ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

107. திருப்பாற்கடல்



 பெரியாழ்வார்                                                                       பெரியாழ்வார் திருமொழி           

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல் வண்ணா உன்மேல்
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரர் தம்மை
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்ஙனம் ஆவர்களே.  250 

      மஹா வராகமாகவும், கூர்மமாகவும், மத்ஸமாகவும் அவதரித்த பாற்கடல் போன்று வெளுத்த திருமேனியை உடைய நாதனே! உன்னைக் கொல்ல, மேயும் நிலத்தில் வந்து கலந்த கன்றின் உருவத்தோடு வந்த கள்ளத்தனம் கொண்டு வந்த அசுரனை, அவன் அசுரன் என்பதை நன்குணர்ந்து உன் பிஞ்சுக் கரங்களால் சுழற்றி விளாமரத்தில் அடித்து விளாங்காய்கள் போல் உதிரச் செய்தாய்! என் பிள்ளையான கண்ண பிரானுக்குத் தீங்கு செய்கிறவர்கள் இப்படித்தான் கன்று போல் நசுங்கி அழிந்து போவார்கள் என்று யசோதை கூறுவது போல் ஆழ்வார் கூறுகிறார்.

      கண்ணபிரான் தனது கிருஷ்ணாவதாரத்தில் தன்னைக் கொல்ல வந்த பலவிதமான அசுரர்களையும் வதம் செய்தான். அவனை யார் அழிக்க நினைத்தாலும் அவர்களது முடிவு இது போல்தான் முடியும். இத்தகைய கண்ணன் எந்த எதிரிகளாலும் வெல்ல முடியாதவன். அவனை அழிக்க நினைத்தவர் அழிந்து போவார்கள் என்று தன் உள்ளக் குமுறலுடன் கூறுவது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது. 

பை அரவின் அணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி!
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே! 427 

      திருவரங்கத்தில் பாம்பின் மீது பள்ளி கொண்டிருப்பவனே! திருப் பாற்கடலில் ஆதிசேஷன் மேல் நித்திரை செய்பவனே! உலகத்தை ஜீவனுள்ளதாக்கும் உயிர்களை உண்டாக்க நாபிக் கமலத்திலே பிரம்மனைப் படைத்தாய். பின் மனித வாழ்வு பொய்யே என்று எமனைப் படைத்தாய். எனவே என்னைக் காக்க உன்னைத் தவிர ஒருவருமில்லை என்று கூறுகிறார் ஆழ்வார்.

      உயிர்களின் வாழ்வு நிலையில்லாதது. உலகம் ஒரு விளையாட்டு மேடை. நாமெல்லாம் அதில் நடிப்பவர்கள். தாய். தந்தை, தாரம், சகோதரன் என்ற இவர்கள் அனைவரும் கதாபாத்திரத்திரமாக வந்து செல்பவர்கள்.  ஒரு கால கட்டத்தில் நாமும் பிரிந்து செல்வோம். இந்த யதார்த்த வாழ்வின் உண்மையை மனிதன் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு வாழ்ப் பழகிக்கொள்ள வேண்டும். ஒரு நேரத்தில் எல்லா மனித உயிர்களும் விடுபாடின்றி இறைவனுடன் சென்று சேரும் நிலை எழும்.  இதுவே தத்துவம், வேதத்தின் சாரம், கீதையின் உட்பொருள், ஞானிகளின் தாரக மந்திரம்.  இதனையே ஆழ்வார் பாசுரமாகக் கூறுகிறார்.                             

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்று  ஆசையினாலே
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயில் அணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத்  தத்துறுமாறே  439 

      வெள்ளை நிறத்தில் கொண்ட திருப்பாற்கடலில் ஒப்பற்ற திருவனந்தாழ்வானை படுக்கையாகக் விரித்து அப்படுக்கையின் மீது உறங்குவான் போல் யோகநித்திரைக் கொள்ளும்படியான காட்சியினைக் காணக் கூடுமோ என்ற விருப்பத்தினால் நெஞ்சழிய மகிழ்ச்சியின் மிகுதியால் வார்த்தை சொல்ல முடியாதபடி உடல் முழுவதும் மயிர்குழி எறியப்பெற்று கண்ணீர் படுக்கையில் உறங்கப் பெறுகிறேனில்லை. இவ்விதமான அடியேன் உன்னைக் கிட்டும் வழியை எனக்கு அருளிச் செய்ய வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார். இப்பாடல் மூலம் பகவானின் காட்சிகளையோ அல்லது அவன் பெருமைகளையோ கேட்ட மாத்திரத்தில் யார் ஒருவருக்குக் கண்களில் நீர் பெருகுகிறதோ, அது அவர்களுடைய இறுதிப் பிறவி என்பதை உறுதியாகச் சொல்லிவிடலாம். அற்ப விஷயங்களுக்கு கண்ணீர் விடும் நாம் நம்மை இவ்வுலகில் அவதரிக்கச் செய்த பகவானுக்காகக் கண்ணீர் சிந்த வேண்டும். ஆழ்வாரின் இத்தகைய நிலை நமக்கும் வர வேண்டும் என்பது இப்பாசுரத்தின் பொருளாகும். 

அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே    452 

      ஆதி சேஷனாகிய படுக்கையோடும், அழகிய திருப்பாற்கடலோடும், மகாலட்சுமியோடும் எம்பெருமான் மனத்தில் எழுந்தருளிப் பாற்கடலின் பல அலைகள் மோத யோகநித்திரை செய்வதாக கற்பனை செய்த விஷ்ணு சித்தர் தன் தேகத்தின் பாதுகாப்புக்காக இப்பாமாலையை அருளியுள்ளார். இதைப் பக்தியுடன் நாளும் படிப்போர்க்கு எல்லாவித நோய்களும் குணம் பெறும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      நம் உள்ளத்தில் பரம்பொருள் எழுந்தருளியுள்ளான் என்று நினைத்த மாத்திரத்தில் நமக்கு கூடுதலான பலம் வந்துவிடும். மனத்திற்கு எல்லையில்லா வலிமை உள்ளது. அத்தகைய மனத்தில் தேவையற்ற எண்ணங்களை இருத்தி அதனை குப்பையாக்கி வைத்துள்ளோம். அதனால் நோய் தாக்கி நம் உடலை பலவீனப்படுத்துகிறோம். எனவே நாளும் பகவானை நினைத்து அவனைத் தொழுது நமது மனதினை தூய்மையாக்கி உடல் நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம் என்பது இப்பாசுரத்தின் அரிய கருத்தாகும்.  

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடிவந்து என்
மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ !
தனிக் கடலே தனிச் சுடரே! தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே    471 

      குளிர்ந்த திருப்பாற்கடலில் பள்ளி கொள்வதை மறந்தாய். அங்கிருந்து ஓடி வந்து என் இதயக் கடலில் வாழ உறுதியோடு வந்த திருமகள் மணாளனான மாயனே! உனக்கென்று திருப்பாற்கடல் உண்டு. உனக்கென்று ஸ்ரீவைகுண்டமும் உண்டு. நீ இராம அவதாரம் செய்யத் தேர்ந்தெடுத்த தனி ஜோதி சூரியனும் உண்டு. இப்படிப் பல உயரிய இடங்கள் எல்லாம் உனக்கு இருக்க என் இதயத்தை நீ தேர்ந்தெடுத்த கருணையை என்ன சொல்லி புகழ்வது? என்று மனமுருகிக் கூறுகிறார் ஆழ்வார்.

      பகவான் உயர்வுகளையெல்லாம் பற்றி கவலைப் படுவதில்லை. உண்மையான அன்பு எங்குள்ளதோ அதுவே பகவானுக்கு சிம்மாசனமாகும். திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுண்டமும் இவ்விதம் உயரிய இடங்கள் அவனுக்கு சொந்தமாக இருக்க, இவை அனைத்தையும் விடுத்து அடியார்களின் மனமே சிம்மாசனமாகக் கருதி ஆழ்வாரின் மனத்தில் வந்து குடிகொண்டார். இத்தகைய நிலையினை ஆழ்வார் நெக்குருகி இறைவனிடம் இப்பாசுரத்தின் வழி தனது மனத்தினைத் தெரிவிக்கிறார். 

தட வரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல்
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ!
வட தடமும் வைகுந்தமும் மதில் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே.    472 

      மிகப் பெரிய மலை உச்சியில் தெளிவாய் நாட்டப்பட்டக் கொடியை எல்லோரும் சுலபமாகப் பார்ப்பார்கள். என் இதயத்தில் தீபஒளி போல் விளங்கும் என் ஒளியுடைய நம்பியே! வடதிசையில் உள்ள துவராகையும், வைகுண்டமும், திருப்பாற்கடலும் இவையெல்லாம் தள்ளிவிட்டு என் இதயத்தில் வசிக்க இடம் செய்து கொண்ட உன் அருளை என்ன சொல்லிப் போற்றுவது என்று ஆழ்வார் நெக்குருகிப் பாடுகிறார்.

      இப்பாசுரத்தில் தீப ஒளியாகப் பெருமான் திகழ்கின்றார் என்று கூறுகிறார் ஆழ்வார். அந்த ஒளியைக் காண்பது உலகத்தவரின் இலட்சியமாகும். அந்த இலட்சியத்தை தான் அடைந்து விட்டதாகக் கூறுகிறார். மலையுச்சியின் கொடி போன்று துவாரகை, வைகுண்டம், திருப்பாற்கடல் ஆகியவை விளங்குவதாக உள்ளன என்கிறார். அவர் இங்கு எழுந்தருளியுள்ளதை நாம் காண முடியாது, ஆனால் உணர முடியும். எனவே நம் உள்ளத்தில் உள்ள பரம்பொருளின் கூறான தீப ஒளியை கிடைத்தற்கரிய இந்த மானிடப் பிறவி மூலம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார். 

ஆண்டாள்                                                                                                                      திருப்பாவை

 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக் 
         செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
        நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் 
        செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
        உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்    475      

      இவ்வுலகத்தில் மாயையில் சிக்கித் தவிக்கும் மானிடர்களே! நாம் நம் பாவை நோண்பிற்குச் செய்ய வேண்டியனவற்றைக் கேளுங்கள்.  பாற்கடலில் பாம்பின் மேல் கண்ணயர்ந்து பள்ளிகொண்ட பரமனின் திருப்பாதங்களுக்கு மங்களம் செய்வோம். மார்கழி மாதம் முழுவதும் நெய், பால் முதலியவற்றை உண்ணுவதிலிருந்து விலக்களித்து, புலர்காலைப் பொழுதில் நீராடி, மை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இறைவனிடம் ஈடுபட்டிருப்போம். செய்யக் கூடாத செயல்களை நாம் செய்யாதிருப்போம்.  பிறர் மனம் புண்படும்படி தீய வார்த்தைகள் புறம் பேசாதிருப்போம். ஆச்சாரியர்களுக்கும், சந்நியாசிகளுக்கும் அளிக்கும் சமர்ப்பணமும், ஏழைகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் அளிக்கும் தர்மங்கள் அனைத்தையும் மனநிறைவுடன் செய்வோம். கண்ணனை எண்ணி கசிந்துருகி நம்மை உய்விக்க வேண்டி நிற்போம் என்கிறள் ஆண்டாள். 

