சம் அளிப்பான். பிராட்டியும் இவ்வாறு புருஷகாரக்ருதம் செய்து பேறு பெற்றாள். ‘வோரிமாறாத பூமேலிருப்பாள் வினை தீர்க்குமே’ என்றும் ஆழ்வார் அருளியுள்ளார்.
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்
எல்லா உலகும் கழிய
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்
உடன் ஏறத் திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
ஒன்றும் துயர் இலனே 3000
ஒரே நாளில் நாடெல்லாம் பரவிய புகழுடைய அர்ச்சுணனும், குழந்தைகளைப் பறிகொடுத்த வைதிக பிராமணனுன் உடன் வர, திடமான தேரில் ஏறி ஒரு தடையும் வராமல் ஒரு நாளில் ஒரு நாழிப் பொழுதில் எல்லா உலகங்களையும் கடந்து ஜோதி மயமாக இருந்த தனது வாசஸ்தலமான வைகுண்டத்தில் இருந்த வேதியனின் பிள்ளைகளை தேகத்தோடு திருப்பி பூலோகத்திற்கு அழைத்து வந்து கொடுத்த பெருமானை நான் பற்றிக் கொண்ட பிறகு துயரில்லாதவனாகி விட்டேன் என்கிறார்.
வேதியன் வேண்டுதலுக்காக வைகுண்டத்திலிருந்த அவனது பிள்ளைகளை தேகத்தோடு திருப்பி அழைத்து வந்தார் கண்ணபிரான். அனைத்தும் அவனுக்கு சொந்தம் விதியும் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டது. அந்த விதியைத் தாண்டியும் நம் நன்மைகளுக்காக பல காரியங்களை செய்பவர். எனவே நம்முடைய துயரம் அகல வேண்டுமெனில் ஸ்ரீமந் நாராயணனை நாம் உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும். அவர் உயரத்தில் நிறுத்தினால், அதளபாதாளத்தில் தள்ளினாலும் அவரை கை விடாமல் பற்றிக் கொண்டால் அத்தகையத் துயரத்திலிருந்து விடுபடலாம்.
மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண் இது என்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு
வைகுந்தம் என்று கை காட்டும்
கண்ணை உள்நீர் மல்க நின்று
கடல்வண்ணன் என்னும் அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
என் செய்கேன் பெய் வளையீரே? 3040
வளையல்கள் அணிந்த மங்கையரே! என் மகள் மண்ணில் அமரந்திருக்கும்போது அதைத் துழாவியபடி வாமனனாய் வந்து சொந்தமாக்கிக் கொண்ட மண் அது என்றும், ஆகாயத்தை நோக்கி கை கூப்பி அவன் குடியிருக்கும் வைகுண்டம் என்று கை காட்டி கண்களில் நீர் பெருக எழுந்து நின்று கடல் போன்ற நிறத்தைக் கொண்டவனே! என்று புலம்புகிறாள். அந்தோ.. என் மகளை இத்தனை மையல் கொள்ளும்படி செய்தவனை என் செய்வேன் என்று தாயார் கூறுவது போல் அமைந்துள்ளது.
பராங்குச நாயகியின் திருத்தாயார் பெருமான் என் மகளை இவ்வாறு பிச்சேற்றினானே! இதற்கு நான் என் செய்வேன். பெருமான் மூன்றடி அளந்த போது இம்மண்ணானது அவனது திருவடிகளின் சம்பந்தம் பெற்றுள்ளது. சாதாரண மண்ணானது ஆழ்வாருக்கு அது ஒரு விசேஷ பிரிதிபத்தியானது.
விச்வாமித்ரர் இராமனுடன் நடந்து செல்லும்போது ஒரு சோலையைக் கண்டு அங்குள்ள நிலமானது வாமனமூர்த்தி அவதரித்தது என்று கூற முனிவர் அங்குள்ள மண்ணை எடுத்து பக்தியுடன் முகர்ந்தார் என்று கூறப்படுகிறது. பார்க்குமிடமெல்லாம் பகவனைக் காணும் பெரும்பாக்கியம் தலைவிக்கு கிடைத்துள்ளது என்பது இதன் கருத்தாகும்.