குண்டு நீர் உறை கோளரீ! மத யானை கோள் விடுத்தாய்! உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக் கடைக் கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக்கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே     516 

      மிகுந்த ஆழமுடைய பிரளய வெள்ளத்தில் யோக நித்திரை செய்பவனே! மிடுக்கான ஆண் சிங்கம் போன்றவனே! கஜேந்திர ஆழ்வாரின் துன்பம் தீர்த்தவனே! உன்னைப் பார்த்து ஆசைப்படும் எங்களைக் கடைக் கண்களால் பார்த்து அருள் புரிய வேண்டும்.  நாங்கள் நதி அடித்துக் கொண்டு வந்த மணலில் வீடு கட்டியுள்ளோம். தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவனே! எங்கள் சிறு வீட்டைச் சிதைக்காதே  ஆண்டாள் கேட்பது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது.

      ஆயர்குலச் சிறுமியர்கள் கண்ணனின் பெருமைகளைப் பறை சாற்றுவது போல் அமைந்துள்ளது. மிகவும் வலிமை கொண்ட ஆண் சிங்கமாக கண்ணனைப் போற்றுகிறார்கள். முற்பிறவியல் கொண்ட தீவினையால் யானையாகப் பிறந்தாலும் இப்பிறவியில் எம்பெருமானை பூஜித்த காரணத்தினால் யானை விடுதலை பெற்றது. அதுபோன்று நாம் முற்பிறவியில் செய்த வினைகள் அனைத்தையும் இப்பிறவியில் நாம் ஸ்ரீமந் நாராயணனை பூஜித்து வந்தால் அந்த நற்சிந்தனையே நமக்கு பயனளித்து எல்லாத் துன்பங்களிலிருந்து நாம் காப்பாற்றப்படுவோம் என்தை ஆண்டாள் இப்பாசுரத்தின் வழி நமக்குத் தெரிவிக்கிறாள். 

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
     புணர்வது ஓர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து
     ஆவியை ஆகுலம் செய்யும்
அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு?
     ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ
     சாலத் தருமம் பெறுதி    551     

      பொங்கியெழுந்து வரும் திருப்பாற்கடலில் அரவணையின் மேல் பள்ளி கொண்டானோடு கூடல் கொள்ளும் ஆவலினால் என் தனங்கள் வெப்பமேறி கிளர்ச்சியுற்று மகிழ்ச்சியோடு புகுந்து என் உயிரை மேலும் துன்புறுத்துகின்றன. அழகுமிக்க குயிலே! வெயிலுக்கு அஞ்சி நிழலிலே மறைந்திருப்பதால் உனக்கென்ன பெருமை? ஒளிமிக்க சுதர்சனச் சக்கரமும், பாஞ்சசன்னியம் என்ற வெண்சங்கும், கௌமோதகியும் தரித்திருக்கும் கையை உடையவனை இங்கே வரும்படிக் கூவினால் மிகவும் தருமம் செய்தனையாவாய் என்று ஆண்டாள் கூறுகிறாள்.

      நாயகனைப் பிரிந்திருக்கும் பெண்களின் வேட்கையினை ஆண்டாள் அழகாகக் கூறுகிறாள். தனது விருப்பத்தினை ஆண்டாள் தைரியாமாக இத்தகைய வார்த்தைகளினால் பிரயோகப்படுத்துவது அவளது மன தைரியத்தைக் காட்டுகிறது. அவளது உள்ளுணர்வுகளை மிகவும் அழகாக எடுத்துரைக்கும் விதம் அனைவரையும் கவர்கின்றது. பக்தி என்பதனையும் தாண்டி கண்ணன் மீது காதலும், காமமும் தமது பாடல் மூலம் அழகாக எடுத்துரைக்கிறாள். 

குலசேகராழ்வார்                                                                                  பெருமாள் திருமொழி 

மாலை உற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறுந்துழாய்
மாலை உற்ற வரைப் பெருந் திரு மார்வனை மலர்க் கண்ணனை
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை உற்றது என் நெஞ்சமே   665 

      அலையெறிகிற திருப்பாற்கடலிலே பள்ளி கொள்பவனும், வண்டுகள் ந¤றைந்த நறுந்தேன் மிக்க துளசி மாலையை தனது கழுத்தில் சூடிக் கொள்பவனும், மலையைப் போன்று பெரிய திருமார்பினை உடையவனும், செந்தாமரைப் போன்ற த¤ருக்கண்களை உடையவனுமான த¤ருவரங்கன் மேல் மையல் கொண்டு இருந்த இடம் தெரியாமல் கூத்தாதடி சஞ்சர¤த்து வாயாரப் பாடி திவ்யதேசங்கள் தோறும் சென்று அரங்கன்பால் பித்தேறித் திரிகின்ற வைணவ தொண்டர்களுடைய வாழ்வுக்கு என் மனம் மயங்கி ஈர்க்கும் என்க¤றார்.      

      பகவான் ம¦து ஆசை கொண்டு ஆடிப்பாடி த¤¤ந்து அவன் புகழ் பாடும் பாகவத அடியார்கள¤ன் வாழ்க்கை முறை என்னை ஈர்க்க¤ன்றது. ஆனால் நமது மனமோ பொருள் சேர்ப்பத¤லே நாட்டம் செல்க¤ன்றது. அதனால் அவர்கள் ந¤ம்மத¤ இழக்க¤றார்கள். அதனால்தான் ஆழ்வார் எவையும் வேண்டாம் பகவானின் திருப்பாதங்களே போதும் என்கின்ற வைணவர்களின் மனமே எனக்கு போதும் என்கிறார். 

ஒண் பவள வேலை உலவு தன் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே.   680. 

      ஒளிவீசும் பவளக் கொடிகளைக் கரையிலே தள்ளும் அலை வீசும் திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்தருளும் மாயவனான ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளைக் காண்பதற்கு இசையையே பிரதான மொழியாகக் கொண்டிருக்கும் கரிய வண்டினங்கள், இனிய பண்ணிசையை முழங்கும் திருவேங்கட மலையிலே நறுமணம் கொண்ட செண்பக மலராய் மலர்ந்துள்ள பேறு பெற்றவனாக வேண்டும் என்று ஆழ்வார் பெருமானை நோக்கி வேண்டுகிறார். பெருமானே! எனக்கு பெருமைப்படும் எத்தகைய பிறப்பும் வேண்டாம்.  பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதற்கு மணமுள்ள சிறு மலராக நான் பிறந்தாலும் அந்த மலர்வழியாக நின் திருப்பாதங்களை வந்தடையும் உயரிய பேரினை மனமுவந்து ஏற்பேன் என்கிறார் ஆழ்வார்.

      பெருமான் துயில் கொண்டிருப்பது போல் இருந்தாலும் உலக இயக்கங்கள் அத்தனையையும் தங்கு தடையின்றி செய்தவண்ணம் உள்ளார். அவரது ஆணையின்படி எல்லா செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்தகையவன் திருமலையில் எழுந்தருளியுள்ளான். அவரத்து பாத தரிசனத்தைப் பெற நான் சண்பக மலராக இருக்க ஆவல் கொண்டுள்ளேன் என்கிறார். 

திருமழிசையாழ்வார்                                                                        திருச்சந்தவிருத்தம்                  

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண் இல் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங் கடல் கிடந்து மேல்
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என் கொல்? ஆதிதேவனே!     768 

      உலகங்களை உண்டு ஆலிலையில் நித்திரை செய்தபோது நீ பரவாசு தேவனாக ஒரே மூர்த்தியாய் இருந்து நித்யவிபூதியை நிர்வகித்தும், ஸங்கர்ஷன், பிரத்யும்னன், அநிருத்தன்  போன்ற மூன்று மூர்த்தியாய் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்கள் செய்யும்போது மூன்று மூர்த்தியாகிறாய். பிரதாகம், புருஷன், அவ்யக்தம், காலம் என்ற நான்கில் ஞானம், சக்தி, செல்வம், தேஜஸ் ஆகிய நான்கையும் ஜீவன்களுக்கு அளிக்க நான்கு மூர்த்தியாகிறாய். தேவர்களுக்கு நன்மை செய்ய போக மூர்த்தியாய் அவதரித்து, ராசக்கிரீடை நடத்தினாய். பாக்கியம் செய்தவர்களின் புண்ணியத்தின் வடிவமாக இருப்பவனே! இப்படி எண்ணற்ற மூர்த்தியாய் விளங்கும் அனந்த சயனனே! அனைத்திற்கும் மேல் அடியார்கள் உகக்க அர்ச்சாவதாரமாய் அவதரித்த தன்மைதான் என்ன அற்புதம் என்று பெருமானை வியந்துப் போற்றுகிறார். 

விடத்த வாய் ஒர் ஆயிரம் இராயிரம் கண் வெந்தழல்
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர் அராவணை
படுத்த பாயல் பள்ளி கொள்வது என்கொல் வேலை வண்ணனே.   769 

      கடலைப் போன்ற நீலநீறத்தைக் கொண்டவனே! தன் ஆயிரம் வாயிலும் கடும் விஷமுடைய இரண்டாயிரம் கண்களிலும் விஷ ஜ்வாலை புறப்பட்டுவர, ஒருபோதும் உன்னிடமிருந்து நீங்காத கோபத்தையுடைய பேரொளி கொண்ட அனந்தாழ்வான் மீது வெள்ளைப் பாற்கடல் மேல் ஒரு நீலக்கடல் நித்திரை செய்தது போல் ஆதிசேஷனின் திரண்ட அழகுடைய படங்களே மேல் விதானமாயிருக்க துயில்வது எதற்காக? என்று கேட்கிறார் ஆழ்வார்.

      பாற்கடல் போல் உள்ளம் வெள்ளையாக இருந்தால் பகவான் அங்கே எழுந்தருள்வான் என்பதை இப்பாசுரம் விளக்குகிறது. ஆதிசேஷன் தன் ஆயிர நாவினால் விஷத்தைக் கக்கினாலும் அவைகளை நீக்கி அனந்தசயனனாக பள்ளி கொண்டுள்ளாய். நமது ஐம்புலன்களும் விஷத்தைப் போன்று நம்மை கீழ்நிலைக்கு எடுத்துச் சென்றாலும் பகவானின் திருக்கருணையினால் அந்த விஷம் செயலற்றதாகி நம்மைத் தூய்மையாக்கி விடும் என்ற கருத்தை இப்பாசுரம் மூலம் தெளிவிக்கறார். 