வைகுந்த நாதன் என வல்வினை மாய்ந்து அற
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை
வைகுந்தன் ஆகப் புகழ வண் தீம் கவி
செய் குந்தன் தன்னை எந் நாள் சிந்தித்து ஆர்வனோ? 3341
வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் பரமபத நாதனான ஸ்ரீமந் நாராயணன் என் கொடிய பாவங்களை அழித்து தரும காரியங்களைச் செய்யும்படி அருளினான். எனது பெருமானானவன் தன்னை என்னுள் புகுத்திக் கொண்டு, என்னை கொண்டு வைகுந்தநாதன் என்று புகழ்ந்து தன் பெருமைகளை வளமான இனிய கவிதைகளாகப் பொழியும்படி செய்த என் பெருமானின் கருணையை எத்தனை நாட்கள் சிந்தித்து வியந்தாலும் மனம் திருப்தியடையுமா? என்று வினவுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில் ஆழ்வார் தன்னைக் கொண்டு பரமபோக்யமான கவியை பாடுவித்துக்கொண்டு பரமோபகாரத்திற்கு இவனைக் காலமுள்ள வரையிலும் அனுபவித்தாலும் நான் திருப்திகொள்ள மாட்டேன் என்கிறார். என்னுடைய வல்வினைகளையெல்லாம போக்கி அதனுள் குந்தனென்னும் திருநாமத்தை உடையவானக உள்ளான். என்னைத் தன்னைப் போலே தூயனாக்கி என்னைக் கொண்டு தன்னை வைகுண்டநாதனாகப் புகழச் செய்துள்ளான். இந்த நீர்மையை நான் எத்தனை நாள் சிந்தித்தாலும் திருப்தி அடையக் கூடியாதாக இல்லை என்று கூறுகிறார்.
இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள்
பூவைகள்காள் குயில்காள் மயில்காள்!
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்
அஞ்சன வெற்பும் அவை நணிய
கடையறப் பாசங்கள் விட்டபின்னை அன்றி
அவன் அவை காண்கொடானே. 3465
நான் வளர்த்த கிளிகளே! நாகணவாய்ப் பறவைகளே! குயில்களே! மயில்களே! எனது அழகிய நிறத்தையும் சங்கு வளையல்களும் நெஞ்சமும் ஆகிய இவற்றில் ஒன்றையும் நம்மிடம் தங்கவிடாமல் எம்பெருமான் கைக்கொண்டான். அவன் வைகுண்டத்திலும், திருப்பாற்கடலிலும், திருவேங்கட மலையில் குடியிருக்கின்றான். பந்த பாசங்களை முழுவதும் விட்டோமென்று தெரிந்தாலொழிய அவன் அந்த இடங்களைப் பார்க்க அருள் செய்ய மாட்டான். எனவே பாசத்தை ஒழிக்க உங்களோடு இனி உறவு இல்லை என்று கிளிகளைப் பார்த்து தலைவி கூறுவது போல் ஆழ்வார் கூறுகிறார். எல்லாவற்றையும் துறந்து பரிபூரண சரணாகதிதான் நம்மைப் பகவானிடம் வெகு விரைவில் அழைத்துச் செல்லும் என்ற தாரக மந்திரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர்
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே. 3585
பரந்தாமன், இரணியனை வதம் செய்ய மானிட உடலும், சிங்க முகமும் கொண்டு, அவனது தேகத்தைத் தன் கூர்மையான நகங்களால் பிளந்து கொன்றான். அவன் நித்தியவாசம் செய்யும் பரமாகாசம் எனப்படும் வைகுண்டத்தைத் தரிசிப்பதற்கு என் மனம் இரவென்றும் பகலென்றும் வித்தியாசமில்லாமல் சதா அவனை நினைத்து ஆசைப்படுகிறது.
எம்பெருமான் இவ்விடத்தே செய்த சேஷ்டிதங்களை அநுசந்தித்து உருகின நெஞ்சு அன்னவனுறையும் திருநாட்டைச் சென்று காண விழைகின்ற இப்பாட்டில் பெருமான் மனிதனும் மிருகமுமாகி ந்ருசிம்ம அவதாரமாகி நின்றான். அதர்மம் எத்தகைய பாதுகாப்பாக இருந்தாலும் தெய்வசக்தி அதனை மாற்றி அழிக்கும். எல்லா உயிர்களையும் காத்தருளும் அத்தகைய பகவானை என் மனம் தரிசிக்க ஆவல் கொள்கிறது என்று ஆழ்வார் கூறுகிறார். நமது நெஞ்சில் மறக்கவொண்ணாதபடி சேர்ந்த நரசிங்கம் என்று குறிப்பிடுகிறார்.