வால் நிறத்து ஒர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊன் நிறத்து உகிர்த்தலம் அழுத்தினாய் உலாய சீர்
நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு
பால் நிறக் கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே?   774 

      வெளுத்த நிறத்தையுடைய திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பத்மநாபா, ஆலிலையில் நித்திரை செய்தவனே! குழந்தையை வெள்ளம் அடித்து கொண்டு போகும். நீ அதிலே மிதந்து வியக்கத்தக்க செயல் புரிந்தாய்.  புருஷோத்தமன் தனது ஸ்வரூபத்தை மாற்றி சிங்கமுகமும் மனித உடலாக தூணிலே தோன்றி ஒளி வீசும் வளைந்த பற்களைக் கொண்ட இரண்யகசிபுவை மர்மமான இடங்களில் கூரிய நகங்களால் கிழித்துக் கொன்றது அதைவிட அற்புதம். காளமேகத்து நிறத்ததினை மாற்றி வெண்ணிறமாகக் கொண்டு உலகெங்கும் உலாவி வருகின்ற சீர்மையுடைய உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம் என்கிற நான்கு வகை ஸ்வரங்களோடு கொண்ட வேதங்களை நாவிலே ஸ்தோத்தரிக்கும் நித்திய சூரிகள் உன்னைச் சிறப்பாகப் போற்றுகின்றனர். 

படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலன் ஊர் புக
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே.   779     

      மாயங்கள் செய்வதில் வல்லவனே! அண்டங்களுக்குக் காரணமான கடலை உண்டாக்கினாய்! அதன் பிறகு ஆதிசேஷனை படுக்கையாக்கி நித்திரை செய்தாய். அதன் பிறகு தேவர்களுக்கு அமுதம் அளிக்க பாற்கடலை கடைந்து புகழ் பெற்றாய். பிறகு சிருஷ்டிக்கப்பட்ட பூமியில் நீ உமிழ்ந்த பூமியை வராகவடிவம் தாங்கி பற்களால் குத்தி கொண்டு வந்தாய். அதில் மூன்றடி மண் கேட்டு திருவிக்கிரமனாய் உலகம் முழுவதையும் அளந்து கொண்டாய். பிரளய காலத்தில் உலகினை உண்டுமிழ்ந்து காத்தாய். பாற்கடலைக் கடைந்து அமுதமெடுத்தாய். இந்த மாயங்களால் சினம் கொண்டு போரிட்ட மாலி, சுமாலி ஆகிய இருவரையும் யம லோகம் அடைய வைத்தாய். அநேக திவ்ய ஆயுதங்களையுடைய வலிமையான திருக் கரங்களையுடைய அற்புதமானவனே! இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? மூவுலகினைப் படைத்தும் உனக்கென்று எவ்வித கடமையும் இல்லாத நிலையில் ஆனாலும் உலக நன்மையைக் கருதி நீவீர் செயலாற்றிக் கொண்டிருக்கிறீர் என்று வியந்து போற்றுகிறார் ஆழ்வார். 

பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணைக் கிடந்து
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்து அது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தி ஆயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே?    780 

      கீதா சாரியனான பெருமானே! உயர்ந்தவற்றுள்ளும் உயர்வாய் இருப்பவனே! கடலைப் பெருமைப்படுத்த நாகராஜனுக்குக் கீர்த்தி கிடைக்க, பாற்கடலில் அனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டாய். திருமார்பில் பிருகு குமாரிக்கு மகிழ்ச்சியோடு இடம் தந்தாய். நரமனிதர்களை உய்விக்க ஸ்ரீராமனாக கிருஷ்ணனாக வந்தாய். உனது அருள்புரியும் தன்மையை இப்படிப் பட்டதென்று ஓருவராலும் சொல்ல இயலாது என்கிறார் ஆழ்வார்.

      இப்பாடலில் பெருமானுடைய உயர்ந்த குணங்களையும் அவரது பெருமைகளையும் அழ்வார் எடுத்துக் காட்டுகிறார். இவ்வுலகிற்கு அளித்த அனைவரையும் கர்ம யோகிகளாகவும், ஞான யோகிகளாகவும் மிளிரச் செய்தவர் பெருமான். நாகராஜனுக்கு புகழ் உண்டாக்க அவன் பெருமான் மீது பள்ளி கொண்டார். நர மனிதர்களுக்கு முக்தி தர ஸ்ரீராமனாக அவதரித்தார். அது போன்று துஷ்டர்களை சாதுர்யமாகப் பேசி அழிக்க ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார். ஞானத்தினை அடைய கீதோபதேசம் அருளினார். இத்தகைய உலக உயிர்களுக்கு பல்வேறு மார்க்கங்களில் அருள் புரியும் அவனுடைய தன்மையை இப்படிப்பட்டது என்று வரையறுத்துக் கூற இயலாது என்று ஆழ்வார் இப்பாசுர வழி தெரிவிக்கின்றார். 

கடைந்த பாற்கடல் கிடந்து காலநேமியைக் கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ.   832. 

      கூர்ம அவதாரத்தில் பரந்தாமன் அமிர்தம் பெற கடையப்பட்ட பாற்கடலைப் பெருமைப்படுத்த அதில் பள்ளி கொண்டான். கால நேமி என்ற  அசுரனை அழித்தான். நடுங்கிக் கிடந்த வலிமை மிக்க வாலியின் சகோதரனான சுக்ரீவனுக்கு உதவ ஸ்ரீராமனாய் வடிவம் எடுத்தான். ஒன்றொடொன்று பின்னிக் கிடந்த ஏழு மராமரங்களையும் ஒரே அம்பால் வீழ்த்தியவன் திருவேங்கட மலையில் வீற்றிருக்கிறான். அவன் திருவடிகளை அன்போடு பணிந்து பிறவிப் பிணியை அகற்றுங்கள் என்கிறரார் ஆழ்வார்.

‘மொய் கொள் வார் சிலை நாணினை முறை உறவாங்கி வெய்ய வாளியை, ஆளுடை வில்லியும் விட்டான்’ வார்வலிமை கொண்ட நீண்ட வில்லின் நாணினை முறைப்படி நன்றாக இழுத்து  எல்லா உயிர்களையும் அடிமையாகக் கொண்ட வில்லாற்றல் மிக்க இராமன் கூரிய அம்பினைத் தொடுத்தான் என்று கம்ப இராமாயணத்தில் இராமனின் பராக்கிரமத்தை கம்பர் வர்ணிக்கின்றார். 

விடைக் குலங்கள் ஏழ் அடர்த்து வென்றி வேற்கண் மாதரார்
கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே    843 

      நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு முரட்டுக் காளைகளை வென்றவனே! அவளின் வாசம் மிகுந்த அழகிய தோள்களை அணைத்த கோபாலா! சமுத்திர நீரைப் படைத்தவன் நீ! அதில் பள்ளி கொண்டவனும் நீ! அதைக் கடைந்தவனும் நீ! அதில் அணை கட்டியவனும் நீ! அமுதம் வேண்டி கடைந்ததும் நீ! உன்னிடம் அடைக்கலமாய் புகுந்த என்னை ‘அஞ்சாதே’ என்று ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று பெருமானை நோக்கிப் பாடுகிறார்.

      ஆழ்வார் இப்பாசுரத்தில் இன்பம் மற்றும் துன்பம் கொண்ட இவ்வாழ்விலிருந்து தாம் மீள்வது எப்போது என்ற வினாவினை எழுப்புகிறார். வேறு விதமான மாயமும், வித்தைகளும் நான் கற்கவில்லை. எனக்குத் தெரிந்தது உன்னைச் சரணடைதல் மட்டுமே. அது மட்டும் தான் என்னால் செய்ய முடியும். ஆகவே எனது இந்த நிலையைக் கண்டு ‘நானிருக்க நீ பயப்படாதே’ என்று நீ சொல்ல வேண்டும் என்பது எனது வேண்டுதலாகும். இதே கருத்தினை ஆழ்வார் மக்களுக்கும் தெரிவிக்கிறார். இது போன்று பகவானை நாம் அணுக வேண்டும் என்பது அவர் இப்பாசுரம் மூலம் நமக்கு தெரிவிக்கும் கருத்தாகும். 

அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை
தொடக்கு அறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை நீ
விடக் கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும்
கடல் கிடந்த நின் அலால் ஒர் கண்ணிலேன் எம் அண்ணலே !   846 

      எம்பெருமானே! அடக்க இயலாத ஐம்பொறிகளையும் அடக்கி ஆசைகள் முளைவிடும் போதே வேரோடு அழித்து உன் திருப்பணியில் மனத்தைச் செலுத்தியிருக்கும் என்னைத் தள்ளி விட்டாலும், சிற்றின்ப ருசியை உண்டாக்கினாலும் சரி, திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் உன்னைத் தவிர வேறு எவரையும் தேடிப் போக மாட்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

      இப்பாசுரத்தில் மனிதனின் நிலையினை எடுத்துக்காட்டுகிறார். ஐம்புலன்களை அடிக்கி அது மீண்டும் வராதபடி நம்மைப் பாதுகாப்பது பகவானின் திருப்பாதங்களே. எத்தகைய நிலையிலும் உன்னை விட்டால் எனக்கு வேறு கதியில்லை என்கிறார். ஐம்புலன்கள் கட்டுப்படுவதும் கட்டுப்படாத்தும் முன்வினைப் பயன்களில் நிகழ்வால் ஏற்படுகிறது. பகவானின் திருவுள்ளப்படி எல்லாமே நடக்கின்றது. முயற்சி செய்வது ஒன்றை நம்பணி. முடிவு அவன் கையில் என்ற தெளிவு நமக்குள் வரவேண்டும். நீயே சரண் என்று எம்பெருமானின் திருப்பாதங்களில் சரணடைந்து விடுதலே நலம் என்கிறார் ஆழ்வார். 

தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈதெலாம்
நீயும் நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே!    861 

      வண்டுகள் உலாவி மொய்க்கும் குளிர்ந்த துளசி மாலை அணிந்த ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே! பாற்கடலில் படுத்திருப்பதோடு பக்தர்களின் உள்ளங்களிலும் குடியிருக்கும் கடல்வண்ணா! நாய்க்குச் சமமான நீசனான நான் தூய்மையான மனத்துடனோ, அழுக்குப் படிந்த எண்ணங்களுடனோ தேவரீரை சேவித்துப் போற்றி வழிபடுவதைப் பொறுத்து அருளி கருணை காட்ட வேண்டும் என்று  பெருமானை இறைஞ்சுகிறார் ஆழ்வார்.