தெளி விசும்பு கடிது ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள்! திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடாத் தீவினையேன் மனத்து உறையும்
துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்புமினே 3627.
தீயிலே சுற்றி வளைப்பது போலத் தெளிவான ஆகாயத்திலே மின்னல் விரைந்து ஓடி ஒளிவீசச் செய்யும் மேகங்களே! திருமூழிக்களத்தில் உறையும் அழகிய ஜோதி இந்தப் பாவியின் நெஞ்சிலும் பரமபதம் போல் வீற்றிருந்து அருளுகின்றான். தேன் துளிர்க்கும் மலர் சூடிய சூழலையுடைய அப்பெருமானிடம் எனக்காக தூது செல்ல வேண்டும். என் நிலையை அவரிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று கூறுகிறார்.
பகவான் பரமபதத்தில் கொண்ட அன்பு போல் என்னிடமும் வைத்துள்ளார். இப்பாவியின் நெஞ்சிலும் வீற்றிருந்து அருள்கிறான். ஆனால் அவரது திருமேனியை தரிசிக்கவோ, தொடவோ முடிவதில்லையே. மனத்திலே உறைபவனை வெளியே பார்த்து அணைக்க இயலவில்லையே. பெருமான் திருக்குழலில் சூடியுள்ள மலர்மாலையில் தேன் சொட்டுகிறது. மலருக்கும் தன் மார்பினில் இடம் தந்துள்ளார். மலருக்கு இருக்கும் பாக்கியம் கூட எனக்கிலாமல் போனதே. எனவே நான் படும் துன்பத்தினை அவரிடம் கூறுவாயாக என்று மேகங்களிடம் தூது விடுகிறார் ஆழ்வார்.
திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே 3740
பிரளய காலத்தில் ஒப்பற்றவனாக, முதல்வனாக இருந்தவன் எம்பெருமான். அவன் மாலிருஞ்சோலை மலை போலவும், திருப்பாற்கடல் போலவும் என் சிரசை நினைத்துள்ளான். வைகுண்டத்தைப் போலவும் குளிர்ச்சி மிகுந்த வேங்கடமலை போலவும் என் சரீரத்தை விரும்புகிறான். அரிய பெரிய மாயமான என் உயிராய், மனமாய், பாடலாய், செய்கைகளாய் இருக்கும் திருமால் ஒரு நொடிப் பொழுதும் என்னைப் பிரிவதில்லை என்கிறார் ஆழ்வார்.
மாலிருஞ்சோலை, திருப்பாற்கடல், திருநாடு, திருவேங்கடம் போன்ற திவ்ய தேசங்களில் தானெழுந்து அருளியிருக்கும் பெருமான் தனது அன்பினை என்னிடம் காட்டி என்னைவிட்டு பிரியாதிருக்கிறான். இரண்டு திருமலைகளிலும் பரவியூகங்களில் காணும் விருப்பமெல்லாம் தன் மேனியில் காண்கிறான் என்கிறார். ஆழ்வார் பகவானை நொடிப் பொழுது கூட பிரியாத நிலையில் உள்ளார். ஆனால் நாமோ அவரை நினைப்பதே இல்லை. சிற்றின்ப வாழ்வில் சிதறுண்டு, துன்பங்களில் உழன்று பின் மரணத்தைத் தழுவி, அரிதான இம்மனித வாழ்வை வீணடிக்கின்றோம். இத்தகைய நிலை வேண்டாம் என்று ஆழ்வார் நமக்கு அறிவுறுத்துகிறார்.
எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே. 3747
‘கிளிகள் தாவிக் குதிக்கின்ற தோட்டங்கள் நிறைந்த திருப்பேர் நகரில் எழுந்தருளியுள்ள எம்பெருமான், தெளிவான, பெருமை வாய்ந்த பரமபதத்தை எனக்கு தரவிருக்கிறான். இது எப்படி இத்தனை சுலபமாக சாத்தியமாயிற்று என்று என் கண்கள் மகிழும்படி அவனைத் தரிசிக்கின்றேன்! மகிழ்ச்சியான சிந்தனைகளோடு ஆனந்தமாய் அவனைப் பாடி மகிழ்கிறேன்! என்கிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தால் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கும் பகவானை நாம் எத்தகைய நெருக்கத்தில் இருக்கிறோம் என்று நம்மால் உணர முடிகின்றது. ஆழ்வார் பக்தி கலந்த பாசுரங்கள் மூலம் அன்பைப் பொழிவதால் எம்பெருமான் அவரை ஆட்கொண்டு விட்டான். ஆனால் உலக மக்களாகிய நாம் எத்தகைய நிலையில் உள்ளோம் என்பதை நினைத்துப் பார்த்தல் வேண்டும். பகவானை நோக்கி ஒரு அடிகூட வைக்காத அவல நிலையில் நாம் இருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும் என்று ஆழ்வார் நமக்குத் தெரிவிக்கின்றார்.
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே. 3755
என்னுடைய ஸ்வாமியாய் என்றும் நிலை பெற்ற புகழினையுடைய ஸ்ரீமந் நாராயணனின் அடியார்களைக் கண்டதும் ஆனந்தத்தோடு மேகக் கூட்டங்கள் வாத்ய கோஷங்களிட்டு இடியென்னும் முரசொலியை முழங்கின. ஆழமான சமுத்திரம் தனது அலைக்கரங்களை எடுத்துக் கூத்தாடி ஆரவாரம் செய்தது. ஏழு உலகங்களும் தங்களது வளங்களை ஏந்திக் கொண்டு நின்றன.
திருநாட்டுக்குப் புறப்படுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்ட உகப்பில் விண்மேகங்களும், ஆழ் சமுத்திரமும் அவர்களை ஆரவாரம் கொண்டு வரவேற்கும் நிகழ்வினை ஆழ்வார் எடுத்துரைக்கிறார். அழகிய ஆபரணங்களாக விளங்கும் மேகக் கூட்டங்கள் வாத்யகோஷ்டிகள் போன்று செயல்பட்டன. ஆழ்கடல் தன் அலைகளை திரைகளாக்கி ஆனந்தக் கூத்தாடின. இவையனைத்தும் ஒருவர் சொல்லிச் செய்யாமல் பாகவதர்களைக் கண்ட மாத்திரம் இவைகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன. எம்பெருமானின் அடியார்களைக் கண்டால் இயற்கையும் பெருமகிழ்வு கொள்கின்றன என்பதை ஆழ்வார் குறிப்பிடுகிறார். அடியவர்களுக்கு மரியாதை செய்து பணி செய்வது நம்மைப் பிறவிக் கடலிலிருந்து விடுவிக்கும்.
நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில்
பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உல 3756
ஸ்ரீமந் நாராயணனின் தொண்டர்களைக் கண்டு ஆனந்தத்துடன் நல்ல நீரைச் சுமந்திருக்கும் மேகங்கள் உயரமான ஆகாயத்தில் திரண்டிருப்பது, நிறைந்த பூரண பொற்குடம் ஏந்தி வரவேற்பது போலிருந்தது. நீர் நிறைந்த கடல்கள் உயரமான அலைகளை எழுப்பி ஆர்பரித்தன. அந்தந்த உலகில் உள்ளவர்கள் எங்கும் நெடுகிலும் பரவியுள்ள பெரு மலைகளைத் தோரணங்களாக்கி வணங்கினார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில் அடியார்களின் பெருமை போற்றிப் பேசப்படுகிறது. நீரைச் சுமந்திருக்கும் வெண்மேகங்கள் பொற்குடங்கள் தாங்கி வரவேற்பது போலிருந்தது. ஆர்பரித்துக் கொண்டு வரும் சமுத்திர அலைகள் வரவேற்பது போலிருந்தது. அனைத்து உலக மக்களும் மலைகளைத் தோரணமாக்கி வணங்கினார்கள். ஆழ்வாரின் கற்பனை ஒருபுறமிருக்க அடியவர்களின் பெருமைகளை நன்கு உணர்த்தியுள்ளார். அடியவர்கள் வாயிலாக பகவான் நம்முடன் பேசுகிறான். அறிவுரை கூறுகிறான். நல்வழிப்படுத்துகிறான் என்ற மனநிலையை நாம் பெற வேண்டும். எனவே அடியவரின் காட்சியை ஆண்டவனின் காட்சியாகக் கண்டு அனைவரும் உய்வினை அடையவதற்கான வழிகளைத் தேட வேண்டும் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே. 3757
முன்னொரு காலத்தில் பூமியை அளந்த திருவிக்கிரமனின் பக்தர்களின் முன் அந்தந்த உலகில் வாழ்வோர் நல்ல மலர்களை மழை போல் பொழிந்து தூபமிட்டு எங்கள் உலகத்துக்கு வாருங்கள் என்று வரவேற்பர். இரண்டு பக்கங்களிலும் முனிவர்கள் தாங்களது மௌன விரதத்தைத் தவிர்த்து வேதங்களை இசைத்தபடி வைகுந்தத்திற்கு இப்படித் தான் செல்ல வேண்டும் என்று வணங்கியவாறு எதிர் கொண்டழைத்தனர்.
பெருமானுடைய நித்ய விபூதி மண்டலத்தினை சிலர் வழிநடுத்துகிறார்கள். அவர்கள் பூமாரிப் பொழிந்து எதிர் கொண்ட அழைத்துச் செல்வர். மேலும் அவர்கள் தூபத்தை நம் மேல் சாத்தி மலர் மழையை பிரயோகித்து தொழுவார்கள். அப்போது அவர்கள் பூமி அளந்தவனே என்ற பாசுரத்தைப் பிரயோகித்துச் செல்வார்கள். அங்குள்ள முனிவர்களும் யோகிகளும் இங்கு எழுந்தருள வேணும் என்று நல்வரவு கூறி உபசரிப்பார்கள். இத்தகையவர்கள் பெருமானின் தொண்டர்களை வரவேற்று பெருமானிடம் அழைத்துச் செல்வார்கள்.
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே. 3758
தேன் பெருகுகின்ற மலரைக் கொண்ட திருத்துழாயை முடியிலே தரித்த மாதவனுடைய தொண்டர்கள் தங்கியிருக்க நான் முன்னே..நான் முன்னே.. என்று தேவர்கள் இடம் வகுத்தன. பன்னிரண்டு ஆதித்தர்களும் அவர்கள் வழி நடக்கத் தங்களது ஒளிக்கரங்களைப் பரப்பினர். தேவர்கள் வாசிக்கும் முரசொலி அலை கடலின் ஓசையை ஒத்திருந்தது என்று பரமபதத்தின் நிலையினை எடுத்துக் கூறுகிறார்.
மேலுலகங்களில் இத்தகைய தொண்டர்கள் செல்லும் வழிகளில் வாத்யகோஷம் முழங்க கொண்டாடி மகிழ்வார்கள். ஆதித்யர்கள் இங்கே சுடரும் நிலை விளக்கு போலே இங்கே எழுந்தருள்க, இங்கே எழுந்தருள்க என்று கூறி வரவேற்பார்கள். முராஜ வாத்தியங்கள் ஆர்பரிக்கும் அலையைப் போன்று ஓசை எழுப்பும். இத்தகைய வரரேற்பு எதர்கெனில், என்றும் திவ்ய ஆலயப் பணிகளில் ஈடுபட்டவர்க்கும், பிராட்டி முன்னே பணிந்து வணங்கிய வைஷ்ணவர்களுக்கும் ஆகும். பகவானின் தொண்டர்களாக மாற வேண்டும் என்பதற்காக ஆழ்வார் இப்பாசுரத்தை வழங்கியுள்ளார். இத்தகைய பக்தர்கள் வானுலகம் தவிர மற்ற எல்லா உலகங்களுக்கும் சொந்தமாகி விடுகிறார்கள். பகவானை மறந்து வாழ்பவர்கள் எத்தகைய செல்வந்தர்களாக இருப்பினும் அவர்கள் மரணப்படு குழியில் தள்ளப்படுவார்கள் என்ற கருத்து அறியப்படுகிறது.