      இப்பாசுரத்தில் தன்னுடைய நிறை குறைகளை ஏற்று அருள் புரிய வேண்டும் என்கிறார். மண்ணுலக மாந்தர்கள் அனைவரும் நல்வினை தீவினை ஆகிய இரண்டும் கலந்து பிறந்துள்ளார்கள். தேவர்களும் கந்தர்வர்களும் வினைப்பயனால் அவதியுற்றுள்ளார்கள். அதிக நல்வினை புரிந்ததால் அவர் ஆழ்வாரானார். எம்பெருமானின் அடியவராகி மக்களுக்கு நன்மை புரிந்துள்ளார். ஆனால் ஆழ்வார் தான் அதிகம் பாவம் புரிந்ததாகக் கருதிக்கொண்டு அப்பழியினை தானே ஏற்றுக்கொண்டு, தீவினை அதிகம்  புரிந்தவர்களுக்காக பரிந்து பெருமானிடம் இத்தகையதொரு வேண்டுகோளை ஆழ்வார் வைக்கிறார் என்பது இதன் கருத்தாகும். 

ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய்
ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகரும் மதி என்றும் பார்த்து .     2348 

      பரந்தாமனுடைய திருநாபியிலே உயர வளர்ந்த அழகிய தாமரை மலர் அவனது வலக்கரத்தில் இருக்கும் சுதர்சனத்தை சூரியனென்றும், இடக்கையிலுள்ள வெண்மையான பாஞ்ச சன்னியத்தை வானத்தில் திகழும் சந்திரனென்றும் எண்ணி ஒரே சமயத்தில் மலர்வதும், குவிவதுமாகவும் உள்ளது என்று கூறுகிறார் ஆழ்வார்.

      சுதர்னச் சக்கரம் சூரியனாகவும், பாஞ்ச சன்னியம் சந்திரனாகவும் இங்கே உவமையாக காட்டப்படுகிறது. பகவான்னி திருநாபியில் வளர்ந்திருக்கும் தாமரை, சக்கரத்தைச் சூரியனாக எண்ணி மலர்கிறது. சங்கை சந்திரனாக எண்ணிக் குவிகிறது. என்றும் ஆழ்வார் குறிப்பிடுகிறார்.  உலகத்தின் ஒளியாக சங்கும் சக்கரமும் திகழிகின்றது என்பது இதன் உட்கருத்தாகும். சங்கு வெற்றியின் நாதம், சக்கரம் பகைவர்களை அழிக்கும் ஆயுதம். உலகத்தில் இருளை உண்டாக்கும் அசுர சக்திகளை அழித்து ஒளியினை வழங்கும் சாதனங்களாக இவை பகவானின் திருக்கரத்தில் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது இதன் கருத்தாகும்.     

திருமழிசையாழ்வார்                                                                 நான்முகன் திருவந்தாதி 

நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான் .                   2417. 

      திருக்குடந்தை, திருவெஃகா, திருவள்ளூர், திருவரங்கம், அன்பில் மற்றும் திருப்பாற்கடல் ஆகிய திவ்யதேசங்களில் ஆதிசேஷன் மேல் அரிதுயில் கொள்ளும் ஆதி முதல்வனான எம்பெருமான், அடியார்கள் உள்ளத்திலும் புகுவதற்கு என்றும் காத்துக் கிடக்கிறான். நாம் அவனை நெருங்கிப் போகப் போக அவன் விரைந்து நம் மனத்தில் வந்து புகுந்து கொள்வான். ஆனால் நாம் இத்தகைய பெருவாழ்வினைப் புறந்தள்ளி அழியும் பொருட்களுக்குப் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம். எனவே பகவானை அடைவதற்கு நாம் வாழும் காலத்திலிருந்தே அவனை நெஞ்சில் நிறுத்த முயற்சிக்க வேண்டும். எம்பெருமான் நம் உள்ளத்தில் வந்து நித்தியவாசம் புரிவதற்கு தயாராக உள்ளார். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆழ்வாரின் கருத்தாகும்.   

நாக் கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆகத்
தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு    2456 

      பரந்தாமனை நெருப்பு போன்று சிவந்த சடையைக் கொண்ட சிவபெருமான் போற்றுகிறார்.  ஸ்ரீவைகுண்டபதியின் திருப்பாதங்களை நாளும் போற்றுவேனேயன்றி, பாசுரங்களைப் பாடும் நாவால் மனிதர்களைப் பற்றி பாட மாட்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார். இப்பாசுரத்தின் மூலம் ஆழ்வார் நமக்குத் தெரிவிப்பதாவது, மனிதர்களைப் பாடுவதால் நம்முடைய எண்ணம் சிதறுகிறது. ஏதோ ஒருவித கட்டாயத்திற்காகவும், அல்லது அவர்கள் தரும் செல்வத்திற்காகவும் மனிதர்களைப் பாடவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.  இதனால் நாம் ஒரு சிறு வட்டத்திற்குள் உழலும் மனிதர்களாக மாறி விடுகிறோம். பகவானைத் தவிர வேறு ஒருவரையும் நான் பாடேன் என்று கூறுவது உண்மையான பக்திநிலை. அது சுயநலக் கலப்பில்லாத ஒன்றாகும்.  அத்தகைய ஒரு உயர்நிலையை ஆழ்வார் பெற்றிருப்பதால்தான் பாசுரங்களைப் பாடிய நாவால் மனிதர்களைப் பாட மாட்டேன் என்கிறார்.  அது போன்றதொரு தெளிவு, உறுதி, வைராக்கியம் நமக்கு வர வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.     

ஆய்ந்துகொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம்
மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து    2460 

      உலகங்களுக்கெல்லாம் ஆதிபகவானான பெருமானை, அன்போடு வணங்கி தமது பாங்கான மனத்திலே நிலைநிறுத்திக் கொள்ள வல்லவர்கள் தங்களுக்கு பரமபதம் நிச்சயம் என அறிந்திருந்தும் விரைந்து அங்கு சேர ஆசைப்பட்டு உடம்பையே ஒரு வியாதியாக நினைத்தது, இது எப்போது போகும் என்று எண்ணியிருப்பர் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      இவ்வுடலைக் காப்பதற்காக மனிதர்கள் எத்தனை பாடு படுகிறார்கள் என்பதை நாம் அறிந்துள்ளோம். இம்மனித வாழ்வில் எவ்வித சாரம் என்று  வாயால் தத்துவம் பேசுவார்கள்.  ஆனால் சிறிது நோய்வாய்ப்பட்டால் மருத்துவரிடம் விரைந்து ஓடுவார்கள். இவ்வுடலை காப்பாற்றிக் கொள்ளவே அனைவரும் விரும்புகிறார்கள்.  ஆனால் ஆழ்வாரோ இவ்வுடலே ஒரு பெரும் வியாதிதான் என்பதைத் தெரிவிக்கிறார். எம்பெருமான் திருவடி அடைய விரும்புபவர்கள் உடல் என்ற நோய் எப்போது தொலையும் என்று நினைப்பார்கள். இவ்வுடலே நமக்கு பிறவிகளைக் கொடுக்கின்றது. உடலே இல்லையென்றால் பிறவிகளே இல்லை என்ற கருத்தினை ஆழ்வார் கூறுகிறார். இவ்வுடல் இருப்பதால் பல இச்சைகளைக் கொள்ள பல்வேறு தேவையற்ற செயல்கள் புரிகின்றன என்ற கருத்தினை ஆழ்வார் இப்பாசுரத்தில் தெரிவிக்கிறார். 

தொண்டரடிப்பொடி ஆழ்வார்                                                                       திருமாலை           

மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னைப் போலப்
பொய்யர்க்கே பொய்யன் ஆகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே.   886 

      கருடனைக் கொடியாகவுடைய தேவாதி தேவன் மெய்யான ஆர்வமிருந்தும் பகவானைப் பற்றி முழுமையாக அறியும் விதி இல்லாத என்னைப் போல் அபாக்கியவான்களுக்கு மெய்யனாக இருந்து தன் வடிவத்தைக் காட்டி அருள்கிறான் அரங்கன். சிற்றின்பமே முழுமை என்று இருப்பவர்களுக்கு பொய்யனாக மறைந்திருப்பான்.  இத்தகைய மாயையிலிருந்து அகன்று கடைத்தேற விரும்புகிறவர்ளுக்கு சர்வேசுவரனான எம்பெருமான் ஒருவனே என்று உணர்ந்தபின் அவர்களது சந்தேகங்களைப் போக்கி காட்சியளிக்கும் அற்புதமான ஊர் திருவரங்கமாகும்.  அவனைக் காணும் விதி இல்லாத போதிலும் அவனை நினைத்து பக்தி செலுத்தி அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் இருந்தாலே போதும் பகவான் நம்மைத் தேடி வருவான் என்று அவனது பெருமைகளைக் கூறுகிறார். எனவே அவனைக் காண நமக்கு காத்திருக்கும் குணமும், ஆவலும் நிறைந்து இருக்க வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும். 

திருமங்கையாழ்வார்                                                                            பெரிய திருமொழி 

கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும்   திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால்
நமனார் பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய்
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்!   1003 

      திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமானே! திருநைமி சாரண்யத்தில் எழுந்தருளியுள்ள எனது தலைவனே! கோணலான புத்தியால் மற்றவர் கோபப்படும்படியான தொழிலைச் செய்து, காட்டிலே திரிந்து நாய்க் கூட்டங்களோடு திளைத்து பல உயிர்களை வேட்டையாடி, வழிப் போக்கர்களைத் துரத்தி, இருட்டிலே உழன்று பல உயிர்களைப் பறித்தேன். இத்தகைய செயல்கள் அனைத்தும் குற்றம் என்று அறியாதிருந்தேன்.  நெடுங்காலம் சிந்தித்துப் பார்த்து உன் திருப்பாதங்களைத் தஞ்சமாக வந்து விட்டதால், எம லோகத்திலுள்ள நரக வாசத்தை அனுபவிக்கும் துன்பத்தை நான் அழித்துவிட்டேன் என்று ஆழ்வார் மனம் நொந்து கூறுகிறார். வழிப்பறி செய்து பொருளீட்டுதல், கலப்படம் செய்து பணம் ஈட்டுதல், பிறர் பொருளைக் கவருதல், அப்பாவிகளைக் கொல்லுதல் போன்ற இழி தொழில்களை செய்யாதிருக்க ஆழ்வார் நம்மைக் கேட்டுக்கொள்கிறார். 

ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது  வாசல்
தான் உடைக் குரம்பை பிரியும்போது உன் தன் சரணமே சரணம் என்று  இருந்தேன்
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடுங் கடல்  கிடந்தாய்
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தா!  1006. 

      தேன் நிறையப் பெற்ற தாமரை மலரில் அவதரித்த திருமகளின் கணவனே!  திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்பவனே! திருநைமிசாரண்யத்தில்  குடி கொண்டிருக்கும் ஜனார்த்தனா! உடலில் உள்ள சதையே சுவராக, எலும்புகளே தூணாக, ரோமங்களை வேய்ந்து ஒன்பது வாசல்களைக் கொண்டிருக்கும் குடிசையாகிய இவ்வுடலை விட்டு ஆன்மா பிரியும்போது உன் திருப்பாதங்களே சரணமென்று எண்ணியிருந்தேன். எனது தவமாக விளங்கும் உன் கருணையால் உன் திருப்பாதங்களைப் பற்றினேன்.   திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்பவனே! திருநைமிசாரண்யத்தில்  குடி கொண்டிருக்கும் ஜனார்த்தனா! ஆன்மாவானது உடலென்னும் இந்த வீட்டை விட்டு வெளியேறும்போது, அழுக்கடைந்த சட்டையை நீக்கி புதிய சட்டை போடுவதுபோல் ஜீவனானது வேறு உடலை நோக்கிச் செல்கிறது. முக்தி என்ற நமது லட்சியம் நிறைவேறும் வரை இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பது இதன் தத்துவப் பொருளாகும்.

 பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே!      1019 

      கல்நெஞ்சம் படைத்த கொடிய பூதகியானவள் பேரிரைச்சலுடன் கதறும்படியாக அவளது தனத்தை, சிறு குழந்தையான ஸ்ரீகிருஷ்ணன் அவளது விஷப்பாலை உறிஞ்சியெடுப்பது போல் அவளது உயிரை உறிஞ்சி அழித்தான். அத்தகையவன் பள்ளி கொள்ளும் இடமானது திருவரங்கம், திருப்பாற்கடல் மற்றும் திருவேங்கடமாகும். அப்பெருமான் வளருகின்ற இடமாயும், அறிவில் செறிந்த தெளிந்த ஞானிகள் வணங்கும் பெருமான் கிருத யுகத்தில் வெளுத்த நிறத்திலும், கலியுகத்தில் கறுத்த நிறத்திலும், துவாபரயுகத்தில் சாம நிறத்திலும் இருப்பவன் என்று அவனை தியானித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் வணங்கப் பெற்றதாயுள்ள திருமலையை உடன் சென்று அடை மனமே! என்று தனது நெஞ்சைப் பார்த்துக் கூறுகிறார் ஆழ்வார். 

கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த
     காளமேகத் திரு உருவன்
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற
     பரமனார் பள்ளிகொள் கோயில்
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்
     தொகு திரை மண்ணியின் தென்பால்
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்
     திருவெள்ளியங்குடி அதுவே .    1341. 

      முன்பு பசுக்காளை பாதுகாத்து கம்சனை  மடியச் செய்த காளமேகம் போன்ற மேனி கொண்டவன்,  கருடக் கொடியை உடையவன், பாற்கடலில் சயனம் கொண்ட பரந்தாமன் குடியிருக்கும் கோயில் திருவெள்ளியங்குடியாகும்.  இத்தலத்து துறைகள் தோறும் பொன்னையும், மணியையும் கொழிக்கும் திரண்ட அலைகளையுடைய மண்ணியாற்றின் தென்கரையில் ஒதுங்கி வரும் மாணிக்கங்களைக் கொண்ட மாட மாளிகைகளின் கொடிகள் சூரியன் வரை சென்றடையும் இடமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      பகவான் பசுக்களைக் காத்தது போல் அவனை சரண் அடைபவர்களைக் காத்தருள்வான் என்பது இதன் கருத்தாகும். கம்சன் கண்ணனைக் கொல்ல பலவிதமான வழிகளைக் கையாண்டான். ஆனால் அனைத்திலும் தோற்றுப் போனான். கடைசியில் பகவான் அவனை அழித்து மக்களைக் காத்தார்.  கொடியவர்கள் வெகுகாலம் கொடுஞ்செயல்களை செய்த வண்ணம் இருக்க முடியாது. அது ஒரு முடிவுக்கு வரும் என்பதை இப்பாசுரத்தின் மூலம் விளக்கியுள்ளார். எனவே அவனை சரண் புகுந்து நம்மை உய்விக்குமாறு வேண்டுதல் நலம். 

பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்
     பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற
     திருவெள்ளியங்குடியானை
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்
     மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
     ஆள்வர் இக் குரை கடல் உலகே.     1347. 

      முன்பு வராகமாகி பூமியைக் பெயர்த்தெடுத்து கொம்பின் மீது வைத்தவன், தெளிந்த அலைகள் திருப்பாதங்களை வருட திருப்பாற்கடலில் துயின்ற வெள்ளியங்குடி வாழும் பெருமானைப் பற்றி திருமங்கையாழ்வார் பாடிய இப்பாமாலையை பக்தியுடன் பாட வல்லவர்கள் கடல் சூழ்ந்த உலகத்தை ஆள்வார்கள். வண்டுகள் ஒலிக்கும் நந்தவனங்களைக் கொண்ட நாட்டுக்கு மன்னரும், வேற்படையை உடையவர் திருமங்கையாழ்வார் என்பது பொருளாகும்.

      மனத்தினை தூய்மையான புடம் போட்ட தங்கமாக மாற்றுவதற்கு பகவானின் செயல்கள் நிறைந்த கதைகளை பாசுரம் மூலம் தந்துள்ளார்.

     வராகமாகி பூமியைக் காத்தது, இராவணனை அழித்தது. அசுரர்களை முழுவதும் அடக்கியது போன்ற செயல்கள் அனைத்தும் நம் மனதில் பதிந்துவிட்டால் தீய குணங்கள் நம் மனதில் நுழையாது. பகவான் நம் மனதில் வந்து குடியேறிவிட்டால் நாம் இப்பூமியில் பிறந்த லட்சியம் நிறைவேறிவிடும்.  ஆழ்வார் அருளிய இப்பாடல்களை பக்தியுடன் பாடவல்லவர்கள் மறுமையில் நிலைபேறான வாழ்வை அடைவது உறுதியாகும். 

கைம் மான மழ களிற்றைக் கடல் கிடந்த கருமணியை
மைம் மான மரதகத்தை மறை உரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
அம்மானை  யான் கண்டது அணி நீர்த் தென் அரங்கத்தே.    1398 

      துதிக்கையை உடைய யானையைப் போன்றவன், திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட நீல மாணிக்கம் போன்றவன், மரகதப் பச்சை நிறத்தவன். வேதங்களால் சொல்லப்பட்ட என் பெருமானை எனக்கு எப்போதும் இனியவனாக இருப்பவனை, கோவர்த்தனத்தில் பெருமழையில் பசுக்களைக் காத்தவனை, நான் காவிரி சூழ்ந்துள்ள திருவரங்கத்தில் தரிசித்தேன் என்கிறார் ஆழ்வார்.

      ஆழ்வார்கள் பெருமானை பல்வேறு நிறங்களில் கண்டு, ரசித்து அதைப் பாசுரங்களாகத் தருகிறார்கள். ஆழ்வாரின் கருத்துப்படி எம்பெருமானின் செயல்கள் அனைத்தும் எல்லா உயிர்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும். ஒரு தாய் தன் குழந்தைக்கு ஏற்றவாறு அளவுடன் உணவு தருவாள். அது போன்று மனிதனின் தகுதிக்கு ஏற்றவாறு பகவான் நல்வாய்ப்புக்களை தந்து மேல் நிலைக்கு அழைத்து செல்வான். அவரை தரிசித்து பேற்றினைப் பெறுமாறு நமக்கு நல்வழி காட்டுகிறார். 

செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன்
     திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும்
     வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து
     வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து
     அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே.     1618. 

      ‘எங்கும் நிறைந்துள்ள புகழ் மிக்க நான்கு வேதங்கள், ஐந்து வகையான வேள்விகள், கேள்வி, ஞானம் அனைத்தையும் இயற்கையாகவே அறிந்துள்ள, குணம்கொண்ட திருமாலின் நாபிக்கமலத்தில் உதித்த பிரம்மாவுக்கு ஈடான வேதியர்கள் வாழும் செல்வ வளம் கொண்டது திருவழுந்தூர் தலமாகும்.  இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஆமருவியப்பனை செந்தாமரை மலர்மகள் மகாலட்சுமியும், பூமிதேவியும், சிவந்த பொன் போன்ற திருவடிகளை வருட, முனிவர்கள் துதிபாட, திருப்பாற்கடலில் அனந்தாழ்வான் படுக்கையில் துயிலும் மாயவனைத் தரிசனம் செய்வோம்’ என்கிறார் ஆழ்வார். தெய்வ கடாட்சம் இயற்கையாக அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்லும் பேறு அத்தகைய தெய்வ சக்தி இருப்பவர்களுக்கே கிடைக்கும் என்பது இதன் உட்பொருளாகும். 

வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு அணைமேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன்தமர்
கள்ளர்போல் கண்ணபுரத்து உறை அம்மானே!      1744. 

      பாற்கடலின் வெள்ளத்தில் ஆதிசேஷன் மீது சிறிய திவலைகள் மெதுவாக வீச, பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமானே! அன்பு மிக்க பக்தர்களிடம் வள்ளலாக இருப்பவனே! எனது கண்ணபுரத்து அம்மானே! உனது தொண்டர்களிடம் எக்காலத்திலும் எம தூதர்கள் திருடர்கள் போல் மறைந்து ஒளிவார்கள். அவர்களைக் காத்தருள வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      யம தூதர்கள் பாகவதர்களை அணுக மாட்டார்கள். அவர்கள் கிட்டாதபோது கள்வர் போல் மறைந்தொளிந்து கிடப்பார்கள். அது உனது பிரபாவத்தினால் வந்தது அல்லவா! நோய்வாகப்பட்டு அவதியுறும் அடியார்களின் கூக்குரலினை செவிமடுத்து உடன் திருக்கண்ணபுரத்தில் வந்தமர்ந்து எமது துயர் தீர்த்த பெருமானே, நான் யம தூதர்களுக்கு அஞ்ச வேண்டிதில்லை. எத்தகைய எளியவர்களாக இருந்தாலும் ஆற்றல் உள்ளவர்களின் நட்பைப் பெற்றால் யாரும் நம்மை அழிக்க முடியாது. அது போன்று மிக்க ஆற்றல் மிருந்து பகவானின் நட்பை பெற்றறுள்ளதால் யம தூதர்கள் நம்மை நெருங்குவதற்கு அச்சப்படுகிறார்கள். அதுவே வாழும் காலத்திலும், வாழ்வு முடியும் காலத்திலும் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பது இப்பாசுரத்தின் அரிய கருத்தாகும். 