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே. 3759
மாதவனின் அடியார்கள் வருகிறார்கள் என்று தேவர்கள் தம் தம் உலகங்களின் வாசலில் நின்று இத்தனை நேரம் வழி நடந்தது போதும்.. எங்கள் உலகில் வந்து இளைப்பாறுங்கள் என்றழைத்தனர். கின்னரர்களும் கருடர்களும் கீதங்கள் பாடினர். வேதம் ஓதும் நல்ல வாயினைப் படைத்த முனிவர்களும் தாங்கள் நடத்திய வேள்விகளின் பலனை அவர்களிடம் சமர்ப்பித்தனர் என்றவாறு ஆழ்வார் கூறுகிறார்.
வாசலில் வானவரென்ற அர்ச்சரா மார்க்கத்தில் சிறந்த வருணன், இந்திரன், பிரஜாபதி ஆகிய தேவர்கள் தத்தம் ஸ்தானங்களின் வாசலில் வந்து இவர்கள் பரமபாகவதர்கள் என்று சொல்லி ஆதரித்து இங்கே எழுந்தருளுங்கள், எங்கள் ஸ்தலங்களில் பிரவேசியுங்கள் என்று கூறுகின்றனர். நிரம்பி வைதிகர்கள் தாங்கள் செய்த தேவ பூஜையின் பலன்களை சமர்ப்பிக்க, பகவானின் பக்தர்கள் என்ற உயர் பதவியை அளிக்கிறார்கள். அன்பர்களின் அச்சத்தை பல அவதாரமெடுத்து போற்றிய பகவான் தேவர்களும் பெருமானின் தொண்டர்களை வரவேற்பது வியப்பில்லை.
வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே. 3760
வைதிகர்கள் தங்கள் யாகப் பலன்களைச் சமர்ப்பித்தும் சிலர் மணமுள்ள நல்ல சீகந்த தூபங்களைக் காட்டியும், சிலர் திருச்சின்னங்களையும் வலம்புரிச் சங்கையும் இசைத்தனர். அவை இரண்டும் கலந்து எங்கும் ஓலித்தன. வாளைப் போன்ற ஒளியையுடைய கண்களைக் கொண்ட மங்கையர், ‘சக்ரபாணியின் அடியார்களே! வானகத்தை ஆள வாருங்கள்’ என மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் என்று கூறுகிறார் ஆழ்வார்.
மரணத்திற்கு பின் நடக்கும் நிகழ்வினை ஆழ்வார் நமக்கு நன்கு விவரிக்கிறார். எம்பெருமானின் கையிலுள்ள திருவாழியின் அழகிலே முழுவதும் ஈடுபட்டவர்களன்றோ நீங்கள். வாருங்கள், இவ்விடத்தே வாருங்கள்! என்று மடந்தையர்கள் வாழ்த்தி வரவேற்கிறார்கள். ‘தேசாந்திரத்தில் நின்ற பிரஜயை தாய்மார் குளிர் பார்க்கும்படி ஒளியுடைய கண்களால் குளிர்ந்து நோக்கினர்’ என்பது நம்பிள்ளையின் வாக்காகும். ஒருவரின் நிர்பந்தத்தால் செய்யாமல் உள் பிரீதியினால் செய்கிறார்கள். நம்மில் உள்ள ஆத்மா விடுதலை பெற்றால்தான் வானுலகம் சென்று இத்தகைய வரவேற்பினைப் பெற முடியும். பாவ புண்ணியங்கள் செய்தால் மறுபடியும் ஓரு உடலில் புகவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்ற கருத்தினை ஆழ்வார் நமக்குத் தெரிவிக்கிறார்.
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே 3761
வானத்தை தொடுமளவு அலைகள் வீசும் சமுத்திரத்தில் பள்ளி கொண்டிருக்கும் எம் கேசவன், பிரகாசிக்கும் ரத்தினங்கள் பாதிக்கப்பட்ட முடியினைத் தரித்த குடந்தையில் தேவமங்கையர் பல்லாண்டு பாடி வாழ்த்தவும் மருத்கணங்களும், அஷ்ட வசுக்களும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஸ்தோத்திரம் சொல்ல அது எங்கும் ஒலித்தது என்று பரமபத நிகழ்வினை ஆழ்வார் வர்ணிக்கின்றார்.