மூவரில் முன் முதல்வன் முழங்கு ஆர் கடலுள் கிடந்து
பூ வளர் உந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடி ஏர் இடை கூடும்கொலோ?  1828                   

      மும்மூர்த்திகளில் முதல்வனாக இருப்பவன், அலைகளைக் கொண்ட பாற்கடலில் யோக நித்திரையில் நாபிக் கமலத்தில் உலகை உண்டாக்கி பிரளய காலத்தில் உண்டுமிழ்ந்த தேவர்களின் தலைவன் திருமாலிருஞ் சோலையில் நின்றருளும் யாதர் தலைவனான கோவிந்தனைக் கொடி போன்ற இலையுடைய என் மகள் கூடப் பெறுவாளோ என்று திருத்தாயார் கூறுவது போல் அமைந்துள்ளது.

      முன்பாசுரங்களில் தன் மனத்தினை நல்வழிப்படுத்தி பெருமானை அடையப் பார்த்தார் ஆழ்வார். ஆனால் அங்கு சென்று பெருமானின் வடிவழகில் மயங்கி, தமது தன்மையை இழந்து, பிராட்டியின் நிலையை அடைந்தார். அரி, அயன், அரன் ஆகியோருக்குத் தலைவனாக விளங்கியவன். இத்தகையவன் நித்யசூரிகளுக்கு நாதனாயிருப்பதை விடுத்து திருமாலிருஞ்சோலையில் கண்ணபிரானாக வாசம் செய்து வருகிறான். அவனுடன் கூடி இருக்க வேண்டும் என்று பரக்கால நாயகி விரும்புகிறாள். அத்தகைய பாக்கியம் அவளுக்கு கிடைக்குமா என்று கவலையுடன் தெரிவிக்கிறாள். 

திருமங்கையாழ்வார்                                                                      திருநெடுந்தாண்டகம் 

வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
     மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்கத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
     குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
     பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா!
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
     ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே.    2060. 

      ‘‘மரக்கலங்களில் சிறந்த இரத்தினங்களைக் கொண்டு தள்ளும் கடற்கரையைக் கொண்டுள்ள மாமல்லபுரத்தில் கோயில் கொண்டிருப்பவனே! திருமதில்களையுடைய காஞ்சியில் வாழ்பவனே! திருப்பேர் நகரில் குடிகொண்டிருப்பவனே! அழகிய கொன்றை மாலையை இடப்பக்கம் சூடிய மலை மன்னன் இமவானின் மகளான பார்வதியை இடப்பக்கம் அமர்த்தியுள்ள சிவபெருமானுக்கு உன் மேனியில் இடம் தந்தவனே!  குளிர்ந்த திருவேங்கட  மலையில் நின்றருள்பவனே! பவள நிறத்தவனே! எங்கே  போனாய்?  பகவானே! உன்னைத் தேடி இந்த ஏழை அலைகின்றேனே!’’ என்று ஆழ்வார் பகவானை வேண்டுகிறார்.

      பகவானைத் தேடுவதிலும் ஒரு அடித்தளம் அமைய வேண்டும். பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்றெண்ணி தேடுவது சுயநலமாகும். இக்காரியத்தால் பகவான் நம்மை விட்டு விலகி விடுகிறான். சுயநலமில்லா அன்பைக் கொண்டு அவனை அடைய வேண்டும் என்ற கருத்தில் ஆழ்வார் இப்பாசுரம் இயற்றியுள்ளார். 

கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
      களிறு என்றும் கடல் கிடந்த கனியே! என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
      அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்! என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
      தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே
     மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே.    2066. 

      ‘நீண்ட மதில்கள் சூழ்ந்த காஞ்சித் திருப்பாடகத்தின் தலத்தில் குடி கொண்டிருக்கும் யானையே! எக்காலத்திலும் யோக நித்திரை கொள்ளும் கனியே! மணமுள்ள மலர்களையும், தடாகங்களையும் சுற்று வேலியாகக் கொண்ட அழகிய திருவழுந்தூரில் நின்றருளி வரும் என் முறை மாப்பிள்ளையே! என்று சொல்லி நாதம் மிகுந்த நீணட இசையை கொண்ட வீணையை தனங்களில் உரசுமாறு தாங்கிப் பிடித்து, தூய்மையான புன்சிரிப்பால் பல்வரிசை தெரியுமாறு புன்னகை செய்து, தனது மெல்லிய விரல்கள் சிவக்கும்படி வீணையை மீட்டி என் பேதைப் பெண் கிளி போன்று அவன் பெயரை இசைக்கின்றாள்’ என்று தாயார் பாடுவது போன்று அமைந்துள்ளது. இம்மண்ணுலகத்தில் பிறந்த  பயனை என் மகள் சரியாகப் பயன் படுத்திவிட்டாள். அற்ப மனிதர்களின் நடுவில் இவள் தனித்துவம் பெற்று விட்டாள் என்ற கருத்தில் அமைகிறது. 

பொய்கையாழ்வார்                                                                           முதல் திருவந்தாதி                   

உரை மேல் கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும்
வரைமேல் மரதகமே போலத் திரைமேல்
கிடந்தானை கீண்டானை கேழலாய்ப் பூமி
இடந்தானை ஏத்தி எழும்          2106 

      மலையின் மீது மரகதப் பச்சை படிந்தாற்போல் திருப்பாற்கடலில் சயனம் கொள்பவன, இரணியனது உடலைக் இரண்டாகக் கிழித்தவனை, வராகப் பெருமானாகப் பூமியைக் குத்தி எடுத்த பரந்தாமனை, என் உள்ளம் இடைவிடாது எக்காலத்திலும் புகழ்வதில் ஈடுபட்டு உய்வடையும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      உயிர்கள் உய்வடைவதற்கான நல்வழியை இப்பாசுரத்தில் ஆழ்வார் எடுத்துக்காட்டுகிறார். இந்த உலகில் நாம் யாரை துணையாகக் கொள்கிறோமோ அதைப் பொறுத்து நம் உய்வு உள்ளது. பாரதப் போரில் கண்ணன் கௌரவர்கள் பக்கம் இருந்தான். துரியோதனன் எவ்வளவு மன்றாடியும் கண்ணனை தன் பக்கம் சேர்க்க இயலவில்லை. தனி ஒருவனாக இருந்து பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தான். அர்ச்சுணன் தெய்வத்தன்மை  கொண்டவன் பக்கம் சேர்ந்து வெற்றியை ஈட்டினான். எனவே தகுதியற்றவர்களை நாம் புகழக் கூடாது. எல்லாத் தகுதிகள் நிறைந்த பகவானையே நாம் புகழ வேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.                   

இரண்டாம் திருவந்தாதி                                                                                   பூதத்தாழ்வார்    

  பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் புரிவார்கள்
தொல் அமரர் கேள்வித் துலங்கு ஒளி சேர் தோற்றத்து
நல் அமரர் கோமான் நகர்     2184 

      திருப்பாற்கடல் நாதனின் திருப்பாதங்களை வாசனையுள்ள மலர்களால் விரும்பி வணங்குவோர், அவன் புகழைக் காதாரக் கேட்பவர்கள் இவர்கள் அனைவருமே ஒளிமயமாக ஜொலிக்கும் தோற்றமுள்ள தேவர் தலைவனின் வைகுண்டத்தை அடையும் பரிசைப் பெறுவர் என்கிறார் ஆழ்வார்.

திருப்பாற்கடல் நாதனை மலர்கள் கொண்டு வணங்குகிறவர்கள், வைகுண்ட வாசத்தைப் பரிசாகப் பெறுவார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். இப்பிறவியை எடுத்திருப்பது இப்பூவுலகின் பந்தத்தை அறுத்தெறிவதற்கான காரணமாகும். நமது செயல்கள் அனைத்தும் மீண்டும் இப்பூமியில் அவதரிப்பதற்கான காரணமாக செயல்படுகின்றன. அதனால் மீண்டும் சிற்றின்பங்களில் மூழ்கித் திளைக்கிறோம். பிற மனிதர்களுக்கு தீங்கிழைத்து பாவங்களை சேகரித்து அதனை சுமந்தவண்ணம் உள்ளோம். இகலோக வாழ்வில் நாம் ஈடுபட்டு வருவதால் ஒவ்வொரு பிறவியிலும் இதனை கடைபிடிக்கிறோம். இதனை விடுத்து பகவானிடம் ஐக்கியமாவதே சாலச் சிறந்தது என்கிறார். 

மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன் ஒரு நாள்
மா வாய் பிளந்த மகன்.        2209 

      திருமலை என்னும் திவ்யதேசத்தில் அனைவருக்கும் எளிதில் காட்சி தரும் வேங்கடத்தானும், பரந்த திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும், நினைப்பதற்கும் மிக்க சிறப்புக்களையுடைய திருவரங்கத்தில் பள்ளி கொள்பவனும், கணக்கில்லாத வைதிக புருஷர்களாலும், தேவர்களுக்கெல்லாம் தேவனென்றும், முன்னொரு காலத்தில்  கேசி என்னும் குதிரை வடிவில் வந்த அரக்கனின் வாய் பிளந்து மக்களைக் காத்தவனுமாகிய எம்பெருமான் என் மனத்தில் வாசம் செய்கின்றான் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      தேவாதி தேவனான எம்பெருமான் முதலில் திருப்பாற்கடலில் வந்து தங்கி பின் கிருஷ்ணராக அவதரித்து, வந்து போவது என்றிராமல்  சம்சாரிகளைக் காக்க ஸ்திரமாக ஒரிடத்தில் இருத்தல் வேண்டும் என்று வேண்டுதலுக்கேற்ப, திருமலை முதலிய திருப்பதிகளில் எழுந்தருளியிவன் இப்போது என் நெஞ்சில் குடிபெயர்ந்துள்ளான்.  கிருஷ்ணாவதாரத்தில் தன்னைக் கொல்ல வந்த கேசி என்னும் குதிரையை தூக்கி எறிந்து கொன்றான். அத்தகையவன் திருவரங்கத்தில் பள்ளி கொண்டு நமக்கு அருள்  பாலிக்கின்றான்.                      

பேயாழ்வார்                                                                                          மூன்றாம் திருவந்தாதி   

நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும்
பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன்  சங்கு ஓதப்
பாற்கடலான் பாம்பு அணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூல் கடலான் நுண் அறிவினான்.           2292 

      நன்கு ஓதுகின்ற நான்கு வேதங்களிலும் பொருளாக இருப்பவனும், தேன் தோற்கும்படி இனிமையான பொங்கி பெருகும் அருவி போலவும் இருப்பவன் எம்பெருமான். கடல் போல் திருமேனி கொண்டவன். சங்குகள் நிறைந்த பாற்கடலில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டவன். வேதங்கள் கற்ற வேதியர்கள் கற்றுத்தரும் புராண இதிகாசங்களால் போற்றப் படுபவன். இத்தகைய பெருமைகளையுடைய பகவானை நுட்பமான அறிவுடையவர்களால் மட்டும் அறிய முடியும் என்கிறார் ஆழ்வார்

      இப்பாசுரத்தில் நுட்பமான அறிவு என்பது போலியை விலக்கி உண்மையை உள்ளவாறு அறிதல் என்பது பொருளாகும். போலியான சம்சார வாழ்வில் உள்ளவர்கள் இவற்றை அடைவதில்லை. ஆத்மாவிற்கு அழிவு என்றும் இல்லை. இன்பம் துன்பம் இல்லை. பரமாத்மாவான பகவானின் ஒளிக்கீற்றில் நாம் உள்ளோம். எனவே சர்வ வல்லமை கொண்ட ஆத்மா பகவானின் திருக்கருணையினால் நமக்கு தரிசனம் தருகிறது. இந்தப் பேருண்மையை அறிவதே நுட்பமான அறிவாகும். 

இவை அவன் கோயில் இரணியனது ஆகம்
அவை செய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான்
பாகத்தான் பாற்கடல் உளான்        2312 

      இரணியனது மார்பை இரு கூறுகளாகப் பிளந்து நரசிங்கமாகத் தோன்றியவன். காதுகள் வெளியே தெரியாத அனந்தனைப் படுக்கையாகக் கொண்டவன். நான்கு மறைகளிலும் ஊடுருவி இருப்பவன். தேன் போன்ற கங்கையைச் தனது சிரசில் தரித்த சிவபெருமானைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன். திருப்பாற்கடலில் சயனித்திருப்பவன் கோயில் கொண்டிருக்கும் இடம் முந்தைய பாசுரத்தில் சொன்னவையே ஆகும்.

      இப்பாசுரத்தில் அரியும் சிவனும் ஒன்று என்பதை ஆழ்வார்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் என்று அறிய முடிகிறது. சிவபெருமானின் ஒருபாகத்தில் ஸ்ரீமந் நாராயணன் இருக்கிறான் என்று சொன்னாலும், ஸ்ரீமந் நாராயணனின் ஒரு பாகத்தில் சிவன் உள்ளான் என்பது பொருளாகும். இவை முற்றும் அறிந்திராத சிலர் சர்ச்சையில் ஈடுபடுகிறார்கள். இதனால் கால விரயம் ஆகிறது என்பதை ஆழ்வார் நமக்குத் தெரிவிக்கிறார்.  எனவே இந்நிலையில் இருவரும் ஒன்று என்று நினைத்து நாம் பக்தி கொள்வதை விட்டு ஒருவரைப் பழித்தால் அது மற்றவரையும் பழிப்பது போலாகும். இதனை நிலைநிறுத்தி நமக்குள்  இருக்கும் இறைவனை நாம் காண முயல வேண்டும் என்பது ஆழ்வாரின் கூற்றாகும். 

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன்.    2313 

      குருந்த மரத்தை வேரோடு பறித்து முறித்தழித்த கோபலான் திருப்பாற் கடலையும், திருவேங்கடத்தையும், ஆதிசேஷனுடன், குளிர்ச்சியான வைகுண்டத்தையும், கடல் போன்ற இதிகாச, புராண நூல்களையும் நுட்பமான இதயக் கமலத்தையும் உன்னை நிறுத்தி தவம் செய்பவர் மனத்தையும் தான் உறையும் கோயிலாகக் கொண்டிருக்கிறான் என்கிறார் ஆழ்வார். திருப்பாற்கடல், திருவேங்கடம், திருவனந்தாழ்வானுடன் கூடியிருக்கும் பரமபதம், வேதவேதாகமங்கள் உருவாகும் யோகிகளின் திருக்கமல உள்ளம்  ஆகியவற்றின் உறைந்துள்ளான். சம்சாரத்தில் படும் துன்பங்களையெல்லாம்

ஆற்றி குளிர்விக்கும் திருப்பரமபதத்தில் உறைகிறான். கண்ணனைக் கொல்ல கம்சனால் ஏவிவிடப்பட்ட அசுரன் ஒருவன் குருந்த மரமாக மாறி கண்ணன் அதில் ஏறும்போது கிளை ஒடிந்துவிழுந்து  அழிக்க வேண்டும் என்பதாக நினைத்தான். ஆனால் கண்ணன் அந்த மரத்தினை வேரோடு பிடிங்கி அதனை முறித்து அவனைக் கொன்றழித்தான். அத்தகையவன் திருமலையில் உறைகின்றான் என்பது இதன் கருத்தாகும். 

 பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர்.            2342. 

      திருப்பாற்கடல், வைகுந்தம், திருவேங்கடம், வண்டு கூட்டங்கள் நிறைந்த நந்தவனங்களைக் கொண்ட அழகிய சோளிங்கபுரம், திருவிண்ணகர் போன்றவற்றில் நித்திய வாலிபனான ஸ்ரீமந் நாராயணனுக்கு முன் காலத்திலிருந்தே கோயில்களாக உள்ளன. இப்போது என் உள்ளமும் அவன் உறைவிடமாக ஆகிவிட்டதே என்று கூறுகிறார் ஆழ்வார்.

      ஸ்ரீவைகுண்டத்தில் நித்யவாசம் செய்பவனுக்கு வியூகஸ்தானமான திருப்பாற்கடலும், மண்ணுலகிலுள்ள திருவேங்கடமும், வண்டு கூட்டங்கள் நிறைந்து காணப்படும் திருக்கடிகையும், அடுத்துள்ள திருவிண்ணகரும் ஆகிய திருப்பதிகளில் வாசம்புரியும் பெருமான் பல எதிரிகளை அழித்துள்ளான். அதுபோன்று என்னுள்ளில் இருக்கும் தடைகளான எதிரிகளை அழிப்பது அவன் பொறுப்பாகும். அது மட்டுமின்றி என் நெஞ்சிலே புகுவதற்காக திருப்பாற்கடலிலும், திருவேங்கடத்திலும் எழுந்தருளி நித்யவாசம் செய்கின்றான்.           

நம்மாழ்வார்                                                                                                           திருவிருத்தம் 

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலம் தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பு அணைமேல் பள்ளிகொண்டருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே     2556 

      வேதங்களால் குறிப்பிடப்படுபவனை, வெண்மையான உபவீதத்தைத் தரித்தவனை, தேவர்களால் போற்றப்படும் நாதனை, பிரளய காலத்தில் உலகங்களைத் தன் திருவயிற்றில் வைத்துப் பாதுகாத்த அனாதியானவனை, உலகை அளந்த திருவடிகளைக் கொண்டவனை, திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டருளிய குளிர்ச்சியான குணங்கள் உடையவனைத் தொழுபவர்கள் தேவர்களை விடவும் மேலானவர் ஆவார் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      பரந்தாமனைத் தொழுகின்றவர்களை தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். வானத்திலுள்ள தேவர்கள் அனைவரும் சுகபோகத்தில் நிறைந்து திளைக்கக் கூடியவர்கள். அவர்கள் பரிபூரண நிலையை அடைய வேண்டுமென்றால் இம்மண்ணுலகில் பிறந்து பூரணத்தைப் பெற முடியும். ஆனால் நமக்கோ அந்த நல்வாய்ப்பு இப்பிறவியிலேயே கிடைத்துள்ளது. இம்மண்ணுலகிலிருந்தே நேரடியாக இலக்கினை அடைய முடியும். அதனால் தேவர்களை விட நாம் அதிக புண்ணியம் செய்தவர்கள். மேலும் இம்மண்ணுலகிலிருந்து முறையாக பகவானைத் தொழுவதால் பிறப்பே இல்லாத நிலையினை அடையலாம் என்று ஆழ்வார் தமது அரிய கருத்தினை இப்பாசுரம் மூலம் நமக்குத் தெரிவிக்கிறார். 

நம்மாழ்வார்                                                                                                       திருவாசிரியம் 

பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று         2618 

      கடல் வண்ணத்தில் காட்சி தரும் ஆதிமூலமே! என்னிடமுள்ள பழைய பாவங்களைப் போக்கும் நீதியைக் கொண்டவனே! திருப்பாற்கடலில் நீ பள்ளி கொண்டுள்ள நேர்த்தியை நான் கேட்டது முதல் மனமுருகிக் கரைகிறது. கால்கள் நிற்க முடியாமல் தடுமாறுகின்றன.  இரு கண்கள் எதையும் பார்க்க முடியாமல் சுழல்கின்றன. உன்னை நெருங்கி நின்று தரிசிக்கும் வரை அவை நிலைபெறா என்று கூறுகிறார் ஆழ்வார்.

      திருப்பாற்கடலில் பகவான் பள்ளிகொண்டிருக்கும் நேர்த்தியை கேட்டது முதல் மனம் கரைகிறது என்கிறார். பெருமான் தருமத்தை நிலைநிறுத்தப் பல காரியங்களைச் செய்துவிட்டு திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்கிறார். அந்தக் கருணையை நினைக்க, நினைக்க மனம் உருக வேண்டும், அவரைக் காண வேண்டும் என்று மனம் ஏங்க வைக்கிறது. நமது பாவங்களைப் போக்க வேண்டும் என்பதற்காக நமக்குச் சிறு சிறு துன்பங்கள் வருகின்றன. அதற்கு வருந்தாமல் இதனை ஒரு நோய்க்கு சிகிச்சையாகக் கருதி நாம் ஏற்றுக் கொண்டு பகவானை துதிக்க வேண்டும் என்கிறார். 

நம்மாழ்வார்                                                                                          பெரிய திருவந்தாதி 

உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே?
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி ஆகும் துணை    2661     

      ஆர்ப்பறித்து ஓசையை வெளிப்படுத்தும் திருப்பாற்கடலில் சயன கோலத்தில் காட்சி தரும் என் சுவாமியே! என் வாழ்வில் உறவினர்கள், சுற்றத்தார்கள் என்று யார் உள்ளார்கள்? என் உயிருக்குப் பாதுகாப்பான உறவு உன்னைத் தவிர வேறு யார் உள்ளார்கள். நானே உனக்குத் துணை என்று சொல்லக்கூடியவர் உன்னைத் தவிர வேறு எவருமில்லை என்று ஆழ்வார் மனமுருகித் தெரிவிக்கின்றார்.

      உயிருக்குப் பாதுகாப்பான உறவு பகவானே ஒருவனே என்று இப்பாசுரம் மூலம் வெளிப்படுத்துகிறார். இத்தகையத் தெளிவு மானிடர்களுக்கு வராத காரணத்தினால் கணக்கற்ற துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நம் வாழ்வில் நாம் நிரந்தரத் துணையை தேர்ந்தெடுப்பதில்தான் நமது வெற்றி அமைந்துள்ளது. ஆனால் நாம் துணையாக நிற்பது அழியும் உறவுகளையும், அற்பமான செல்வத்தை மட்டும்தான். பகவானைத் துணையாகக் கொள்ளும் உறுதியும் தெளிவும் நம் எல்லோருக்கும் வர வேண்டும் என்ற கருத்தினை இப்பாசுரம் மூலம் நமக்குத் தெரிவிக்கின்றார். 

பாம்பு அணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்
பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடி அம் போர் ஏறே    2835 

      திருப்பாற்கடலில் ஆதிசேஷன் என்ற படுக்கையில் பள்ளி கொண்டவன், மூங்கில் போன்று தோள்களையுடைய அழகிய நப்பின்னைக்காக ஏழு காளைகளை அழித்தவன், தழைத்து வளர்ந்திருந்த ஏழு மராமரங்களை அம்பெய்தி துளைத்தவன், நன்கு தொடுக்கப்பட்ட திருத்துழாய் மாலையை அழகிய திருமுடியில் தரித்திருக்கும் போர் செய்யும் எருது போன்று மிடுக்குடைய பரந்தாமனே! என்று பாடுகிறார் ஆழ்வார். இப்பாசுரத்தில் பகவானின் நினைவுகளை ஆழ்வார் மீண்டும் நமக்கு நினைவுபடுத்துகிறார். நப்பின்னைக்காக எருதினை அழித்தார். இந்த எருதானது மக்களுக்கு மிகுந்த துன்பம் தந்து கொண்டிருந்தது. அதனால் அதனைக் கொன்றார். அசுரர்களே எருதுகளாக அட்டகாசம் செய்ததை பகவான் அவர்களை அழித்தார். இராமனின் பராக்கிரமம் சுக்ரீவனின் மனதில் ஏற்பட்ட சந்தேகத்தினை அங்கிருந்து மராமரத்தை ஒரு வில்லினால் தகர்த்தெறிந்து அவனது சந்தேகத்தைப் போக்கினார். அத்தகைய பகவான் இன்று திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார் என்பது  இப்பாசுரத்தின் கருத்தாகும். 

உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை நாசம் செய்து உனது
அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை
சிந்தை செய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே?            2844 

      திருப்பாற்கடலில் ஐந்து தலைகளையுடைய அனந்தாழ்வான் மீது பொருந்தி யோக நித்திரை செய்து உலகங்களைக் காக்கும் விதத்தை சிந்திக்கும் என் தந்தை போன்றவனே! உன்னை நினைத்து, நினைத்து உய்வு பெற்றேன். அதனால் அளவில்லாத என் கொடிய பாவங்களைத் தொலைத்து உனக்கு முடியவே இல்லாத பணி செய்யும் பெரும் பாக்கியத்தைப் பெற்றேன். அத்தகையப் பேற்றினை இனி நான் விடுவேனா? என்று கூறுகிறார் ஆழ்வார்.

      பகவானை நினைக்க நினைக்க நம்முடைய தீய குணங்கள் அனைத்தும் வெளியேறி ஆக வேண்டும். ஒளி வந்தால் இருள் விலகிப் போவதைப் போல பகவானின் நினைவுகள் நம் மனத்திலுள்ள தீய குணங்கள், தீய எண்ணங்கள் இவை அனைத்தும் அழிந்து போகும். வனத்திலுள்ள வலிமையான சிங்கம் வந்தால் அனைத்து மிருகங்களும் தோற்று ஓடுவது போன்று தூயவனான பகவானை அனுதினமும் நினைக்க நினைக்க, கொடிய பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு ஓடியே தீர வேண்டும் என்று ஆழ்வார் நம்பிக்கையுடன் இப்பாசுரத்தைப் பாடுகிறார். 

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை ஆளும் பரமரே.    2963 

      தாமரை மலரைப் போன்ற கண்களைக் கொண்ட பரந்தாமனை, ஒளிப் பிழம்பான பெருமானை, திருப்பாற்கடலில் அரிதுயில் பள்ளி கொண்டிருக்கும் இனிய நம் எம்பிரானைப் பூஜிக்கும் பாக்கியத்தைப் பெற்ற பாகவத உத்தமர்கள் எவராக இருந்தாலும், எக்குலத்தில் பிறப்பினும், பிறவிகள் தோறும் எம்மை அடிமை கொள்ளும் எஜமான் போன்றவர்களாவார்கள் என்கிறார் ஆழ்வார்.

      பகவானைப் பூஜிப்பவர்கள் எந்த குலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் எங்கள் அடிமை கொள்ளும் எஜமானர்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். பகவான் தன் அடியார்களுக்குத் துன்பம் நேருவதைக் கண்டு சகிக்காமல் உடன் வந்து காப்பவன் என்று புராண இதிகாச வரலாறுகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. அத்தகைய அடியார்களை எஜமானர்கள் என்று ஆழ்வார் கூறுவது அடியார்களின் பெருமைகளை உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளது. 

மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும்
     வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை உடையாய் அசுரர் வன் கையர்
     கூற்றமே கொடிய புள் உயர்த்தாய்
பணங்கள் ஆயிரமும் உடைய பைந் நாகப்
     பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும்
     செய்கையும் யானும் நீ தானே!    3454     

      நப்பின்னைக்கு மாலையிட்ட பெருமைக்குரியவனே! கொடிய பாவியான என்னை உனது அற்புதமான லீலைகளாலும், கலியான குணங்களாலும் ஈர்க்கின்றனவனே! வலிமையான அசுரர்களைக்கு எமனாக இருப்பவனே! கருடனைக் கொடியில் உயர்த்தியவனே! ஆயிரம் படங்களைக்கொண்ட கொடிய நச்சுப் பையையுடைய அனந்தாழ்வானின் மீது சயனித்திருப்பவனே! திருப்பாற்கடலில் சேர்ந்திருப்பவனே! என் மனமும், பேச்சும், செயலும், ஏன் நானுமே நீயாக இருக்கும்போது உன்னை எந்தவிதமாக வழிபடுவதென்று தெரியவில்லை என்று கூறுகிறார் ஆழ்வார். நமக்கும் உறையும் ஆத்மா இறைவனின் வடிவம். அந்த இறைவன் நம்முள்ளில் உள்ளான். எனவே ஆழ்வார் நானே நீ என்கிறார். மனத்தைத் தூய்மையாகக் கொண்டு உள்ளிருக்கும் ஆத்ம ஜோதியை நாம் தரிசிக்க வேண்டும் என்ற திருவுள்ளத்தில் இப்பாசுரத்தை ஆழ்வார் வழங்கியுள்ளார். 

இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள்
     பூவைகள்காள் குயில்காள் மயில்காள்!
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும்
      ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்
     அஞ்சன வெற்பும் அவை நணிய
கடையறப் பாசங்கள் விட்டபின்னை அன்றி
     அவன் அவை காண்கொடானே.     3465 

      நான் வளர்த்த கிளிகளே! நாகணவாய்ப் பறவைகளே! குயில்களே! மயில்களே! எனது அழகிய நிறத்தையும் சங்கு வளையல்களும் நெஞ்சமும் ஆகிய இவற்றில் ஒன்றையும் நம்மிடம் தங்கவிடாமல் எம்பெருமான் கைக்கொண்டான். அவன் வைகுண்டத்திலும், திருப்பாற்கடலிலும், திருவேங்கட மலையில் குடியிருக்கின்றான்.  பந்த பாசங்களை முழுவதும் விட்டோமென்று தெரிந்தாலொழிய அவன் அந்த இடங்களைப் பார்க்க அருள் செய்ய மாட்டான்.  எனவே பாசத்தை ஒழிக்க உங்களோடு இனி உறவு இல்லை என்று கிளிகளைப் பார்த்து தலைவி கூறுவது போல் ஆழ்வார் கூறுகிறார். எல்லாவற்றையும் துறந்து பரிபூரண சரணாகதிதான் நம்மைப் பகவானிடம் வெகு விரைவில் அழைத்துச் செல்லும் என்ற தாரக மந்திரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே    3740 

      பிரளய காலத்தில் ஒப்பற்றவனாக, முதல்வனாக இருந்தவன் எம்பெருமான்.  அவன் மாலிருஞ்சோலை மலை போலவும், திருப்பாற்கடல் போலவும் என் சிரசை நினைத்துள்ளான். வைகுண்டத்தைப் போலவும் குளிர்ச்சி மிகுந்த வேங்கடமலை போலவும் என் சரீரத்தை விரும்புகிறான். அரிய  பெரிய மாயமான என் உயிராய், மனமாய், பாடலாய், செய்கைகளாய் இருக்கும் திருமால் ஒரு நொடிப் பொழுதும் என்னைப் பிரிவதில்லை என்கிறார் ஆழ்வார்.

      மாலிருஞ்சோலை, திருப்பாற்கடல், திருநாடு, திருவேங்கடம் போன்ற திவ்ய தேசங்களில் தானெழுந்து அருளியிருக்கும் பெருமான் தனது அன்பினை என்னிடம் காட்டி என்னைவிட்டு பிரியாதிருக்கிறான். இரண்டு திருமலைகளிலும் பரவியூகங்களில் காணும் விருப்பமெல்லாம் தன் மேனியில் காண்கிறான் என்கிறார். ஆழ்வார் பகவானை நொடிப் பொழுது கூட பிரியாத நிலையில் உள்ளார். ஆனால் நாமோ அவரை நினைப்பதே இல்லை. சிற்றின்ப வாழ்வில் சிதறுண்டு, துன்பங்களில் உழன்று பின் மரணத்தைத் தழுவி, அரிதான இம்மனித வாழ்வை வீணடிக்கின்றோம். இத்தகைய நிலை வேண்டாம் என்று ஆழ்வார் நமக்கு அறிவுறுத்துகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

106. திருவேங்கடம் - திருப்பதி

               பெரியாழ்வார்                                                                                      பெரியாழ்வார் திருமொழி      ...