திருக்குடந்தை எம்பெருமானிடம் வழிவழியாக பக்தி செய்து வரும் மடந்தையர்கள் நம்மாழ்வாருக்கு திருநாட்டிலும் மறக்க முடியாதபடி பக்தி செய்து வரவேற்பு அளித்தார்கள். எம்பெருமானைக் கண்ட மாத்திரத்தில் குடந்தைபிரானின் நினைவு வர, ஆழ்வார் திருவுள்ளத்தில் முன்னமே படிந்திருந்தால் தமது திருகுடந்தை பாசுரத்தில் ‘ஆரா அமுதே’ என்ற தமது மொழியில் சேர்த்திருப்பார். நாம் நீத்தபின் இவ்வுலக வாழ்வு எத்தகையது என்று நாம் கூற இயலாத நிலையில் ஆழ்வார் நமக்குத் தெரிவிக்கிறார். எனவே தேவர்கள் நம்மை வரவேற்பதற்கு ஏதுவாக நமது வாழ்வினை திருநாடு அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வானவர்கள் நம்மை வரவேற்று எம்பெருமானிடம் சேரத்தக்க வகையில் நம் வாழ்வினை அமைத்துக் கொள்ள வேண்டும்.
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி உடை வானவர் முறை முறை எதிர்கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே. 3762
பரம்பரை பரம்பரையாக இவர்கள் கோவிந்தனின் அடியார் என்று இந்திரன், வருணன், குபேரன் ஆகிய அனைவரும் சேஷத்துவத்திற்கு முடி தரித்த தேவர்கள் அவரவரும் முறை போட்டுக் கொண்டு எதிர் கொண்டு உபசரிக்க, அழகிய கருடக்கொடி பறக்கும், நெடிய மதிலையும் உயரமான கோபுரத்தையும் உடைய, அழகிய மாதவன் உறையும் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தனர் என்று கூறுகிறார் ஆழ்வார்.
பெருமானின் தொண்டர்களை நித்யர்களும், முக்தர்களும் முறையே எதிர்கொண்டு அழைக்கிறார்கள். எம்பெருமான் மண்ணுலகில் இடைக் குலத்தில் பிறந்து ஆநிரைகளை மேய்க்கும் தொழில் செய்து தன்னை மிகவும் தாழ்த்தி சௌலப்பியக் குணத்தை நமக்குத் தெரிவிக்கின்றார். கொடியாலே அலங்கரிக்கப்பட்ட திருமதிள்கள் சூழ்ந்த திருக்கோபுரத்தை சென்று அடைந்தார்கள். திருநாடு சென்றால் எத்தகைய வரவேற்பு கிடைக்கிறது என்று இப்பூலோகத்தில் வாழும் போதே அறியும் வாய்ப்பினை ஆழ்வார் நமக்கு அருளியிருக்கிறார். இவை அனைத்தும் நாலாயிரப் பிரபந்தப் பாசுரங்கள் நமக்கு கிடைத்ததால் பெற்ற பயனாகும்.
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே. 3763
வைகுண்ட வாசலில் நுழையும்போது வரவேற்க திருவாசல்களைக் காக்கும் நித்திய சூரிகள் ஸ்ரீவைகுண்டவாசனின் அடியார்களே! நீங்கள் எங்களவர். எங்களோடு கலந்து இங்கு வாழ வேண்டும் என்று உபசரித்தனர். இது கண்டு தரிசனத்துக்குக் காத்திருந்த தேவரும் முனிவரும் வியந்தனர். பூலோகத்தில் வாழ்பவருக்குப் பரமபதம் கிடைக்கப்பெறும் என்பது புண்ணியப் பலனே என்று சிலாகித்தனர்.
வைகுந்த நாதனுக்கு அடியவர்களாக வருகின்ற இவர்கள் எமக்கு ஸ்வாமிகள். எங்களது பதவிகளை நீங்கள் நிர்வஹிக்க வேணும் என்று கூறி தமது பிரம்பினைத் தந்தார்கள். மண்ணவர் விண்ணவராயினரே என்று வியந்தனர். வைகுந்தத்து முனிவரும் யோகிகளும் வியந்தனர். ஸ்ரீ இராமானுசரின் வரலாற்றைக் குறிப்பிடும் ப்ரபந்நாம்ருத தர்ப்பணம் என்னும் நூலில் பரமபதம் எவ்வாறு உள்ளது என்று விவரிக்கப்பட்டுள்ளது. அனந்தாழ்வான் தடக்கையனாய் சங்கு சக்ர கதாதாரனாய் காயாம்பூ இலை போல் கருத்தவனாய் தாமரை இதழ் போன்று திருக்கண்களைக் கொண்டவனாய், கோடி மன்மதர்கள் ஒருங்கே கொண்ட அழகனாய், உலகை மயக்கும் திருமேனியை உடையவனாய், கோடி சூரிய ஒளியைக் கொண்டு கோள்வளை, ஹாரம், கைவளை, சதங்கை முதலான ஆபரணங்களுடன், அப்ராக்ருத சந்தனத்தால் பூசப்பட்ட திருமேனியனாய், பீதாம்பரத்தைத் தரித்து ஸ்ரீதேவி பூதேவியுடன் பரமபதநாதன் பேரின்பத்துடன் சேவை சாதிக்கின்றான்.
விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே. 3764
நம்முடைய புண்ணியத்தின் பலன்களாய் இவர்கள் வைகுண்டம் வந்தனர் என்று நல்ல முறையில் மறைகளை கற்றுணர்ந்து ஓதிவரும் நித்யசூரிகள் அவரவர் இடங்களில் ஆகம முறைப்படி அடியார்களுக்கு பாத பூஜை செய்தனர். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும், சந்திரன் போன்ற முகத்தைப் படைத்த அப்ரசரஸ்கள், அளவையில் பொற்காசுகளும், வாசனைப் பொடிகளும், நிறைகுடமும், விளக்கும் ஏந்தி வரவேற்றனர்.
மண்ணவர் விண்ணவரானது நமது புண்ணிய பலனே என்று கூறினர். சம்சாரத்தில் இருந்து பகவத் குணங்களை அனுபவிக்கப்பெற்ற மஹா புருஷர்களான இவர் கொண்டாடப்பட வேண்டியவர்கள். பாவங்கள் பல புரிந்து நரகவாழ்வினை மேற்கொண்டவர்கள் படும் துன்பங்களை தமது பாக்களில் ஆழ்வார்கள் எடுத்துரைத்துள்ளனர். அதுபோன்று புண்ணிய செயல்கள் புரிந்தவர்கள் திருநாட்டில் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பினை இப்பாசுரங்களில் எடுத்துக் கூறுகிறார். அறியாமையால் நரகம் புகுவதும், விவேகத்தால் திருநாடு புகுவதும் அவரவர் விதியே என்கிறார்.
வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை
கொந்து அலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே. 3765
பரமபதத்தின் நாயகனான பெருமானும் பிராட்டியும் ஒருசேர வந்து எதிர் கொண்டு அழைத்துச் செல்ல, பெரிய மணிகள் பதித்த அழகான திருமாமணி மண்டபத்தில் எல்லையில்லாத பேரின்பத்தோடு பரம பாகவதர்களான நித்திய சூரிகளுடன் இருந்ததை, கொத்துக் கொத்தான எழில் மலர்கள் நிறைந்த பொழில்களையுடைய வனத்தைக் கொண்ட குருகூரில் பிறந்த சடகோபர் ஆயிரம் பாமாலைகளில் சொல்லி வைத்தார். அவற்றுள் இத்தகையப் பத்துப் பாசுரங்களைப் பக்தியுடன் படிப்பவர்கள் முனிவர்களுக்கு நிகரானவர்கள் என்கிறார் ஆழ்வார்.
முன்பாசுரங்களில் பரமபதத்தில் பகவானின் பக்தர்கள் எவ்விதம் வரவேற்கப்படுகிறார்கள் என்பதை ஆழ்வார் எடுத்துக் கூறியுள்ளார். நித்திய சூரிகள், தேவர்கள், கின்னரர், கருடர், முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வரவேற்பதை ஆழ்வார் மிக அற்புதமாக நமக்கு எடுத்துக் காட்டினார். வேத மங்கையரின் உபசரிப்பு, முனிவர்கள் தங்கள் யாகத்தின் பலனை அளித்தல், தேவர்கள் தூபம் காட்டி மரியாதை செய்தல் ஆகியவை வெகு அழகாக விளக்கப்பட்டன. இந்நிலையில் பெருமானும் பிராட்டியும் எதிர்கொண்டு அழைத்து செல்லும் காட்சியினை இப்பாசுரத்தில் நன்கு விளக்கியுள்ளார் ஆழ்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக