ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

106. திருவேங்கடம் - திருப்பதி

       


   பெரியாழ்வார்                                                                         பெரியாழ்வார் திருமொழி           

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா    56 

     வெண்ணிலவே! உன் வட்டமான அழகிய முகத்திலிருந்து சிதறுகின்ற குளிர்ந்த வெண்கதிர்களின் ஒளியானதுஇவ்வுலகம் முழுவதும் விரவி ஒளியூட்டினாலும்நீ வளர்வதும் தேய்வதும் போல் மாயங்கள் பல புரிந்தாலும் அவையெல்லாம் என் மகனின் அழகிய திருமுகத்திற்கு முன் எக்காலத்திலும் ஒப்பாகாது. வித்தகர்க்கெல்லாம் வித்தகன்தூய ஞானத்தின் வடிவானவன்மலைகளிலே புனிதமான வேங்கடமலையில் வாழ்கின்ற வேங்கடவன் உன்னை எத்துனை காலமாய் அழைக்கின்றான். அச்சிறு பாலகனின் பச்சிளங் கைகளில் வலி தோன்றும் முன்னே விரைந்தோடி வந்து அவனுடன் விளையாடுவாயாக! என்று யசோதை நிலவிடம் கூறுகிறாள்.
        யசோதையானவள் நிலவினை பலமுறை அழைத்தும் வராததால் சினம் கொண்டுஅழகில் தன்னோடொப்பார் எவருமில்லை என்று கர்வத்தினால் வராமலிருக்கிறான் என்று அவனது செருக்கு அடங்கப் பேசுகிறாள். நாளும் வளர்ந்தும், தேய்ந்தும் களங்கம் கொண்டவனாக இருக்கிறாய்! அவ்விதம் களங்கம் நீங்கி செயற்கை அழகு செய்து கொண்டாலும் என் குழந்தையின் முகத்திற்கு ஈடாகுமாஎனவே உனது செருக்கை விலக்கி கண்ணன் அழைப்பதை பாக்கியமாகக் கொண்டு  அவனது கைவலியினைப் போக்க விரைந்து ஓடிவா! என்கிறாள் அன்னை. 

என் இது மாயம்என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ அச்சோ வேங்கடவாணனே அச்சோ அச்சோ!    104. 

      வாமன வடிவமெடுத்த மகாவிஷ்ணு மாவலியிடம் தானம் பெற்ற பின் திரிவிக்கிரமனாக நீண்ட வடிவம் கொண்டார். அதனைக் கண்ட மாவலியின் மகனான நமுசி என்பவன்இது என்ன மோசடிஇதனை என் தந்தை அறிந்தில்லையாகுட்டை வடிவம் கொண்டு மூன்றடி கேட்டபின் தன் உருவினை நீண்டு வளருமாறு செய்வது எவ்விதம் தர்மமாகும்? என்று கூறியவாறு வளர்ந்து வரும் பகவானின் திருவடிகளை பிடித்தான். அதனால் பகவானோ அவனை தன் திருவடிகளால் சுழற்றி எறிந்தார். மாதவமிருந்து பெற்ற வரத்தை அடுத்தவர்களை அழிப்பதற்காக பயன்படுத்துவதை பகவான் ஒருகாலும் பொறுக்க மாட்டார். ஆனால் மாவலியோ தான் பெற்ற வரத்தை தவறாகப் பயன்படுத்தினான். பகவானின் செயல்களை தடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என்பதை ஆழ்வார் இங்கு எடுத்துரைக்கிறார். எனவே அசுரனுக்கு பாடம் கற்பிக்கவே வாமனனாக மாறி மண் அளந்தார்.  அத்தகைய வல்லமை கொண்ட ஒளிமிக்க திருமுடியைக் கொண்டவனே! திருவேங்கடமலையில் அருள் புரிபவனே! என்னை இறுக அணைத்துக் கொள்வாயாக!என்கிறார்.  

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து
மின் இலங்கும் பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கும் நாமத்து அளவும் அரசு என்ற
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கடவாணற்கு ஓர் கோல் கொண்டு வா.                                                                                                                                                                                                180 

      இலங்கை வேந்தனான இராவணனின் பத்துத் தலைகளையும்தோள்களையும் அறுத்து, அவன் தம்பி விபீடணனுக்கு அரசைத் தந்தவன் எங்கள் இராமன்.  என் திருநாமம்  பூமியில் இருக்கும் வரை நீ அரசாட்சி செய்க! என்று விபீடணனை வாழ்த்தியவன் அவன். மின்னல் போன்ற மாலையை அணிந்து திருவேங்கடத்தை இருப்பிடமாகக் கொண்ட கண்ணனுக்கு ஒரு கோல் கொண்டு வா! என்று கூறுகிறார். பெரும் தவத்தினால் சேர்த்த மூன்று கோடி ஆயுதங்ளையும் கூரிய அம்பு கொண்டு தகர்த்தான் இராமன். அரக்கர் இனத்திற்கே தலைவன் போன்று விளங்கிய இராவணன் கருமை நிறத்து மேகங்களில் மின்னல் போன்ற ஒளிக்கற்றைத் தெரித்து விழுவது போன்று வீழ்ந்தான். ‘தேர் நின்று நெடுநிலத்து சிரம் முகம் கீழ்பட விழுந்தான்’ என்று கம்பர் கூறுகிறார். அத்தகைய பராக்கிரமன் திருவேங்கடத்தில் நின்றருளுகின்றான் என்று கூறுகிறார் ஆழ்வார். 

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள்தம் இடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத்தோடு பாதிரிப் பூச் சூட்ட வாராய்     184. 

     திருவேங்கடத்தில் நின்ற நிலையில் அருள் புரிபவனே! நீ தினந்தோறும் நெடிதுயர்ந்த மாளிகையிலுள்ள நடுநிலைமேல்நிலை ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள ஆய்ச்சியர் பெண்களிடம் சென்று அவர்கள் உடுத்தியுள்ள கச்சைபட்டாடைபுடவை ஆகியவைகளைப் பிடித்திழுத்து கிழித்து துஷ்டத்தனம் செய்கின்றாய். ஆனால் நானோ இங்கே உனக்காக பச்சைப் பசேலென்று மருக்கொழுந்தையும்பாதிரிப்பூவையும்  கோர்த்து வைத்து அதனைச் சூட்ட உன்னை வருந்தி வருந்தி அழைக்கின்றேன்.  கண்ணா நீ வருவாயா! என்று கூறுகிறார் ஆழ்வார். உலகிற்கே சகல சம்பத்துக்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருப்பவன்வேண்டிய வரங்களையும் அளித்துவரும் வரப்பிரசாதியாக விளங்கிக் கொண்டிருக்கிறான். மேலும் அவன் வேதத்தின் சாரமாகவும்ஞானத்தை அருள்பவனாகவும் திகழ்கின்றான்.  இத்தகைய பெருமைகளைக் கொண்டவனான நீ இவ்வாறு பெண்களின் ஆடைகளைக் கிழித்து அவர்களிடம் இத்தகைய துஷ்டத்தனம் செய்யலாமா? என்று யசோதை கேட்பது போல் ஆழ்வார் கேட்கிறார்.  

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர்  கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்
கோதுகலம் உடைக்குட்டனேயோ குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா
வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே.    207 

      கண்ணா! நீ வருகின்றேன் என்று சொல்லி காலத்தைக் கழிக்காமல் உடனே எங்கிருந்தாலும் வர வேண்டும். அயல் வீட்டில் உள்ளவர்கள் உன் மீது குற்றங்களை அடுக்குகிறார்கள்.  இதனை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அனைவரும் பாராட்டும் புகழினைக் கொண்ட வேங்கடவா! குடக்கூத்து ஆடுபவனே!  கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தவனே!  வேதப் பொருளே! வியப்பான செயல்களைச் செய்பவனே! உடனே நீ இங்கு வந்து விட வேண்டும் என்று வேண்டுகிறாள். யசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்! என்று சென்ற பாட்டில் ஆய்ச்சியர்கள் யசோதையிடம் முறையிட, அதற்கு கண்ணா! அனைவராலும் கொண்டாடத் தக்கவனாயிருந்து, இன்று எல்லோராலும் பழிக்கப்பட்டு இவ்விதம் இறங்கி உள்ளாயே! யாதவர்களுக்கு பலவிதங்களில் உதவியுள்ள நீ இத்தகைய செயல் புரியலாமா? என்று கடிந்துரைக்காமல் அன்புடன் நீ இங்கே வந்து விடு என்று  யசோதை அழைப்பது போல் ஆழ்வார் அழைக்கிறார். 

கடி ஆர் பொழில் அணி வேங்கடவா கரும் போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன சிறுக்குட்டச் செங் கமல
அடியும் வெதும்பி உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்!   247 

   நறுமணம் வீசுகின்ற சோலைகள் நிறைந்திருக்கும் திருவேங்கடமலையில் அருள் பாலிப்பவனே! முறுக்கேறிய காளை போன்றவனே! கன்றுகளிடத்தில் அதீத பிரியம் உள்ளவனே! நீ விரும்பிய செருப்பும்குடையும்குழலையும் நான் உன்னிடத்தில் கொடுக்க அதனைப் பெற்றுக் கொள்ளாமல் சென்றாய். சிறு பிள்ளையாகிய நீ கன்றுகளின் பின்னால் சுட்டெரிக்கும் வெய்யிலில் அடர்ந்த காட்டினுள் உன் பிஞ்சு கால்கள் வெதும்பும்படியும்உனது கண்கள் சிவக்கும்படியும் அலைகிறாய். என் பெருமானே! உன் உடம்பும் சோர்ந்து காணப்படுகிறதே என்று யசோதை வருந்துவது போன்று ஆழ்வார் வருந்துகிறார். கண்ணனைக் கானகம் அனுப்பிவிட்டு அவனைப் பிரிந்து வாடுகிறாள். உயிர்கள் மீது கண்ணன் வைத்திருக்கும் அன்பின் காரணமாக கன்றுகளுக்குப் பின்னே சென்றதால் வெப்பத்தில் இளைத்து விட்டான் என்ற கருத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. 

சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய்! உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ! தாமோதரா சதிரா!
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே?   462 

      உயர்ந்து தலைநிமிர்ந்து நிற்கும் பசுமையானகுளிர்ச்சியூட்டும் திருவேங்கடமலை மீது உறைபவனே! இந்த உலகம் நிலைத்திருக்க நீயே காரணமாய் இருப்பவனே! என் நம்பிக்கையே! யசோதையால் கயிற்றால் இடுப்பில் கட்டப்பட்ட பிள்ளைவடிவான தாமோதரனே! எத்தகைய சூழ்நிலையிலும் அடியாரைக் காப்பதில் விரைவில் வந்து நிற்பவனே! என் உயிரையும்எனக்குச் சொந்தமான அனைத்தையும்உன் சக்ராயுதத்தின் பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டேன். இனி எனக்கு ஏதும் குறிக்கோள் இல்லை. உன் அருளிலேயே முழுமையாகச் சார்ந்திருப்பவன் நான். என்னுடைய விருப்பமோதிட்டமோ எதுவும் கிடையாது. உன் திருவருள் மட்டுமே எனக்குக் குறிக்கோளாக வேண்டும் என்கிறார்.
    தன்னை முழுமையாக பரமாத்மாவிடம் ஒப்படைத்து விட்டதை, தன் உடம்புஆன்மாஉடைமைகள் அனைத்தும் இறைவனுடையவை எனக் கூறியிருப்பதை, தன் சுயசங்கல்பம், தனிச்சார்பு எண்ணம் முற்றிலுமாக இல்லாமல், "எனக்கு இனி குறிக்கோள் இல்லை, உன் அருளே போதும்" என்கிற பரம பரதந்த்ர நிலையை வெளிப்படுத்துகிறார் ஆழ்வார்.    

 ஆண்டாள்                                                                                                 நாச்சியார் திருமொழி 

தை ஒரு திங்களும் தரை விளக்கித்
     தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
     அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா
உய்யவும் ஆம்கொலோஎன்று சொல்லி
     உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை
     வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே   504 

      மார்கழி மாதம் முழுவதும் நோன்பிருந்தும் கண்ணன் தன்னைக் காண வரவில்லை என்று ஆண்டாள் ஏங்குகிறாள். கண்ணனை நினைத்து மிகவும் துன்பப்பபட்டுக் கொண்டிருக்கையில்தன்னை காண வராததற்குக் காமனே காரணமென்றெண்ணி ஒருவேளை காமனைத் தொழுதாலாவது கண்ணன் மனம் இறங்குவானா என்று நினைத்து அவனைப் போற்றிப் பாடுகிறாள். தை மாதம் முழுவதும் தரையை தூய்மைப் படுத்திகுளிர்ந்த நீரால் தெளித்துநுண்ணிய மணல் கொண்டு அழகிய கோலம் போட்டு அலங்கரித்து வைக்கிறாள். காமதேவனிடன் தன் ஆற்றாமையைக் கூறி இவ்விதம் நான் உன்னைத் தொழுதாலாவது நான் உய்ய வழி கிடைக்குமோ! என்றெண்ணி உன்னையும் உன் தம்பி சாமனையும் கை தொழுது வணங்குகிறேன். வெப்பம் கொண்ட தழல் உமிழும் சக்கரத்தைக் கொண்டவனாகிய வேங்கடவனுக்கே என்னை விதித்துவிடச் செய்வாயாக! என்று இறைஞ்சுகிறாள் ஆண்டாள். 

மத்த நன் நறுமலர் முருக்க மலர் கொண்டு
     முப்போதும் உன் அடி வணங்கி
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து
     வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே
கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
     கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
     விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே.    506 

      நறுமணம் கொண்ட ஊமத்தமலர்முருங்கை மலர் கொண்டு மூன்று பொழுதுகளும் உன்னடி தொழுதும்நீ உண்மை இல்லாதவன் என்று மனம் வெறுத்து, நீ சொன்ன சொல் காப்பாற்றுவாய் என்ற எண்ணத்தை என் நெஞ்சினிலிருந்து அகற்றினேன். உன்னை வசை பாடுவதற்குள் மலர்கொத்து கொண்டு அம்புகள் தொடுத்து கோவிந்தன் என்று அதில் எழுதி பல வித்தைகளைக் கற்றவனான வேங்கடவன் என்னும் பெயர் பெற்ற, என் வாழ்விற்கு வெளிச்சம் தரும் விளக்கு போன்றவனிடம் சரண்புக என்னை எய்து விட்டேன் என்கிறாள். இப்பாசுரத்தில் காமனை மிரட்டும் தோரணையில் பாடுகிறாள். பெருமான் தன்னைத் தவிர்த்து வருகிறான் என்பதை உணர்ந்து கோபத்தில் பெருமானையே வசை பாடுகிறாள். மேலும் தன்னிடம் என்ன உள்ளதோ அதற்கேற்றவாறு அதனைக் கொண்டு பெருமானுக்கு அர்ச்சனை செய்து அவன் மனத்தை அடைய முயல்கிறாள் ஆண்டாள்.     

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப் பற்றி தன்னொடும்
கூட்டு மாகில் நீ கூடிடு கூடலே    535
                                                                                                                                                                                                               காட்டினில் உள்ள திருவேங்கட மலையிலும், நகரமான திருக் கண்ணபுரத்திலும் ஒரே மாதிரியாக மனக்குறையின்றி மகிழ்ச்சியோடு எழுந்தருளியுள்ள வாமனன் ஓட்டமாக ஓடி வந்து என் கரம் பிடித்து தன்னோடு அணைத்துக் கொள்ளும் நேரத்தில் எதையாவது நினைத்து ஊடல் கொள்ளாமல்மனமே! அவனுக்கு சுலபமாக இணங்கிவிடு என்று ஆண்டாள் கூறுகிறாள்.
      காடோநகரமோ எவ்வித வேறுபாடின்றி மகிழ்வோடு எழுந்தருளி உள்ளான் என்று ஆண்டாள் கூறுகிறாள். நாடுநகரம்புகழ்ச்சிஇகழ்ச்சிநன்மைதீமை ஆகிய எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் இறைவன். அசுர சக்தியை பாதாளத்தில் அழுத்த வாமனன் ஆனான். அத்தகைய பெருமையுடையவன் ஓடிவந்து என்னை அணைக்க வரும்போது ஊடல் செய்யாமல் இணங்கிவிடு! என்று தன் மனத்திடம் கூறிக்கொள்கிறாள். பகவான் உங்களை நோக்கி வரும்போது அற்ப சுகங்களை எண்ணி அவனை மறந்து விடாதீர்கள் என்று கூறுவது போல் அமைந்துள்ளது. 

வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட
     விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும்
     உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக்
     களித்து இசை பாடும் குயிலே!
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என்
     வேங்கடவன் வரக் கூவாய்.   546 

      வெண்மையான சங்கை இடக்கையில் தரித்துக் கொண்ட விமலன் எனக்கு அவன் உருவத்தைக் காட்ட மாட்டான். என் உள்ளத்தில் புகுந்து அவன் என்னை வருத்தி நாள்தோறும் என் உயிரினை வதைத்து அதனால் மகிழ்ந்து கூத்தாடுவான். கள் சுரக்கும் செண்பக மலரை அந்த மலருக்கே வலியெடுக்காமல் மெலிதாகக் கோதிப் பறித்துஇன்புற்று இசைபாடும் குயிலே! மெதுவாக இருந்து மழலைமொழி பேசி இப்படி மெதுவாக மிழற்றிக் கொண்டிருக்கிறாய். இங்கே என்ன பேச்சு வேண்டியிருக்கிறது. என் அருகே இருந்து என்னை வதைக்காமல் என் வேங்கடவனை இங்கு வரக் கூவுவாயாக குயிலே! என்கிறாள்.
      அழகான வெண்சங்கைத் தாங்கி நிற்பவன், பாவமற்ற பெருமாள், எனக்கு எந்த அன்பும் காட்டவில்லை. அவர் என் உள்ளத்தில் குடிகொண்டேஎன்னைத் தினமும் வாடச்செய்துஎன் உயிரையே தனது விளையாட்டுக்குப் பொருளாக்கிக் கண்டு மகிழ்கிறார். ஓ குயிலே! நீ செண்பகப் பூக்களில் களித்து இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கிறாய். ஆனால்உன் இனிமையான குரலை மெல்லிய மென்மையாக மாற்றிஎன் வேங்கடவனை வருமாறு அழைக்கவேண்டும் என்று குயிலிடம் வேண்டுகிறாள். 

விண் நீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்!
தெண் நீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே?
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே?   577. 

      தலைவனைப் பிரிந்து  வாடுகையில் ஆண்டாள் மேகத்தைத் தூது விடுகிறாள். நீலவானத்தில் போர்வை விரித்தாற்போன்று தோற்றமளிக்கும் மேகங்களே! தெளிந்த நீர் பாயும் ஓடைகள் நிறைந்த திருவேங்கடத்துக்கு திருமால் வந்தாரோ. நான் சிந்தும் கண்ணீர் துளிகள் என் தனமென்னும் மலையிலே விழும் சிறு துளி கூட ஆவியாகிவிடும் அளவிற்கும் என் நெஞ்சமும்உடலும் வெம்மையில் தகிக்கின்றது. என் பெண்மையை சிதைக்கும் அவரது இச்செயலானது அவருக்குப் பெருமை தருமோஎன்னை இவ்வளவு வேதனை உண்டாக்கி என் பெண்மையை அழிப்பது அவருக்கு அழகாக இருக்கிறதா?  வெண் மேகங்களே! விரைவில் வந்து என்னை அணைத்து என் காமத்தீயை தீர்த்து பெருமானிடம் என் துன்பத்தினை எடுத்துச் சொல்வாயாக என்று மேகத்திடம் வருந்திக் கூறுகிறாள். 
        தெளிந்த நீர் பாயும் வேங்கடத்தில் வாழும் என் திருமாலும் வந்தாரோஅவர் அருகில் இல்லாத வேதனையில் நான் சிந்தும் கண்ணீரானது ,என் தனமான  மலையில்  வெந்து பொழிகின்றன. சில நேரங்களில் கண்ணீர் வெம்மையாக விழுவதை உணர்ந்ததுண்டா? அப்படி விழுந்த மாத்திரத்திலேயே ஆவியாகி விடுகிறதாம். அவ்வளவு தகித்துக் கிடக்கிறது உடல்ந என்னை இவ்வளவு வேதனைக்குள்ளாக்கி, என் பெண்மையை அழிப்பது அவருக்கொரு பெருமையாஇது தகுமா? அவரின் சிறப்புக்கு இது தகுதி அல்லவே! கண்ணா! நீ அணைத்து இவள் காமத் தீ அணைத்துஇவள் தம் உடலினைக் குளிர்விப்பாயாக! என்று ஆண்டாள் வினவுவது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது.     

மா முத்தநிதி சொரியும் மா முகில்காள்! வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாளாளன் வார்த்தை என்னே?
காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடைக் கங்குல்
ஏமத்து ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே?     578 

  பெரும் முத்துக்களைப் போன்று வெண்துளிகளைப் பொழியும் மேகங்களே! திருவேங்கடமலையில் நடு இரவில் தாடாளனிடம் இருந்து எனக்கு சேதி ஏதாவது கொண்டு வந்துள்ளீர்களாகாமத் தீயானது என் தேகத்தினுள் புகுந்து என்னைக் கௌவி இழுக்கமுன் இரவுக்கும் நடு இரவுக்கும் இடையில் வீசும் இன்பம் தரும் தென்றலுக்கு இலக்காக நான் இருப்பேன். மார்கழிக் காலையும் மழை மாலையும் தனித்திருப்போருக்குச் சாபம் என்று கூறுவது போன்று ஏகாந்தம் தரும் தென்றல்நடுச் சாமத்தின் தனிமைதன் துணையின்றி இருப்பவர்களுக்கு வேதனை தரும் வல்லமைப் படைத்தவை. துணையற்ற சாமத்தின் அமைதி பேரிரைச்சலாகத் துன்புறுத்தும் என்று வருந்திக் கூறுகிறாள். இப்பாசுரத்தில் வரும் தாடாளன் என்ற சொல் காழிசீராம விண்ணகரம் திவ்யதேசப் பெருமானின் திருநாமமாகும். 

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே? .    57

    மிகுந்த ஒளியும்வளையல்களும், சிந்தனைகளும், உறக்கமும் இவை எல்லாம் நான் எளிமையாகிப் போனதால் என்னை விட்டு விலகின. குளிர்ந்த நீர் கொண்ட அருவிகள் நிறைந்த வேங்கடமலையில் என் கோவிந்தனின் புகழ்பாடி அருள் செய்யும் மேகங்களே! நல்ல நிறத்திலிருந்த என் தேகமானது பெருமான் என்னை விட்டுப் பிரிந்ததனால் பசலை நோய் கண்டு மிகவும் வெளுத்து விட்டது. ஊணுறக்கமின்றி கவலைப்பட்டதால்உடல் மெலிந்து என் கைகளில் உள்ள வளையல்கள் கழன்று விழுந்துவிட்டன. எந்நேரமும் கண்ணனின் சிந்தனை தவிர வேறு சிந்தனை செய்ய என் மனம் மறுக்கின்றது என்கிறாள். அலங்காரம் செய்து கொள்ளாமல் ஒருதலைக் காதலால் ஆண்டாள் தவிக்கும் தவிப்பை இப்பாசுரம் மூலம் ஆண்டாள் நமக்கு உணர்த்துகிறாள்.
    நம்மாழ்வார் சொல்வது, உலக சுகங்கள் எல்லாம் நிலையற்றவை. அவை என்னை விட்டு விலகி அழிந்துவிட்டன. ஆனால்எனக்கு இன்னும் வாழ்நாள் தந்து காத்திடுங்கள்நான் செய்யும் காரியம் ஒன்றே – திருவேங்கடத்தில் இருக்கும் கோவிந்தனின் குணங்களைப் பாடுவதே என்கிறார். இந்த பாசுரம் மூலம் உலக சுகங்கள் நிலையற்றவைபகவான் துதியே நிலையான மகிழ்ச்சி என்பதை உணர்த்துகிறார். 

மின் ஆகத்து எழுகின்ற மேகங்காள்! வேங்கடத்துத்
தன் ஆகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என் ஆகத்து இளங்கொங்கை விரும்பித் தாம் நாள்தோறும்
பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே.   580 

      மின்னல் தோன்றி எழுகின்ற கருமேகங்களே! வேங்கடத்தான் தன் உடலில் திருவாகிய மகாலட்சுமியை தரித்து வைத்திருக்கும் அந்த சீர் திருவாழ்மார்பனிடம் போய் சொல்வாயாக.  என் உடலிலுள்ள சிறுமார்பினைநானே விரும்பி நாள்தோறும் அவனது பொன்னுடம்பினை அணைத்துக் கொள்ள நான் ஆவல்கொண்டதாக நீங்கள் போய் அந்த திருவாழ்மார்பனிடம் சொல்லுங்கள்! என்கிறாள். பெருமானைப் பிரிந்து வாடும் துயரினைத் தாங்க முடியாதவளாக தன் துயரினை மேகங்களிடம் கூறுகிறாள். திருமகள் உறையும் திருமார்பினைப் பற்றி பெரியாழ்வாரும் தமது திருப்பல்லாண்டில் ‘வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்கிறார். ஆண்டாளுக்கு பக்தியையும் மிஞ்சி கண்ணன் மேல் இருக்கும் பிரேமையே அதிகமாக உள்ளது. இளம் வயதில் அவன் மேல் ஏற்பட்ட காதலையும் அதனால் வந்த காமத்தினையும் தமது பாடல்களில் அழகாக வடித்திருக்கிறாள் ஆண்டாள். 

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள்! வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர்காள்
ஊன் கொண்ட வள் உகிரால் இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே.    581. 

      வெண்மையான சங்குகள் நிறைந்த பெருங்கடலைக் கடைந்தவன் வாழும் வேங்கடத்தில் இருக்கும் அழகிய குளிர்ந்த மேகங்களே! செம்மையான நீலநிறக் கண்களையுடைய திருமாலின் திருவடியில் வீழ்ந்து என் விண்ணப்பங்களை அவன் முன் வையுங்கள். என் நெற்றியிலுள்ள அகன்ற குங்குமக் குழம்பானது என் உடல் தகிப்பைத் தாளாமல் உருகி என் மார்பில் குங்கும நீராக வழிந்து அழியுமாறு என்னை அணைத்து சேர்கின்ற நாளில்தான் என் உயிர் தங்கும் என்று அவனிடம் உரைத்து விடுங்கள் என்கிறாள். இப்பாசுரத்தில் தன் காதலனின் மீதான காதலையும்தாபத்தையும் ஒருசேர வெளிப்படுத்தி இருக்கிறாள். ‘குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து’ என்று வாரணமாயிரம் பாடலிலும் கூறியுள்ளாள். பெண்ணின் தாப உணர்வுகளை மிகவும் மெல்லியதாக எடுத்துரைக்கிறாள் ஆண்டாள். 

சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள்! மாவலியை
நிலங் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர்காள்!
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலங் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே.   582 

      ஆர்பரிக்கும் பெரிய கடலில் உள்ள நீரை எடுத்துக்கொண்டு பிரமிப்பைத் தரும் அளவிற்கு கிளர்ந்தெழுந்த குளிர்ச்சியான வெண்மையான மேகங்களே! அரியதொரு வாமன அவதாரமெடுத்து தனது திருப்பாதங்களால் ஓரடியில் மண்ணையும்மற்றோரடியில் விண்ணையும்மூன்றாவதடியில் மன்னன் மாவலியின் தலையில் வைத்து அவனை பாதளலோகத்தில தன் பாதத்தால் அழுத்தினான். ‘திருவேங்கட மலையில் வரிசையாக மேலேறிப் பரவிப் பொழியும் மேகங்களே! சிறிதான கொசுக்கள் மொய்த்துண்ணும் விளாம்பழம் போல்நான் நாரணன் மீது வைத்த காதலானது என் உடலில் புகுந்து என்னை மெலிய வைத்தது.  இவ்விதம் என் நலத்தைக் கொள்ளை கொண்ட நாராயணனுக்கு நான்படும் துன்பத்தினால் வந்த  நோயினை சொல்லுங்களேன்’ என்று மேகங்களைத் தூது விடுகிறாள். 

செங்கண் சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள்! வேங்கடத்துச்
மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே.   583 

      வெண்சங்குகள் நிறைந்த கடலைக் கடைந்தவன் வாழும் வேங்கடத்தில் இருக்கும் குளிர்ந்த மேகங்களே! செம்மையான கண்களையுடைய திருமாலின் திருவடியில் வீழ்ந்து என் விண்ணப்பத்தினை வையுங்கள். என் மார்பின் மீது குங்குமக் குழம்பு அழிய என்னை அணைத்து ஒருநாளாவது நான் சேர்கின்ற நாளில்தான் என் உயிர் என்னுள் தங்கும் என்று அவனிடம் உரைத்திடுங்கள். தன் காதலன் மீதான காதலையும் அதன் தாபத்தையும் ஆண்டாள் இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளாள். இறுக்கி அணைத்த உடலில் வழியும் வியர்வை குங்குமத்தில் கலந்து குழம்பாக மாறி அழிய அழிய நான் அவனுடன் சேர வேண்டும் என்கிறாள். பெருமான் மீது எந்த அளவிற்கு பக்தியும் காதலும் இருந்தால் இவ்வாறு தனது காதலை ஏற்றத்துடன் கூறுவாள் என்பதற்கு இப்பாசுரம் ஒரு உதாரணமாகத் திகழ்கின்றது. 

கார் காலத்து எழுகின்ற கார்முகில்காள்! வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்தருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒருநாள் தம் வாசகம் தந்தருளாரே.   584. 

   மழை காலத்தில் திருவேங்கடத்தின் மேல் எழுந்து மெல்ல அசைந்து வருகின்ற வெண்மையான கார்முகில்களே! இலங்கை வேந்தனான இராவணனுடன் கடுமையாக போர் புரிய நேரிட்ட காலத்தின்போது ஏறு போன்று வீறு கொண்டு போர் புரிகின்ற இராமபிரானின் பேர் சொல்லி மழைக் காலத்தில் பழுத்த எருக்க இலை ஒடிந்து விழுவது போன்று நான் வீழ்ந்து வருகிறேன்.  வருங்காலத்தில் நான் வாழ்வதற்கு ஒரு நாளாவது என் உயிரைப் புதுப்பிக்கும் வாசகமான ‘நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம்’ என்ற வாசகத்தை வேங்கடவன் தந்தருளச் சொல்லுங்களேன் என்கிறாள். கண் இமைக்கும் நேரத்தில்கூட அவன் பெயரைச் சொல்லுதலை அவள் மறக்கவில்லை. ‘வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க’ என்று திருப்பாவையிலும் அவனை மறக்காமல் பாடுகிறாள். பெருமானை பிரிந்து தான் படும் துன்பத்தைத் தாங்க முடியாமல் கார்முகில்களிடம் தன் ஆற்றாமையைக் கூறி தனக்கு உதவுமாறு கூறுகிறாள். 

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பு அணையான் வார்த்தை என்னே!
கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே?.   585 

      காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் மதம் கொண்ட யானையானது எத்தகைய பிரமிப்பையும்பயத்தையும் உண்டு பண்ணுகின்றதோ அது போன்று வீறுகொண்டு கிளர்ந்தெழுந்த வெண்மேகங்களே! வேங்கடத்தை உறைவிடமாகக் கொண்டு வாழ்பவர்களே! பாம்பின் மீது படுத்திருப்பவனின் வார்த்தைதான் என்னே! அவர் என்னதான் சொல்கிறார். அனைவருக்கும் புகலிடம் அவன்தான் என்றும்அவனே கதி என்று நினைத்து உருகி இங்கு ஒருத்தி இருக்கிறாளே! அந்த நினைவு சிறிதளவாவது அவரிடம் உள்ளதா! மனதில் துன்பங்களைப் புதைத்துக் கொண்டு வருத்தப்படும் என்னிடம் வந்து சேராமல் வதை செய்கிறானே? இத்தகைய அவப்பெயர் அவருக்கு உண்டானால் உலகத்தைக் காக்கும் கடவுள் என்ற சொல்லை எவ்வாறு ஏற்று மதித்து நடப்பார்கள்? என்று கூறுகிறாள். 

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக்கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே.   586 

      நாகத்தினைப் படுக்கையாக்கிப் படுத்தவனை அழகு பொருந்திய நெற்றியையும்,  நிலவையொத்த திருமுகத்தையும் கொண்டுள்ள இப்பெண்ணானவள் மிகவும் நயந்து உரை செய்து திருவேங்கடவனுக்கு மேகத்தினைத் தூது விட்டு மிகவும் தாழ்ந்து விண்ணப்பம் செய்துஒழுக்கத்தில் தலைசிறந்து பகவானை குறைவற அனுபவிக்கும் வில்லிப்புத்தூரின் தலைவனான பெரியாழ்வார் பெற்றெடுத்த அரும் புதல்வியான கோதைப் பாடிய அருஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களை அனைவரும் தங்களது இதயத்தில் வைத்துக்கொண்டு நாளும் உரைப்பவர்கள் எம்பெருமானுக்கு நித்ய கைங்கர்யம் செய்பவர்களாகத் திகழ்வார்கள் என்று கூறுகிறாள் ஆண்டாள்.
  பாற்கடலில் படுத்திருக்கும் ஆதிசேஷனையே தலையணையாகக் கொண்டுள்ள திருமாலனைமகளிரின் தலைவியாகிய இலட்சுமி தேவியோடு இணைந்து புகழ்ந்து உரைத்தாள்அந்த வேங்கடவனுக்கு தூதனாக மேகத்தை அனுப்பும் விண்ணப்பத்தைத் தம் பாசுரங்களில் பாடியவள்புதுவை நகரின் அரசர் மகளான ஆண்டாள் அருளிய தமிழ்ப் பாசுரங்களை மனத்தில் நிறுத்தி உரைப்பவர்கள்அவர்கள் நிச்சயமாகவே அந்தப் பெருமாளின் அடியார்களாகப் போற்றப்படுவார்கள் என்கிறாள். 

பாடும் குயில்காள் ஈது என்ன பாடல்நல் வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள்செய்து
கூடுவார் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே.   601 

      பாடும் குயில்களே! துணையற்ற பொழுதுகளாக எனது பொழுதுகள் போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் நீங்கள் இங்கு வந்து என்ன பாடிக் கொண்டிருக்கிறீர்கள்? எனக்கு நன்மை செய்யக்கூடிய திருவேங்கட நாட்டினை உடையவன் எமக்கு ஒரு நல்வாழ்வு தந்த பிறகு வந்து பாடுங்கள். ஆடும் கருடக்கொடி உடையவர் வந்து எமக்கு அருள் செய்து என்னைக் கூடுவாரெனில் அப்போது நான் உங்களை அழைக்கிறேன். அப்போது வந்து இனிமையாக கூவுங்கள். உங்களது பாடல்களை நான் கேட்டு மகிழ்கிறேன். ஆனால் இப்போது உங்களது கானங்களைக் கேட்கும் நிலையில் நான் இல்லை. எனது மனம் எப்போதும் பெருமானையே நினைத்துக் கொண்டிருப்பதால் உங்களது பாடல்கள் எனது காதுகளுக்கு பேரிரைச்சலாக உள்ளது என்கிறாள். நாதன் அருகிலில்லாத நிலையில் கானங்களும் அவளுக்கு கசந்து போனது எனலாம். 

மழையே! மழையே! மண் புறம் பூசி உள்ளாய் நின்று
மெழுகு ஊற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற
அழகப்பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்படத்
தழுவ நின்று என்னைத் ததைத்துக்கொண்டு ஊற்றவும் வல்லையே?.   604 

      மழையே! மழையே! வெளியே (புறத்தே) மண்பூசி உள்ளே மெழுகு ஊற்றியது போல் ஊற்றி நலம் செய்யும் வேங்கடத்தில் நின்ற அழகிய பிரான் தன்னை என் நெஞ்சத்திலே அவரை முழுவதும் ஆரத்தழுவ நின்று அணைக்கும்படி என்னை அப்படியே நெருக்கிக் கொண்டு அவரை ஊற்றவும் வல்லாயோஎன்று கூறுகிறாள். இப்பாடலில்  ஆண்டாள் மழையை வேண்டிக் கொள்கிறாள். மழைத்துளி பட்டதும் மண் மெழுகு போல் உருகி விடுகிறது. உலோகம் வழிந்தது போலும் உள்ளது. பெருமானின் உலோகச் சிலை செய்ய ஆண்டாள் தன்னையே உருக்கிக் கொள்ள தான் சித்தமாக இருக்கிறாள். காதலாலும்பிரிவாற்றாமையாலும் இவ்வாழ்விலிருந்து விடுபட தானே மெழுகாக உருகுவதற்குத் தயராராக உள்ளாள். என்னுள்ளில் கொண்டுள்ள வெப்பமானது உருகி வழியும் உலோகத்தை விட அதிகமாகி என்னைத் தகிக்கின்றது என்கிறாள். 

 குலசேகராழ்வார்                                                                                பெருமாள் திருமொழி 

ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே.     677 

         கண்ணனுக்கு தொண்டு செய்வதையே விரும்பி ஆழ்வார் இப்பாசுரங்களை இயற்றியுள்ளார். நப்பின்னை பிராட்டியை மணம் புரியும் பொருட்டு ஏழு எருதுகளை அடக்கியவனான கண்ணபிரானுக்குத் தொண்டு செய்வதையே நான் வேண்டுகிறேன். சதை வளர்ந்து தளதளப்பாகிஉணர்ச்சிகளுக்கு அடிமையாகிமோகத்தில் உழன்றிருக்கும் இம்மனிதப் பிறவி இனி எனக்கு வேண்டாம். வளைந்திருக்கும் பாஞ்சசன்னியத்தை இடக்கையில் ஏந்திய ஸ்ரீநிவாசன் வாழும் திருவேங்கட மலையில், திருக்கோனேரி என்று அழைக்கப்படும் திருக்குளத்தில் குருகாவாவது பிறந்து பெருமானுக்கு முழுவதும் தொண்டு செய்ய விரும்புகிறேன் என்று தமது ஆதங்கத்தை இப்பாடல் மூலம் கூறுகிறார் ஆழ்வார்.
            உடலின் அழகும்இன்பமும்மாமிச உணர்ச்சியால் வரும் பெருமைகளும், செல்வமும் உடைய பிறவியை நான் விரும்பவில்லை. ஏழு காளைகளை வென்ற பெருமையுடைய பரமன், அவனுடைய அடிமைத்தனமே எனக்கு வேண்டியது. அதற்குப் பிறகு எதுவும் வேண்டாம்அந்தத் திருவேங்கடத்தில்அழகிய கோனேரி  அருகே வாழும் குருகுகளாய், சிறு பறவைகள்குருவிகள் போலவே நான் அங்கே பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று வேண்டுகிறார் ஆழ்வார். 

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தன் சூழ
வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே.     678 

      அளவற்ற சுகபோகம் கூடிய இந்திரலோகம்என்றுமே குறையாத செல்வத்தையுடைய தேவ மங்கையர் என்னை சூழ்ந்து நிற்கஅமராவதி பட்டணத்தை ஆள்கின்ற செல்வமும்பூவுலகமும், ஒரு குடையின் கீழ் ஆளும் மன்னர் பதவியும் கிடைப்பதாக இருந்தாலும் அது எனக்கு வேண்டவே வேண்டாம். தேன் நிறைந்த மலர்ச் சோலைகளையுடைய திருவேங்கடத்துச் சுனைகளில் ஒரு மீனாய்ப் பிறக்கும் பாக்கியம் கிடைத்தால் அதுவே எனக்கு பெரிய மகிழ்வாக இருக்கும் என்ற பொருளில் பாடியுள்ளார். பகவான் எழுந்தருளியிருக்கும் இடத்தில் அற்ப ஜீவனாகப் பிறந்தாலும், என்றும் அவரைப் பற்றி நினைத்தும்அவரைப் பற்றி பேசியும்அவருக்காகவே பணிவிடை செய்தும், அவருடைய கருணையால் இப்பிறவியிலிருந்து கடைத்தேறி விடலாம் என்ற கருத்தில் பாடியுள்ளார். 

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள் வாசல்
மின் வட்டச் சுடர் ஆழி வேங்கடக்கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புகப்பெறுவேன் ஆவேனே.      679 

      நீண்ட சடைமுடியைக் கொண்ட சிவபெருமானும்பிரம்மாவும்இந்திரனும் கடினமுடன் முயன்று உள்ளே புக, கடினமாக உள்ள பூலோக வைகுண்டமாகிய திருமலையின் நீண்ட திருவாயிலிலே வட்ட மின்னலாய் ஒளி வீசும் சுதர்சனத்தைக் கையிலேந்திய திருவேங்கடவன் வாய் நீர் உமிழ்கின்ற பொன்வட்டிலை கையிலேந்தி, நித்ய கைங்கர்யம் புரியும் ஒரு பணியாளனாக நான் உள்ளே நுழையும் பாக்கியத்தைப் பெறும்படி செய்ய வேண்டுகிறேன் என்கிறார். வேங்கடவனின் திவ்ய தரிசனம் நம் வினைகள் அத்தனையையும் அகற்றி பேரானந்த நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். அதுபோன்று நம்மையும் கடைத்தேற்ற இத்தகைய நல்வழியினை நமக்குக் காட்டியுள்ளார் ஆழ்வார். திருமாலைக் கைதொழுதால்அதன்பிறகு ஒருவனுக்கு மண்ணுலகை ஆளும் பெருவளமும்வானவர்க்கு வானவனாய் வாழும் வாழ்க்கையும்விண்ணுலகப் பேறும் ஒரு பொருளாதல் இல்லை என்று பூதத்தாழ்வாரும் இதே கருத்தினைக் கூறியுள்ளார். 

ஒண் பவள வேலை உலவு தன் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே.    680 

      ஒளிவீசும் பவளக்கொடிகளைக் கரையிலே தள்ளும் அலை வீசும் திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்தருளும் மாயவனான ஸ்ரீகிருஷ்ணன் திருவடிகளைக் காண்பதற்கு இசையையே பிரதான மொழியாகக் கொண்டிருக்கும் கரிய வண்டினங்கள்இனிய பண்ணிசையை முழங்கும் திருவேங்கட மலையிலே நறுமணம் கொண்ட செண்பக மலராய் மலர்ந்துள்ள மரமாக பேறுபெற்றவனாக வேண்டும் என்று ஆழ்வார் பெருமானை நோக்கி வேண்டுகிறார். பெருமானே! எனக்கு பெருமைபடும் எத்தகைய பிறப்பும் வேண்டாம்.  பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதற்கு மணமுள்ள சிறு மலராக நான் பிறந்தாலும் அந்த மலர்வழியாக நின் திருப்பாதங்களை வந்தடையும் உயரிய பேற்றினை மனமுவந்து ஏற்பேன் என்கிறார் ஆழ்வார்.
      நிலையான பிறப்பு வேண்டுமென்பதில்லை. திருவேங்கடமலையில் சேரும்படியாக அங்கு நிற்பதொரு தாவரமாகவாயினும் நான் ஆக வேண்டுமென்று வேண்டுகிறார். இந்தப் பாடல் திருமால் திருவேங்கடத்திலே நித்தியவாசம் செய்யும் காட்சியை வர்ணிக்கிறது. அவர் திருப்பாற்கடல் நித்ரையில் இருப்பதுடன்பூமியில் வேங்கடமலையில் பக்தர்களுக்காக வெளிப்படுகிறார். பாசுரக்கவி தன்னை செண்பக மரமாக உருவகம் செய்து, "நான் அங்கே நிலைத்து, மலராகி அவனின் திருவடிகளைத் துதிப்பவனாக இருப்பேன்" என்கிறார். இது பக்தியின் பரமநிலை. மலராக மாறி, இறைவனின் திருவடியில் நித்யசேவை செய்வதே ஆன்மீகத்தின் வெளிப்பாடு எனலாம். பலவகைப் புஷ்பங்களுள் சண்பகமலர் எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மிகவும் உகப்பாதலைப் பெரியாழ்வார் பூச்சூட்டல் திருமொழியில் ”தேனிலினிய பிரானே! செண்பகப்பூச் சூட்டவாராய்” என்றும் கூறுகிறார். 

கம்ப மத யானைக் கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்பு அமரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே.     681 

      தன்னைக் கண்டவர்களுக்கு மிகுந்த அச்சத்தால் நடுக்கத்தை விளைவிக்கின்ற பெரிய மதம்பிடித்த யானையின் கழுத்திலே வீற்றிருந்து எல்லாவிதமான இன்பங்களையும் அனுபவிக்கும்படியான மிகுந்த செல்வத்தை நான் விரும்பவில்லை. நாடு நகரங்களையெல்லாம் அரசாட்சி செய்யவும் எனக்கு விருப்பமில்லை. எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் அழகான திருவேங்கடமலை மேல் பசுமையான புதராக இருக்கும்படியான பேறு கிடைக்க வேண்டுமென்றே ஆவல் கொண்டுள்ளேன் என்று கூறுகிறார் ஆழ்வார். முன்பாடலில் செண்பக மரமாய் பிறப்பேனோ என்று பாடிஅதுவும் வேண்டாம். ஏனெனில் இந்திரன் இம்மலரைப் பறித்து தன் காதலிக்குச் சூட்டுவான். அதனால் திருமலையில் ஒரு புதராகப் பிறப்பதற்கு என்னை ஆட்படுத்து என்று வேண்டுகிறார் ஆழ்வார். 

மின் அனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்ன என வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடாம் அருந்தவத்தென் ஆவேனே.     682 

      ஒளிவிடும் மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினையுடைய ஊர்வசியும்மேனகையும்அவர்களைப் போன்று மற்றவர்களும் பாடியும்ஆடியும் மகிழ்விக்கும் இன்பங்களை நான் விரும்பேன். அவர்களது ஆடல் பாடலைவிட இனிமையான தேனினைப் போன்ற வண்டினங்கள் கூடி பண்களைப் பாடி ஆடும் திருவேங்கடத்துள் அழகு மிகுந்த பொற்சிகரமாக ஆகும் அரிய தவத்தை உடையவன் ஆவேனே! முற்பாடலில் வேண்டியவாறு நான் முற்செடியாக பிறந்தால் எம்பெருமானுக்கோ அடியவர்களுக்கோ அதனால் எவ்வித பயனுமில்லை. திருமலையில் பல்வேறு சிகரங்களுள் ஒரு சிகரமாக இருந்தால் அடியவர்களுக்கு இறைவனை உணர்த்தும் இடமாக அமையும். எனக்குப் பிடித்தது வேறு ஒன்று. தேன்குடித்து மயங்கும் வண்டுகள் இனிமையான இசையை இயற்கையிலேயே பாடிக்கொண்டிருக்கும் திருவேங்கடம் தான் என் மனதை ஈர்க்கிறது. அந்தத் திருவேங்கடத்தில்அன்னப்பறவை தங்கும் பொற்குவடாம் (சிகரம்) போலபக்தியிலும் பரிசுத்தத்திலும் அமர்ந்திருக்கும் அருந்தவ பலனை நான் அடைய விரும்புகிறேன்.     

வான் ஆளும் மா மதி போல் வெண் குடைக்கீழ் மன்னவர் தம்
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வு அறியேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கட மலை மேல்
கானாறாய்ப் பாயும் கருத்து உடையேன் ஆவேனே.    683 

      வானத்திலிருக்கும் விண்மீன்களையெல்லாம் தன் ஒளியால் வென்று, வானத்தை ஆளும் முழுமதியைப் போல் வெண்கொற்றக் குடையின்கீழ் அரசாளும் மன்னவர்களை எல்லாம் திறத்தால் வென்று அவர்கள் தலைவனாக வீற்றிருக்கும் பெருமையையும் நான் வேண்டேன். தேன் நிரம்பும் பூக்களையுடைய சோலைகளையுடைய திருவேங்கட மலையில் ஒரு காட்டாறாய் பாயும் எண்ணத்தை கொண்டவனாக இருக்கிறேன். மலைச் சிகரமாக இருந்தாலும் யாருக்கும் பயனின்றிப் போகலாம். ஆனால் திருமலையில் ஒரு காட்டாறாக நான் இருந்தால் உன் திருமுழுக்குக்கும் ஆவேன். மேலும் அடியார்கள் நீராடவும் நான் பயனாக இருப்பேனே! என்று தன்னைத் தானே கூறிக் கொள்கிறார். மேலும், தேவலோகத்தில் உள்ளவர்களும் ஆசைக்கு அடிமையாகி பூலோகத்தில் பிறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு ராஜபோகம் எதுவும் தேவையில்லை. திருமலையில் ஒரு காட்டாறாக பாயும் பேறு கிடைத்தாலும் போதும் என்கிறார். 

பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்விக் குறை முடிப்பான் மறை ஆனான்
வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலை மேல்
நெறியாய்க் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே      684 

      பிறையினை தன் சடையில் வைத்திருக்கும் சிவபெருமானும்பிரமனும்இந்திரனும் முறையுடன் உன்னை வேண்டிச் செய்யும் பெரும் வேள்விகளுக்கான  பயன்களைத் தந்து அவர்களின் குறைகளைத் தீர்ப்பாய்! அவர்கள் முறை என்ன என்று அறியும் வகை சொல்லும் வேதங்களாய் நின்றாய்!  நறுமணம் கமழும் அழகிய சோலைகளைக் கொண்ட திருவேங்கடமலை மேல் அடியவர்கள் உன் திருக்கோயிலை அடையும் வழியாக கிடக்கும் நன்னிலையினை எனக்கு அருள்வாயாக என்று வேண்டுகிறார். பொற்சிகரமாய் இருந்தால் உன் கோயிலைச் சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் அடியார்கள் உன் சன்னதியை அடைய முடியாமல் போகலாம். அதனால் அவர்கள் நின் திருக்கோயிலை அடையும் வழியாக நான் இருக்க வேண்டும் என்கிறார்.       மும்மூர்த்திகளின் துயரைத் தீர்த்தவன் பெருமான் இருக்கும் இடத்தில் நான் ஒரு நடைபாதையாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுகிறார். 

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே      685 

      பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த, காட்டுச் செடிகளைப் போல இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் திருமகள்மணாளா. நான் என்றோ செய்த நல்வினையை நெடுங்காலம் கொண்டு என்னைக் காப்பவனே! திருவேங்கடவா! உன் கோயில் வாசலில் அடியவர்களும்வானவர்களும்அரம்பையர்களும் வந்து உன்னைக் காணுமாறு ஒரு படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனோ என்கிறார். உன் கோயிலுக்கு பல வழிகள் இருக்கலாம். அதனால் உன்னைக் காண வரும் அடியார்கள் சிலர் நான் வழியாகக் கிடந்தாலும் வேறு வழியில் உன்னை வந்தடையலாம். அவர்கள் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும் என்றால் உன் திருக்கோயிலின் படியாய் கிடந்து உன் பவள வாயை என்றும் தரிசிக்கும் பேறு பெற்றவனாக நான் மாற வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.

மனித வாழ்க்கையின் உயர்ந்த இலக்கு — இறைவனை காணுதல் மற்றும் அடியார்களுடன் சேர்ந்து வாழுதல். இங்கே “வாசல்” எனும் சொல் மோட்சவாசல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது பரமபதத்தின் நுழைவு. எத்தனை கடினமான பாவங்களாக இருந்தாலும்அவற்றை நீயே அழிப்பவனாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார். இறைவனின் திருமேனியை காண்பதுதான் ஆழ்வாரின் ஆன்மாவின் கடைசி நிறைவு என்று கூறுகிறார். 

உம்பர் உலகு ஆண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசி தன்
அம்பொன் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திருவேங்கடம் என்னும்
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே   686 

      வானத்து தேவர்கள் உலகங்களை எல்லாம் ஒரு குடையின்கீழ் ஆண்டுஅழகியான ஊர்வசியின் அழகிய பொன்னாடைகள் அணிந்த இடையிலிருந்து கிடைக்கும் இன்பங்களைப் பெற்றாலும் அதனை நான் விரும்பேன். சிவந்த செம்மையான திருப்பவள வாயானின் திருவேங்கடமென்னும் எம்பெருமானுடைய பொன்மலையில் அவன் திருவுள்ளபடி ஏதேனும் ஒன்றாக ஆவேனே! என்று கூறுகிறார். நான் ஏன் இப்படி இது ஆவேன்அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன்? அடியவனுக்குத் அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்திருந்தாலும் அதற்கிணங்க நாம் இருத்தல் வேண்டும். அதுபோல் வேங்கடவன் விரும்பும் ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலைமேல் நான் ஆவேன் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். எனவே பெருமானே அத்தகைய நிலையினை எனக்குத் தந்தருள்வாயாக என்று வேண்டுகிறார் ஆழ்வார். 

மன்னிய தண் சாரல் வட வேங்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொல் நவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே.   687 

     என்றென்றும் குளிர்ந்த சாரல் வீசும் வடவேங்கடத்தை உடைய எம்பெருமானின் பொன்னைப் போன்ற செவ்விய திருவடிகளைக் காண்பதற்கு இறைஞ்சி எல்லா எதிரிகளையும் வெல்லும் கூரிய வேலினைக் கொண்ட குலசேகரன் சொன்ன இந்தத் தமிழ்ப் பாடல்களைச் சொல்லி மனதில் வைத்தவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்களாகப் போற்றப்படுவார்கள் என்கிறார் ஆழ்வார். முன் பாடல்களில் தான் நாரையாகமீனாகமலராகபுதராகபாதையாகபடியாகசிகரமாக, அருவியாக ஏதேனும் ஒரு பொருளாக இருக்க ஆவல் கொண்டார். மேலும் இரு உலகத்து அரச பதவியும் வேண்டாம் என்றார். தேவ மாதர்களின் அரவணைப்பும் வேண்டாம் என்றார். என்றும் நினது திருநாமங்களை கூறும் அடியவனாக நான் இருந்தால் போதும் என்ற நிலையில் இருந்தார் என்ற கருத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. 

  திருமழிசையாழ்வார்                                                                          திருச்சந்தவிருத்தம்  

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண்
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த ஆதிதேவன் அல்லையே?     799. 

      எம்பெருமானே!  திருவேங்கட மலையில் நின்றும்விண்ணுலகில் அமர்ந்தும், பெரிதான திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளிச் சயனித்தும்இப்பூமண்டலத்தை ஒரடியால் திரிவிக்ரமனாய்  அளந்தும்மற்றொரு அடியால் பூமியை விழுங்கியும்பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றில் அடக்கியும்வராகமாகி பூமியை பெயர்த்தெடுத்தும்நற்காலத்தில் நல்ல உயிர்களைப் படைத்தும்அந்த மனிதர்களுக்கு அவரவர் இயல்புக்கு ஏற்ப அடையதக்க தேவதைகளை ஏற்படுத்தியும் இத்தகைய பல நன்மைகளைச் செய்தருளிய ஆதிசேஷன் நீயல்லவா? என்று ஆழ்வார் பாடுகிறார். இப்பாசுரத்தில் பகவானின் பெருமைகளைக் கூறுவதோடு நல்லுயிர்களைப் படைத்து அதற்கேற்றவாறு தேவைதைகளைப் படைத்து அவர் அருள்வதாகக் கூறப்படுகிறது. இவ்வுலகில் பல இடர்கள் இருந்தபோதிலும் நல்ல ஜீவன்களை பகவான் கைவிடுவதில்லை. அவர்களை என்றும் காத்து வருகிறான் என்ற கருத்தை ஆழ்வார் நமக்கு அருள்கிறார். 

செழுங் கொழும் பெரும் பனி பொழிந்திட உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று
எழுந்திருந்து தேன் பொருந்து பூம்பொழில் தழைக் கொழும்
செழுந் தடங் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?        811 

      கனத்து பனிபொழியும் திருமலையிலே, உயர்ந்து வளர்ந்த மூங்கில்கள் பனிக்கட்டிகளின் பாரத்தால் தரையில் வளைந்து சூரியனின் கதிர்கள் வீசுகையில்பனி உருகி, மூங்கில் காய்ந்து, விண்ணை முட்டும்படி உயர்ந்து நிற்கும். அத்தகைய திருவேங்கட மலையிலே, நீ நின்ற கோலத்தில் காட்சி தருகிறாய்! வண்டுகள் உயரே எழுந்து மறுபடி கீழே வந்து தேன் பருகி வாழும் தழைத்த பூந்தோட்டங்களையும்நீர் நிரம்பிய தடாகங்களையும் கொண்ட திருக்குடந்தையில் நித்திரை செய்கிறாய் என்று ஆழ்வார் கூறுகிறார்.
      இப்பாசுரத்தில் நின்றான்-கிடத்தான் தத்துவத்தை ஆழ்வார் உணர்த்துகிறார்.  திருமலையில் நின்ற கோலத்தில் உள்ள பெருமான் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குகிறார். குடந்தையில் சயனக்கோலத்தில் அழிவில்லாத பேரின்ப வாழ்க்கையைத் தருகிறார். பிறவித் துன்பத்தை அடைய சாரங்கனை சரண் அடைய வேண்டும். இவ்வுலக வாழ்வினை வளமோடு வாழ நின்ற கோலத்து பெருமானும்பரமபதம் பெற கிடந்த கோலத்து பெருமானையும் பக்தியுடன் சரண் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை இப்பாசுரம் மூலம் அறியலாம். 

கடைந்த பாற்கடல் கிடந்து காலநேமியைக் கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ.    832 

      கூர்ம அவதாரத்தில் பரந்தாமன் அமிர்தம் பெற கடையப்பட்ட பாற்கடலைப் பெருமைப்படுத்த அதில் பள்ளி கொண்டான்.  காலநேமி என்ற  அசுரனை அழித்தான். நடுங்கிக் கிடந்த வலிமை மிக்க வாலியின் சகோதரனான சுக்ரீவனுக்கு உதவ ஸ்ரீராமனாய் வடிவம் எடுத்தான். ஒன்றொடொன்று பின்னிக் கிடந்த ஏழு மரா மரங்களையும் ஒரே அம்பால் வீழ்த்தியவன் திருவேங்கட மலையில் வீற்றிருக்கிறான். அவன் திருவடிகளை அன்போடு பணிந்து பிறவிப் பிணியை நீக்கிக் கொள்ளுங்கள் என்கிறார் ஆழ்வார்.
மொய் கொள்வார் சிலை நாணினை முறை உறவாங்கி வெய்ய வாளியைஆளுடை வில்லியும் விட்டான்’. வார் வலிமை கொண்ட நீண்ட வில்லின் நாணினை முறைப்படி நன்றாக இழுத்து எல்லா உயிர்களையும் அடிமையாகக் கொண்ட வில்லாற்றல் மிக்க இராமன் கூரிய அம்பினைத் தொடுத்தான் என்று கம்ப இராமாயணத்தில் இராமனின் பராக்கிரமத்தை கம்பர் வர்ணிக்கின்றார். 

  திருமழிசையாழ்வார்                                                                  நான்முகன் திருவந்தாதி 

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ?
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்?         2415 

      திருக்கோஷ்டியூரில் எழுந்தருளியிருப்பவனைதிருவேங்கடத்தில் அருள் புரிபவனைஎம்பெருமானை இடைவிடாது அனுபவிப்பதால் உண்டாகும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு எனக்கும் ஆசை.  சரீரம் தொடர்பான கர்மங்களும்நோய்களும் நெருங்காதபடி தானே அவற்றைப் போக்கி அருளும் குணத்தை உடையவனான பகவானின் திருப்பாதங்களை மறந்திருப்பேனாஅவை நன்மை தருவதல்லவா என்று கூறுகிறார் ஆழ்வார்.  திருக்கோஷ்டியூர் மற்றும் திருவேங்கடம் முதலான திவ்ய தேசங்களில் எனக்காக வந்து காட்சிதரும் பெருமானின் திருவடிகளை நான் மறக்க முடியுமோ. இவ்விரு திவ்யதேசங்களிலும் சென்று அவனைத் துதித்துப் பல்லாண்டு பாட வேண்டுமென்றும்அவனை இடைவிடாமல் பக்தியுடன் துதிக்க வேண்டுமென்றும்அவனை நன்கு அனுபவித்து அதனால் என் ஆன்மாவுக்கு நன்மை விளைவித்துக் கொள்ள வேண்டுமென்றும் ஆவல் கொள்கிறேன். அதனால் எவ்வித கர்மங்களும்துன்பங்களும் என்னை ஆட்கொள்ளாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார். 

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக்கூடல் கூட மழைப் பேர்
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு.    2420 

      திருவேங்கடத்தானைக் கண்ணால் தரிசிக்க அழைக்கின்றேன். மழை போல் சொரியும் பெரிய அருவியில் திரட்டிக் கொண்டு வரும் ஒளிமிக்க இரத்தினங்கள் வந்திறங்கஅந்த இரத்தினங்களின் பிரகாசத்தைத் தீ ஜ்வாலையாக எண்ணி யானைக்கூட்டங்கள் பயப்படநாகங்கள் அந்த ஒளியை மின்னலாகக் கருதி புற்றுக்குள் நுழையும் திருமலையைச் சென்று அடைய வேண்டுமென்று விரும்புகிறேன் என்கிறார் ஆழ்வார். உலகத்தவர்கள் எங்கேனும் செல்லுங்கள். திருவேங்கடவனை வழிபடும் என் பணியானது செவ்வனே சென்று கொண்டிருக்கின்றது. திருமலையில் ஒலிக்கின்ற அருவிகளின் மூலம் முத்துக்கள் உதிர்கின்றன. திருவோணத் திருவிழாவால் திருப்பல்லாண்டு பாடுதல்திருமறை ஓதுதல்நாட்டியம் ஆடுதல் முதலியவற்றால் எழும் ஒலிகள் எங்கும் கேட்கின்றன. எங்கு பார்க்கினும் பக்தர் குழாம்கள் திரண்டு நிற்கின்றனர். இத்தகைய சூழ்நிலைகள் நிலவும் திருமலையில் கோயில் கொண்டிருப்பவன் ஆழ்வார் நெஞ்சிலும் குடிபெயர்வானோ! என்று தயங்கி நிற்க என் ஆவலை அறிந்த பெருமான் சட்டென்று ஓடிவந்து என்னைத் தன்னுடன் அணைத்துக் கொள்ளுமாறு விதிவாய்க்க வேண்டும் என்று எண்ணுகிறார். 

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடு ஆக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்       2421 

      மலை என்றாலே திருவேங்கடமே! என்று போற்றிப் பாடினேன். இதனால் எனக்கு மோட்சம் உறுதி என்றிருந்தேன். அதைப் பற்றி பலமுறை சிந்தித்திருக்கிறேன். ஓதப்படுகின்ற வேத சாஸ்திரம் என்கிற வலையில் அகப்பட்டிருக்கும் மகாலட்சுமி மணாளனின் திருவடி வலையில் நான் அகப்பட்டிருப்பதைப் பாருங்கள் என்கிறார் ஆழ்வார். பல மலைகளைச் சொல்லி வினோதமாக முயற்சித்தேன். இறுதியில் திருவேங்கடமலை என்று நான் சொல்லி வந்தேன். பல மலைகளைச் சொல்லி வருகின்ற நேரத்தில் திருவேங்கடமலை என்று என்னையறியாமல் சொன்னேன். இதையும் அவனே பாட வைத்தான். நாம் புத்திபூர்வமாக ஒரு நல்ல வார்த்தை சொல்வதற்கும் அவனது அருள் தேவைப்படுகின்றது. எம்பெருமான் எல்லா வகையான சாஸ்திரங்களையும் பிரதிபலிப்பதனால் அவனை ‘நூலாளன்’ என்று நாமமிட்டேன். அதுபோன்று பெருமானின் பிரதிபலிப்பாக பிராட்டி இருப்பதால் அவளை ‘நூலாட்டி’ என்றேன். எம்பெருமான் வேத சாஸ்திரங்களாக உள்ளான்.  நானோ அவனது திருவடிகள் என்ற வலையில் நன்றாக அகப்பட்டுள்ளேன் என்கிறார். எம்பெருமானை வேதசாஸ்த்திரங்களிலிருந்து எவ்வாறு பிரிக்க முடியாதோ அது போன்று என்னையும் அவனிடமிருந்து பிரிக்க முடியாது என்று கூறுகிறார். 

காணல் உறுகின்றேன் கல் அருவி முத்து உதிர
ஓண விழவில் ஒலி அதிர பேணி
வரு வேங்கடவா! என் உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று   2422 

      ஆர்ப்பரித்து இரைச்சலுடன் விழும் அருவிகள் மூலம் முத்துக்கள் உதிரதிருவோணத் திருவிழாவில் பல்லாண்டு பாடுவதும், வேதபாராயணம் செய்வதுமான ஒலியெழுப்பும் பக்தர்கள் விரும்பி வந்தடையும் திருமலையை வாசஸ்தலமாக உடையவனே! நீ என் நெஞ்சில் புகுந்துவிட்டாய். இருந்தாலும் நான் திருவேங்கடமலையில் உன்னை வணங்க ஆசைப்படுகிறேன் என்கிறார் ஆழ்வார். இதுவும் எம்பெருமானின் கடாக்ஷமோ என்று நான் நினைக்கிறேன். பரமபதமே சித்தமென்று பேறு பெற்றவனானேன். எம்பெருமான் சகல சாஸ்திரங்களையும் அறிந்தவனாதலால் எம்பெருமானை ‘நூலாளன்’ என்றழைத்தேன். வேதங்களும் வேதாகமங்களும் மற்றும் அவனது திருக்கல்யாண குணங்களை பிரதிபலிக்கும் பிராட்டியை ‘நூலாட்டி’ என்றழைத்தேன். கற்கின்ற நூல் வலையில் ஆட்பட்டவன். பரம்பரையாக அஸ்திமாதிகளால் (எலும்பு முதல் சிறுகூறு வரை, அனைத்தும் எம்பெருமானின் அருளால் இயங்குகிறது என்றும், அவை பெருமானுகே சொந்தம் என்று நினைப்பவர்கள்) ஓதப்படுகின்ற சாஸ்திரங்களாகிற வலையில் பல குத்ருஷ்ட்டிகளால் (பல சமயங்களை அறிந்து பின் நாராயணனே பரத்துவம் என நிர்ணயிப்பவர்கள்) அசைக்க முடியாதபடி எம்பெருமானின் வலையில் நான் வீழ்ந்தேன். எம்பெருமானை சாஸ்த்திரங்களில் எப்படி பிரிக்க முடியாதோ அப்படி என்னை அவனது திருவடிகளிலிருந்து பிரிக்க முடியாது. எம்பெருமான் ஒரு வலையில் அகப்பட்டான். நான் ஒரு வலையில் அகப்பட்டேன் என்கிறார் ஆழ்வார். 

சென்று வணங்குமினோ சேண் உயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் என்றும்
கடிக் கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக் கமலம் இட்டு ஏத்தும் அங்கு     2423 

      நெடிதுயர்ந்த மலை உச்சியை உடைய திருவேங்கடமலையைச் சென்று வணங்குங்கள். பாவத்தைப் போக்குவதில் அம்மலை உறுதியாக இருக்கும். தாமரையில் உதித்த பிரம்மாவும், முக்கண் படைத்த சிவபெருமானும் போற்றுகின்ற அற்புதமலை திருவேங்கடமலை என்று கூறுகிறார் ஆழ்வார். சென்னியோங்கு தண் திருவேங்கடத்தைச் சென்று வணங்குங்கள். அந்த திருமலைதான் உங்கள் பாவங்களை எல்லாம் அழித்துவிடும். பிரமன்சிவன் ஆகியோர் தம் அதிகாரத்தைப் பெறுவதற்காக திருமலையில் வந்து பெருமானின் திருவடிகளில் அன்றலர்ந்த மலர்களைத் தூவி அர்ச்சித்து வணங்கினர். நம்மிடம் பாவங்கள் மிகுந்துள்ளதால் நம் சகோதர மக்களை துன்புறுத்தி வாழ்கிறோம். நிலையற்ற பொருளை நிலையானது என்று எண்ணி  வாழ்நாளை விரயமாக்கி வருகிறோம். இவையெல்லாம் நம்முள் இருக்கும் தீவினையின் செயல்களே. இவை ஆண் பெண் அனைவருக்கும் பொருந்தும். இத்தகைய பாவங்களைப் போக்குவதே திருமலையின் ஸ்வபாவம். தன்னை அடைந்தவர்களின் பாவங்களை அறவே போக்குவதால் ‘வேங்கடவன்’ என்று அழைக்கப்பட்டான் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும். 

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏற தாம் குவித்துக் கொண்டு       2424 

      மேகமண்டலத்தைத் தொடும்படியான உச்சியையுடைய திருவேங்கட மலையில் அருள் புரியும் பகவானுக்குத் திருவந்திக் காப்பிடுதற்காகசந்திரனைச் சடையில் வைத்தவனும், தக்ஷமுனிவனின் சாபத்தினால்  தனது செயலிழந்த சிவபெருமானும்தாமரை மலரில் பிறந்த பிரம்மாவும் திருமுத்துக்குடை முதலான உபகரணங்களோடு சாயரக்ஷை காலத்தில் திருமலைக்கு வந்து பெருமானை வணங்கிச் செல்வார்கள் என்கிறார் ஆழ்வார். இத்தகைய திருமலையில் மும்மூர்த்திகளின் சங்கமம் நடைபெறுகிறது எனலாம். சிற்றின்ப வாழ்வில் மூழ்கிவிடாமல் அடிக்கடி திருமலைக்கு வந்து செல்ல வேண்டும் என்றும் தங்கள் அறியாமையை நீக்க இங்கு வருகை புரிதல் வேண்டும் என்ற திருவுள்ளத்தில் ஆழ்வார் இத்தகைய கருத்துக்களை நம்முன் வைக்கிறார். நாம் ஆத்மா என்பதை சரிவர புரிந்து கொள்ளாமலிருப்பதே நமது அறியாமையின் தலையாயதாகும். நாம் அழியும் உடல் அல்லஅழியாத ஆத்மா  என்பதை நன்குணர வேண்டும். அத்தகைய நினைவே நமக்கு அற்புதமான ஆற்றலைத் தரும் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும். 

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போம் குமரருள்ளீர்! புரிந்து    2425     

      முன்பு இராவணன் தனது பத்து தலைகளை மறைத்துக் கொண்டு பிரம்மனிடம் வரம் வேண்டி நின்றான். அப்போது பெருமான் பிரம்மனின் மடியிலே சிறுகுழந்தை வடிவாகி பிரம்மனுக்கு வரம் தராதவாறு அவனை எச்சரித்தனுப்பினான். தண்டிக்கத் தகுந்த  இராவணனது பத்து தலைகளையும்தனது திருப்பாதங்களாலே எண்ணிக் காட்டிய நித்திய யௌவனான பகவான் நின்றருளும் சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமலைக்கு இளமையோடு இருக்கும்போதே விரும்பிச் செல்லுங்கள் என்கிறார் ஆழ்வார். இதனைப் பெரியாழ்வார் தனது திருமொழியில் ‘சீமாலிகனோடு தன்னை தோழமைக் கொள்ளவும்’ என்று பாசுரத்தில் எடுத்தியம்பியுள்ளார்.  மேற்சொன்ன கதையானது இராமாயணத்தில் விடுபட்டிருந்தாலும் ஆழ்வார் பாசுரங்களில் இதனை எடுத்தியம்பியுள்ளார் எனலாம்.  இத்தகைய முதிர்ந்து தண்டு காலால் ஊன்றி தள்ளாடி நடக்கும் வயதில் திருமலையை மனதால் நினைக்கவும் முடியாது. 

புரிந்து மலர் இட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு      2426 

      புண்டரீகனின் திருவடிக் கமலங்களில் அன்புடன் மலர்களைச் சமர்ப்பணம் செய்துமங்களாசாசனம் செய்துவெட்டி வீழ்த்திய மரம் போல் கால் பெயராமல் நிற்கும்படி எல்லா இடங்களிலும் விளங்கிகுணங்களால் பெருமை பெற்றுஅருள் புரியும் பகவானுடைய குளிர்ச்சியான அருவிகளையுடைய திருவேங்கடமே தேவர்களுக்கும்மனிதர்களுக்கும் வைப்பு நிதியாகும் என்கிறார். தைத்ரீய உபநிடதத்தினால் எம்பெருமான் நிதியாக அறியப்படுகிறான். எம்பெருமான் என்கின்ற நிதி ஆஞ்ஞானமின்றி நெஞ்சிலே புதைத்து ஆளத்தக்கதாகும். நிதி பெற்றவர் அதனைக் கட்டிக்காக்க ஊண் உறக்கமின்றித் தவிப்பர். ஆனால் பெருமானோ காண்பதற்கு முன் உறக்கமில்லை. கண்டால்  அவன் பேரில் கொண்ட காதலால் உறக்கமில்லை. ‘கண்ணாரக்கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சல்’ என்று திருவிருத்தத்தில் ஆழ்வார் அருளியுள்ளார். திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாளே நிதியாகத் திகழ்கின்றார்.  வைப்பு நிதியானது எதிர்காலத்தில் தேவைக்காக சேர்த்து வைக்கும் செல்வமாகும். அதுபோன்று இளமைக் காலத்தில் ஈட்டும் செல்வமானது முதுமையில் நமக்கு  பயன்படுவது போன்று இளமை தொட்டே நாம் பகவானை வழிபட்டு வந்தால் முதுமையிலும்மரணம் நம்மை நெருங்கும்போதும் வைப்பு நிதியாக விளங்கும். அப்புண்ணியம் நம்மை முக்தி பெறச்செய்யும். நாம் பாவங்கள் புரிந்திருந்தாலும் நரகிலிருந்து விடுவிக்கும் அருமருந்தாக அமையும் என்பது இதன் மூலம் விளங்குகின்றது. 

வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்து ஆடுது மேல் நன்.    2427 

      ஆகாயத்தில் அழகிய விளக்கு போல் தோன்றும் நிலவினைக் கண்ட யானையானது சிறப்புடைய இச்சந்திரனைப் பறித்து வந்து ஸ்ரீநிவாசனுக்கு நந்தாவிளக்காக வைக்க வேண்டும் என்ற ஆவலில் எப்போதும் தும்பிக்கையை உயர்த்தி அதனைப் பிடிக்க முயற்சி செய்யும். யானையைப் பிடிக்க நாற்புறமும் வேடர்கள் சூழ்ந்து கொள்ளஅங்குள்ள குறவர்கள் வில்லை எடுத்து அதை முடிக்கும் நோக்கத்தோடு புறப்படும் திருவேங்கடமலையை நாட்டிலுள்ளோர் அனைவரும் வலம் வந்து ஆனந்தம் கொண்டு ஆடிப்பாடினால் அவர்கள் நன்மை பெறுவார்கள் என்கிறது இப்பாசுரம். உயரிய திருமலையானது நிலவினைத் தொடும் அளவிற்கு உள்ளது. எனவே இம்மலையிலுள்ள பிராணிகள் நிலவினைத் தொடுவதற்கு முயற்சிக்கும். ஆழ்வார் திருமலையின் மேல் தவழ்ந்து வரும் நிலவினைக் காணும்போதெல்லாம் இதனைக் கொண்டு வந்து ஸ்ரீநிவாசனின் சந்நிதியில் நந்தாவிளக்காக அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கையில் இப்பாசுரம் இவ்வாறு அமைந்தது என்றும் கூறப்படுகிறது. 

நன் மணி வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன்மணி நீ
ரோடு பொருது உருளும் கானமும் வானரமும்
வேடும் உடை வேங்கடம்.     2428 

      யாளிகளும்சிங்கங்களும்பொன்னும்மாணிக்கமும்முத்தும்பூமரமும்பலவகையான ரத்தினங்கள் அருவி நீரோடு கலந்து உருண்டு விழுகின்ற காடுகளும்குரங்குகளும்வேடர்களும் ஆகிய இவற்றையெல்லாம் கொண்ட திருவேங்கடமலை நல்ல நீலமணி போன்ற வடிவத்தையுடைய அற்புதமான திருத்தலமாகும். இவற்றினோடு பூக்களும் சேர்ந்து புரள்கின்றன.  இப்பாசுரத்தில் திருமலையின் இயற்கை வளத்தை எடுத்துக் காட்டுகின்றார்.  இத்தலத்தில் பெருமான் கேட்டவர்க்கு கேட்கும் வரத்தினை அருளும் தயாள குணம் கொண்ட பெருமானாக விளங்குகிறார். சம்சார சாகரத்தில் வளமாக வாழ்ந்து பிற்காலத்தில் அவற்றிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு நமக்கு அதற்கான ஞானத்தையும் அருளக்கூடியவராகத் திகழ்கின்றார் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது. 

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் வேங்கடமே
தானவரை வீழத் தன் ஆழிப் படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை.   2429 

      தேவர்களால் உண்மையான பக்தியுடன் வணங்கப்படுவது திருவேங்கடமே! நாம் புரிந்துள்ள பாவங்களையும்உடலைப் பற்றிய நோய்களையும் தீர்க்கவல்லது. திருவேங்கடமே! அசுரர்கள் விழும்படி சுதர்சனச் சக்கரத்தை வீசி தேவர்களைக் காத்தருளும் பகவான் வீற்றிருப்பதும் திருவேங்கடமே! என்கிறார் ஆழ்வார். இப்பாசுரத்தில் திருவேங்கடத்தின் சிறப்பைப் போற்றுகிறார். அசுரர்களின் குணத்தால் பகவான் அவர்களை ஒதுக்கியே வைத்திருந்தார். பாற்கடல் கடைந்து அமுதம் வந்த போதும் அசுரர்களைப் புறக்கணித்தார். அசுரர்களால் தேவர்களுக்கு துன்பம் நேர்கையில் உடன் வந்து காப்பார். இங்கு அசுரர்கள் என்பது நம்முடனே இருந்து கொண்டு நம்மைக் கீழ்நிலைக்குத் தள்ளும் காமம்குரோதம்வஞ்சனை போன்ற தீய குணங்களான அசுர குணங்களைத்தான் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இத்தகைய அசுர குணங்களை அழிக்க வல்லவன் திருவேங்கடமுடையான் மட்டுமே. எனவே திருமலைக்குச் சென்று அவனைச் சரணடைந்து அவன் அருள் பெற்று வாழுமாறு நமக்கு உபதேசிக்கிறார்.   

வீற்றிருந்து விண் ஆள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்த
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே
தாழ்வாய் இருப்பார் தமர்.     2471 

      வைகுண்டத்தில் பெருமையுடன் வீற்றிருந்து ஆள எண்ணுபவர்திருவேங்கடத்தான் திருப்பாதங்களில் பல பூக்களைத் தூவி வழிபட வேண்டும்.  பரந்தாமன திருவுள்ளக் கருத்தை அறிந்து பக்தி உடையவராய் அவனுக்குப் பணிவிடை செய்பவர்களுக்குச் சேவை செய்கிறவர்கள் அவர்களிலும் மேம்பட்டவர்களாய் இருப்பார்கள் என்கிறார் ஆழ்வார். இப்பாசுரத்தில் பகவானின் அடியார்களின் பெருமைகளைப் போற்றுகிறார். வைகுண்டம் வேண்டுபவர்கள் திருமலைத் திருவேங்கடவனின் பாதங்களில் மலர்களைத் தூவி வழிபட வேண்டும். மேலும்.  பகவானையும் அடியார்களையும் போற்றித் துதித்தால் துன்பம் என்பதே கிடையாது என்கிறார். ஆனால் உலக மாந்தர்களோ பகவானை நினையாமல் சுகபோக வாழ்வு வாழ்வதும்பொருள் ஈட்டுவதும் போன்றவற்றால் தங்களது இனிமையான வாழ்வை வீணடித்து வருகிறார்கள். இந்நிலையில் மரணம் வந்து வாழ்வு முடிவுறும்போது திக்கற்றவர்களாக ஆகிறார்கள். இக்கருத்தினை ஆழ்வார் நமக்கு நன்கு உணர்த்துகின்றார். 

    திருப்பாணாழ்வார்                                                                                அமலனாதிபிரான் 

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து  என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே   927 

      எவ்விதமான குற்றம் குறைகள் சிறிதும் இல்லாதவனாய்உலகுக்கெல்ம் காரண கர்த்தாவாய்மாயை என்னும் வலையில் மயங்கிக் கிடக்கும் என்னை தன் அடியார்க்கு அடியனாக்கி பேரொளி தருபவனாய்தேவர்களின் தலைவனாய்மணமுள்ள அழகிய சோலைகள் நிறைந்த திருமலையில் வந்து அருள்பவனாய்நான் எத்தகைய உபயமும் செய்யாதிருக்கும்போதே என்னை தரிசனம் செய்ய வைத்தவனாகிறான்.   பரிசுத்தனாய்உயர்ந்தவர்தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அனைவரையும் காப்பவனாய்உயர்ந்த மதிள்களையுடைய திருவரங்கத்தில் கண்வளரும் எம்பெருமானின் திருவடித் தாமரைகளை காணும்போது அவை என் விழிகளுக்குள் புகுந்தது போல் தோன்றுகிறது.

      பகவானின் கருணையின்றி மாயையிலிருந்து நாம் விலக முடியாது. மாயை நம்மை துன்புறச் செய்ய வந்ததல்ல. பகவான் நடத்தும் விளையாட்டில்  இதுவும் ஒன்று. நமது வினைப்பயனே மாயை ஆகின்றது. மாயையைக் கொடுப்பவன்தான் அதனை விலக்கவும் செய்கிறான். நாம் அவனையே பற்றினால் மாயை அகன்று போகும்.     

மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவினணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே.    929 

      குரங்குகள் திருமலையில் பலா மரத்துக் கிளையில் க¤ளைக்கு கிளை தாவி ஊஞ்சலாடுகிறது.  தேவர்கள் வேங்கடவனை ஆராதிக்கின்றனர். மாலை நேரத்து சிவந்த வானம் போல மின்னிடும் சிவந்த பட்டாடையை திருவரங்கன் உடுத்தி ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டிருக்கிறான்.  அதன் மேல்புறம் நாபிக்கமலத்தில் பிரம்மன் தாமரையில் அமர்ந்து உள்ளான். அதில் என் உயிர் குடிகொண்டுவிட்டது.
      பரம்பொருள் ஒன்றே என்பதை ஆழ்வார் உணர்த்துகிறார். படைத்தல், காத்தல்அழித்தல் ஆகியன அனைத்தையும் பரம்பொருள் செய்கிறான். பெயரும் வடிவமும் மாறும். சக்தி ஒன்றுதான். தர்க்கம் புரியாமல் இதில் உள்ள வேறுபாட்டினைக் களைந்து இவ்வுலகிற்கு நாம் வந்த காரணத்தை அறிந்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும். எனவே நமது உயிரை பகவானிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார்.

திருமங்கையாழ்வார்                                                                         பெரிய திருமொழி                                                                        

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடங் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர்ச்
செங் கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே      1018 

      கம்சன் அனுப்பிய அசுரன் குருந்தமரம் வடிவில் நின்றான். நல்ல மணமுள்ள குருந்த மரத்தை ஒடித்து எம் கண்ணன், எம் இனிய இறைவன்சங்குகள் தங்கியுள்ள பெரிய சமுத்திரத்தில்பாதி கண்களை மூடியவாறு நம் செயல்களை கவனித்து வரும்,  குளிர்ந்த தாமரை போன்ற கண்களையுடைய கண்ணபிரான் பொங்கி வந்து, கொக்கின் வாயைப் பிளந்து, ஆதியும் அந்தமுமாயுள்ள எம்பெருமான் இருக்கும் இடமானதுபொங்கி வரும் நீரில் கொழுத்த செங்கயல் மீனானது திருவேங்கடத்துக் குளங்களில் மகிழ்வுடன் துள்ளி விளையாடும் இடமாகும். இத்தகைய கரும்பு போன்ற இனிப்பான திருமலையை நோக்கி செல் மனமே! என்று தன் நெஞ்சத்தை ஆழ்வார் தூது விடுகிறார். 

பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே      1019 

      கல்நெஞ்சம் படைத்த கொடிய பூதகியானவள் பேரிரைச்சலுடன் கதறும்படியாக அவளது தனத்தைசிறு குழந்தையான ஸ்ரீகிருஷ்ணன்  விஷப்பாலை உறிஞ்சியெடுப்பது போல் அவளது உயிரை உறிஞ்சி அழித்தான். அத்தகையவன் பள்ளி கொள்ளும் இடமானது திருவரங்கம்திருப்பாற்கடல் மற்றும் திருவேங்கடமாகும். அப்பெருமான் வளருகின்ற இடமாயும்அறிவில் செறிந்த தெளிந்த ஞானிகள் வணங்கும் பெருமான் கிருதயுகத்தில் வெளுத்த நிறத்திலும்கலியுகத்தில் கறுத்த நிறத்திலும்துவாபரயுகத்தில் சாம நிறத்திலும் இருப்பவன் என்று அவனை தியானித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் வணங்கப் பெற்றதாயுள்ள திருமலையை உடன் சென்று அடை மனமே! என்று தனது நெஞ்சைப் பார்த்துக் கூறுகிறார் ஆழ்வார். 

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும் இணைத்தாமரை அடி எம் பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே    1020 

      வலிமை மிக்க பெரிய மருத மரங்கள் இரண்டும் முறிந்து விழும்படி செய்த நிர்மலனும்திருவாழியை உடையவனும்எப்போதும் நித்யசூரிகளால் சேவிக்கப்பட்ட இரண்டு திருவடித் தாமரைகளைக் கொண்டவனான எங்கள் பெருமானும்ஆய்ச்சியர்கள் மேல் கோபம் கொண்டுகொடும் மழையை பெய்வித்து கோகுலத்து மக்களைத் துன்பத்தில் ஆழ்த்திய இந்திரனின் அகந்தையை அடக்க அனைத்து மக்களையும்மற்றும் பசுக்கூட்டங்களையும் காத்திட பெரிய கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து எல்லா உயிர்களையும் காத்து அவர்களின் துன்பங்களைப் போக்கினான். அத்தகையவன் திருமலையில் சேவை சாதிக்கிறான். அவனை உடன் அடை நெஞ்சமே! என்று தனது மனத்தினை தூது விடுகிறார் ஆழ்வார். 

பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே!   1021 

      பாரதப் போரில் அர்ச்சுணனுக்காக தனது திருக்கரங்களால் தேரோட்டி வெற்றி பெற்றுத்தந்த பேரொளியாகத் திகழ்ந்த கண்ணபிரான் பிருந்தாவனத்தில் இராசகிரீடை செய்தவனாவான். இவனை பக்தியோடு வணங்குபவர் உள்ளத்தில் உறைபவனாகத் திகழ்கின்றான். திருவிடவெந்தையில் அழகாக எழுந்தருளியுள்ளான் எம்பிரான். புனித நீர்நிலைகளாலும்அழகு மிக்க சோலைகளாலும் சூழப்பட்ட உயரிய திருவேங்கடத்தில் கோயில் கொண்டு நம்மையெல்லாம் ஆட்சி செய்து வருகிறான். நெஞ்சமே நீ அவனிடம் செல்வாயாக! என்று கூறுகிறார்.
      அண்டசராசரங்களுக்கு அதிபதியாகத் திகழ்ந்த திருமால் கிருஷ்ணராக அவதாரம் செய்து பாரதப் போரில் விஜயனுக்கு சாரதியாக விளங்கினான். இதனை துரியோதனன் சரிவர புரிந்து கொள்ளாததால் போரில் தோல்வியைத் தழுவினான். பிதாமகரைக் குறை கூறினான். பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணர் இருப்பதால் வெற்றி நிச்சயம் என்பதை அறிந்திராமல் போர்க்களத்தில் தோற்றான். அத்தகையவன் திருவிட வெந்தையிலும்திருவேங்கடத்திலும் கோயில் கொண்டுள்ளான். மனமே! அவனைத் தேடிச் செல்வாயாக! என்பது இதன் பொருளாகும். 

வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இருஞ்சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே!   1022 

      வள்ளலாகவும்அசுரத் தலைவனாகவும் இருந்த மகாபலியின் யாக சாலையில் பிரம்மச்சாரி வேடம் பூண்டு மூன்றடி நிலம் யாசித்தவனும்ஏழு மரா மரங்களை ஒரே அம்பினால் துளைத்த, வலிமை பொருந்தியவனும்எட்டுத் திருக்கரங்களோடு அட்டயபுரத்தில் காட்சி தருபவனும்இமயத்தின் திருப்பிருதியில் உறைபவனும், மாலிருஞ்சோலையில் அருள்பவனும்கஜேந்திரனின் துயர் துடைத்தவனுமான பகவான் உறையும் இடம் திருவேங்கடமாகும் என்கிறார் ஆழ்வார்.
      வேண்டியவர்க்கு தானம் செய்கின்ற அசுரத் தலைவனான மகாபலியின் யாகசாலையில் மூன்றடி மணி யாசித்தவன் பகவான். எட்டு கரங்களைக் கொண்டு அட்டபுயகரனாகக் காஞ்சியில் காட்சி தருகிறான். அத்தகையவன் திருவேங்கட மலையில் நின்று அருள்கிறான். மனமே! அவனை நோக்கிச் செல்வாயாக! என்கிறார் ஆழ்வார். சூஷ்ம சரீரத்தில் வைரம் கொண்ட மனத்தை நாம் அடக்கிவிட்டால் அது நமக்கு பணியாளனாக  மாறிவிடும். தெய்வீக சக்தி கொண்டு மனத்தை அடக்க வேண்டும் என்பதே ஆழ்வாரின் கருத்தாகும்.  

எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே  1023 

      பிரளய காலத்தில் எட்டு திசைகளையும்ஏழுலகங்களையும் தூக்கித் தங்கமான வயிற்றில் வைத்துஒரு ஆலிலையின் மேல் படுத்து உறங்கியவன்பாலைப் போல் வெண்மை நிறம் கொண்ட நிலவின் துன்பத்தைத் தீர்த்தவனும்நல்ல வலிமை பொருந்திய அசுரனான இரணியனின் மார்பில் கூரான நகங்களைக் கொண்டு கிழித்தவன். ஒளியுடைய கூரான பற்களோடு மிக வலிமையுடன் தூணிலிருந்து வெளிவந்த இறைவனான நரசிம்மப்பெருமாள் வசிக்குமிடம் திருவேங்கடமாகும். தித்திக்கும் அக்காரக்கனியான  ஏழுமலையான் வாசம் செய்யும் இடமுமாகும் என்கிறார் ஆழ்வார்.
       பிரளய காலத்தில் எட்டு திசைகளையும்ஏழுலகங்களையும் தன் வயிற்றுக்குள் வைத்திருப்பது குறிப்பிடப்படுகிறது. "விஷ்வோத்தரம்" (முழு பிரபஞ்சம் வயிற்றுக்குள் புகும்அற்புதம்பிரளயத்தின்போதுமகாப்பிரளய நீரில் உலகம் முழுவதும் அழிந்தபோதுகண்ணன் பாலக ரூபத்தில் ஆலிலை மீது படுத்து தன் வாயிலே உலகத்தைத் தாங்கி இருந்தான்.
பாலகனாய்யாவற்றையும் விளையாட்டாய் தாங்கி அருளியவன் எனபது பொருள். தெய்வங்களுக்குக் கூட நிகழும் துன்பங்களைத் துடைத்தருளுபவன்அடியாரைத் துன்புறுத்துவாரை ஒருபோதும் பொறுக்காதவன்அரியதோர் வலிமையோடும்அருளோடும் விளங்குபவன், அங்கு போய் புகுந்தால் எல்லாப் பாவங்களும் விலகி  பயன் பெறுவர் என்பதே இப்பாசுரக் கருத்தாகும். 

பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே    1024 

      நிலம்நீர்காற்றுநெருப்புஆகாயம் போன்ற ஐம்பெரும் பூதங்களாகத் திகழ்பவன்சஹஸ்ர நாமங்களான ஆயிரம் பெயர்களைக் கொண்டவனும்அதன் மூலம் ஆராதிக்கப்படுபவனும்அடியரார்க்கு பிறப்பிறப்பினை நீக்கியவனாகத் திகழ்கின்ற எம்பெருமானான திருவேங்கடவன் எழுந்தருளியுள்ள இடம் திருமலை என்னும் திவ்யத்தலமாகும். அகன்ற ஆகாயத்திலிருந்து மழைநீரும்வெண்மையான பனித்துளிகளும் விழும் இடமும்மேகக் கூட்டங்கள் இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஓங்கி உயர்ந்து நிற்பதும்சோலைகள் சூழ்ந்து இருப்பதுமான திருவேங்கட மலையை நெஞ்சே! நீ அடைந்திடு! என்று தமது பாசுரவழித் தெரிவிக்கின்றார்.
      பிருதிவிஅப்புதேஜஸ்வாயுஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியாக நிற்பவன் பெருமான். சகல லோகங்களும் தானிட்ட வழக்காக இருப்பவன். அப்படிப்பட்டவனும் ஸஹஸ்ரநாமங்ககளால் துதிக்கப்படுபவனும், கருமங்களுக்கு வசப்படாதவனுமான எம் பெருமான் தன்னுடைய பெருமை எல்லாம் தோற்ற எழுந்தருளியிருக்குமிடம் திருவேங்கடம்ஆகாசத்தில் நின்றும் மழை பெய்யவும், பனி பெய்யவும் பெற்றது, மேகங்கள் வந்து படியும்படியான உயர்த்தியையுடைய சோலைகளாலே சூழப்பட்டது. அதனைச் சென்று சேர் நெஞ்சே! என்கிறார் ஆழ்வார். 

அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர் கோன்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர் நீள் இதணம்தொறும்
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே!      1025 

      அம்பரமாகிய நிலம்நீர்நெருப்புகாற்றுஆகாயம் முதலான பஞ்சபூதங்களுக்குத் தலைவனாக இருப்பவனும்அமரர்களின் அதிபதியும்எங்கும் மணம் பரப்பும் தாமரை மலரினைத் தன் இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியான மஹாலட்சுமியின் கொழுனனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற இடமாகவும்மிகவும் மெலிந்த இடையினையுடைய குறி சொல்லும் குறவர் குலப்பெண்கள் நெடிதுயர்ந்த பரண்களில் மீதேறி தீமைகள் நெருங்காத வளங்கள் கொண்ட வயல்களைக் காவல் புரிகின்ற வயற்பரப்பினையுடைய திருவேங்கட மலையினை நெஞ்சமே! அடைந்திடுவாயாக! என்று அருளுகிறார் ஆழ்வார்.
      எல்லாமும் இறைவனேஅவனில்லாமல் வேறு தனித்துவம் எதுவும் இல்லை. எங்கு போனாலும் கிடைக்காத நிலையான செல்வம் அவன் அடியார்க்கே அளிக்கப்படுகின்றது. அவனை அடைந்தால் நிரந்தர இன்பம் உண்டாகும். இறைவனை எங்கும் காண முடிந்தாலும்அருள் பூரணமாகக் கிடைக்கும் தலம் திருவேங்கடமே. அதனால் மனமே! வேறு எங்கும் அலைவதை விடுத்துஅங்கேயே செல்வாயாக! மனமே! நீ வேறு ஆசைகளைக் கைவிட்டுவேறு இடங்களில் சுற்றிச் செல்லாமல்திருவேங்கடத்தையே அடைவாய்” என்று அறிவுறுத்துகிறார். 

பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தமை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரான் இடம்
வாச மா மலர் நாறு வார் பொழில் சூழ் தரும் உலகுக்கு எல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே!   1026 

      அனைவராலும் தினசரி அனுசந்திக்கப்பெறும் திருவெட்டெழுத்து  மந்திரத்தை தினசரி பாராயணம் செய்து மென்மேலும் அதனையே அனுசந்தித்து வந்தால்நாம் கொண்டுள்ள பிறவித் துயர் முழுவதையும் எம்பெருமான் நீக்கிவிடுவான். அத்தகைய பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம் திருவேங்கட மலையாகும். இத்தலமானது ஏழுமலைகளைக் கொண்டு, குளிர்ந்த காற்றில் பரிமள மணமிக்க மலர்களால் சூழப்பட்டு மற்ற எல்லா உலங்களுக்கும் திலகமாக விளங்குகின்றது. அத்தகையதொரு புண்ணியத் தலத்தினை நெஞ்சே! நீ அடைவாயாக! என்று தன் மனத்தினை கேட்டுக்கொள்கிறார் ஆழ்வார்.
      மனதை ஒருமுகப்படுத்தும் அளவைப் பொறுத்துதான் ஒவ்வொரு மனிதனின் வெற்றி தோல்விகள் அமைகின்றன. மனதை ஒருமுகப்படுத்தும் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற திருவெட்டுழுத்து மந்திரத்தை இப்பாசுரத்தின் மூலம் ஆழ்வார் நமக்குத் தருகிறார். இந்த மந்திரத்தை எப்போதும் ஜெபித்து வந்தால் மனம் ஆண்டவனோடு ஒன்றிவிடும். பிறவிப் பெருங்கடலை நீந்தி நாம் கரையேறி விடலாம் என்பது இதன் பொருளாகும். 

செங் கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடத்து உறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை இன்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி வான் உலகு ஆள்வரே  1027 

      இளமையான சிவந்த மீன்கள் களித்து விளையாடப் பெற்ற குளிர்ச்சி மிக்க நீர் நிலைகளையுடைய திருமலையில் நித்யவாசம் செய்து வரும் திருமாலைக் குறித்து கலியன் என்கின்ற திருமங்கை நாட்டுத் தலைவரான திருமங்கையாழ்வார் தமது அழகுத் தமிழில் அருளிய சொல் மாலையைஇவை பலன் தருமோ தராதோ என்று நினையாமல் தினசரி அனுசந்தித்து வந்தால், கப்பல்கள் நிறைந்த பெரிய கடலால் சூழப்பெற்ற இப்பூமண்டலத்தில் உள்ளவர்களுக்கு புகலிடமாகக் கொண்டு அவர்களைக் காத்தருளும் பெருமான் இவ்வுலக வாழ்வு முடிந்த பின்பு பரமபதத்தை அளிக்கும்  பெரும் வாய்ப்பினை பெருமான் நமக்கு அருள்வார் என்று கூறுகிறார்.
      நெஞ்சத்தை நாம் காண முடியாது, ஆனால் உணர முடியும். அதனைக் கட்டுப் படுத்தவும் நம்மால் முடியும். இந்த அரிய சூக்ஷ்ம சரீரத்தின் மூலம் நாம் பகவானை அடைந்திட முடியும். நம்மிடம் பகவான் எதிர்பார்ப்பது அன்பு மட்டுமே. அத்தகையவன் திருவேங்கடமலையில் வாசம் செய்கிறான். அவனை அடை மனமே! என்கிறார். 

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா!
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.    1028 

      மூங்கில்கள் நெருங்கி இருக்கப் பெற்றதும்பூஞ்சோலைகள் நிறையப் பெற்றதும்பரிமள மணம் எங்கும் பரவியிருக்கப் பெற்றதும்இத்தகைய நிலைகளில் திருமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே! தாய்தந்தைமனைவிமக்கள் என்கின்ற சம்சார சரீர பந்தங்களிலே எப்போதும் வாய் வெருவிக்கொண்டு அநர்த்தப்பட்டுப் போனேன். அவர்களால் நான் துன்பங்களையே அனுபவித்தேன்.  நாய் போன்ற மிக்க நீசனான அடியேன் அந்த ஆபாச பந்தங்களை விட்டு நிருபாதிக (என்றும் நிலையான) பந்துவான எம்பெருமானைப் பற்றினால் ஒரு குறையும் வராது என்று கூறிஉன்னை சேவிக்க வேண்டுமென்கிற ஆவலினால் உன்னிடம் வந்து சரண் புகுந்தேன். சரணாகதனான என்னைக் கிருபை செய்து இந்த அடிமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்! என்று வேண்டுகிறார்.

      இப்படி ஆபாச பந்துக்களை நம்பினபடியால் அன்றோ நமக்கு கஷ்டங்கள் நேர்ந்தன. அதனால் நிருபாதிக பந்துவான எம்பெருமானைப் பற்றினோம்.  அதில்  ஒரு குறையும் இன்றி நல்ல புத்தி உண்டாயிற்று. பரம போக்யமான திருமலையிலே வந்து நிற்கிற நிலையிலே ஈடுபட்டு நின் திருவடிகளிலே விழுகின்றேன். அடியேனுடைய  முன்னைத் தீவினைகளைக் கணிசியாமல் (மனதில் கொள்ளாமல்) சரணாகதன் என்பதையே குறிக்கொண்டு பரம க்ருபையுடன் அடிமை கொண்டு அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் ஆழ்வார். 

மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என்
ஆனாய்! வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே    1029 

      இப்பெரிய பூமண்டலத்தில் மான் போன்ற கண்ணழகுடைய அழகிய  மாந்தர்களின் கண் மயக்கிலே ஆட்பட்டுஅந்த பெண்களையே ஆராதிக்கின்ற செயலைச் செய்தேன். நான் இதுவரை செய்த பல பாவங்களைப் போக்க இந்நரகம் ஒன்று போதாது. பலவகைப்பட்ட நரகங்களில் புகுவதற்கான காரணமான பாவங்களை நானொருவனே செய்து வைத்தேன். இப்பாவங்களுக்கு எல்லை நிலமாக விளங்கும்வண்டுகள் நிறையப்பெற்ற பூஞ்சோலைகள் கொண்ட திருவேங்கடமென்னும் சிறந்த மலையிலே எழுந்தருளியிருக்கும் ஆனை போன்று எம்பெருமானிடம் சரண் புகுந்து என் பாவங்களை போக்குவேன். என் ஆரா அமுதமே! அப்போதைக்கு அப்போது உன் பக்கம் வந்து சரண் புகுந்தேன். என்னை ஆட்கொண்டு அருள் புரிவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார். 

கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால் 
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்து அறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர் மாமலை வேங்கடவா
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.    1030 

      விவேகம் என்பது சிறிதுமில்லாமையினால் பல உயிர்களையும் கொலை செய்து முடித்தேன். ஜீவஹிம்சையால் பாவங்கள் பல புரிந்தேன் என்கிறார். பெண்களைத் திருப்திபடுத்த வேண்டுமென்ற எண்ணத்தில்உயிர்களிலும் ஆத்மா உண்டென்ற எண்ணமின்றி பல்லுயிர்களைக் கொன்றேன். யாசகம் என்று கேட்டு வருபவர்களுக்கு இனிமையாக ஒரு நாளும் பதில் சொல்லி அறியேன். மலை போன்ற மேகங்கள் சேர்ந்துள்ள குளிர்ச்சி மிகுந்த திருவேங்கடமலையில் எழுந்தருளி இருப்பவனே! அதே நொடியில் உன்னை வந்து பற்றினேன். அடியேனை குளிரநோக்கி ஆட்கொள்வாயாக! என்று வேண்டுகிறார்.
      வாழ்வில் ஒவ்வொருவரும் ஒரு இலட்சியத்துடன் வாழ்வார்கள். இவற்றைத் தவறு என்று கூறிவிட முடியாது. இந்த உலக இயக்கம் நடைபெற இவை தேவை. ஆனால் இது உண்மையான இலட்சியமில்லை. பெருமானையும் ஆத்மாவையும் அறியும் இலட்சியமே நிலையானதாகும். அதனைப் பெற திருவேங்கடம் வந்து உன்னைச் சரண் அடைந்தேன்! என்கிறார் ஆழ்வார். 

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா!
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.     1031 

      பல பிறவிகள் எடுத்து எல்லாக் குலங்களிலும் பிறப்பதும்வளர்ந்து துன்பங்களை அனுபவிப்பதும்பின் இறப்பதுமாக இளைத்துப் போனவனும்வாழ்க்கையில் எவ்விதமான நன்மையும் இல்லாதவனும்உலகில் பல நற்காரியங்கள் இருந்தும் எவ்வித கருமம் ஒன்றும் செய்தறியாதவனும்வாழ்நாளில் என்றும் பல இன்னல்களை அனுபவித்தவனுமான அடியேன் இறுதியில் உன்னை வந்து பற்றினேன். பூமியில் படிந்துள்ள குளிர்ந்த பெரிய வெண்மேகங்கள் நடமாடின வழிகளில் எல்லாம் பொருந்தியிருக்கின்ற அழகுமிக்க திருமலையில் நின்று எழுந்தருளியுள்ளவனேபாவங்கள் பல புரிந்த அடியேனை ஆட்கொண்டருள்வாயாக! என்று வேண்டுகிறார்.     

எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன்
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மாமலை என்
அப்பா! வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே      1032 

      பாவங்களில் பலவும் உண்டு. அதில் எல்லா வகையான பாவங்கள் பலவும் நான் புரிந்துள்ளேன் என்று தம் குறையை பெருமானிடம் விண்ணப்பம் செய்கின்றார். சிலர் நடுவில் சில புண்ணிங்களையும் செய்வார்கள். ஆனால் நான் தொடர்ந்து பாவங்களையே செய்து இளைத்தேன். பல பாவங்கள் புரிந்தவர்களையும் அதிலிருந்து நீக்கும் திறனைப் படைத்தவன் எம்பெருமான். அவனது திருவடிகளையும் ஏற்றம் கொண்டு பக்தி செய்யாமல் இருந்தேன். அதற்கான துப்பும் எனக்கில்லாமல் போய்விட்டது. நன்றாக இருக்கக்கூடிய நெடிய மலைகள் கொண்ட திருவேங்கடமாமலையில்உபகாரகனான என் தந்தையே! என்னை நீ ஏற்றுக் கொண்டுதான் தீரவேண்டும்! என்று பெருமானை நோக்கி இறைஞ்சிப் பாடுகிறார்.
      அதிபாதகம்உபபாதகம்மஹாபாதகம் என்னும்படியான பாவங்கள் செய்யும்போது சிறிதும் சலியாமல் செய்துவிட்டேன். பிறகு அப்பாவங்களுக்கு நேரக்கூடிய பலன்களைக் கேள்விப்பட்டு என்ன செய்தோம்! என்ன செய்தோம்! என்று வருத்தத்தால் குன்றிப் போனேன்.  கைசலியாமல் பாவங்களைச் செய்ததனால் உண்டான இளைப்பு எப்படிப்பட்டதென்றால்நாலெழுத்துச் சொல்லி உன்னைத் துதிக்கவும் முடியாத சக்தியற்றவனானேன். ஆயினும் உன்னடிக்கீழ் வந்து புகுந்தேனாகையால் அடியேனை அடிமை கொண்டருளவேணும்! என்கிறார். 

மண் ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்
புண் ஆர் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்
விண் ஆர் நீள் சிகர விரைஆர் திருவேங்கடவா!
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே!   1033 

      இவ்வுடலானது மண்நீர்நெருப்புகாற்று மற்றும் மேகங்கள் உலாவும் ஆகாயம் போன்ற ஐம்பெரும் பூதங்களாலானது. இவ்வுடலானது புண்ணாலாகி தோலால் மூடப்பட்டதாகும். இந்த சரீரத்தின் நிலை இத்தகையதுதான். முன்வினைப் பயனாக இச்சரீரம் உடலைப் பெறுகிறது. ஆன்மாவைச் சுற்றி போர்த்தப் பட்ட இவ்வுடலானது தோலால் மூடப்பட்ட சதையாகும். இதனால் ஆத்மாவும் இத்தகைய தன்மைகளைப் பெறுகிறது. எனவே மனிதன் அறிவை இழந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறான் என்று கூறுகிறார். இத்தகைய உடலால்தான் பாவங்கள் நான் புரிந்தேன் என்று வருந்திக் கூறுகிறார். நீள் சிகரம் கொண்ட திருவேங்கடமலையே எனக்கு கதியென்கிறார். நம்மாழ்வாரும் ‘புண்ணை மறைவரிந்தெனைப் போரவைத்தாய் புறமே’- உடல் மேல் மயக்கத்தைக் காட்டி உள்ளிருக்கும் கச்மலத்தை மூடி வைத்தாயே என்று இதே கருத்தினை இயம்பியுள்ளார். 

தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா!
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே!   1034 

      சிறுவயதிலிருந்தபோதே நல்லவைகளைக் கற்பதற்குப் பதிலாக அறிவில்லாதவனாய் பல்வேறு பாவங்கள் செய்து தீர்த்தேன். பருவமடைந்த வாலிப பருவத்தில் பெண் மோகம் கொண்டு எல்லா பொருள்களும் அவளுக்காக என்று தேடி அலைந்தேன். பின்பும் பல சிரமங்கள் பட்டும் துன்பங்களை அனுபவித்து வந்தபின் ஏழையானேன். போன காலமெல்லாம் போகட்டும் இனியாவது திருந்தி வாழலாமென்று எண்ணியானைகள் மகிவும் திரிந்து செல்லும் அழகிய சோலைகள் சூழ்ந்துள்ள திருமலை என்னும் திவ்ய தேசத்தை வந்தடைந்தேன்! ஹரியே! சிங்கம் போன்று ஒருவராலும் அடக்க முடியாதபடி உள்ள பெருமானே! என்று கூறி, உன்னை வந்தடைந்தேன். என்னை ஆட்கொள்வாயாக! என்று வேண்டுகிறார் ஆழ்வார். 

நோற்றேன் பல் பிறவி நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே!    1035     

      எனக்கு பல பிறவிகள் உண்டாகும்படியான பாவங்கள் பல புரிந்து வைத்தேன். இதுவரை நடந்தவற்றையும்இனி நடக்கப் போவதை எண்ணியும் சகித்துக் கொள்ள முடியாமல் பிறவிப் பயன் நீங்க உன்னைக் கண்டு சேவிக்க வேண்டுமென்ற தீராத காதல் கிளர்ந்தபடி நின்றேன். வரும் பிறவிகளை நினைத்து துக்கப்படாமல்  இப்பிறவியில் உன்னை அன்பனாக ஏற்றுக்கொண்டேன் எம்பெருமானே! உன்னை சேவிக்க வேண்டி பலப்பல பிறவிகள் நோன்பிருந்தேன்! தேன் வெள்ளமாக ஓடி வரும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமலையில் வாழ்பவனே! இனி பிறவிகள் நேராதிருக்க உன்னை வந்து சரணடைந்தேன். என்னை ஆட்கொள்வாயாக என்று பெருமானை வேண்டுகிறார். திருவேங்கடமலைக்கு வந்ததுகூட என் முன்வினைப் பயனால்தான் என்று கூறுகிறார் ஆழ்வார். 

பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா!
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே!   1036 

      உன்னுடைய தொடர்பினை அறுத்துக் கொண்டு வெகுதூரம் ஓடிப்போன எனக்குஒரு விதமான ஆதாரம் ஏதுமில்லாதவனாய் பல பாவங்கள் செய்து பாவியானேன். உன்னை அடைவதற்கான எந்த ஞானமுமின்றித் திரிந்தேன். எந்தவொரு உபாயமும் ஆறியாதவனாக அடியேன் இருந்தேன். சீற்றம் பிறந்தாலும் எம்மைக் காக்கவல்ல எமது பிராட்டியின் மணாளனான பெருமானே! மலை முழஞ்சுகளில் பெய்யும் தேன் வெள்ளமாக மாறி நிற்பதும்அழகிய தாமரைச் சுனைகளைக் கொண்ட திருமலையில் வாழ்பவனே! உனக்கே அற்றுதீர்ந்தவனாய் வந்து அடைந்தேன். அடியேனை ஆட்கொண்டருள்வாயாக என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
      உன்னுடைய ஸம்பந்தத்தை  அறுத்துக்கொண்டு வெகுதூரம் ஓடிப்போன எனக்கு ஓரிடத்திலும் ஒருவகையான ஆதாரமுமில்லை. ஆத்மாவுக்கு ஞானமும் ஆனந்தமும் இருந்த போதிலும் பாவங்களையே செய்து பாவியானேன்உன்னைப் பெறுவதற்குண்டான விஷயத்தில் எள்ளளவும் ஞானமில்லைநீயோ இப்படிப்பட்ட குறைவாளரையும் ரக்ஷிக்கவல்ல ஆச்சர்ய சக்தியுக்தனாக இருந்தும் என் விஷயத்தில் உதாசினனாக நின்றாய்உனது குளிர்ந்த திருவுள்ளத்திலே என்னைப் போன்றவர்களுடைய அபராதங்களினாலே ஒருகால் சீற்றம் பிறந்தாலும், அதனைப் பொறுப்பித்து ரக்ஷிப்பிக்கவல்ல பெரிய பிராட்டியாரும் இதனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். இருப்பினும் நான் வந்து உன்னை சரணம் புகுந்த பின்பு இனி உன்னை நான் இழப்பதுண்டோஆதாரமற்றவர்களுக்கு ஆதாரமாய் நிற்கக்கூடிய நீயே அடியேனை ஆட்கொண்டருள வேண்டுமென்று வேண்டுகிறார். 

கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே.    1037 

      ஏழுலகங்களுக்கும் கண் போன்றவனும்உயிர் போன்றவனும் எமக்காக மேகம் போன்ற நிறத்தையுடையவனும்நித்யசூரிகளும் வந்து துதிக்கப்பெற்ற அழகு பொருந்திய சோலைகளும்நீர்த்தடாகங்களும் சூழ்ந்த, திருமலையில் வேதமுதல்வனாக எழுந்தருளியுள்ள பெருமானைக் குறித்து, திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருவாலித் தலைவரான கலியன் என்கின்ற திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பண்ணோடு கூடிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓதுபவர்களுக்கு முற்பிறவியில் தாம் செய்த பாவங்களும்இப்பிறவியில் செய்கின்ற பாவங்கள் அனைத்தும் தொலைந்து போகும். பெருமானின் திருவடியில் சென்றடைவதற்கான வழியினை ஆழ்வார் தம் பாசுரங்கள் மூலம் நமக்குத் தெரிவிக்கிறார். 

கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன்
திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.    1038 

      மிகப் பெரிய அகழியாகவும்வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும்படியான, அழகிய விசாலமான கடலால் நாற்புறமும் சூழப்பட்ட இலங்கைக்குத் தலைவனான இராவணனின் திண்ணிய சரீரம் இரண்டாகப் பிளந்து போகும்படியாக கூர்மையான அம்புகளைச் செலுத்தியவனே! இராவணனாலே குடியிருப்புக்களை இழந்த பிரமன் முதலான வானோர்கள் அனைவரும் களித்து வந்து சேவிக்கப் பெற்ற திருமலையிலே எழுந்தருளியிருக்கும் பெருமானே! இவ்விருள் தரும் ஞாலத்தில் பெருந்துக்கம் என்றுணர்ந்த என் துன்பங்கள் அனைத்தையும் நீக்கி அருள வேண்டும் என்கிறார் ஆழ்வார். இப்பாசுரத்தில் இலங்கையை வென்ற ஸ்ரீராமனும் திருமலையை ஆளும் வேங்கடமுடையானும் ஒருவனே என்ற கருத்தை வலியுறுத்துகிறார் ஆழ்வார். அறியாமை என்ற இருளில் சிக்கி வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் மனித குலத்திற்காகவே அவர் இப்பாசுரத்தைப் பாடியுள்ளார். 

இலங்கைப் பதிக்கு அன்று இறை ஆய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே   1039 

      கொடிய விஷநாகங்கள் குடியிருக்கும் புற்று போன்றுமுற்காலத்தில் இலங்கைக்கு அரசர்களாயிருந்த மாலி முதலிய அரக்கர்கள் போரின்போது பெரிய திருவடியை தாக்கியதால் சினம் கொண்ட பெருமான் தனது திருவாழியைப் பிரயோகித்து அவர்கள் குலத்தோடு சிதறியோடும்படி அழித்தான். தனக்கு பொருத்தமான பெரிய திருவடியை சஞ்சரிக்கச் செய்தவனே! வானில் சஞ்ரித்துக் கொண்டிருக்கின்ற சந்திர சூரியர்கள் விலகிப் போகும்படியான நெடிதுயர்ந்த சிகரத்தையுடைய திருமலையில் மேவியிருப்பவனாய் திருத்துழாயினாலாகிய மாலையை திருமுடியில் அணிந்துள்ளவனே! அடியார்களை ரக்ஷிக்கும் உனக்கு என்னுடைய விரோதிகளை அழிக்க முடியாதாஎனவே அடியேன் மீது க்ருபை பண்ணியருள வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார். அசுரனை அழித்த ஶ்ரீராமனே திருவேங்கடத்தில் சேவை சாதிக்கின்றான். அங்கு சென்று உங்கள் துயரங்களைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். 

நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு
ஏர் ஆலம் இளந் தளிர்மேல் துயில் எந்தாய்
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே     1040 

      நீரால் சூழப்பட்டு நிரம்பியுள்ள கடலையும்பூமியையும் மற்றுமுள்ள அனைத்தையும் பிரளய காலத்தில் காப்பாற்றுவதற்காக அதனை உண்டும்பின் பிரளயம் நீங்கியதும் அதனை உமிழ்ந்ததுமான பெருமானே! இளம் ஆலந்தளிரின் மேல் திருக்கண் வளர்ந்தருளின எம்பெருமானே! சிறப்புப் பொருந்திய திருமலையில் எழுந்தருளியுள்ள ஆராவமுதமான எம்பெருமானே! அடியேன் மீது பற்று கொண்டு காத்தருள வேண்டும். மற்றவர்களைக் காப்பதற்கான ஆற்றலை பெற்றிருப்பினும் என் போன்ற பாவிகளைக் காத்தல் உமக்கு எளிதன்றே. இதனைச் செய்வது உமக்கு எளிமையான காரியமாயிற்றே. அந்த ஆற்றலைக் கொண்டு  திருமலையில் வாசம் செய்கின்ற பெருமானைக் கூறுவது போல் அமைந்துள்ளது.
      இப்பாசுரத்தில் ஆழ்வார் எம்பெருமானின் மூன்று கல்யாண குணங்களைக் குறிப்பிடுகிறார். அழகுமென்மைநிம்மதி இவை மூன்றும் பிரளயம் முடிந்து அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பரத்துவ குணத்தையும், பிரளயம் முடிந்து ஆலிலையில் எளிமையுடன் துயில் கொண்டுள்ளதை சௌலப்ய குணத்தையும், திருவேங்கடமலையில் அடியார்களுடன் இணைந்திருக்கும் அருள்நிலையினை சௌசீல்ய குணத்தையும் இங்கு குறிப்பிடுகிறார்.  அவரது புகழ்தெய்வீக சிறப்பு அனைத்தும் திருவேங்கடத்தில் நிலைத்திருக்கும் என்பதை இங்கு விவரிக்கின்றார். 

உண்டாய் உறிமேல் நறு நெய் அமுது ஆக
கொண்டாய் குறள் ஆய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே  1041 

      உறிகளில் வைக்கப்பட்டிருந்த நறுமணம் மிக்க நெய்யை விரும்பி அமுதமாகக் கொண்டு புசித்தவனே! வாமன மூர்த்தியாக அவதரித்து பூமியை இரண்டடியாலே அளந்தவனே! பரமபதம் வரை நெடிதுயர்ந்துள்ள ஓங்கிய சிகரத்தையுடைய திருவேங்கடத்தில் நித்யவாசம் செய்பவனே! தேவாதி தேவனே! அடியேன் மீது இரக்கம் கொண்டு தயை புரிவாயாக! என்று வேண்டுகிறார். திருமலையில் எழுந்தருளியுள்ள வேங்கடவன் பரத்துவம் மற்றும் சௌலப்பியம் ஆகிய குணங்களைக் கொண்டவனாக விளங்குகிறான். ஆய்ப்பாடியில் ஆய்ச்சியர்கள் சேமித்து வைத்த நறுநெய்யை உண்டதனால் சௌலப்பியத்தையும் வாமன  அவதாரத்தில் பரத்துவத்தையும் கொண்டுள்ளான் என்ற கருத்தினைக் கூறுகிறார் ஆழ்வார். 

தூண் ஆய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய
கோள் நாகணையாய் குறிக்கொள் எனை நீயே   1042 

      தூணாக இருக்கின்ற வஸ்துவில்  நரசிம்மமாக அவதரித்து பிரகல்லாதனைக் காக்க, தன்னை மதியாத அசுரத் தலைவனான ஹிரண்ய கசிபுவின் உடலை இருகூராகக் பிளந்து போட்டவனே! மிக்க உயரத்தில் பொருந்திய திருமலையில் எழுந்தருளி இருப்பவனும்பெருமான் சென்றால் தான் குடையாகவும்இருந்தால் சிங்காசனமாகவும்நின்றால் மரவடியாகவும்கைங்கர்யத்தின் மொத்த உருவாகவும் திகழ்கின்ற மிடுக்கான திருவனந்தாழ்வானை வாகனமாகக் கொண்ட எம்பெருமானே! திருவனந்தாழ்வானைப் போல் என்னையும் அத்தானிச் சேவகத்திற்கு ஆளாக்கி அடியேனை நீயாகவே திருவுள்ளம் பற்றியருள வேண்டும்! என்று வேண்டுகிறார் ஆழ்வார். திருமலையில் பக்தர்களின் விரோதிகளிடம் சீற்றத்தையும் பக்தர்களிடம் வாத்சல்யத்தையும் அருளுகிறான் எம்பெருமான் என்ற கருத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. 

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன் ஆக்கித் தன் இன் அருள் செய்யும் தலைவன்
மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே    1043 

      நிலைத் தீராத இம்மனிதப் பிறவியினைப் போக்கடித்து தனக்கு ஆளாக்கிக் கொண்டு தனது பரமக்ருபையை அளிக்கச் செய்கின்ற எம்பெருமானும் மின்னலோடு கூடிய மேகங்கள் வந்து சேரப்பெற்ற திருமலையில் எழுந்தருளியிருக்கின்ற மிடுக்கான ஆனை போன்ற அழகுடைய எம்பெருமான் என் நெஞ்சில் எழுந்தருளிவிட்டான் என்கிறார் ஆழ்வார். மேற்பாசுரங்களில் ஆழ்வாரின் வேண்டுதலை ஏற்று பெருமான் ஆழ்வாரின் நெஞ்சினிலே குடிபெயர்ந்து விட்டார். இதனால் சம்சாரத்தில் விலகிவிட்டார். இங்கு மனநிறைவுடன் அகமகிழ்ந்த ஆழ்வார் பெருமானை முழுவதுமாக அனுபவிக்கின்றார். மின்னலோடு கூடின மேகங்கள் தவழ்ந்து வரும் திருமலையில் வாசம் செய்யும் எம்பெருமான், இந்த மானிடப் பிறவியிலிருந்து முழுவதுமாக நீக்கி எனக்கு அருள் செய்யவே என் நெஞ்சினில் புகுந்தார் என்கிறார் ஆழ்வார். நாம் அனுபவிக்கும் இன்பங்களை வரப்பிரசாதமாக நினைக்கிறோம். ஆனால் நமக்கு வருகின்ற துன்பங்களையும் இறைவன் நமக்கு அளித்த வரப்பிரசாதமாக ஏற்கும் நிலையே நமக்கு நன்மை பயக்கும். 

மான் ஏய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே.   1044 

      மானின் மருண்ட பார்வை கொண்ட அழகிய நோக்குடையவளான நப்பின்னை பிராட்டியுடன் சேர்வதற்கு விரோதிகளாயிருந்துஅவரது தந்தையின் கட்டளைப்படி செருக்குடன் வந்த முரட்டுத்தனம் மிக்க ஏழு காளைகளைக் வரிசையாகக் கொன்றநெடிதுயர்ந்த மலைபோன்ற வலிமையான திருத்தோள்களை உடையவனே! அன்று நப்பின்னைக்கு மிகவும் போக்கியமாக இருந்தது போன்று எனக்கும் அத்தகைய போக்கியத்தை அருளி இருந்தவனே! உயரிய மாமலைகள் நிறையப்பெற்ற திருமலையில் எழுந்தருளியுள்ள எம்பிரானே! அழகு நங்கை நப்பின்னை பிராட்டியுடன் என்னுடைய நெஞ்சை இருப்பிடமாகக் கொண்டு நிலைபெற்று நின்றாய்! என்று ஆழ்வார் மகிழ்வுடன் தனது மனநிறைவைக் காட்டுகிறார். நம் மனத்தினைக் கோயிலாக்கி உள்ளிருக்கும் அழுக்குகளை அகற்றி மனத்தினை தூய்மைபடுத்தினால் அங்கு பகவான் குடிகொண்டிருப்பதை நாம் அறிய முடியும் என்பது இதன் கருத்தாகும்.       

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள்
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே    1045 

      பக்தர்களுக்கு அருகில் இருப்பவனும்விரோதிகளுக்கு தூரத்தில் இருப்பவனும்என் நெஞ்சினில் வந்தமர்ந்த ஆச்சர்யபூதனும்யானைகளின் கும்பஸ்தலத்திலும், மூங்கில்களிலும் ஆனவை நன்கு பிளவுபட்டு வெளுத்த ஒளிமயமான விண்டு விரிந்துவாள் போன்ற முத்துக்களையும்ஒளியுள்ள இரத்தினங்களையும் உதிர்க்குமிடமான குளிர்ந்த திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான சர்வ சுலபத்தில் அடையக்கூடிய ஸ்ரீகிருஷ்ணனுடைய திருவடிகளைத் தவிர வேறொன்றையும் அறிய மாட்டேன் என்கிறார் ஆழ்வார். சேயன் அணியன் என்ற சொல்லுக்கு துரியோதனாதியர்களுக்கு தொலைவிலும்பாண்டவர்களுக்கு அருகிலும் இருப்பவன் என்பதாகக் கொள்ளலாம். அன்பற்றவர்களுக்கு தூரமாகவும், பக்தியுள்ளவர்களுக்கு நெருங்கியவனாகவும் பகவான் இருக்கிறார். என் மனத்தினிலுள்ள மாயன் எழுந்தருளியிருக்கும் இடம் திருவேங்கடமலை என்கிறார் ஆழ்வார்.     

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய்! இனி யான் உன்னை என்றும் விடேனே    1046 

      ஒருகாலும் அணையாத தீபச்சுடராய் திகழ்பவனே! எங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் சிந்தாமணி போன்றவனே! எங்கள் தலைவனே! திருவேங்கட மலையில் குடிகொண்டிருக்கும் எங்கள் தாயே! திருப்பரமபதம்திருப்பாற்கடல் போன்ற அசாதாரணத் தலங்களை விட்டுவிட்டுமிகுந்த ஞானமிக்க யோகிகளின் மனதிலும் புகாமல் இந்த நீசனான, அழுக்குடம்பான என் மனதில் நீயாகவே வந்து குடிகொண்டாய். உள்ளேயே பொருந்தி நிலைத்தும் நின்று விட்டாய். இதனை விட்டால் வேறு நெஞ்சில்லையென்று நினைத்து இருந்தாயோ? இனி நான் என்றும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்று தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார் ஆழ்வார். மனத்தூய்மையினை நான் பெற்றதனால் நீ விரும்பி என்னுள் புகுந்தாய். இனி அம்மனத்தினை தூய்மையற்றதாக ஆக்கவிட மாட்டேன். மாசுகளை நீக்கிய மனத்தினை என்றும் காத்து வருவேன் என்று கூறுகிறார். 

வில்லார் மலி வேங்கட மாமலை மேய
மல் ஆர் திரள் தோள் மணி வண்ணன் அம்மானை
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் அவர் வானவர் ஆகுவர் தாமே      1047 

      எம்பெருமானுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என்றெண்ணி எப்போதும் வில்லும் அம்பும் கொண்டுள்ள வேடர்கள் நிறையப்பெற்ற திருவேங்கடம் என்னும் நெடிய மலையில் எழுந்தருளியிருப்பவனும், மிடுக்கான திடந்தோள்களை உடையவனும்நீலமணி போன்ற நிறத்தையுடையவனுமான எம்பெருமானைக் குறித்து மலை போன்ற வலிமையான தோள்களையுடைய திருமங்கை மன்னன் அருளிச்செய்த இச்சொல்மாலையை ஓதவல்லவர்கள் நித்யசூரிகளாக ஆக்கப்படுவார்கள் என்கிறார் ஆழ்வார். இதே போன்று பெருமானுக்கு அசுரர்களால் ஏதேனும் தீங்கு நேர்ந்து விடுமோ என்று கவலை கொண்டு பெரியாழ்வார் பல பாடல்களைப் பாடியுள்ளார். அதே போன்று ‘மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா’ என்று பெரியாழ்வார் குறிப்பிடுவது போன்று இவ்வாழ்வாரும் பெருமானது திடந்தோளினை வர்ணித்துள்ளார். மனித நிலையை விட உயர்ந்தது தேவநிலை. இவற்றையும் விட உயர்ந்தது முக்திநிலை. தேவர்களும் இத்தகைய முக்தி நிலையை அடைய வேண்டியவர்களே. ஆனாலும் மனித நிலையைவிட ஒருபடி மேல் உள்ளார்கள். அதே மேல் நிலைக்குச் சென்று முக்திநிலை அடைய நாம் முயற்சிக்க வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும். 

வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே இனிது உவந்து மா தவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை
கானவர் இடு கார் அகில் புகை  ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள்
ஆன அந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.   1048. 

        என்னுடைய மனமே! நீ வானவர்கள் சிந்தைபோல் திருவேங்கட முடையானுக்கு இன்று அடிமைத்தொழில் பூண்டாயே!  என்னுடைய நெஞ்சினுள் நீ இருந்தும்மிக்க தவம் செய்தவரான மனிதர்களின் நெஞ்சினிலே பொருந்தி வாழ்கின்ற எம்பெருமானும்வேடர்கள் அளிக்கும் காரகில் புகை பரவியிருக்கப்பெற்ற திருமலையில் வாழ்பவனும்வாமனன் வடிவமெடுத்தவனுமான எம்பெருமானுக்கு சம்சாரபந்தமே துளியும் இல்லாமல் இருக்கும் நித்யசூரிகளின் இருதயம் போன்று திருவேங்கடமுடையான் திறத்திலே, என் நெஞ்சமே! நீயும் நன்றாகக் கனிந்து இப்போது என்னுடைய கைங்கர்ய விர்த்தியை பெருமான் ஏற்றுக்கொள்ளுமாறு செய்தாய் என்கிறார். உலக மக்கள் துன்பமற்ற வாழ்வே விரும்புகிறார்கள். ஆனால் அதனைப் பெற மனம் ஒத்துழைக்காத நிலையில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். நிலையற்ற பொருட்களை விடுத்து பகவானே நிலையானவர் என்ற உறுதியினை நாம் கொள்ள வேண்டும் என்கிறார் ஆழ்வார். 

உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை மண்மிசைப்
பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவன் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.    1049 

      நெஞ்சமே! திருமலையப்பனுடைய திருக்குணங்களின் வாசியறிந்து (எண்ணமறிந்து) நீ அவன் திறத்திலேயே அடிமைதொழில் பூண்டாயே. தனக்கென்று உறவுசொந்தம் என்று ஒன்றுமில்லாத ஒருவனான நம்பெருமாள் யாராக இருந்தாலும் இந்த பூமியின் மேல் அவர்களுக்கு ஏற்படும் பிறவி என்னும் துன்பத்தை அடியோடு நீக்குவான். இத்தகையத் தன்மையைக் கண்டு குறத்திப் பெண்களோடு வண்டுகள் சேர்ந்து அழகான மனதை மயக்கும் குறிஞ்சிமருள் போன்ற இசையினைப் பாடி மகிழும்  இடமான குளிர்ச்சி மிகுந்த திருமலையில் வாசம் செய்கின்றார். திருமலை திருவேங்கடத்துப் பெருமான் எல்லா திறத்திலும் அன்புடையவனாகத் திகழ்கின்றான். மேலும் தன்னை யார் உகக்கின்றார்களோ அவர்களை சம்சாரத்தில் நின்றும் களைந்தெடுத்து நித்யசூரிகளுடைய திறளிலே நிறுத்துபவனாகத் திகழ்கிறான் என்று வியாக்யானம் கூறுகிறது. 

இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.   1050 

      பலவகைப்பட்ட வண்ணமிகு மலர்களைக் கையிலேந்திக் கொண்டு துதிக்கவல்ல தொண்டர்களையும் அவர்களோடு தொடர்பு கொண்ட மற்றவர்களையும் எம்பெருமான் மனதார ஏற்றுக்கொண்டு பரமபதத்தில் கொண்டு சேர்க்கிறார். இத்தகைய சிறந்த தயாளகுணத்தைக் கண்டு நெஞ்சே! அத்திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு புரிந்தாயே என்று நெகிழ்ந்து கூறுகிறார் ஆழ்வார். எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டிய மலர்கள் எதுவாயிருந்தாலும் குற்றமே இல்லை. ஒரு புகையும் ஒரு பூவும் எம்பெருமானுக்கு உகந்தது என்கிறது வைணவ உரைவளம். சாத்திரம் ஒரு சில மலர்களை ஒதுக்கிக் கூறுகிறது. இதன் காரணம் அச்செடிகளில் உள்ள முள்ளும் அதன் நச்சுத்தன்மையும் மலர்கள் கொய்யும்போது அடியார்களின் கரத்தைக் குத்தி துன்புறுத்தும் என்பதனால் அதனை தவிர்க்குமாறு சாத்திரம் பகர்கின்றது என்று நஞ்சீயர் தெளிவுபடுத்துகிறார். 

பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண்மிசை
மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேங்கட மலை ஆண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.    1051 

      என் மனமே! அலையாமல் திண்ணியதான அத்தியவசாயம் (ஒரு செயலில் மனம் குழப்பமில்லாமல்உறுதியுடன்திடமாகச் செயல்படுவது) கொண்டாய். முன்பு இந்நிலத்தில் வந்து அவதரித்து அடிமை செய்தவர்களை ஆட்படுத்திக் கொண்டுபோய் பரமபதத்திலே ஸ்தாபித்தருளும் ஸ்வாமியுமான எம்பெருமான் கோபியர்களுக்கு நாதனாகத் திகழ்ந்தார். மேகங்கள் துள்ளிவரும்படியான உயரமான சிகரங்களைக் கொண்ட திருமலையை ஆட்சி செய்து கொண்டு, முனிவர்கள் அனைவரும் தனக்கு உயிர்நிலையாகக் கருதிவரும் எம் தந்தைக்கு அடிமை தொழில் பூண்டாயே! என்று கூறுகிறார் ஆழ்வார். பெருமான் மண்ணுலகில் வந்து அவதரித்து பக்தர்களிடம் பலப்பல கைங்கர்யங்கள் ஏற்றுக்கொண்டு, அது போதாமல் அவர்களைத் திருநாட்டில்இ கொண்டு வைப்பதற்காக திருமலையிலே வேங்கடவனாக அவதரித்துள்ளார் என்ற கருத்து புலப்படுகிறது. 

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள்
அம் கண் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே    1052 

      ஓ மனமே! நீண்ட கொம்பும் கிளையுமாக வளர்ந்துள்ள பனை மரத்தையும்அரச மரத்தையும்அசோக மரத்தையும் தங்களுக்குத் தஞ்சமாக உடையவர்களான பௌத்தரும்சமணரும் தமது ஆலயங்களிலுள்ள தங்களுடைய தெய்வங்களும் தாங்களுமாய் உலகெங்கும் jபரவி நிறைந்து கிடக்கச்செய்தும், அந்தத் தீய மதங்களில் நீ புகாமல் தேவர்களும், அசுரர்களும் சூழ்ந்துகொண்டு போற்றுமிடமான குளிர்ந்த திருமலையில் வேங்கடவனாக எழுந்தருளியிருந்து அனைவருக்கும் அருள்புரிகின்ற அழகிய திருக்கண்களையுடைய பெருமானுக்கு இன்று அடிமைதொழில் பூண்டாயே! நீயல்லவோ பாக்கியசாலி! என்று தன் மனத்தை புகழ்ந்துரைக்கிறார். இவ்வுலகில் பொய்யைக்கூட உண்மை போல் மயக்கி நம்மை தடுமாறச் செய்யும். அறிவால் எல்லாவற்றையும் துல்லியமாக எடை போட்டு நாம் முடிவினை எடுக்க வேண்டும் என்பதை இப்பாசுரவழி அறிவிக்கின்றார். 

துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.    1053 

      காவி உடை அணிந்து கொண்டும்மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் பௌத்தர்களும்சமணர்களும் ஒட்டு மொத்தமாக கொட்டிக் கிடக்கும் உணவினைப் புசிக்கும் வழக்கத்தினைக் கொண்டுபின்பு உறவுகளும் தாங்களுமே என்று உடலை செழுமையாக வளர்த்து இருப்பர். மனமே! இதனைக் கண்டு நீ அங்கு சென்றுவிடாமல்உடலில் அதிகமான முடிகளைக் கொண்ட விலங்கினங்கள் அதிகம் நடமாடும் திருமலையில் கோயில் கொண்டிருக்கும் வேங்கடவனைவானத்தில் உள்ள தேவர்களுக்கு ஸ்வாமியாகத் திகழும் பெருமாளுக்குஇன்று முதல் அவர் சொல்வதையெல்லாம் செய்யும்படி அவருக்குத் தொண்டு புரிந்து அவருக்கு அடிமை தொழிலைச் செய்ய ஏற்றுக் கொண்டாயே, நீ வாழி! என்று தன் மனதை வாழ்த்திப் பாடுகிறார் ஆழ்வார். தூய்மை என்பது, எளிமையான உணவு, உடல் சுத்தம், மனச்சுத்தம் ஆகியவைகளைக் கொண்டது. இத்தகைய மனத்துடன் திருவேங்கடத்தானுக்கு கைங்கர்யம் செய்தால் அதுவே அற்புதமான செயலாகும் என்கிறார் ஆழ்வார். 

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.          1054 

      தாங்களே உயர்ந்தவர் என்று ஒருவித அகந்தையினால் சமண மதத்தைப் பரவச் செய்து வரும் சமணர்கள்சோற்றில் தயிரினால் உருண்டை செய்து வயிறு முட்ட உண்டு பின்பு துன்புற்றுக் கிடப்பர். அதைக் கண்டு என் நெஞ்சம் எனப்படும் நீஎன்ன நன்மை செய்தாயோ தெரியவில்லைஅங்கு நீ செல்லாமல் உள்ளாய். மயக்க வைக்கும் இசையினை அளிக்கும் கரிய வண்டுகள் பாடும் மலையானது திருவேங்கடவன் குடிகொண்டிருக்கும் திருமலையாகும். அதோடு மட்டுமின்றி வானத்திலும் சூரியன் தனது கிரணங்களைப் பரவி நிற்பாருக்கு இன்று முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும்படி அவருக்கு தொண்டு என்னும் அடிமை தொழிலை ஏற்றுக் கொண்டாயே! நீ என்றும் வாழ்க! என்று மனதை வாழ்த்துகிறார் ஆழ்வார். மேலும் ஆழ்வார் இதனை தம் மனத்திற்கு மட்டும் கூறவில்லை. சமணர்களின் வார்த்தைகளைக் கேட்டுக் குழம்பித் தவிக்கின்ற மனிதர்களுக்கும் இதனைத் தெரிவித்து வேங்கடவனை சரண் அடையும்படி நல்வழி காட்டுகிறார். 

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.    1055. 

      எம்பெருமானானவன் வெகு தூரத்தில் இருப்பவன் அவனை எவ்விதம் நான் தொழுவது என்று கூறுவதும்அர்ச்சாவதாரத்து ரூபியான எம்பெருமானைத் தொழுங்கள் என்று சொன்னால்இதோ இருக்கிறானே இவனையா தொழுவது என்று சொல்வதும்ஸ்ரீ கிருஷ்ணனைத் தொழுங்கள் என்றால் இவன் இழிகுலத்தில் பிறந்தவனாயிற்றே இவனையா தொழுவது என்று கூறுவதும்வியூக வாசுதேவனையும்அந்தர்யாமியான பெருமானைத் தொழுங்கள் என்றால் கைக்கு எட்டாதவனை எவ்விதம் தொழுவது என்று கூறுபவர்கள் துர்பாக்கியசாலிகள். ஓ மனமே! இதனையெல்லாம் கேட்டு அவர்களின் திரளில் புகாமல் என்னிடத்திலும் ஒரு வார்த்தைக் கூறாமல்மூங்கிலோடு முத்துக்கள் சேர்ந்து சிதறியுள்ள திருமலையிலுள்ள கோபாலனை தொழு என் மனமே! என்கிறார். இந்த உலகமக்களைச் சரிசமமான கருணையால் கரையேற்றும் திருவேங்கடமலையான் இருக்க மற்றவை இவ்வுலகில் செல்லுபடியாகாது என்பதை ஆழ்வார் குறிப்பிடுகிறார்., 

கூடி ஆடி உரைத்ததே உரைத்தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலர்
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர் கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.    1056 

      இதற்கு முன்பெல்லாம் உலகத்தாரோடு கூடி அவர்கள் எந்த விஷயங்களிலே ஊன்றுவார்களோ அந்த விஷயங்களில் ஊன்றிஅவர்கள் என்ன வார்த்தைகளைக் கூறுகிறார்களோ அந்த வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருந்த என் நெஞ்சமே! இப்போது நான் மகிழ்ந்து சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. எத்தனையோ பேர் பகவத் குணங்களைப் பாடிக் கொண்டும்கூத்தாடிக் கொண்டும் அவனதுபாதங்களைப் பணிந்தும்துதித்தும் அவனைக் காண முடியாதவனும்வெற்றியுடைய மும்மூர்த்திகளான பிரம்மனும்சிவனும்இந்திரனும் நிலைநின்று போற்றுமிடமான குளிர்ந்த திருமலையில் நிற்பவனும்அன்று குடக்கூத்தாடினவனுமான பெருமானுக்கு இன்று நீ அடிமைத் தொழில் பூண்டாயேநீ வாழ்க! என்று கூறுகிறார் ஆழ்வார். 

மின்னு மாமுகில் மேவு தண் திருவேங்கட மலை கோயில் மேவிய
அன்னம் ஆய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மாமதிள் மங்கையர் கலிகன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே.   1057 

      மின்னுகின்ற காளமேகங்கள் வந்து சேருகின்ற திருமலையைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் அன்னவடிவில் அவதரித்து பிரம்மனுக்கு வேதங்களை மீட்டுக் கொடுத்தவனும்நித்யசூரிகளுக்குத் தலைவனாக விளங்கும் திருவேங்கடமுடையான் விஷயமாக நிலைநின்ற பெரிய மதில்களையுடைய திருமங்கை நாட்டில் உள்ளவர்களுக்குத் தலைவனாக விளங்கும் திருமங்கையாழ்வார் செவிக்கினிய தமிழ் மொழியில் அருளிச் செய்த வேதம் போல் விளங்கும் இப்பாசுரங்களை பழுதற ஓதவல்லவர்க்கு பரமபதம் என்னும் வாசஸ்தலம் அவர்களுக்கு இருப்பிடமாகக் கிடைக்கும் என்று கூறுகிறார் ஆழ்வார். மின்னல் ஸ்தானத்தில் பிராட்டியும்முகிலின் ஸ்தானத்தில் பெருமானும் இருப்பதாக கூறுகிறார். கருமேகங்கள் சூழ்ந்திருக்கும் குளிர்ச்சியான திருவேங்கடமலையில் கோயில் கொண்டு தங்கியிருக்கும் தேவர்களின் தலைவர் எம்பெருமான் பற்றிக் கன்னியரின் மங்கள நகரங்களில் பிறந்துஇனிய தமிழால் பாடியுள்ள இந்தப் பாசுரங்களை மனமுவந்து உரைக்கும்அர்த்தமறிந்து அனுஷ்டிக்கும் மனிதர்களுக்கு பரமபதமே உறைவிடமாகும்.     

அன்றிய வாணன் ஆயிரம் தோளும்
     துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்
     மேவிய வேத நல் விளக்கை
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்
     செம் பொன் செய் கோயிலினுள்ளே
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை
     வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.     1275 

      கோபுரத்தில் போரிட்ட வாணாசுரனுடைய ஆயிரம் தோள்களும் அறுந்து விழுமாறு அக்காலத்தில் சக்கரத்தைச் செலுத்தியவன்பிரகாசமான சிகரத்தையுடைய திருவேங்கடமலை மேல் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானானவன் வேதங்களால் காணக்கூடிய நல்தீபமானவன். தென்திசைக்குத் திலகம் போன்று மஹான்கள் வாழும் நாங்கை செம்பொன்னால் செய்த கோயிலில் உள்ளம் மகிழபாகவத கோஷ்டிகள் நிறைந்த வாசுதேவனை வணங்கி பிறவிப் பயன் பெற்றேன் என்கிறார் ஆழ்வார். 
      தனது பேரனாகிய அநிருத்தனை சிறையிட்ட வாணாசுரனை தனது திருவாழியினால் அழித்த திருவேங்கடப் பெருமானே செம்பொன்செய் கோவிலில் சேவை சாதிக்கின்றான். வாணாசுரனை அழிக்கும் போது சிவபெருமான் வேண்டிக் கொண்டவாறு அவனை உயிரோடு விரட்டி விட்டார் என்றும் புராணங்கள் பகர்கின்றன. பலர் கூட்டமாக சேருமிடம் ‘மன்று’ என்பார்கள். நாங்கை நாலாயிரம் என்ற  கூற்றின்படி நாலாயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்ந்தார்கள் என்பதனால் ‘மன்றதுபொலிய’ என்ற பொருளும் கொள்ளலாம். 

வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய்
பாடா வருவேன் வினை ஆயின பாற்றே.    1312 

      வேடர்கள் நிறைந்துள்ள திருவேங்கடமலையிலே நித்யவாசம் செய்யும் என் தீபமே! நாடெங்கும் நிறைந்த புகழ்பெற்ற வேதம் கற்ற வேதியர்கள் குடியிருக்கும் நாங்கூரில் திரண்டிருக்கின்ற தோட்டங்கள் நிறைந்த திருவெள்ளக்குளத்தில் அருள் செய்பவனே! உன்னைப் பாடிக் கொண்டு வருகின்ற என்னுடைய பாவங்களைச் சிதறடிக்க வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.    
      வடநாட்டுத் திருப்பதிகளில் திருமலைக்கு எவ்வளவு சிறப்புகள் உண்டோ அது போன்று தமிழகத்துத் திருப்பதிகளில் திருவெள்ளக்குளம், அண்ணன்கோவில் போன்ற திவ்யதேசங்கள் சிறப்பினைப் பெற்றுள்ளது. இரு திருப்பதிகளிலும் ஒன்றாக பிரார்த்தனை நிறைவேற்றிக் கொள்ளப்படும். எனவே ஆழ்வார் இத்தலத்தின் சிறப்பை வேங்கடமலைக்கு ஒப்பிடுகிறார். திருமலையில் உள்ள வேடர்கள் வேங்கடவனை ஒருநாளும் விட்டுப் பிரியாமல் அவருக்குத் துணையாக அவ்விடத்தே இருப்பார்கள். எனவே ‘வேடார் திருவேங்கடம்’ என்று கூறுகிறார். எத்தகைய தீவினைகள் வந்தாலும் அவனைப் பாடினால் அத்துன்பங்கள் வலுவிழந்து போகும் என்று கூறுகிறார் ஆழ்வார். 

வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக
     ஐவர்கட்கு அரசு அளித்த
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப! நின்
     காதலை அருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்
     வாய் அது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனித் தேன் அது நுகர் திரு
     வெள்ளறை நின்றானே.         1371 

      ‘‘தாவி வரும் குதிரை மடிந்துவிழ, அதன்மீதுள்ள அரசர்களும் மாண்டு விழவைத்த பாண்டவர்களுக்கு அரசை கொடுத்தவனே! மூங்கில் காடுகள் நிறைந்துள்ள திருவேங்கடத்தில் உறைபவனே! மாந்தோப்புக் குயில்கள் மாந்தளிர்களைத் தனது அலகினால் கோதியதால் வாய் துவர்க்கும். அச்சுவையை மாற்ற பலாக்கனிகளின் தேனை நுகரும். இத்தகைய வளம் பொருந்திய திருவெள்ளறையில் நின்றருள்பவனே! என் மீது பேரன்பு பொழிய வேண்டும் என்கிறார் ஆழ்வார். இவ்வுலகில் நாம் ஏதேனும் ஒன்றிற்கு தகுதியுடையவர்களாக இருந்தால் அதற்குரிய பலனை பகவான் உறுதியாகத் தருவார். நாம் தருமத்தைக் கடைபிடித்து வந்தால் பகவான் நமக்குத் துணயாக வருவது உறுதிவேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு பகவானுக்கு இல்லை. நாம் தருமத்தில் பிடிப்புள்ளவர்களாக இருந்தால் பகவான் நமக்குத் துணையாக வருவது உறுதி என்பது இப்பாசுரக் கருத்தாகும். 

வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே
     வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங் கண்
     துயில் மறந்தாள் வண்டு ஆர் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன்
     ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள்
     எங்ஙனம் நான் சிந்திக்கேனே?    1388 

      எனது பெண் பிள்ளையானவள் அஞ்சாதவளாய் ஆயினும் ‘வேங்கடமே வேங்கடமே’ என்று பிதற்றுகின்றாள். எனது மடியில் வந்து பொருந்துகிறவளாயில்லை. வாள் போன்ற நீண்ட திருக்கண்களிலே உறக்கத்தை மறந்து விட்டாள். வண்டு போலவும்பூர்ணமேகம் போலவும் திருவுருவை உடையவனும்நித்யசூரிகளுக்கு உயிராய் இருப்பவனும், ஆர்ப்பரிக்கின்ற அலைநீர் பொருந்திய கடலில் நின்று பிராட்டியை ஆள்பவனுமான எம்பெருமான் எனது பெண்பிள்ளை திறத்துச் செய்த வகைகளை நான் நினைக்கத்தான் முடியுமோ? என்று திருத்தாயார் வருந்திக் கூறுகிறாள். திருப்பாணாழ்வார் தமது அமலனாதிபிரானில் ‘விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடம்’ என்கிறார். பரமபதநாதன் திருவரங்கம் வந்து புகுவதற்கு வரும்போது திருவேங்கடமலையில் வந்து சற்று இளைப்பாறி பின் திருவரங்கம் சென்றான் என்பது நமது பூர்வர்கள் கொண்ட கருத்தாகும். 

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர்
கொந்து அணைந்த பொ ழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
அந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென் அரங்கத்தே.    1404 

      எனது  மனோரதத்தின் சிந்தனையாய் இருப்பவனும்,   தவரூபமான உபாயத்தைக் கொண்டவனும்திருமகள் தொழுதேத்தும் திருமால் திருவேங்கடமலையில் வந்து நின்றருளினான். பின்பு அங்கிருந்து நேராக வந்து என் மனதில் வந்து புகுந்து ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாமல் நித்யவாசம் செய்பவனைரேகைகளுடன் கூடிய நல்ல நிறத்தையுடைய அழகிய கரிய வண்டுகளினாலே நிறைந்த  மலர்க்கொத்துகள்  நெருங்கியுள்ள மணமுள்ள சோலைகளால் சூழப்பட்ட திருக்கோவலூரில் மூன்று உலகங்களை அளப்பதற்காக தமது திருவடியை மேல்நோக்கி நீட்டியவனைவேதத்தைக் காப்பவனாகிய ஸ்வாமி வாமனமூர்த்தியாக எழுந்தருளியிருப்பவனை நான் காவிரிநீர் சூழ்ந்த தென்னரங்கத்தில் தரிசித்தேன் என்று பாடுகிறார். 

மான் கொண்ட தோல் மார்வின் மாணி ஆய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே   1518. 

      மான் தோலை மார்பில் சாற்றிய பிரம்மச்சாரியாகிய வாமனன், மகாபலியிடம் சென்று பூமியை யாசித்துப் பெற்றுதனது திருவடிகளால் மூன்றடி அளந்த பெருமானை அடியேன் திருநறையூரில் தரிசித்தேன். இத்தலமானது தேன் நிறைந்த பூக்களைக் கொண்ட திருவேங்கடமலையில் குடியிருப்பவனுடைய வாசஸ்தலமாகும். அத்தகைய வல்லமை கொண்ட பகவான் திருநறையூரில் தரிசித்து நம்மையும் தரிசிக்குமாறு தெரிவிக்கிறார் ஆழ்வார்.
      உலகங்களை அளப்பபவரும் அவரேஅனைவரையும் காப்பவரும் அவரே என்ற எண்ணம் கொள்ள வேண்டும்.  எனவே இகலோக ஆசைகளை விடுத்து இத்தகைய ஞானத்தினை நாம் பெறவேண்டும். எம்பெருமான் என்னை பெறுவதற்காக பல்வேறு அவதாரங்களில் தோன்றினான். இதையெல்லாம் உணராத நான் அவனைப் பாராமுகனாக இருந்து விட்டேன். ஆனால் இன்று நான் அவனைத் தேடித் திரியவேண்டிய ஒரு நிலை வந்துவிட்டது. காத தூரம் பயணம் மேற்கொண்டு திருமலை உச்சியில் போய் காணாமல் தாகம் எடுத்த இடத்திலேயே தண்ணீர் குடித்தது போல் திருநறையூரில் அவனைக் காணப்பெற்றேன் என்று மனமுருகிப் பாடுகிறார் ஆழ்வார்.     

ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது
     அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி
     எம்பிரானை உம்பர்க்கு அணி ஆய் நின்ற
வேங்கடத்து அரியை பரி கீறியை
      வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங் கரும்பினை தேனை நன் பாலினை
     அன்றி என் மனம் சிந்தை செய்யாதே.    1572 

      எம லோகத்தில் கொடிய நரகத்தில் வேதனையடையும் போது அங்கு வந்து அஞ்சாதே என்று அடியேனைக் காத்தருளும் தாமரைப் போன்ற திருவடிகளையுடைய பகவானைவானவர்க்கு ஆபரணமாய் இருப்பவனைதிருவேங்கடமலையில் அருள் புரியும் சிங்கம் போன்றவனைகுதிரையாய் வந்த கேசிகாசுரனின் வாயை கிழித்தவனை, வெண்ணெய் திருடி உண்டு உரலில் கட்டுப்பட்டவனைஇனிய கரும்புச்சாறு போன்றவனைதேனும் பாலும் போன்று திருநறையூர் நம்பியை அல்லாது என் மனம் வேறு ஒருவரையும் நினையாது என்று கூறுகிறார்.
      பல்வேறு பாவங்கள் புரிந்து அதனால் நரகம் சென்று கொடிய நோவு படுங்கால்செய்த பாவங்களுக்குப் பலனை அனுபவிக்கட்டுமென்று பாராமுகமாக இராமல் என்னை நாடி வந்து அஞ்சாதே நான் அபயம் அளிக்கிறேன் என்று கூறிய பகவானே! என்று கூறுகிறார் ஆழ்வார். முற்பிறவியிலும்இப்பிறவியிலும் செய்த பாவங்களைக் கண்டு அஞ்சாமல் அவனது பாதங்களை சரணடைந்தால் அவன் நம்மை காத்தருள்வான். யசோதை மனம் நோகாமலிருக்க உரலில் கட்டுண்ட போது தன் மேனியை சிறுத்துக்கொண்டு சௌசீல்யசௌலப்யாதி குணங்களைக் காட்டினான் என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.     

எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை
     வாச வார் குழலாள் மலை மங்கை தன்
பங்கனை பங்கில் வைத்து உகந்தான் தன்னைப்
     பான்மையைப் பனி மா மதியம் தவழ்
மங்குலைச் சுடரை வட மா மலை
     உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்
கங்குலை பகலை சென்று நாடிக்
     கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.     1640 

      எங்களிடம் அருள் வைத்துள்ள எம்பெருமானைமணமிகுந்த கூந்தலையுடைய சக்திக்குத் தன் உடலின் இடப்பாகத்தை அளித்த சிவபெருமானை தன் திருமேனியில் மகிழ்வோடு கொண்ட குணமுடையவனைகுளிர்ச்சி மிகுந்த சந்திரன் உலாவிவரும் ஆகாயமாக இருப்பவனைகதிரவனுக்கு அந்தராத்மாவாக இருப்பவனைவேங்கடமலையாக இருப்பவனைநம்மால் விரும்பி வணங்கப்படுபவனைஇரவாகவும்பகலாகவும் உள்ள பரந்தாமனைத் தேடிச் சென்று திருக்கண்ணமங்கையுள் தரிசனம் செய்தேன் என்கிறார் ஆழ்வார்.
      இப்பாசுரத்தின் மூலமாக சக்திசிவன்திருமால் அனைவரும் ஒன்றே என்ற கருத்தினை ஆழ்வார் வெளிப்படுத்துகிறார். திருமாலின் திருமேனியில் சிவபெருமான் இடம் பெற்றுள்ளார் என்ற கருத்தினை உள்வாங்கி அவர்களின் தொண்டர்களும் இத்தகைய மனநிலையில் இருத்தல் வேண்டும். தேவையற்ற கருத்து வேறுபாடுகளையும்வாதங்களையும் களைந்துகாலவிரயம் கொள்ளாமல் பரம்பொருள் ஒருவனே என்ற தெளிவு அனைவருக்கும் வரவேண்டும் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.     

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ?   1660 

      அருவிகள் நிறைந்த திருவேங்கடம் அவன் இடம்இல்லை இல்லை திருநீர்மலை என்றும் பிதற்றுகிறாள். திருமெய்யப்பெருமானைப் பற்றி விசாரித்து வருகின்றாள்.  பெருமை பெற்ற கண்ணபுர சௌரிராஜனைப் பற்றி பேசும்போது உருகிப் போகிறாள்.  சரீரம் மட்டுமின்றி அவளது உள்ளமும் பலவீனமாயின. இப்படி ஒரு நிலையும் ஏற்படுமா என்று புலம்பித்  தவிக்கிறாள் தாயார். இதுவே ஆழ்வாரின் தவிப்பாகும்.
      பகவானிடம் அன்பு தோன்றிவிட்டால் சரீரம்மனம்புத்தி இவை எல்லாமே வேறுபட்டதாகிவிடும். ஏனெனில் ஆன்மா என்பது சரீரமோமனமோபுத்தியோ இல்லை. அது ஆண்டவனின் ஒளிக்கூறு.  ஆண்டவனுடன் ஐக்கியமாகும் போது அழியக்கூடிய சரீரத்தைப் பற்றியோநிலையில்லாத மனதைப் பற்றியோ அது கவலை கொள்வதில்லை. பகவானிடம் அன்பு மேலோங்கும்போது மற்றவை எவையும் சிந்தனையில் வராது என்பது இப்பாசுரக் கருத்தாகும்.         

பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உயக் கருதினாயேல்
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே!     1811 

      இனிய இசை போல் பேசும் பெண்களின் தனங்களை நாம் மார்போடு அணைத்துக் கொள்வோம் என்று நினைப்பவர்களின் எண்ணத்தை நீ பின்பற்றாமல் அழித்து பேறுபெறக் கருதினால்வானவர்களுக்காக வைகுண்டத்தில் நித்ய தரிசனம் தந்து கொண்டிருக்கும்திருவேங்கடமலையில் அருள்புரியும் கடல் போன்ற நீல நிறம் கொண்டவர் வாழும் செழிப்புள்ள வல்லவாழ் என்ற தலத்தை வாயாரத் துதித்து மனதில் நன்கு பதித்துக் கொள்வாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
      அழகிய இசை போன்று பேசும் பெண்களை அணைக்கும் எண்ணத்தினைக் கொண்டோரின் மனமே! அவற்றையெல்லாம் அழித்துவிடு. அதை விடுத்து திருவல்லவாழ் மார்பனின் திருவடியைப் பற்றினால் மற்றவற்றை சிந்திக்க வேண்டாம். தீய எண்ணங்கள் உன்னை விட்டு அகன்று விடும். அவன் திருவடியைச் சரணம் என்று பற்றினால் வேறு எதுவும் தேவையில்லை என்ற நல்ல மனம் உருவாகிவிடும். மனமே! நீ கலங்காமல் உறுதிகொண்டு நின்றால் மற்றவர் உன்னை பின் தொடர்வர்.     

வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன் தன்னை
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனை
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற
நலம் திகழ் நாரணனை நணுகும் கொல் என் நல் நுதலே?  1836 

      வலம்புரிச் சங்கும்சுதர்சனச் சக்கரமும் தரித்திருப்பவனைமலை போல் திரண்ட தோள்களையுடையகவர்ச்சியான புரிநூல் அணிந்தவனைமலர்வனங்கள் சூழந்த திருவேங்கட ஆண்டவனைமறை வடிவானவனைசிலம்பாறு என்று அழைக்கப்பெறும் நூபுர கங்கையையுடைய திருமாலிருஞ் சோலையில் கோயில் கொண்டிருப்பவனைதிருக்கல்யாண குணங்கள் கொண்ட நாராயணனை அழகான என் மகள் அடையும் பேறு கிட்டுமா என்று வினவுகிறாள் தாயார்.
      பக்தர்களுக்கு துன்பம் வரும் நேரத்தில் உடன் வந்து காப்பதற்காக திருவாழியும் திருச்சக்கரமும் திருக்கைகளில் ஏந்தியவனும்திவ்யமான தோள்களும்அழகும் மிளிரப்பெற்றவனும்திருவேங்கடத்தில் நின்றருள்பவனும்மிக நீசர்களுக்கும் அருள்புரிபவன் திருமாலிருஞ்சோலையில் காட்சி தருகிறான். இத்தகைய திருக்கல்யாண குணங்கள் நிரம்பப்பெற்ற பெருமானை அடைவதற்கு என் மகளானவள் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளாள். அவள் பெருமானை வணங்க இயலுமோ? என்று கேட்கிறாள் தாயார்.    

பொன்னை மாமணியை அணி ஆர்ந்தது ஓர்
மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண்காவிலே    1849 

      பொன் போன்று விரும்பத்தக்கவனைஉயர்ந்த இரத்தினம் போன்றவனைஅழகு மிக்க மின்னலைப் போன்று ஒளி பொருந்தியவனைதிருவேங்கடமலைச் சிகரத்தில் நேற்று வணங்கியபோதுஎன்னை அடிமையாக்கிக் கொண்ட சுவாமியுமான சர்வேசுவரனைஇன்று திருக்தண்காவிலே சென்று தரிசிப்போம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      இப்பாசுரத்தில் பெருமானை பொன்னாகச் சித்தரிக்கின்றார் ஆழ்வார். ஆபரணங்கள் செய்வதற்கு பொன்னை தீயிலிட்டுஅடித்து பலவிதமாக இம்சித்து  உருவாக்குகின்றோம். அதனால் பொன் வருந்துவதில்லை. மேலும் பொன் தனது ஒளியைக் கூட்டித் தருகின்றது. அதன் ஒரே வருத்தம் நம்மை ஒரு குந்துமணியாக மக்கள் நினைக்கிறார்களே என்பதுதான். அது போன்று பெருமானும் நம் நன்மைகளுக்காக தன்னையே தாழ்த்திகட்டுண்டு பிற துன்பங்களை தான் ஏற்றுக் கொள்கிறான். அவ்விதம் இருந்தும் மனிதர்கள் தாழ்ந்த வஸ்துக்களுடன் தன்னை ஒப்பிடுகிறாரே என்று வருந்துகிறார் என்ற பொருளில் அமைந்துள்ளது. 

சொல்லாய் பைங் கிளியே
சுடர் ஆழி வலன் உயர்த்த
மல் ஆர் தோள் வட வேங்கடவனை வர
சொல்லாய் பைங் கிளியே   1946     

      பசுமை தங்கிய அழகினை அள்ளித்தரும் கிளியே! நீ தேவையற்ற ஏதாவது ஒரு சொல்லைச் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பயன் உள்ளது? என் பெருமானை நான் அடைய வேண்டும். நீ சென்று தூது செல்வாயாக! என்று பெண் வினவபல பந்தங்கள் கிடக்கும் போது பெருமான் நினைத்த மாத்திரத்தில் வந்து விடுவானோ என்று கிளி நினைக்கின்றது.  அதற்கு இப்பெண்ணானவள்கிளியே! அவ்விதம் நீ நினைக்கலாமாவிரோதிகளை இரு துண்டாக்கவல்ல ஒளிமிக்க சுடராழிப் படையை வலக்கையிலே உயரத் தாங்கியிருந்தவனும் மிடுக்குடைய திருத்தோள்களை உடையவனுமான பெருமானானவன் என்னை அணைப்பதற்காக வந்த நிலையில் திருவேங்கடத்தில் நின்ற வண்ணம் உள்ளானே! அவனை இங்கு வரச்சொல்வாயாக என்று வேண்டுகிறாள். 

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்றஇவை என்ன மாயங்கள்?
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே?    1978 

      கண்ணனை என்றும் நான் நினைத்து நினைத்து, எனது உடல் வாடி இளைத்து, அதனால் என் கைகள் மெலிந்து கைவளைகள் கழன்று விழுகின்றன. பெண் குடியில் பிறந்த நாம் பெண்மைக்கான குணங்களை விட்டு நிற்கின்றோம். சங்கும் சக்கரமும் புன்முறுவல் கொண்ட வதனமும் தழையத் தொங்கும் பதக்கங்களும் கண்ணெதிரே வந்து சேவை சாதிக்காமல் உள்ளே உறைந்து மறைந்து கிடப்பதில் என்ன பயன் என்று வினவுகிறாள்? பகவானை என்றும் நினைப்பவர்களுக்கு அனைத்தும் மறந்து போகும். எம்பெருமான் விரும்பி வாழும் திருவேங்கடம்திருவரங்கம் போன்றவற்றைப் பாடி நாம் மனச்சமாதானம் செய்து கொள்வோம். பகவானை நெஞ்சில் வைத்து சுமப்பவர்களுக்கு எதன் மீதும் பயம் இருக்காது. உலகியலில் ஈடுபாடு இருக்காது. அதனால் துன்பம் நேராது. தெய்வீக நிலை என்பது ஒரு புதிய நிலை. அதைக் கொண்டு நாம் துன்பங்களைக் களைய வேண்டும். உள்ளிருக்கும் ஒளியை காண்பதற்கு இந்த உடல் ஒரு கருவி. இந்த உடலை நன்கு பயன்படுத்தி உள்ளிருக்கும் ஆன்ம ஒளியைக் காண்போம். 

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காண் ஏடீ!
வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் கலிகன்றி
உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே     2001 

      தோழி! கபட வேடத்தினால் மாவலியிடத்தில் மூன்றடி மண்ணினை இரந்துப் பெற்று பின் தனது திருவடியினால் வானை அளந்தான். அணுகுவதற்கு எளியவனாகத் திகழ்பவன். இத்தகைய பெருமான் திருப்பாற்கடலில் சயனித்துள்ளான். அவனே திருமலையில் நின்றருளுகிறான். தோழிதிருப்பாற்கடலிலும்திருமலையிலும் அருள்கின்றவனாயினும் கலியனுடைய இதயத்தில் வந்தமர்ந்தார் என்று கூறுகிறார் ஆழ்வார். ‘கண்டவர் தம் மனமகிழ மாவலி தன் வேள்விக்களவில் மிகு சிறு குறளாய்’ என்று பாடியுள்ளார். பகவான் மணிக்குறளனாய் தன் பெருமையை தாழவிட்டு வந்ததால் அவனை ‘உத்தமன்’ என்று கொண்டாடி அவனது திருப்பாதங்களுக்கு பல்லாண்டு பாடி மகிழ்கிறாள் கோதை நாச்சியார். இவ்வாறு வாமன அவதாரப் புகழை ஆழ்வார்கள் தமது பாக்களில் பாடி மகிழ்ந்துள்ளார்கள். 

 திருமங்கையாழ்வார்                                                                 திருக்குருந்தாண்டகம் 

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திரு அரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமையானை
தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே.   2038 

      பரந்து விரிந்த தோட்டங்களும் மலர் வனங்களும் சூழ்ந்துள்ள திருவரங்கத்தில் நித்தியவாசம் புரியும் அரங்கன்நாம் இவ்வுலகில் வாழும்போது நமக்கு நிம்மதியையும்சுகத்தையும் அளிப்பவன். உயிர் பிரிந்த பின்பும் நமக்கு மோட்சத்தை அளிப்பவன். மெய்யானவன். யுக பேதத்தால் செம்மை நிறத்திலும் கருமை நிறத்திலும் திகழ்கின்றான். திருமலையில் நின்றவண்ணம் அருள் பாலித்து எவ்வித வேறுபாடின்றி நன்மை செய்பவன். அவனது பெருமைகளை நினைப்பவர்களை என் தலையில் ஆபரணமாக வைத்து போற்றுவேன்.
      இந்த உடலால் நமக்கு ஆசைகள் ஏற்பட்டு அது நிறைவேறாமல் போகும்போது சினம் ஏற்பட்டு மனம் சஞ்சலித்து துன்பம் தொடர்கிறது. நாம் உடல் அல்லஅழியாத ஆத்மா. நாம் பகவானின் ஒரு கூறு என்று நினைக்கும் நிலையில் நமக்கு தெளிவு பிறந்து மனம் அவனை நாடிச் செல்லும் நிலை வேண்டும். அப்படி பக்தி செலுத்துபவர்களை என் தலையில் சூடும் ஆபரணமாகக் கொள்வேன் என்கிறார் ஆழ்வார். 

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
     நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
     உள்ளுவார் உள்ளத்தாய்உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
     காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
     பெருமான் உன் திருவடியே பேணினேனே.    2059 

      திருநீரகம் என்னும் திருப்பதியில் குடிகொண்டிருப்பவனே! உயர்ந்த திருவேங்கட மலையில் நின்றருள்கிறவனே! நிலாத்திங்கள் துண்டம் என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ளவனே! அழகிய காஞ்சியிலும்திருஊரகத்திலும் எழுந்தருளி இருப்பவனே! அழகிய தடாகக் கரையிலுள்ள திருவெஃகாவில் திருக்கண் வளர்ந்தருள்பவனே! சிந்திப்பாருடையவரின் உள்ளத்தில் உறைபவனே! உலகமெல்லாம் துதிக்கும்படி திருக்காரகம் என்னும் தலத்தில் நிற்பவனே! கோபியர் உள்ளங்களைக் கவர்ந்தவனே! விரும்பத்தக்கதாய் அழகிய காவிரியின் தெற்கில் திருப்பேர் நகரில் இருப்பவனே! என் மனதில் நீங்காமல் காட்சி தருபவனே! பெருமைக்குரிய பெருமானே! உன் கமலப் பாதங்களை பூஜித்து சேவிக்கின்றேன்’ என்கிறார் ஆழ்வார்.
      நீரானது பள்ளத்தில் பாயும். அது போன்று எம்பெருமான் தாழ் மக்களிடம் எளிதில் சேர்வான். ஸ்ரீகிருஷ்ணர் விதுரனின் மாளிகையில் தங்கியதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மனிதனின் தேவையே நீர். ஐந்து வகையான நீர் உள்ளது போன்று எம்பெருமானும் ஐந்து நிலைகளில் நமக்கு அருள்கிறான். எம்பெருமான் நினைப்பவரின் நெஞ்சினில் உறைபவன். அது போன்று என் நெஞ்சிலும் உறைபவன். இத்தகையவனின் திருவடிகளை ஆவலுடன் கண்டு நின்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார். 

வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
     மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்கத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
     குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
     பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா!
எங்கு உற்றாய்எம் பெருமான் உன்னை நாடி
     ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே .     2060     

      ‘‘மரக்கலங்களில் சிறந்த இரத்தினங்களைக் கொண்டு தள்ளும் கடற்கரையைக் கொண்டுள்ள மாமல்லபுரத்தில் கோயில் கொண்டிருப்பவனே! திருமதில்களையுடைய காஞ்சியில் வாழ்பவனே! திருப்பேர்நகரில் குடிகொண்டிருப்பவனே! அழகிய கொன்றை மாலையை இடப்பக்கம் சூடிய மலை மன்னன் இமவானின் மகளான பார்வதியை இடப்பக்கம் அமர்த்தியுள்ள சிவபெருமானுக்கு உன் மேனியில் இடம் தந்தவனே!  குளிர்ந்த திருவேங்கட  மலையில் நின்றருள்பவனே! பவள நிறத்தவனே! எங்கே  போனாய்?  பகவானே! உன்னைத் தேடி இந்த ஏழை அலைகின்றேனே!’’ என்று ஆழ்வார் பகவானை வேண்டுகிறார்.
      பகவானைத் தேடுவதிலும் ஒரு அடித்தளம் அமைய வேண்டும். பொன் வேண்டும்பொருள் வேண்டும் என்றெண்ணி தேடுவது சுயநலமாகும். இக்காரியத்தால் பகவான் நம்மை விட்டு விலகி விடுகிறான். சுயநலமில்லா அன்பைக் கொண்டு அவனை அடைய வேண்டும் என்ற கருத்தில் ஆழ்வார் இப்பாசுரத்தை இயற்றியுள்ளார். 

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்
     கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்
     வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
     விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்
     துணை முலைமேல் துளி சோரச் சோர்கின்றாளே!    2067 

      கன்றுகளை மகிழ்ச்சியுடன் மேய்த்துக் கொண்டிருக்கும் காளை போன்றவனே! அழகு மிக்க மலர் வனங்களால் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் கொலுவிருக்கும் என் கண்மணியே! நாற்சந்தியிலும் மரக்கால்களைக் கட்டிக் கொண்டு கூத்தாடி ஆனந்தித்தவனே! திருவேங்கடமலையில் எழுந்தருளியுள்ளவனே! அசுரக் குலங்களைக் கொன்று வேரோடு அகற்றிய அரசனே! சோலைகள் நிறைந்த திருநறையூரில் நின்றருள்பவனே! அடர்ந்த குழல் கற்றையும் கறுத்த திருமேனியும் கொண்ட என் துணைவனே! என்றெல்லாம் புலம்பி இரு தனங்களும் நனையுமாறு மகள் துன்புறுவதை நினைத்து தாயார் கண்ணீர் பெருகி சோர்வடைகிறாள்.  புல்லாங்குழல் இசைத்து பசுக்கள் வேறிடம் செல்லாமல் பாதுகாத்து வீடு திரும்புமாறு செய்கிறான். அதுபோல் உலகத்து உயிர்களை தன்பால் ஈர்த்து பாதுகாப்பவன் பகவான் ஒருவனே என்பது இதன் பொருளாகும். 

  பொய்கையாழ்வார்                                                                           முதல் திருவந்தாதி 

எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை.    2107 

      தாங்கள் வேண்டிய ஐஸ்வர்யம் கிடைத்ததும் எம்பெருமானை கைவிட்டுப் போகும் செல்வ விரும்பிகளுக்கும்தாங்கள் விரும்பிய கைவல்ய மோட்சம் கிடைக்கப்பெற்றதும் கைவிட்டுப் போகின்ற கைவல்யார்த்திகளுக்கும்இனிய திருத்துழாய் மாலையணிந்த வேங்கடவனை ஒருநாளும் விட்டுப் பிரியாதபடி நெஞ்சில் பதித்து எப்போதும் அனுபவித்துத் தொழுபவர்களுக்கும்அவரவர் மனதில் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையாக விளங்குகின்ற தீவினை என்னும் நெருப்பை அணைக்கின்ற திருவேங்கடமலையை நித்யசூரிகளான தேவர்களின் மனத்தீபத்தைத் தூண்டி ஒளி பெறச் செய்யும் என்கிறார்.
எம்பெருமானைக் காட்டிலும் எம்பெருமானுடன் சம்பந்தம் பெற்ற பொருள்களே சிறந்தது. பெருமான்வரை செல்லாமல் அவன் தொடர்புடைய திருமலையோடு நின்று அனுபவிக்கிறார். இம்மலை வினைகளைப் போக்கி பலனைப் பெருக்கும். வானோர் இங்கு வந்து பெருமானின் சௌலப்பியசௌசீல்ய குணங்களை அனுபவிப்பதற்கு இம்மலை தூண்டுகோலாக அமைந்துள்ளது என்கிறார். 

வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர்.        2118 

      பகவானிடம் அற்பப் பலன்களுக்காக கையேந்தி நிற்கக்கூடாது. பக்தி வேண்டும்முக்தி வேண்டும்வைராக்கிய குணம் வேண்டும் என்று உயர்வான பலன்களைபாகுபாடு செய்யும் நுண்ணறிவுடைய வேதியர்கள் தினமும் தூப தீபங்களும்பூக்களும்தீர்த்தமும் ஏந்திக் கொண்டு பல திசைகளிலிருந்தும் வந்து சேர்ந்து வணங்கும் இடமான திருவேங்கடமலையேவெண்மையான சங்கைத் திருவாயில் வைத்து ஊதிய ஸ்ரீகிருஷ்ணன் திருவுள்ளம் மகிழ்ந்து கோயில் கொண்ட தலமாகும் என்கிறார். மூன்று பாசுரங்களாலே திருமலையை அனுபவிக்கிறார். எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கும் இடம் திருமலையாகும்.  இத்தலமானது தினந்தோறும் பலப்பல திசைகளிலிருந்து நல்ல பாண்டித்யம் பெற்ற வைதீகர்கள் வந்து தூபம்தீபம்புஷ்பம்அபிஷேகநீர் முதலிய திருவாராதனப் பொருட்களைக் கொண்டு அர்ச்சிக்கப்படும் இடமாகத் திகழ்கின்றது. அவரை வணங்கி ஆத்ம தரிசனத்திற்கான உயர் பலனைப் பெறுங்கள் என்று ஆழ்வார் நம்மிடம் வேண்டுகோள் வைக்கிறார். 

ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை
பேர் எறிந்த பெரு மணியை கார் உடைய
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர்
எம் என்னும் மாலது இடம்          2119 

      வரிகளோடு உடலைக்கொண்டு திரியும் நாகம்வயலில் மேய்கின்ற யானைக்கூட்டங்களை விரட்டக் குறவர்கள் வீசி எறியும் பெரிய மாணிக்கக் கல்லின் ஒளியை மேகத்தில் தோன்றும் மின்னலென்று எண்ணிஅடுத்து இடி வரும் என அஞ்சிப் புற்றுக்குள் நுழையுமிடம் திருவேங்கடமலையாகும். விண்ணிலுள்ள தேவர்கள் எங்களுடையவன் என்று கூறும் திருமாலின் திவ்யதேசம் இது என்று ஆழ்வார் கூறுகிறார். திவ்ய தேசங்கள் அனைத்தும் மெய்யன்பர்கள் கூடுமிடமாகும். அதில் திருவேங்கடமலையே நித்யசூரிகளை நிர்வகிப்பவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமாகும். ‘எழில் வேங்கடமென்னு மெம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாவேனே’ என்று கூறிய குலசேகராழ்வார் போன்று மகான்கள் திருமலையில் ஒரு பாம்பாகவும்குறவராகவும்யானையாகவும்புற்றாகவும் பிறந்திருப்பார்களேயாகையால் அப்பெருள்களையும் எம்பெருமான் போல் ஒப்பிட்டு ஏற்றத்துடன் பாடுகிறார். வானவர்கள் புரியும் சிறு தவறுகளை பொருட்படுத்தாது அவர்களுக்கு நன்மை செய்வது போன்று நாம் செய்யும் சிறுசிறு தவறுகளும் பெருமானின் காலடியில் சமர்ப்பித்தால் பெருமானும் அதனை பெரிது படுத்தாமல் நமக்கு நன்மை புரிவார் என்பது இப்பாசுரத்தின் உட்கருத்தாகும். 

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும்
நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேர் ஓத வண்ணர் பெரிதுது.     2120 

      பெரிய கடல் போன்ற நிறமுடைய பரந்தாமன் முன்காலத்தில் மகா பிரளயத்தில் அண்டபித்தியில் ஒட்டிக்கிடந்த பூமிபிராட்டியை பெரிய வராகமாகித் தன் கொம்பில் குத்தி எடுத்து மீட்டார்.  இந்திரனின் பசிக்கோபத்தால் ஏழு நாட்கள் தொடர்ந்து மழை பெய்வித்து திருவாய்ப்பாடி மக்களையும், ஆநிரைகளையும் கோவர்த்தனகிரி என்னும் மலையைக் கொண்டு குடையாக பிடித்து அவர்களைக் காத்தான். சாதுசனங்களையெல்லாம் தினமும் துன்புறுத்தி வந்த கம்சனை மடியச் செய்து அம்மக்களின் துயரினைத் தீர்த்தான். அவதாரங்களுக்கு மூலகந்தமாகத் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டான். விண்னோர்க்கும்மண்ணோர்க்கும் வைப்பாகப் பெருமை மிக்க திருவேங்கடமலையில் நின்று அருள் புரிகிறான் என்று கூறுகிறார். இவ்விதம் பிறர் துன்பங்களை ஏற்று அதனைக் களைந்து எல்லோரையும் காத்தருளும் எம்பெருமானுடைய பல செயல்களை இப்பாசுரத்தின் வழி தெரிவித்து மகிழ்கிறார். திருவேங்கடமலை சென்று பெருமானைத் தரிசித்தால் நம்முள் குடிகொண்டிருக்கும் பகைமையை அழிப்பார். செல்வமும் ஞானமும் கலந்த வைராக்கியத்தை நமக்கு அருள்வார் என்பது இப்பாசுரக் கருத்தாகும். 

பெரு வில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர்
கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று.     2121 

      திருமலையில் இராக்காலங்களில் கூரிய பெரிய வில்லும் அம்புகளும் கொண்ட குறவர்கள் கையிலுள்ள ஒளிமிக்க தீவட்டியைப் பிடித்துக்கொண்டு அதட்டிச்செல்ல அத்தீவட்டியையும்அம்புகோர்த்த வில்லையும் கண்டு வயல்களில் மேய்ந்து கொண்டிருக்கும் யானைக்கூட்டங்கள்விசாலமான ஆகாயத்திலிருந்து எரி நட்சத்திரம் விழுவதாக நினைத்து நெருப்பைக் கண்டு அஞ்சி இவ்வழியை எப்படி கடந்து செல்வோம் என்று திகைத்து ஓடும் இடமான திருவேங்கடம்தான் முன்பு அசுரனான இரண்யன் பல வகைகளில் தன் மகன் பிரகல்லாதனை அழிக்க வேண்டும் என்று நினைத்து பல விதத்திலும் முயற்சித்துத் தோற்றான். சொந்த மகன் என்றும் பாராமல் பெருமானின் பெயரை உச்சரித்தல் பாவம் என்று கூறிய மூடனான இரண்யனை தூணிலிருந்து வெளிப்பட்டு அவன் உடலைக் குத்திக் கிழித்து அழித்து  தன் பக்தனான பிரகலாதனைக் காத்து தன் எதிரி மடிந்தான் என்று அகமகிழ்ந்தான். அத்தகைய உத்தம குணம் கொண்ட எம்பெருமான் குடியிருக்கும் இடம் திருவேங்கட மலையாகும் என்கிறார் ஆழ்வார். 

உணர்வார் ஆர் உன்பெருமைஊழிதோறு ஊழி
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை  உணர்வார் ஆர்
விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப்
பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்?     2149 

      பரமபதத்திnf எழுந்தருளியிருப்பவனே! இந்தப் பூமியை அளந்து கொண்டவனே! திருவேங்கடத்தில் நின்றருள்பவனே! பண் அமைந்த நான்கு மறைகளாலும் அறியப்படுபவனே! உன் பெருமையை முழுமையாக அறிந்தவர்கள் யார் இருக்கிறார்கள்அளவெடுத்துக் காண முடியுமாகாலம் காலமாக ஆராய்ந்தாலும் உன் வடிவழகு இதுதான் என்று அளவெடுத்துக் காண முடியுமா?  நீ துயில்கொள்ளும் திருப்பாற்கடலை கண்டறிபவர்கள் யார் இருக்கிறார்கள்என்று பலவாறு கேட்கிறார் ஆழ்வார். கல்பங்கள் தோறும் ஆராய்ந்தாலும் உன் ஸ்வரூபத்தையும் ரூபத்தையும் யார் அறிய முடியும்இறைவனின் பெருமைரூபம்பரவல்எல்லாம் மனித ஞானத்தின் எல்லைக்குள் வராதவை.
     வேங்கடமலையில் அவர் தன்னை அருளாகக் காட்டிக்கொள்கிறார்ஆனால் அவரது மெய்ப்பொருளை உணர்வது அருளால் மட்டுமே சாத்தியம். ‘தனக்கும் தன் தன்மையறிவறியான்’ என்று நம்மாழ்வாரும் இதனை உணர்த்தியுள்ளார். எனவே பகவானை உள்ளபடியாக யாராலும் அறிய இயலாது என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும். 

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த
சீரான் திருவேங்கடம்   2157 

      முறையான பக்திமார்க்கத்தின் வழியிலே நிலையாக நின்று உன்னைத் தொழுகிறவர்கள் பொய்யாமொழியாகிய மறைகளில் சொல்லப்பட்டுள்ள மூர்த்தியாகக் கருதப்படுவார். ஒரு குறையும் இல்லாதபடி சொர்க்கத்தைக் கொடுக்கும் உலகளந்த மகானுபாவனான பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம் திருவேங்கடமலையாகும் என்கிறார் ஆழ்வார். 
ஒரு குறையுமில்லாத எம்பெருமானுடைய தொடர்புடைய திருமலை, தானே தன்னைப் பற்றினார்க்கு பரமபதத்தைத் தரும் வல்லமையுடையதாயிருக்கையில் எம்பெருமானைத் தொழுபவர்கள் நற்கதி அடைவார்கள் என்று நாம் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்கிறார். யோகம் கலந்த பக்திநெறியில் பகவானை அடைவது சாலச் சிறந்ததாகும். இவ்வுடலை நமக்களித்து எல்லா நன்மைகளையும் புரிந்துவரும் பகவானிடம் நன்றியில்லாத நிலையினால் அவனிடம் பக்தி பிறப்பதில்லை. அவன் நமக்கு புரிந்துள்ள கருணையை நினைத்துப் பார்த்தால் நாம் அவனை நாடிச் செல்வது நிச்சயமாகும் என்பது இதன் கருத்தாகும். 

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்.    2158 

      திருவேங்கடமும்வைகுந்த மாநகரும்திருவெஃகாவும்மலர்கள் நிறைந்த  நீர் நிலைகளைக் கொண்ட எழில்மிக்க திருக்கோவலூர் தலமுமான நான்கு புனிதத் தலங்களிலும் பகவான் முறையே நின்றருள்வதும்வீற்றிருப்பதும்சயனித்திருப்பதும்நடப்பதுமாய் தரிசனம் தருகிறார். எனவே நமது இடரெல்லாம் நீங்கிவிடும் என்று கூறுகிறார் ஆழ்வார். எம்பெருமான் ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் எழுந்தருளியுள்ளவாறு நாம் பாசுரங்களை அநுஸந்தித்தால் சொன்னால் நமது துன்பங்களெல்லாம் நீங்கிவிடும் என்கிறார். அவனது திருப்பதிகளில் நிற்பதும்இருப்பதும்கிடப்பதுநடப்பதும் போன்ற நிலைகளை நாம் சொல்ல சொல்ல நாம் செய்த பாவங்கள் நம்மை விட்டு அகலும். பகவான் நீக்கமற நிறைந்த போதிலும் மனதை ஒருமுகப்படுத்த ஆலய தரிசனம் செய்தல் வேண்டும். அந்த கட்டத்தில் மனம் முழு ஒருமைப்பாட்டுடன் விளங்கும். அந்நிலையில் மனமே! கோவிலாக மாறி அதில் பெருமான் வீற்றிருப்பார் என்ற உயரிய தத்துவத்தை ஆழ்வார் நமக்கு அருளியுள்ளார்.        

படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூந்
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மான் மாய எய்தான் வரை      2163 

      முன்னொரு காலத்தில் மாரீசன் என்ற மாயமான் மாளும்படி அம்பு எய்த இராமபிரான் நித்திய வாசம் செய்யும் மலைவேல் போன்று கண்களையுடைய பெண்கள் துவாதசியன்று வாடாத மலர்களைக் கொண்டு தொடுத்த மாலையும்சாம்பராணி தூபமும் கொண்டுதிருவேங்கடமுடையானைப் பூஜிக்கதூபப் புகையானது வானில் தெரிகின்ற விண்மீன்களை இடையிடையே மறைக்கும்படி செய்யும் இடம் திருவேங்கடமலையாகும் என்கிறார் ஆழ்வார். எம்பெருமான் திருமலையில் நித்யவாசம் பண்ணுகிறபடியை அநுசந்திக்கிறார். துவாதசி நாளை பாரசி நாள் என்று விசேஷத்துக் கூறுகிறார். ஏனெனில் அறிவொன்றுமில்லா பெண்களும் வந்து பணியுமாறு சர்வக்ஞனாக இருக்கும் இருப்பு விளங்குவதற்காக ‘படையாரும் வாள் கண்ணர்’ என்கிறார். சிற்றஞ் சிறுகாலையில் வந்து பாராயணம் செய்யும்படி விடிவதற்குள் வைஷ்ணவர்கள் யாவரும் வந்து தொழுவதற்கு ஏற்ற நாளான துவாதசியைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது இதன் கருத்தாக அமைகிறது.   

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் .    2180 

      எனக்குத் பாங்காகத் தோன்றும் நெஞ்சமே! புருஷோத்தமன் எப்போதும் எதிலும் ஊடுருவி இருக்கின்றான் பார்!  அவன் போற்றி வழிபடுவோரின் உள்ளத்தில் இருக்கிறான் பார்! திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவனும்திருவேங்கடத்தில் உறைபவனுமான பகவான் இப்போது நமது இதயத்தில் குடி புகுந்திருக்கிறான் என்பதை அறிந்து கொள் என்கிறார் ஆழ்வார்.  திருப்பாற்கடல்திருவேங்கடம் ஆகிய இடங்கள் எம்பெருமானுக்கு வாசஸ்தலங்களாக இருந்தாலும் சமயம் பார்த்து ஞானிகள் மனத்தில் வந்து அமர்ந்துவிடுவார். அத்தகைய பெருமான் என் மனதிலும் வந்து புகுந்து கொண்டார். இதனை அறிந்து உவகை கொள் என்கிறார்.  நல்நெஞ்சே என்று விளிக்கும் காலத்தில் என் உள்ளமே என்றும் கூறுகிறார். நெஞ்சும் உள்ளமும் ஒன்றா என்று வினவும் போது தம்மைக் காட்டிலும் நெஞ்சை தனிமைப்படுத்திக் கூறும்போது அதை தனிப்பட்ட ஒரு வியக்தியாக ஏற்றம் கொண்டு நெஞ்சு தவிர நமக்கு துணையாக நிற்பது எதுவுமில்லை. எனவே பகவான் நீக்கமற நம் நெஞ்சில் உறைந்துள்ளார் இதை மனத்தில் அறிந்து கொள்ளும்போது நாம் முழுமை அடைகிறோம் என்பது இதன் கருத்தாகும். 

   பூதத்தாழ்வார்                                                                                 இரண்டாம் திருவந்தாதி 

சென்றது இலங்கைமேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனை கூறுங்கால் நின்றதுவும்
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து     2206. 

      தேவர்கள் அனைவரும் வாயார வாழ்த்தும் மிகவும் புகழையுடைய பகவான் சென்றது இலங்கைக்கு. அனல் பறக்கும் கோபத்தோடு அழித்தது இராவணனை. சொல்லப்போனால் நின்று அருள்புரிந்த இடமோ மூங்கில் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையாகும் என்கிறார் ஆழ்வார். சங்கல்பத்தில் எல்லாவற்றையும் நிர்வகிக்கின்ற எம்பெருமான் தன்னை மனித ரூபத்தில் அவதரித்துக்கொண்டு இராவணாதியர்களை போரிட்டு முடித்தான். அவதாரத்திற்கேற்ப தன் திருவாழியைக் கூட உபயோகப்படுத்தாமல் மனிதனுக்குண்டான சக்தியைப் பயன்படுத்தியே அசுரர்களை அழித்தான். அவதாரப் பிரயோஜனங்களில் மூன்றில் முக்கியமான ஸாதுபரித்ராணம் ஒன்றுக்காகவே விபவாவதாரங்களும் அர்ச்சவதாரங்களும் செய்தருள்கிறார். சத்வகுணம் கொண்டு தன்னைப் பூஜிப்பவர்களைத் திருவேங்கடமலையில் இருந்து விடுவித்து முக்தியை அளிக்கிறான். 

மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான்  எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன் ஒரு நாள்
மா வாய் பிளந்த மகன்.  2209 

      திருமலை என்னும் திவ்யதேசத்தில் அனைவருக்கும் எளிதில் காட்சி தரும் திருவேங்கடத்தானும்பரந்த திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவனும்நினைப்பதற்கும் மிக்க சிறப்புக்களையுடைய திருவரங்கத்தில் பள்ளிகொள்பவனும்கணக்கில்லாத வைதிக புருஷர்களுக்கு தேவர்க்கெல்லாம் தேவனென்றும்முன்னொரு காலத்தில்  கேசி என்னும் குதிரை வடிவில் வந்த அரக்கனின் வாய் பிளந்து மக்களைக் காத்தவனுமாகிய எம்பெருமான் என் மனத்தில் வாசம் செய்கின்றான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      தேவாதி தேவனான எம்பெருமான் முதலில் திருப்பாற்கடலில் வந்து தங்கி பின் கிருஷ்ணராக அவதரித்துவந்து போவது என்றிராமல்  சம்சாரிகளைக் காக்க ஸ்திரமாக ஓரிடத்தில் இருத்தல் வேண்டும் என்று வேண்டுதலுக்கேற்பதிருமலை முதலிய திருப்பதிகளில் எழுந்தருளியவன் இப்போது என் நெஞ்சில் குடிபெயர்ந்தான். அத்தகையவன் கிருஷ்ணாவதாரத்தில் தன்னைக் கொல்ல வந்த கேசி என்னும் குதிரையை தூக்கி எறிந்தான். அத்தகையவன் திருவரங்கத்தில் பள்ளி கொண்டு நமக்கு அருள் பாலிக்கின்றான். 

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்துப் பல்கால் பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை    2214

      என் உள்ளமானது, திருத்துழாய் மாலையணிந்த பெருமானுடைய திருநாமங்களைப் பலமுறை நினைப்பதில் துணிச்சலாகச் செயல்படுகிறது. என் சரீரமும் எப்போதும் வணங்குவதாய் இருக்கிறது. என் வாயும் மூங்கில் நிறைந்துள்ள தாழ்வரை களையுடைய திருவேங்கடமலையில் அருள் புரியும் பெருமானின் பெருமைகளை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறது என்கிறார். முதலில் சிந்தை சிந்திப்பது பிறகு வாய் சொல்லுவது அதன்பின் உடல் செய்வது என்றபடி மெய்களின் செயல்முறைமை ஏற்பட்டிருக்கும் விதமாக தமக்கு அந்த மூன்று கணங்களும் பகவத் விஷயத்தில் அநுசந்தித்த ஆழ்வார் என் வாக்கிற்கு முன்னே என் சரீரம் ஈடுபடுகிறது என்று ஆழ்வார் கூறுகிறார். பகவத் விஷயத்தில் ஈடுபட என் சீரீரம் முந்தி செல்கின்றது. அவரது சரீரம் அவரது கட்டுப்பாட்டைவிட்டு அவரையும் அழைத்துக் கொண்டு பெருமானிடம் செல்கிறது என்ற கருத்தும் புலப்படுகிறது. 

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று     2226.  

      அளவிடமுடியாத பெருமைகளையுடைய வேதங்களால் போற்றப்படுபவன்திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருப்பவன்தேவர்கள் தங்கள் திருமுடி உராயும்படி வணங்கும் திருவடிகளையுடையவன். அவனது திருப்பாதங்களைத் தினமும் பூஜித்துப் பழக்கமான அடியார்கள் தனக்குச் செல்வமிருக்கிறது என்று எப்போதும் இறுமாப்பு கொள்வதில்லை. நேற்று இருந்து இன்று அழியும் அதன் இயல்பை எண்ணித் தளராத மனத்தோடு வாழ்வர் என்கிறார் ஆழ்வார். செல்வம் இருந்து அனுபவிக்கும் ஒருவன் அது இல்லாதபோது தளர்ச்சி ஏற்படுகிறது. வாழ்வில் செல்வமே இல்லை என்ற நிலையில் தளர்ச்சி என்பதே வராது. ‘முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் எங்கள் இராமானுசனை வந்தெய்தினர்’ என்று ராமானுஜ அடியார்கள் போன்றிருப்பார்கள். பகவானிடம் பக்தி கொண்டுவிட்டால் செல்வம் என்பது ஒரு பொருட்டே கிடையாது. இந்நிலையில் நமது வினைகளும் நம்மை பந்தப்படுத்த இயலாது என்பதை இப்பாசுரத்தின் வழியாக நமக்கு உணர்த்துகிறார்.     

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள்
பயின்றதுவும் வேங்கடமே பல்நாள் பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் . 2227 

      நீலமணி போல் அழகுடன் விளங்குபவனும்வள்ளலானதால் நீண்ட திருக்கைகளை உடையவனுமான எம்பெருமான் பள்ளிகொண்ட இடம் திருவரங்கம்.  குடியிருக்கும் தலம் திருக்கோஷ்டியூர்.  மேலும் பல நாட்களாக  நித்திய வாசம் செய்யும் இடம் திருமலை.  பலநாள்  பயின்றது அழகு மிக்க திருமாலிருஞ்சோலை மற்றும் சோலைகள் நிறைந்த சூழ்ந்த திருநீர்மலையாகும்.
      பாகவதர்கள் இதர போகங்களில் லாப நஷ்டங்களில் மனம் செலுத்துகிறார்கள்.  இவ்வுலகச் செல்வங்களைப் பெறுவதாலும்இழப்பதாலும் பல துன்பங்களை அடைந்து வருகிறபடியால் அதனை நீக்க எம்பெருமான் பல திவ்ய தேசங்களில் கோயில் கொண்டு அருள்புரிகிறார். இத்தலங்களில் பெருமான் பிரசாதமாகவும்தீர்த்தமாகவும் தன்னை ஆட்படுத்திக் கொண்டுள்ளார். தன்னைக் கொள்வாருண்டோ என்று நெடுங்காலம் படுத்துக் காத்துக்கிடப்பது திருவரங்கத்தில்விபவம் போல் வாழ்ந்து மறைந்தது திருக்கோட்டியூரில்சேதனனை வசீகரிக்க நெடுங்காலமாய் தன் அழகை காட்டுது திருமலையில்அதனிலும் திருப்தி கொள்ளாமல் தனது நிலையழகையும்இடையழகையும்இடுப்பழகையும்நடையழகையும் ஒருமித்தே காட்டுவது திருநீர்மலையிலாகும். 

நெறியார் குழல் கற்றை முன்நின்று பின் தாழ்ந்து
அறியாது இளங் கிரி என்று எண்ணி பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு .  2234 

      என்றும் திருமலை வழியிலேயே நினைத்து தியானத்தில் ஆழ்ந்து விட்டவர்களின் தலைமுடி முன்னே முளைத்து பின்னே தாழ்ந்து தொங்குகிறது என்பதை அறியாமல் இது சிறிய மலை என்று எண்ணி பூங்கொடிகள் அவ்விடம் படரும் சூழலில் அலை வீசும் நீர்வளம் கொண்ட திருவேங்கடமே நான் விரும்பும் மலையாகும் என்கிறார். திருமலை மேல் சென்று வாழ்வதைக் காட்டிலும் அம்மலை செல்லும் பாதையில் கிடந்திருப்பதே பெரும்பேறு என்கிறார். தியானத்திற்கு உகந்த மலை திருமலையாகும். குலசேகராழ்வாரும் ‘படியாய் கிடந்துன் பவளவாய் காண்பனே’ என்று சொல்வது போன்று அவ்வழியே வீற்றிருந்து பெருமானை சிந்தை செய்வதே தனக்கு ஏற்றம் என்கிறார். முனிவர்கள் அம்மலையில் தவம் செய்து முன்முடிகள் வளர்ந்து பின்னுக்குத் தள்ளியதை புற்று மூடினார்போலும் அதன் மீது கொடி படர்ந்தது போன்றதொரு காட்சியினை இப்பாசுரத்தில் தனது கற்பனைத் திரனால் வர்ணித்துள்ளார். எனவே திருமலையில் நாம் எப்போது சென்று வணங்கினாலும் நாமும் ஒரு யோகிகள் போன்றாகி விடுகிறோம் என்பதே இப்பாசுரக் கருத்தாகும். 

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளங் கோயில் கைவிடேல் என்று.          2235 

      திருமாலிருஞ்சோலைதிருவேங்கடமலை இவ்விரண்டு மலைகளும் நாம் விருப்பத்துடன் நின்றருளும் இடமென்று நீ திருவுள்ளம் கொண்டது போல என் இதயக்கோயிலிலும் கருணை கொண்டு வந்த தங்கியது கண்டு மனம் மகிழ்ந்தேன். அதற்காகத் திருப்பாற்கடலில் நித்திரை செய்வதைக் கைவிடக்கூடாது என்கிறார் ஆழ்வார்.
      தெற்குத் திருமலையும்பெரிய திருமலை ஆகிய இரு மலைகளில் நாம் உகந்து வாழுமிடம் என்றெண்ணி நீ திருவுள்ளம் பற்றியிருப்பது போன்று என் இதயமாகிய கோயிலையும் நாம் உகந்து வாழுமிடமென்று எண்ணி என் உள்ளத்தில் வந்தமர்ந்தாய். இதையே எண்ணி திருப்பாற்கடலான பாலாலயத்தை கைவிட வேண்டாமென்று பிரார்த்திக்கிறேன் என்கிறார். திருப்பாற்கடல் நித்திரை என்பது நம்மை ஞான நிலைக்குக் கொண்டு செல்லும் அற்புதத் திருக்காட்சியாகும். நாகக்குடையில் நித்திரை கொண்ட பெருமான் ஐந்துபட நாகத்தை கட்டுக்குள் வைப்பது போன்று நம் ஐம்புலன்களையும் அடக்கியாள பரந்தாமனை மறத்தல் கூடாது என்பது இதன் பொருளாகும்.       

போது அறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போது
மணி வேங்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து.    2253 

      குரங்குகள் விடியற் காலையில் உணர்ந்து பூக்கள் நிறைந்த சுனைக்குச் சென்றுஅப்போது மலர்ந்த மலர்களைப் பறித்து வந்து வேங்கடவன் திருவடிகளில் சமர்ப்பணம் செய்து துதிக்கின்றன. மனமே! நீயும் அதேபோல் செய்யப் புறப்படு. அழகிய திருவேங்கடமலையிலுள்ள பகவானின் திருநாமங்களை ஓதி அவனது திருப்பாதங்களுக்கே சென்று சேரும்படி மலர்களை சமர்ப்பிப்பாயாக என்கிறார் ஆழ்வார். திருமலையில் திவ்ய ஜந்துக்களான வானரங்கள் மலர்களைக் கொய்து பெருமானுக்கு இட்டு கைங்கர்யம் செய்கின்றன. பஞ்ச உஷத்காலத்தில் முனிவர்கள் துயிலெழுவது போன்று அந்தக் குரங்குகளும் எழுந்து ஸ்நானம் செய்து அங்குள்ள செவ்விப் பூக்களைப் பறித்து தனது குலத்துக்கு ஏற்றவாறு ஏதோ ஒன்று சொல்லி பகவானைத் தொழுகின்றது. மனமே! நீயும் அதுபோன்று திருவேங்கடமுடையானின் சீலகுணங்களைப் போற்றி அவனது திருநாமங்களை அநுசந்தித்து நன்மலர்களைக் கொண்டு அவனது திருவடிகளில் சாத்துவாயாக! என்கிறார். 

பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை   2256 

      மதநீரைப் பெருக்கும் யானை தனது ஜோடியான பெண் யானைக்கு முன் நின்றுஇரண்டு கணுக்களையுடைய இளம் மூங்கில் குருத்தைப் பிடுங்கி அதை அருகில் உள்ள தேனில் தோய்த்து பெண்யானைக்கு கொடுக்கும் திருவேங்கடமலையைப் பாருங்கள்! அது ஆகாயத்தைத் தொடும்படியான மேக வண்ணன் அருள் புரிந்த மலையாகும் என்கிறார் ஆழ்வார். மதம் பிடித்து மனம் போனபடி திரிந்து கொண்டிருந்த யானையானது தன் துணையைக் கண்டது. அதற்கு இனிய உணவு கொடுத்து அது மகிழ்வதைப் பார்த்து மகிழ்ந்தது. மேலும் அதனை திருப்திகொள்ள மூங்கில் கழிகளைப் பிடுங்கி அங்கு மரத்தில் ஒழுகிவிடும் தேனில் கலந்து அதன் இணைஜோடிக்கு பிழிந்து ஊட்டியது. இத்தகைய நிகழ்வுகள் நடைபெறும் திருவேங்கடமலையானது நீலமேக நிறத்தவனான எம்பெருமான் உவந்து எழுந்தருளியிருக்கும் இடமாகும். திருமங்கையாழ்வார் திருப்பிரிதி திவ்ய தேசத்துப் பாசுரத்தில் ‘வரை செய்மாக்களிறு இளவெதிர் வளர்முனை அளைமிகு தேன் தோய்த்து பிரசவாரி தன்னிளம் பிடிக்கு அருள்செயும் பிரிதிசென்றடை மனமே! இதே கருத்தினைக் கூறுகிறார். 

  பேயாழ்வார்                                                                                        மூன்றாம் திருவந்தாதி 

மால்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விது ஆம் நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து.     2295 

      நான்கு விதமான வேதங்களிலும் பிரதிபலிக்கப்படுகின்றவனும்திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும்தேவர்கள் தங்கள் திருமுடி படும்படி வணங்கும் திருவடிகளையுடையவனுமான திருமாலின் பாதம் பணிந்து அவனிடமே நெஞ்சம் நிலைத்து நிற்கமங்கையரின் தோள் சேர வேண்டும் என்கிற எண்ணத்தைக் கைவிட்டு தர்ம சாஸ்திரங்களில்உபநிடதங்களில் மனம் செலுத்துவது மிக முக்கியம் என்று கூறுகிறார் ஆழ்வார்.  இந்திரியங்களை வெளியே மேயவிடாதபடி அடக்கி சாஸ்திரங்களை நாளும் கடைபிடித்து வந்தால் எம்பெருமானின் நித்யபடிகளைக் காணலாமென்று ஆழ்வார் கூறியுள்ளார். இவை சிரமம் என்று கொண்டால் சிற்றின்பங்களிலே விருப்பம் ஒழித்து திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடவனின் திருப்பாதங்களில் மனதை செலுத்தி வந்தால் அத்தகைய நித்யபடியை அடையலாம். அவ்விதம் சிற்றின்பத்தைக் களைவது நம்மால் நடவாதென்று நினைக்குங்கால் கோயில்களுக்குச் சென்று பெருமானிடம் நாம் வேண்டி ‘என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்று கூறுவது போன்றுசிற்றின்பத்தைக் களையவும் அவனது திருவடிகளை நாடவேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.     

சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே
தாம் கடவார் தண் துழாயார் .       2307 

      குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பரந்தாமன் ஒருநாளும் நீங்காத இடங்கள் எவையெனில் அனைத்திலும் சிறந்ததான என் நெஞ்சமும்சிவந்த கண்களையுடைய ஆதிசேஷனும்நிறைவான செல்வ வளம் கொண்ட பெரிய காஞ்சித் திருக்கச்சியும்திருவேங்கடமும்திருவெஃகாவும்திருவேளுக்கையும்ஆயர்பாடியுமாகும் என்று ஆழ்வார் கூறுகிறார். இவ்விதம் ஆழ்வார் சிறந்து தொழுத தம் உள்ளத்தைபெருமான் நித்யசூரிகளிலும்உகந்தருளின நிலங்களைக் காட்டிலும் ஆழ்வார் விரும்பிவாறே அவரது நெஞ்சில் நித்யவாசம் செய்தார். திருவனந்தாழ்வானோ மதுவைப் பருகி மயங்குபவர் போல வேதங்களில் குறிப்பிடும் ஆராஅமுதைப் தினசரி அனுபவிப்பதால் ஏற்பட்ட சிவந்த கண்களைக் கொண்டுள்ளான். இதே கருத்தினை பெரியாழ்வார் தமது பெரியாழ்வார் திருமொழியில் ‘அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்துஎன் மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தா யெம்பிரான்’ என்று கூறுகிறார். இதுபோன்று நாம் சொல்வதற்கான உறுதியை நாம் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும்.         

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பும் வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி
இறை பாடி ஆய இவை        2311 

      திருப்பாற்கடல்திருக்குடந்தைதிருவேங்கடம் இத்தலங்களை எப்போதும் நினைக்கும் என் சிந்தனைநிறைவான வைகுண்டம்திருமாலின் புகழ் சொல்லும் வேதம்திருப்பாடகம்அனந்தாழ்வான் ஆகிய இவைகளெல்லாம் அழகிய திருத்துழாய் மாலையணிந்திருக்கும் ஸ்ரீமந் நாராயணன் குடியிருக்கும் வாசஸ்தலமாகும் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
  ஆழ்வார் தனது சிந்தனையை பகவான் குடியிருக்கும் வாசஸ்தலத்துடன் இணைத்திருக்கிறார். காய்கதிர் செல்வனை வலிவற்ற மேகங்கள் மறைப்பது போல் நமக்குள்ளிருக்கும் பகவானை அறியாமை என்னும் மேகம் மறைக்கின்றது. ஆழ்வாரின் சிந்தனை எப்போதும் பகவானை நினைப்பதால் அறியாமை என்ற மேகம் அவரை சூழ்வதில்லை. நாம் எல்லோரும் அப்பேற்றினை அடைவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது இதன் கருத்தாகும். 

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன்    2313 

      குருந்த மரத்தை வேரோடு பறித்து முறித்தழித்த கோபலான் திருப்பாற் கடலையும்திருவேங்கடத்தையும்ஆதிசேஷனுடன்குளிர்ச்சியான வைகுண்டத்தையும்கடல் போன்ற இதிகாசபுராண நூல்களையும் நுட்பமான இதயக் கமலத்தையும் உன்னை நிறுத்தி தவம் செய்பவர் மனத்தையும் தான் உறையும் கோயிலாகக் கொண்டிருக்கிறான் என்கிறார் ஆழ்வார். திருப்பாற்கடல்திருவேங்கடம்திருவனந்தாழ்வானுடன் கூடியிருக்கும் பரமபதம்வேதவேதாகமங்கள் உருவாகும் யோகிகளின் திருக்கமல உள்ளம்  ஆகியவற்றில் உறைந்துள்ளான். சம்சாரத்தில் படும் துன்பங்களையெல்லாம் களைபவன் குளிர்விக்கும் திருப்பரமபதத்தில் உறைகிறான். கண்ணனைக் கொல்ல கம்சனால் ஏவிவிடப்பட்ட அசுரன் ஒருவன் குருந்த மரமாக மாறி கண்ணன் அதில் ஏறும்போது கிளை ஒடிந்துவிழுந்து  அழிக்க வேண்டும் என்பதாக நினைத்தான். ஆனால் கண்ணன் அந்த மரத்தினை வேரோடு பிடிங்கி அதனை முறித்து அவனைக் கொன்றழித்தான். அத்தகையவன் திருமலையில் உறைகின்றான் என்பது இதன் கருத்தாகும். 

இறை ஆய் நிலன் ஆகி எண் திசையும் தான் ஆய்
மறை ஆய் மறைப் பொருள் ஆய் வான் ஆய் பிறை வாய்ந்த
வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்.        2320 

      சர்வ ரக்ஷகனான இறைவன் பூமியைச் செயல்படுத்துபவனாய்எட்டுத் திசைகளிலும் எல்லாப் பொருட்களுமாய்வேதங்களாய்வேதங்களின் பொருளாய்விண்ணாய்சந்திர மண்டலத்தைத் தொடும்படி மிகுந்த நீருள்ள அருவிகள் விழும் ஒளியுடையதான திருவேங்கடமலையில் நின்றருள்பவன்என் உள்ளத்தின் உள்ளே இருக்கிறான் என்கிறார். இவ்விதமாக உலகத்திலுள்ள பொருள்களெல்லாம தானேயாக இருக்கும் எம்பெருமான் திருமலையிலே வந்து கோயில்கொண்ட பின் என்னுடைய உள்ளத்தைத் தேடிப்பிடித்து வந்து அமர்ந்துவிட்டான். பேரொலிகள் புரிந்த வண்ணம் அருவிகளாக கொட்டிக் கொண்டிருக்கும் ஓங்கி உயர்ந்துள்ள மலைகள் நிறைந்த திருமலையில் இருந்து கொண்டு பின் என்னுள்ளத்தில் வந்தமர்ந்தான். ஆலிலைமேல் துயின்றவனின் திருப்பாதங்களை என்தலைமேல் அணிந்தேன்.  அத்தகையவன் திருமலையில் அருள்கின்றான். என் மனத்துள் குடிகொண்டுள்ளவனை யாராலும் அழிக்க முடியாதென்று உறுதியான சிந்தனையோடு வாழ்கிறேன் என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் இதே கருத்தினை அருளியுள்ளார். 

உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன்.    2321 

      நல்லவற்றை நினைக்கும் நெஞ்சே! மேலுலகங்களெல்லாம் ஒரு மூலையில் ஒதுங்கும்படி மலைச் சிகரங்கள் உயர்ந்தோங்கி இருக்கின்றபெருத்த அருவிகளையுடைய திருவேங்கடமலையில் குடிகொண்டவன்பூமியின் பரப்பெல்லாம் ஒடுங்கி மண்ணளந்து கொண்ட புருஷோத்தமன், அடியார்களின் உள்ளத்தில் எப்போதும் இருப்பதைப்பார். அவன் இங்கும் இருப்பதைக் காண்பாய் என்கிறார். நெஞ்சமே! இவ்விதமாக எம்பெருமான் நம்மில் வந்து புகுந்தபோது குறைகள் அனைத்தும் அறவே அகன்றுவிடுமாறு காண்கிறேன். நம் உள்ளத்தில் உறைவதற்காகவே பெருமான் திருப்பாற்கடலிலும்திருப்பரமபதத்திலும் உளன். தன்னை நினைப்பவர் உள்ளத்தில் உளன். எனவே நெஞ்சே! நாளும் அவனை நினைப்பாயாக. அவனைக் காண்பது மிகவும் எளிது. புலன்கள் ஐந்தினை அடக்கி ஆய்மலர் கொண்டு அன்பால் தொழுதால் பெருமான் நம்மை நாடி வருவான் என்கிறார் ஆழ்வார். நம்மாழ்வாரும் ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்பிறர்களுக்கு அரிய வித்தகன்’ என்று பாடியுள்ளார். அத்தகையவன் வேங்கடத்தில் சேவை சாதிக்கின்றான் என்பது இதன் கருத்தாகும். 

புரிந்து மத வேழம் மாப் பிடியோடு ஊடி
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை   2326 

      மதம் கொண்ட யானை ஒன்று தன் பெண் யானையோடு ஊடல் கொண்டு இங்குமங்கும் அலைகிறது. தனது சினத்தைத் காட்ட அங்குள்ள  பாறையில் தனது கொம்புகளைக் குத்துகிறது. அதனால் பெயர்ந்த வெண்மையான தந்தத்திலிருந்து முத்துக்கள் உதிர்கின்றது. அத்தகைய திருவேங்கடமலை முன்னொரு காலத்தில் பூமியைக் கோரைப் பல்லின் மீது எடுத்துத்துக்கொண்டு வந்த வராகப் பெருமான் கோயில் கொண்ட மலையாகும் என்கிறார் ஆழ்வார். இப்பாடலில் திருவேங்கட மலையின் வளர்ச்சியை உயர்த்திக் காட்டுகிறார். திருமலையில் உள்ள மூங்கில்கள் மதிமண்டலத்தைத் தொடுமளவு வளர்ந்துள்ளது. அது மதியைப் பற்றிக் கொண்டிருக்கும் இராகுவையும் தகர்த்து கிரகணத்தை விடுவிக்கின்றது. ‘தீங்கழை போய் வென்று விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே’ என்று தன்னுடைய கற்பனையை விவரித்துக் காட்டுகிறார் ஆழ்வார்.     

 தெளிந்த சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய
வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்.     2339     

      தூய்மையான கற்பாறையின் மேல் இருந்த பெண்குரங்கு நட்பாக இருக்கும் ஆண் குரங்கைப் பார்த்து ஆகாயத்தில் உள்ள வெளுத்த நிலவினைப் பிடித்துக் கொடு என்று கேட்கும்படி இருக்கின்ற திருவேங்கடமே! முன்னொரு காலத்தில் பூமியைத் தன் அறிவு சாதுர்யத்தால் மகாபலியிடம் பெற்றுக் கொண்டு திருவுள்ளம் மகிழ்ந்த பகவான் குடியிருக்கும் தலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார். திருமலையிலுள்ள சிகரங்கள் வானில் சென்று நிலவினைத் தொடுமளவு உயர்ந்துள்ள நிலையில்மந்தியும் கடுவனும் மகிழ்வுடன் உள்ளபோது ஆண் குரங்கானது பெண்குரங்கு தன்னிடம் பேசாதா என்று மிகவும் ஏங்கித் தவித்துள்ள நிலையில் மந்தியானது கடுவனை நோக்கி தன் முகத்தினழகை கண்ணாடி போன்று பார்த்துக் கொள்வதற்கு நெடிதுயர்ந்த வானிலுள்ள ஒளிபொருந்திய வட்டநிலைவைப் பறித்துத் தருமாறு கோருகிறது. அதனைக் கண்ணாடியாக்கி தனது வடிவழகைப் பார்த்து மகிழலாமென்று கேட்கிறது. இத்தகைய காட்சியினை ஆழ்வார் திருமலையில் காண்பதாக கற்பனை செய்து கூறுகிறார். 

பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர்.      2342 

      திருப்பாற்கடல்வைகுந்தம்திருவேங்கடம்வண்டு கூட்டங்கள் நிறைந்த நந்தவனங்களைக் கொண்ட அழகிய சோளிங்கபுரம்திருவிண்ணகரம் போன்றவற்றில் நித்திய வாலிபனான ஸ்ரீமந் நாராயணனுக்கு முன் காலத்திலிருந்தே கோயில்களாக உள்ளன. இப்போது என் உள்ளமும் அவன் உறைவிடமாக ஆகிவிட்டதே என்று கூறுகிறார் ஆழ்வார்.
      ஸ்ரீவைகுண்டத்தில் நித்யவாசம் செய்பவனுக்கு வியூகஸ்தானமான திருப்பாற்கடலும்மண்ணுலகிலுள்ள திருவேங்கடமும்வண்டு கூட்டங்கள் நிறைந்து காணப்படும் திருக்கடிகையும்அடுத்துள்ள திருவிண்ணகரும் ஆகிய திருப்பதிகளில் வாசம்புரியும் பெருமான் பல எதிரிகளை அழித்துள்ளான். அதுபோன்று என்னுள்ளில் இருக்கும் தடைகளான எதிரிகளை அழிப்பது அவன் பொறுப்பாகும். அது மட்டுமின்றி என் நெஞ்சிலே புகுவதற்காக திருப்பாற்கடலிலும்திருவேங்கடத்திலும் எழுந்தருளி நித்யவாசம் செய்கின்றான். 

விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு        2343 

      திருவிண்ணகரமும்திருவெஃகாவும்நீர்வளம் மிக்க திருமலையும்பூமியிலுண்டான வைகுந்த மாநகர் போன்ற பெரிய மாடங்களை உடைய திருவேளுக்கையும்அழகிய திருக்குடந்தையும்தேன் பாயும் சோலைகளையுடைய திருவரங்க மாநகரும்திருக்கோஷ்டியூரும்தனது உள்ளங்கையாலே (மாவலியிடம்) நீர் ஏற்ற பெருமான் தங்கும் இடங்களாகும்.  போகும் போது எத்தகைய எளிமையும் சௌசீல்யமும் கொண்டவனாகத் தோன்றினானோ அது போல் இத்திருப்பதிகளில் எளிமையாகக் காட்சி தருகிறான். இத்திருத்தலங்கள் அனைத்தும் மூர்த்தி சிறப்பு பெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன. பிரம்மனின் துயர் துடைக்க நிருவரங்கம் திவ்யதேசத்தில் பாம்பணையில் மேல் பள்ளிகொண்டு நம்மையெல்லாம் காத்து வருகின்றார். சிறப்புமிக்க இத்தகைய தலங்களுக்குச் சென்று மிகவும் எளிதாக வரங்களைப் பெற முடியும் என்று கூறுகிறார் ஆழ்வார். 

தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து .     2344 

      தாழ்ந்த சடையும்நீண்ட திருமுடியும்அழகிய மழு ஆயுதமும்சுதர்சனச் சக்கரமும்சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும்பொன்னாலன அரைஞாணும் கொண்டு விளங்கும் திருமால் நாலா பக்கமும் திரளாக அருவிகள் பெருகும் திருவேங்கடமலையில் சிவபெருமானையும் தன்னுள் கலந்து காட்சி தருகிறான் என்கிறார். ‘திருமலைமே லுந்தைக்கு இரண்டுறுவு மென்றாயிசைந்து தோன்றும்’ என்று சங்கரநாராயண அவதாரத்தினை பலவாறு ஆழ்வார்கள் தமது பாசுரங்களில் பாடியுள்ளார்கள். திருமலை வேங்கடவனே ஒரு மையத்தில் இரண்டு உருவாகத் தோன்றினார். ‘அத்தியூரான் புள்ளையூர்வான் அணிமணியின் துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான்’ என்று பூதத்தாழ்வார் அருளியுள்ளார். நாகத்தின்மேல் துயில்கொள்ளும் எம்பெருமானும் அத்தியூரானும் ஒருவரே. ஹரிஹர ரூபத்தினால் காட்டியருளிய சீலம் திருவேங்கடமுடையான் பக்கலில் நன்கு பொலிகின்றது என்று கூறுகிறார்.  பரம்பொருள் ஒன்றே என்றும் வேதங்கள் முழங்குகின்றன. எல்லா ஞானிகளும் இதனையே வலியுறுத்துகின்றனர். 

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து கார்த்த
களங் கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேல் நாள்
விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு.    2349 

      திருவேங்கடமலையில் உள்ள சுனையின் நீரிலே கவிழ்ந்து பார்த்த குரங்குநீரில் பிரதிபலிக்கின்ற தனது நிழலைக் கண்டு தனக்கு எதிரியான இன்னொரு குரங்கு நீரில் இருந்து களாப் பழத்தைப் பறிப்பதாக நினைத்துகரிய களாப்பழத்தைத் தா.. என கைநீட்டும். முன்னொரு நாளில் விளாமரத்துக் கனி உதிரும்படி கன்றாக வந்த வத்ஸாசுரனை வீசி அடித்த பகவான் கண்ணனானவன் குடியிருப்பது திருமலையாகும் என்கிறார். திருவேங்கடத்தின் சிறப்பினை கற்பனை நயத்தோடு ஆழ்வார் எடுத்துக்காட்டுகிறார். கன்றாக வந்த அசுரனை அழித்த முகுந்தன் திருவேங்கடமலையில் குடிகொண்டுள்ளான். அத்தகையவனை தரிசித்து முக்தி பெறுங்கள் என்றும், அவனிடம் இகலோக அற்பப்பொருட்களை வேண்டி நிற்காமல் ஆத்ம ஞானத்தை வழங்குமாறு வேண்டிக்கொள்ளுங்கள் என்கிறார். அசுரர்களை அழித்த பெருமான் நம்மில் கொண்டுள்ள அசுர குணங்களையும் அழிப்பான் என்று நம்பிக்கையுடன் அவனை வலம்வருமாறு வேண்டுகிறார். 

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங் குழல்மேல் மல் பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும்.    2350 

      என் மகள்மலை என்று சொன்னாலே திருவேங்கடமலையைப் பற்றிப் பாடுகிறாள். சிறந்த திருத்துழாயைக் கருங்குழல் மேல் சூடிக் கொள்வதையே கற்பு என்கிறாள். அவள் வேறு தேவதைகளின் பிரசாதங்களை ஏற்பதில்லை. மல்லர்களை அழித்த நீண்ட தோள்களைக் கொண்ட திருமால் பள்ளிகொண்ட பரந்த பாற்கடலில் நீராடுவது போல் தினமும் விடியலில் புறப்பட்டு விடுகிறாள் என்கிறார் ஆழ்வார்.
எம்பெருமானை அனுபவித்தல் என்பது பலவிதமாகக் காணலாம். அவனுடைய திருநாமங்களைச் சொல்லுதல்அவனது திருக்கல்யாண குணத்தை சொல்லி அனுபவித்தல்திவ்ய சேஷ்டிதங்களை அறிந்து அனுபவித்தல்அவனது வடிவழகினை அனுபவித்துப் பாடுதல், அங்குள்ள அபிமானமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை பெருமைபடுத்திப் பேசி அனுபவித்தல் போன்ற பகவதானுபவங்களை மனதில் கொள்ள வேண்டும். அதுபோன்று ஆழ்வார்களின் கற்பனைகளில் உதித்த தாய்பாசுரம்தோழிபாசுரம்மகள் பாசுரம்பறவைகள் மற்றும் விலங்கினங்களின் மூலம் தூது விடும் பாசுரம் போன்ற பல்வேறு பாசுரங்களிலும் பகவானை அனுபவித்துப் பார்ப்பது என்பது அதன் ஏற்றத்தைத் தரும் என்பது இதன் கருத்தாகும். 

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் மிகு மதத் தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு     2351 

        திருவேங்கடமலையிலுள்ள யானையானது கபாலங்களிலிருந்து வருகின்ற மதநீரால் வாய் கொப்புளித்து ஆசமனம் செய்து மேலிருந்து கீழ்வரை அருவிபோல் பெருகும் மதநீரால் கால்களை சுத்தி செய்துதுதிக்கையால் தேனையுடைய மலரினை எடுத்து கம்பீரமான திருமலையப்பனைத் சேவித்து வணங்குகிறது என்கிறார் ஆழ்வார். வழிபாட்டுக்குச் செல்லும் அடியார்கள் கைகால்களை நீரால் கழுவிவாய் கொப்பளித்து தூய்மை செய்து கொண்டு மலர்களை எடுத்துப் போவது போன்று திருமலையிலுள்ள களிறும் பெருமானை சேவிப்பதற்கு முன் இத்தகைய நெறியினை மேற்கொள்கிறது என்கிறார். இத்தகைய மனநிலையினைக் கொண்ட ஆழ்வார் இயற்கை அழகினைத் தம் உள்ளத்து அழகுடன் குழைத்து தன் மனம் விரும்பும் பெருமாளின் வடிவத்தின் தெய்வீகமான அழகினைக் காண்கிறார். திருமங்கை மன்னனும் ‘இமயத்து நீலமணிப் பாறையில் மணமுள்ள வேங்கை மரத்தின் உதிர்ந்த மலர்ப்படுக்கையில் பிடியானது களிரோடு வண்டுகள் இசைபாட துயில் கொள்ளும் திருப்பிரிதியை அடை மனமே’ என்று கூறுகிறார்.  

களிறு முகில் குத்தக் கை எடுத்து ஓடி
ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று   2352 

      யானை தன் துதிக்கையைத் தூக்கி ஓடிவந்து கரிய மேகங்களை எதிரி யானையென்று நினைத்து குத்தஇதைக் கண்ட யாளி அந்த யானையின் மேல் பாய்ந்து அதன் ஒளி வீசும் கொம்பை முறித்து அது வாய்விட்டு அலறி விழும்படி கொன்று அங்கேயே நின்று பெரிதாக முழக்கம் செய்கின்றது. அத்தகைய இடமான திருவேங்கடமலையே! என்கிறார். முன்னாளில் இளங்கன்றை விளாமரத்தின் மீது வீசி விழவைத்த பகவான் குடியிருக்கும் நற்குன்றும் இத்திருமலையே என்கிறார் ஆழ்வார். இப்பாசுரத்தில் பெரிய யானைக்கும் கரிய மேகங்களுக்கும் ஒரு ஒப்புமையைக் காட்டியுள்ளார். திருமலையிலுள்ள யானையானது மலைமுகட்டில் படிந்திருந்த மேகத்தை தன் எதிரியாக நினைத்து அதனைக் கண்டு மிகவும் ஆக்ரோஷத்தோடு தாக்க எண்ணித் தன் துதிக்கையினால் குத்த இதனை ஒரு யாளி கண்டு இக்களிறுக்கு இவ்வளவு மதமா என்று சினந்து ஓடிவந்து அந்த யானையின் மேல் பாய்ந்து அதன் கொம்பை முறித்தெடுத்து அது வாய்விட்டு அலறிக்கொண்டு விழும்படியாகக் கொலையும் செய்து அதன் சீற்றத்தைத் தணித்துக் கொண்டது.  பின் அவ்விடத்திலேயே நின்று கொண்டு மற்ற மிருகங்களும் அஞ்சும்படி பெருமுழக்கம் முழங்கிற்று. 

குன்று ஒன்றின் ஆய குற மகளிர் கோல் வளைக் கை
சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங் குமரர் கோமான் இடம்.     2353 

      திருவேங்கடமலை தவிர வேறோர் இடமும் அறியாத குறத்தியர்கள் அம்மலையினை விட்டு ஒரு நொடிப்பொழுதுங்கூட கீழிரங்காமல் அங்கேயே நித்யவாசம் செய்கிறார்கள். அழகிய வளையல்களை அணிந்த இம்மங்கையர் தனது கைகளாலே ஊஞ்சலாட தன் கைகளாலே மூங்கில் மரங்களை வளைப்பார்கள்.  அந்த மூங்கில்களோ சந்திர மண்டலம் அளவு ஊடுருவி இராகுவைத் தகர்த்தெறிந்து சந்திரனை மகிழுமாறு அதனை விடுவிக்கும். அத்தகைய திருவேங்கடமலையே மேலுலகிலுள்ள சிரஞ்சீவிகளான தேவர்களின் தலைவனான பரந்தாமன் எழுந்தருளியிருக்கும் க்ஷேத்திரமாகும். திருமலையில் வளர்ந்துள்ள மூங்கில்கள் சந்திரமண்டலத்தையும் தொட்டுவிடும் உயரத்தில் உள்ளது என்பதை ஆழ்வார் கூறுகிறார். இதனை மற்றொரு கோணத்தில் பார்த்தால் நிலவின் ஒளி தம்மீது படவிடாமல் இம்மூங்கில் நெடிதுயர்ந்து வளர்ந்து அதனைத் தடுத்துக் கொள்வதால் குறத்தியர்கள் அம்மூங்கில் மரங்களிலேறி மூங்கிலைச் சாய்த்து நிலவின் ஒளியினை தம்மீது படரவிடுவார்கள் என்பது இப்பாசுரத்தில் கற்பனையாகத் திகழ்கின்றது.   

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேர் ஓட்டி
வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத்தன்னால் உள்ள நலம்      2354 

      காயத்ரிப்ருஹதிஉஷ்ணிக்ஜகதீத்ருஷடுப்அநுஷடுப்பங்க்தி என்கிற ஏழு சந்திர சூரியர்களும் ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டிய சூரியனது ரதத்தை மேரு பர்வதத்திற்கு இடப்பக்கமாகவும்வலப்பக்கமாகவும்  அந்தர்யாமியாக இருந்து கொண்டு நடத்துகின்றான். எம்பெருமானுக்கு சூரிய மண்டலமும் ஒரு வாசஸ்தலமாகத் திகழ்கின்றது. அத்தகைவன் வடதிசையிலுள்ள திருவேங்கட மலையில் கோயில் கொண்டுள்ளான். குன்றமேந்திக் குளிர்மழைக் காத்தவன்’ என்ற திருவாய்மொழி பாசுரத்தில் ‘பரன்சென்று சேர் திருவேங்கடமாமலை’ என்ற வரியில் ‘சென்று சேர்’ என்ற பதத்தில் அடியவரான நாம் சென்று சேரவேண்டிய இடம் வேங்கடம் என்கிறார்.  இதில் ‘சென்று’ என்பது உடல் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார்.  ‘சேர் என்பது மனம் சார்ந்ததாகக் குறிப்பிடுகிறார். அடியவரின் உடலும் உள்ளமும் ஒத்துழைத்தால்தான் இறைவனைப் பற்ற இயலும். உய்வுக்கான பாதையில் பயணிக்க முடியும். ஆசையோடு குடக்கூத்தாடிய கண்ணனின் ஆபரணங்கள் அணிந்த அவனது திருப்பாதங்களின் பெருமைகளை நாளும் சொல்லி மகிழ்வதே நாம் நாவினால் கொள்ளக்கூடிய பெரும் பேறாகும். அவ்வாறு அவன் பாதங்களைப் போற்றப் போற்ற நம் உள்ளம் தூய்மையடைந்து வலிமைபெறும். இதனால் மனபலவீனத்தையும்உடல்பலவீனத்தையும் நாம் தடுக்கலாம் என்பது இப்பாசுரத்தின் உயரிய கருத்தாகும். 

சார்ந்து அகடு தேய்ப்பத் தடாவிய கோட்டு உச்சிவாய்
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலை சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு.     2356 

      பரப்பளவும்சிகரங்களும் கொண்ட திருமலை உச்சியிலே, தன் வயிறு உறாயும்படி செல்லும் சந்திரனிடமுள்ள முயல் போன்ற நிழலை கோபமுள்ள வேங்கைப்புலி முயலென்று நினைத்துப் பார்க்கும் திருவேங்கடமலையே கண்ணபிரானுடைய வாசஸ்தலமாகும். அங்கு வளர்ந்து செழிப்புற்ற வேங்கை மரங்கள் மணம் வீசும் என்கிறார் ஆழ்வார். திருமலையின் உயரமானது சந்திரனைத் தொடுமளவு மிகவும் உயர்ந்துள்ளதாக வியப்புடன் ஆழ்வார் கூறுகிறார். நிலவில் தோன்றும் கரிய திட்டுக்களை கவிஞர்கள் பலவிதமாக வர்ணிப்பார்கள். சிலர் அதனை மான் என்பர்ஒருசிலர் அதனை முயல் என்பர்.  ஆழ்வார் முயல் என்ற பொருளைக் கொண்டு இப்பாசுரம் இயற்றியுள்ளார். ஆகாசத்தில் திரிகின்ற நிலவானது திருமலையின் சிகரத்து நுனியில் தனது கீழ்வயிறு தேயும்படியாக இதில் தொடர்புகொண்டே செல்லுகின்றதாம். அப்போது அவனது மடியிலுள்ள கரிய திட்டுக்களை முயலாகக் கருதி  திருமலைமீது திரிகின்ற வேங்கைப்புலி கண்டு அதனைக் உணவாகக் பிடிக்கவும் முடியாமல் விட்டுப் போகவும் முடியாமல் உற்றுப் பார்த்தபடி நிற்கின்றது. இத்தகைய திருமலையில் வேங்கை மலர்களின் மணம் கமழ கண்ணபிரான் எழுந்தருளியுள்ளான் என்பது இப்பாசுரக் கருத்தாகும். 

முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்து உழுசால் பைந்தினைகள் வித்த *தடிந்து எழுந்த
வேய்ங் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு .    2370 

      வாழ்நாளில் இறுதியை எதிர்நோக்கி இருக்கும் வயதான குறவர்கள் வலிமை குன்றிபோய் வயோதிக் காலத்தில் தன்னுடைய மீதி காலத்தைக் கழிப்பதற்கு மூங்கில் காடுகளில் அலைந்து திரிவர். அங்குள்ள காட்டுப் பன்றிகள் செருக்குடன் மூங்கில்கள் வீழும்படி நிலத்தை உரசி உழுது செல்லும். அத்தகைய  வளமையான நிலங்களைத் தேர்ந்தெடுத்து புதிய தினைகளை மூங்கில் புதர்களில் விதைப்பார்கள். அத்தினைகள் நன்கு செழித்து வளர்ந்தவுடன் களைந்த பின்பும் அம்மூங்கிலானது ஓங்கி வளர்ந்து  வானத்தை முட்டும் இடமாகத் திருவேங்கடமலைத் திகழ்கின்றது என்கிறார் ஆழ்வார். இதன் கருத்தானதுஒரு பன்றி உரசி சென்ற  மூங்கிலானது நெடிதுயர்ந்து வளர்ந்து வானத்தைத் தொடும் என்றால் திருமலையின் நிலவளமும் நீர்வளமும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதைச் இங்கு சுட்டிக் காட்டுகிறார். அத்தகைய வளம் மிக்க வேங்கடமலையானது முன்னொரு நாள் இனிய புல்லாங்குழலை வாயில் வைத்து ஊதிய கண்ணபிரான் குடியிருக்கும் திருமலையாகும் என்கிறார். 

 நம்மாழ்வார்                                                                                                              திருவிருத்தம் 

காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இந் நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே.    2485 

      நெடிய குன்றுகளையுடைய நாட்டுக்குத் தலைவரான என் நாயகர் இன்று என்னிடம் நடந்து கொள்ளும் விதமே வேறாக உள்ளது. அவரிடம் காணப்படும் நடவடிக்கைகளையும்பேசும் வார்த்தைகளையும் பார்த்தால் இவர் என்னை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறார் என்று தெரிகிறது. பெருமையுள்ள கோவர்த்தன கிரியைத் தாங்கிய கண்ணபிரான் உறையும் குளிர்ச்சியான சிறந்த திருவேங்கட மலையில் வானவர்கள் நம்பும் உயர்ந்த சிகரத்தை அடைந்து அங்கு பொருள் சம்பாதிக்கப் போகிறார். அதற்காக அவர் கற்றுள்ளதுதான் என்னிடம் பேசும் பசப்பு வார்த்தைகள் என்பதை அறிந்து கொண்டேன். அதனால் என்னை பிரிந்துதான் செல்ல வேண்டுமோ என்று தலைவி கேட்பது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது.
      ஆழ்வார் எம்பெருமானுடைய பிரிவை ஆற்றாது வருந்தியிருந்த நிலையிலே குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன் சென்றுசேர்  திருவேங்கடமாமலையிலே நிகரிலமர் முனிக்கணங்கள் விரும்பும் உயர்ந்த சிகரத்தைச் சென்று சேர்ந்து அங்கு வைத்தமாநிதியாம் பரம்பொருளைத் தேடிப் பெறும் பொருட்டுத் திவ்யதேச யாத்ரையில் திருவேங்கடத்துக்குச் செல்லத் தொடங்கி  பாகவதர் இவர் அனுமதி பெற்று விடைகொள்ளவேண்டி இவர்பக்கலிலே பலவாறு பணிந்து வணக்கத்தோடு சில வார்த்தை விண்ணப்பஞ்செய்ய, ‘இது இவர்கள் பிரிவுக்கு அடியாம்  என்றறிந்து,  பொறுத்தருளாமல்  பாகவதரோடு கூடியிருக்கும் இருப்பொழிய வேறு நினைப்பதும் தவறு என்று பாகவத ஸஹவாஸத்தின் சிறப்பு இப்பாட்டால் வெளியிடப்படுகிறது. 

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக்கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உறையீர் நுமது
வாயோஅது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோஅடும் தொண்டையோஅறையோ இது அறிவு அரி.   2487 

      மாயவனின் திருவேங்கட மலையில் வாழும் பூங்கொடி போன்ற பெண்களே! எனது காதல் நோய் பற்றி நான் சொல்லக் கேட்கக் கூடாதாஉங்கள் வாயழகு என்னை வருத்துகிறது. அதுமட்டுமல்லாமல் கொடிய பாவம் செய்த நானும் என் கிளியும் நீங்கள் மிழற்றும் ‘ஆயோ’ என்ற கிளிகளை விரட்டும் இனிய சொல்லுக்கு உருகுகிறோம். உங்கள் வாயோசொல்லோகோவைக்கனி போன்ற உதடுகளோ,  இதில் மூன்றில் எது என்னை வேதனைப் படுத்துகின்றது என்று தெரியவில்லை என்கிறாள். இதில் பாகவதர்களைக் காதலியாகப் பாவித்து உருகுவது போல் அமைந்துள்ளது. இவ்வார்த்தைகள் அனைத்தும் ஆழ்வார் பகவானிடத்தில் கொண்டுள்ள பேரன்பைக் குறிக்கின்றது. இதே போன்று நாமும் பகவானிடம் பக்தி கொள்ள வேண்டும் என்பதே ஆழ்வார் நமக்குச் சொல்லும் அறிவுரையாகும்.
      நாயகியையும்  தோழியையும் நோக்கி நாயகன் சொன்னதாவதுஎனது பிரிவால் நீங்கள் நோவுபடுகிறீரில்லை; நோவுபடுகிறவன் நானாயிருக்கிறேன், நான் படும் நோயை அந்தோ! காது கொடுத்துக் கேட்கின்றீரில்லையே! எனது நோயை நீங்கள் பரிஹரிக்க வேண்டா; காது கொடுத்துக் கேட்பதே போதுமே என்கிறார். 

கயலோ நும கண்கள்என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தைகடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே.   2492 

      களிற்றின்  வலிமை கொண்ட தலைவன் தோழியிடம், இந்தப் பக்கமாக யானைகள் ஓடி வந்தனவோ என்று வினவ, தோழி திகைத்துநிற்க,  உங்களின் விழிகள் கயல் மீன்களாஎன்று தொடர்பில்லாமல் தலைவன் கூற, அறிமுகமற்ற என்னைப் புகழ்கின்றீரே! இத்தனை நாட்களாக உங்களைப் பார்க்கவோ எங்களிடம் இதுவரை நீங்கள் பரிச்சியமோ ஆகவில்லையே. அயலார் அறிந்தால் இதைத் தகாதபேச்சு என்பார்கள் என்று கூறுகிறாள். சமுத்திர நீரை உண்ட மெதுவாக நகரும் காளமேகம் போன்ற நிறம் கொண்ட பகவானின் இருப்பிடமான, பல சோலைகளையுடைய திருவேங்கடமலையில் தோட்டங்களில் காவல் புரிந்து வருகிறோம். ஆதலால் நீர் இங்கு எம்முடன் நெடும் பொழுது வீண் பேச்சுப் பேசி நிற்கலாகாது. என்று உரைக்கிறாள் என்ற பொருளில் நோழி தலைவனிடம் வினவுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.
    நம்முள்ளில் இருக்கும் ஆத்மாவை நாம் பரிச்சியம் கொள்ளாமல் அதனுடன் இருந்து வருகிறோம். உரிய காலம் வரும்போது நாம் உடல் அல்ல ஆத்மா என்ற தெளிவு பிறக்கின்றது. இத்தகையதொரு பொருளினை மேற்கண்ட நிகழ்வுடன் ஒப்புநோக்கி பாசுரவாயிலாக ஆழ்வார் நமக்குத் தந்துள்ளார்.     

இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலைமேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமய
மிசை மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே?     2508 

      தனக்காக பெருமானிடம் தூது போகாத மேகத்திடம் தலைவி இறங்கிப் பேசும் பாசுரமாக அமைந்துள்ளது. தன்னைப் பிரிந்து திருமலையில் சென்று தனியாக வசிக்கும் பெருமானைப் பற்றி மேகத்திடம் குறிப்பிடுகிறாள். அழகிய பொன்னும் சிறந்த ரத்தினங்களும் திசைகள் தோறும் மின்னல் போல் பிரகாசிக்கும் இடமானவலிய அடிவாரத்தையுடையதிருவேங்கடமலையின் சிகரத்தை நோக்கி மின்னிக்கொண்டே செல்லும் மேகங்களே! நீங்கள் எனக்காகத் தூது செல்ல இசைய வேண்டும் என்று வேண்டினால், அதற்கு உடனே சம்மதித்துச் செல்லவில்லை. நீங்கள் என் தலைமீதாவது  உங்கள் பாதங்களை  வைத்துச் செல்லுங்கள் என்றால்  அதுவும் செய்யலாகாதோ? என்று தலைவியின் நிலையில் ஆழ்வார் வினா எழுப்புகின்றார். 

ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நம் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே.   2527 

      தேரோட்டிக்கு உத்தரவிடும் தோரணையில் இப்பாசுரமானது அமைந்துள்ளது. சாரதி...! அழகிய நெற்றியையுடைய என் தலைவி தன் மேனி நிறம் பசலை அடையுமுன் நாம் அங்கு செல்ல நமது தேரை விரைந்து செலுத்து. எங்கே என்றால் தேன் அருந்திய வண்டுகள் பாடுகின்ற வைகுந்த வாசன் நீண்ட தன் திருமுடியில் குடியிருக்கும் வெண்முத்து மாலையைப் போல் அடிவாரத்தில் சேரும்படி அருவிகள் கொட்டுகின்ற பெரிய திருவேங்கடமலைக்கு நாம் செல்ல வேண்டும் என்று சாரதிக்கு தலைவன் உத்தரவிடுகிறான். திருவேங்கடமலைக்கு சென்றால் எல்லாத் துன்பங்களுக்கும் ஒரு முடிவு வந்து விடும் என்று நமக்கு கூறுவது போன்று  ஆழ்வார் கூறுகிறார். நம்முடைய துன்பங்களைத் தீர்க்கும் மருந்து திருவேங்கடமலையே என்பதை தெளிந்து அப்புண்ணிய க்ஷேத்திரத்தை நாம் அடைய வேண்டும் என்பதாக ஆழ்வார் இப்பாசுரத்தை அருளியுள்ளார். 

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூங் குழல் குறிய
கலையோ அரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம்
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே    2537 

      திருத்தாயாரானவள் தன் மகளின் பூரணத்துவம் பெறாத நிலை பற்றி இங்கு கூறுகிறாள். என் மகளுக்கு இன்னும் தனங்கள் பூரணமாக வளரவில்லை. இவளது மென்மையான கூந்தல் குட்டையாகவும் உள்ளது. இன்னும் ஆடையை இடுப்பில் தங்கும்படி கட்டிக் கொள்ளத் தெரியவில்லை. நாவோ திருத்தமில்லாமல் மழலைச் சொற்களையே பேசுகிறது. இவள் கண்களோ கடல் சூழ்ந்த உலகமெல்லாம் விலைக்கு வருமா என்பது போல் மிரண்டு பார்க்கின்றன. இப்படிப்பட்ட  சிறுமியான இவள் திருவேங்கடமலை எனது தலைவனின் இருப்பிடம் என்று சொல்லக் கற்றிருக்கிறாள். பருவம் அடையாத பெண் பகவானைத் தன் தலைவன் என்று கூறுவதிலிருந்தே இது காம இச்சை தொடர்பான அவா இல்லை என்பது நன்கு புரிகிறது.  

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரரைச் செற்ற
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணைமல.    2544 

      பகவான் கருடனின் மீதேறிச் சென்று அசுரர்களை அழித்தவன்திருமகள் கணவன். பசுக்களைக் காத்து மேய்த்தவன். இவன் வீற்றிருக்கும் திருவேங்கட மலையில் அழகான பெண் அன்னம் போன்ற என் தலைவி வாழ்கிறாள். அவள் கண்கள் இருண்டும் ஒன்றுக்கொன்று துணையான தாமரை மலர் போல் இருக்கும். செங்கழுநீர் பூகருநெய்தல் பூவேல், கயல்மீன் மற்றும் கண்களுக்கு உவமையாக கூறும் பலவற்றையும் இவள் கண்கள் வென்றுவிடும். இவை இரண்டும் என்னைத் துன்புறுத்துகின்ற அளவை என் உயிர் தாங்காது என்று தலைவன் கூறுவது போன்று அமைந்துள்ளது. அவளுக்கு இத்தகைய சக்தி எப்படி வந்தது. அசுரரை அழித்த திருவேங்கடத்தான் வாழும் திருமலையில் இவள் வசிப்பதால் இத்தகைய சக்தி பெற்று விட்டாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

உறுகின்ற கன்மங்கள் மேலன ஓர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந் நொந்து பெறார்கொல்துழாய் குழல்வாய்த்
துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே.    2558 

      தலைவியின் விரகதாபத்தை மாறுபட்டு புரிந்து கொண்ட தாயின் நிலையை இப்பாசுரத்தின் மூலம் தெரிவிக்கிறாள். இவளுடைய தாயார் இவளுக்கு ஏற்பட்டுள்ள நோயின் காரணத்தை ஆராய்ந்து பார்க்காமல் மகளிடம் நடத்துகின்ற வெறியாட்டு செயல்கள் முதலியவற்றை மேன்மேலும் நடத்துகின்றாரே.! இவளைப் பெற்று வளர்த்த தாயார் உடம்பு வருந்தி பெறவில்லையோஇவளது கூந்தலிலே பரந்தாமனின் திருத்துழாயைச் சூட்டுவாரில்லையா.?  பழமையான திருவேங்கட மலையில் இவளைக் கொண்டு போய் விடுவது பற்றி இவர்கள் ஆலோசிக்கவில்லையா..இப்படியே போனால் இவளது மென்மையான சரீரம் விரக வேதனையால் கருகி ஜீவன் பிரிந்துவிடுமே என்று தாயார் கூறுகிறாள்.  மகளின் நிலையை சரிவர புரிந்து கொள்ளாத தாயாகத் திகழ்கிறாள் இத்திருத்தாயார்.  

நம்மாழ்வார்                                                                                                   திருவாய்மொழி 

       கண்ணா வான் என்றும்
       மண்ணோர் விண்ணோர்க்குத்
       தண்ணார் வேங்கட
       விண்ணோர் வெற்பவனே.     2754. 

மண்ணுலகத்தார்க்கும்  விண்ணுலகத்தார்க்கும் என்றும் கண் போன்றவன் கண்ணன்.  குளிர்ச்சி நிறைந்த  திருவேங்கடம் என்கிற வாசஸ்தலத்தில்  நித்யசூரிகளுக்கு இடமான  திருமலையை உடையவன் அவன். எல்லோருக்கும் கண்ணாக இருந்து காப்பவனே! வானத்தைப்போல எப்போதும் மேலோங்கி விளங்குபவனே! பூமியில் உள்ள மனிதர்களுக்கும், விண்ணுலகத் தேவர்களுக்கும் எப்போதும் குளிர்ச்சி தந்து அருள் வழங்குபவனே! திருவேங்கடமலையில் வாழும், தேவர்கள் வணங்கும் தெய்வமானவரே! என்கிறார் ஆழ்வார். 

எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம்துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா வான் ஏறே இனி எங்குப் போகின்றதே?    2848. 

      துன்பங்களைப் போக்குகின்ற திருமலையில் வந்து நின் ஸ்வாமித்துவத்தைக் காட்டி என்னை சேஷத்துவத்தில் நிறுத்தினவனே! பிராட்டியின் சேர்க்கைக்கு தடையான இராவணாதியர்களை அழித்தவனே! ஏழு மராமரங்களை ஒரே அம்பில் துளைத்த வலிமை மிக்கவனே! இலங்கையில் வெற்றி பெற்று அதனால் புதிய யௌவனத்தை அடைந்தவனே! துழாய் மாலை அணிந்தவனே! தன் இனிமையை நித்யசூரிகள் அனைவரும் அனுபவித்து, அதனால் வந்த மேன்மை தோன்றுமாறு இருப்பவனே! இத்தகைய பெருமைகளைக் கொண்ட உன்னை என் மனத்தில் பதிய வைத்தேன்.. அமுதம் போன்றவனே! உன் புகழிலும் பெருமைகளிலும் தோய்ந்திருக்கும் என்னவிட்டு நீ எங்கே போகமுடியும் என்கிறார். பகவானின் நினைவில் நாம் இருந்தால் அவன் நம்மைத்தேடி வந்தாகவேண்டும். அப்படி வந்தவன் நம்மை விட்டு நீங்கவும் முடியாது என்பதைத் தெரிவித்து இந்த உபாயத்தை நாம் கடைபிடித்து நம் துன்பங்களிலிருந்து விடுபடவேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும். 

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமா தண் வேங்கடம்
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே!   2849 

      எங்கும் பரவியிருக்கின்ற புகழையுடைய மூன்று உலகங்களுக்கும் தலைவனே! குளிர்ந்த வேங்கடத்தில் எழுந்தருளி இருப்பவனே! மணம் வீசுகின்ற திருத்துழாய் மாலையை அணிந்தவனே! இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் தாயும், தந்தையும், உயிரும் ஆகின்றவனே! உன்னை நான் அடைந்து விட்டேன். இனி உன்னை விடமாட்டேன் என்கிறார். பெருமாள் தர்மத்தையுடையவர். தன்னிடம் சரணாகதி புகுந்தவனிடம் அன்பு கொண்டவர். எல்லோராலும் அறியப்பட்டவர். ஆகையால் பிழைத்திருப்பதற்கு நீ விருப்பம் கொண்டால் உனக்கு அந்த ஸ்ரீராமனோடு நட்பு உண்டாக வேண்டும் என்று பகைவர்களும் போற்றும் இராமனின் திருவடிகளைப் போற்றுவாயாக என்பது இதன் கருத்தாகும். மேலும் ஆழ்வார், உன்னை இதயத்தில் சுமக்கும் பேற்றினைப் பெற்றேன். உன்னை விடுவது எளிதான காரியமன்று. நான் பகவானின் பெருமைகளைச் சுமக்கின்றேன். நமது பிறவிப்பிணியைப் போக்குவதற்கு அவனை சரணாகதி புரிதலே இதற்கு உபாயம் என்பதை ஆழ்வார் இங்கு வலியுறுத்துகிறார். அதனால் பிறவிப் பிணியை அழித்தேன் என்கிறார்.     

பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே.   2977. 

      உந்தித் தாமரையை உடையவனே!, மிக்க வலிமை உடையவனே! என் இறைவனே! என்னை தனக்கு அடிமையாகக் கொண்டு எனக்கே தன்னைக் கொடுத்த கற்பகமே!, எனக்கு அமுதம் ஆனவனே!. கரியமேகம் போன்ற திருவேங்கட மலையை உடையவனே!. நித்யசூரிகளுக்குத் தலைவனான எம்பெருமான் எனக்குத் தந்தையாக உள்ளான். தாமோதரன் என்று அழைக்கும்போது சிஅத்யந்த சுலபனாய் இருக்கின்றான் என்கிறார். என்னிடத்திலேயே சித்தத்தை வைத்தவன் மகேதசித்தன் (உயர்ந்த ஞானியானவன்) என்றவாறு உள்ளான். கார்முகில் போலும் வேங்கட நல்வெற்பன், கொடுத்ததை நினையாது கொடுக்கும் மேகம் போன்ற தன்மையைக் கொண்டவனாக பெருமான் திகழ்கின்றான். 

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்யவேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.    2919 

      பெரிய ஆரவாரத்தை எழுப்பும் அருவியையுடைய திருவேங்கடமாகிற திருமலையில் உள்ளான். அழகையுடைத்தான ஒளிமயமான திருவேங்கடத்தையுடைய நம்முடைய குலநாதனுக்கு நாம் காலமெல்லாம் எல்லாவிடத்திலும் உடனிருந்து, எல்லா நிலைகளிலும் பிரியாமல் நின்று, ஒன்றும் நழுவாதபடி எல்லாக் கைங்கர்யங்களையும் செய்து முடிக்க வேண்டும் என்கிறார் ஆழ்வார். நிலைத்து வாழும் சோதி உருவான என் தந்தை தந்தைக்கும் தந்தையான திருவேங்கடத்தானின் அருகிலேயே காலகாலமாக என்றைக்கும் நிலைத்து வாழ்ந்து எவ்வித குற்றங்களும் இல்லாத அடிமைதிறத்தை நாங்கள் செய்ய வேண்டும் என்ற கருத்தில் ஆழ்வார் கூறுகிறார்.

       கம்பீரமாக சப்திக்கும் பெரிய அருவிகளையுடைய   திருவேங்கடமலையில் அழகான  ஒளிமயமான  குலநாதனான  என் தந்தைக்கு ஒப்பான பெருமானை நாம்  ஓய்வில்லாது இடைவிடாமல்  எல்லாக் காலங்களிலும்  எங்கும் கூடவே இருந்து  எப்போதும் பிரியாது  குறைவற்ற  கைங்கர்யம்  செய்ய வேண்டும் என்று ஆழ்வார் விரும்புகிறார். 

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே.   2920 

      நித்யசூரிகள் தங்கள் தலைவரான சேனை முதலியாரோடு சேர்ந்து தூவின புஷ்பங்கள் செவ்விக் குன்றாதிருக்கப்பெற்ற திருமலையில் அந்தமில்லாப் புகழுடையவனான கார்மேக நிறத்தவனான திருமலை வேங்கடவன் என் தந்தை, தந்தைக்குத் தந்தை என்று ஏழேழு தலைமுறைக்கும் குலதெய்வமாக விளங்குகிறான். ஆழ்வார்கள் பல பாசுரங்களில் அடியார்க்கு அடியாராகத் தன்னைத் தாழ்த்தி அடியார்களின் பெருமைகளைக் கூறுவது போல் ஏழு தலைமுறைக்கும் தந்தையாக விளங்குகிறான் என்று எம்பெருமானின் சர்வேஸ்வரத்தை வாயாரப் புகழ்கின்றார். பெருமான் நம்மிடம் கொண்ட பந்தமானது உலகத்து பந்தமாக இல்லாமல் என்றும் நித்யமாக உள்ளது. நாம் என்றும் பெருமானுக்கு பந்துக்களாக இருந்து வருகிறோம் என்பதை உணர்த்துகிறார். 

அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெள் நிறைச்சுனை நீர்த் திருவேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே.   2921     

      குறிஞ்சி நிலத்துத் தலைவனான எம்பெருமான் பெருமையுடையவன், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவன், அழகிய செந்தாமரை போன்ற திருக்கண்களை உடையவன், சிவந்த கனி போன்ற திருவதரத்தையும், கரிய மாணிக்கம் போன்ற வடிவினையுடையவன், தெளிந்த நீரைக் கொண்ட சுனைகளையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளியுள்ள, அளவிற்கரிய இயற்கையில் அமைந்த மிக்க புகழினையுடைய நித்யசூரிகளுக்குத் தலைவனாகத் திகழ்கிறான் ஸ்ரீநிவாசன். தனக்குத் தானே ஆபரணமாய், மலர்த்தி செவ்விக் குளிர்த்தி நாற்றங்களாலே (நறுமணம்) தாமரையை ஒப்பாகும்படியான கண்ணழகைக் கொண்டவன். கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ’ என்று ஆண்டாள் பெருமானின் கண்களை ஏற்றத்துடன் பாடியிருப்பது இங்கு நினைவு கொள்ள வேண்டும். 

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்த பரம் சுடர்ச் சோதிக்கே        2922 

      பாவியான அடியேன் நற்குணங்கள் ஏதும் இல்லாதவனாக இருக்கிறேன். இப்படிப்பட்டவன் தேவர்களின் தலைவன் என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட என் மீது பாசம் வைத்த ஒளி வடிவினனான திருவேங்கடத்தில்  உறைபவனுக்கு அதுவா புகழ். புனிதர்களாலும் முழுமையாக புகழ முடியாது என்று கூறுகிறார் ஆழ்வார். பெருமான் நித்ய சூரிகளுக்குத் தலைவன் என்று சொல்வேன். எந்தப் பரம்பொருளை எல்லா வேதங்களும் சொல்கின்றனவோ, எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் உள்ளனவோ அத்தகைய ஆனந்த குணத்தையுடைய பெருமான் திருவேங்கடத்தில் வாசம் செய்கிறான். மூன்று உலகினரும் தொழும் ஆதிமூர்த்தியாக எம்பெருமான் விளங்குகிறார் என்று ஏற்றத்துடன் பெருமானைக் கூறுகிறார் ஆழ்வார். 

சோதி ஆகி எல்லா உலகும் தொழும்
ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ?
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
தீது இல் சீர்த் திருவேங்கடத்தானையே?    2923 

      வேதங்களையறிந்த அந்தணர்களுடைய எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற அமிர்தம் போன்ற இனிமையுடையவனை, குற்றமற்ற புகழையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற பேரொளியுருவனாகி எல்லா உலகத்தாராலும் தொழப்படுகின்ற முழுமுதற்காரணப் பொருளாய் விளங்குகின்ற வடிவையுடையவன் என்று கூறினால் அது பெருமையாகக் கொள்ளப்படும். தான் எம்பெருமானிடத்தில் அன்பை வைத்தது போன்று என்னிடத்திலும் தன் சம்பந்தமான அன்பை உண்டாக்கினான். கார்மேக வண்ணத்து நடுவில் மின்னற் கொடி போன்று ஒளியுடன் கூடியதாகவும், நீவாரதானியத்தின் (துறவிகள் உண்ணக்கூடிய ஒருவகையான காட்டு அரிசி) வால் போன்று மெல்லியதாகவும், உருக்கிய தங்கம் போன்று காந்தியை உடையதாகவும் இருக்கிற ஒரு சிகையிருந்தால் அது பரமாத்மாவின் சரீரத்திற்கு ஒப்பாகலாம் என்ற உபநிடதக் கருத்துகளை ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் காணலாம். 

வேம் கடங்கள் மெய்மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே    2924 

      திருமலையில் நித்யவாசம் செய்தருள்கின்ற பெருமானுக்கு நமர் என்று அழைக்கப்படுகிறார். பெருமானுக்கு இடைவிடாமல் கைங்கர்யம் புரியும் கடமையை தரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அனுபவித்தே தீர்க்க வேண்டிய பாபங்களும், இனி விளையக்கூடிய பாபங்களும் மற்றும் சகல பாபங்களும் வெந்து போய் அழிந்துவிடும். அடியவர்களான தாங்கள் தங்கள் ஸ்வரூபத்திற்கு தகுதியானவற்றையே செய்யப் பெறுவீர்கள் என்கிறார். அந்தணன் பிறக்கும்போதே ரிஷிகள், தேவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு கடன்பட்டவனாக இருக்கிறான். இந்தக் கடன்கள் வேங்கடத்தில் உள்ளவர்களுக்கு நம: என்று சொன்னாலே பாபங்கள் தீர்ந்துவிடும் என்று ஆழ்வார் கூறுகிறார். நான் எனக்கு உரியவனல்லேன், எம்பெருமானுக்கே உரியவனாவேன் என்ற நினைவுடன் செயல்படுவதால் கைங்கர்யத்திற்கு தடையான பாபங்கள் விலகிவிடும் என்கிறார் ஆழ்வார். 

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்கு
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே    2925     

      நன்றாக மலர்ந்துள்ள பெரிய மலர்கள், தெளிந்த தீர்த்தம், மேன்மையான தீபம், தூபம் போன்ற அனைத்தையும் கைகளில் ஏந்திக் கொண்டு எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் உள்ள நித்யசூரிகள், தங்கள் தலைவரான சேனை முதலியாருடன் கூடிவந்து, தடையில்லாத அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதான ‘நம:’ என்பதை உச்சரித்து, அவர்கள் தங்களது ஸ்வரூபத்தை (நிலையை) விளக்கச் செய்துகொள்ளும் இடம் - திருவேங்கடம் என்னும் திருநாமம் கொண்டதாய், பரந்து விரிந்துள்ளதாய் இருப்பதாகும். அப்படிப்பட்ட அந்த திருமலையானது, அவனை அடைய வேண்டும் என்ற ஆசை கொண்ட நமக்கு, அவனை அடைதல் என்ற ரூபத்தில் உள்ளதான மோட்சம் நல்கும் இடமாக அமைகிறது. ஒரு கருமுகை மாலையேயாகிலும் இதைக் கண்டருளக்கடவனே! சார்த்தியருளக்கடவனே! நம்மை விசேஷக் கடாக்ஷம் பண்ணியருளக்கடவனே! அன்பின் மிகுதியால் சாற்றப்பட்ட மாலை பெருமானுக்குக் கனத்து காணப்படுகிறது. எனவே ‘சுமந்து’ என்று குறிப்பிடுகிறார். 

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே    2926 

      கோவர்த்தனம் என்னும் பெருமலையை தன் ஒரு விரலால் தூக்கிப் பிடித்து கடும் மழையிலிருந்து கோவர்த்தன மக்களையும் ஆநிரைகளையும் காத்தவன், முன்காலத்தில் தனது ஒரு திருவடியால் உலகங்களை அளந்தவன், அனைத்து உயிர்களையும் ரக்ஷிக்கும் எம்பெருமான் அருள்பாலிக்கும் இடம் திருமலையாகும். இப்பெருமானைத் தொழுதோமேயானால் பாவங்கள் அத்தனையும் விலகிப் போகும் என்கிறார் ஆழ்வார். இங்கு செல்லுதல் என்பது உடல் சார்ந்தது. சேர்தல் என்பது மனம் (ஆன்மா) சார்ந்தது. அடியவரின் உடலும் உள்ளமும் ஒத்துழைத்தால் தான் இறைவனைப் பற்ற இயலும். உய்வுக்கான பாதையை பயணிக்க முடியும். பிறப்பின் போது ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகின்றதோ அவ்வுடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கு ஏற்பவே சுகதுக்கங்களை அடைய முடியும். மெய்ஞானத்தை உணர்வதில் உடலெனும் இக்கூடுக்கும் பங்குண்டு என்ற கருத்தும் புலப்படுகிறது.     

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப்பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள் மலர் ஆம் அடித்தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.   2927 

      நோய்களை அழியும்படி செய்கின்றவனான திருவேங்கடமுடையான் அன்றலர்ந்த செந்தாமரை மலர் போன்று காட்சி தருகிறான். ஒவ்வொரு நாளும் வாயால் போற்றியும் மனத்தினால் துதிக்கவும் செய்யும் அடியார்களை, முதுமை, பிறப்பு, இறப்பு ஆகியவற்றிலிருந்து நிரந்தர விடுதலை அளித்து தன்னோடு ஏற்றுக்கொள்வான். திருமலை மட்டுமே நம் வினைகளைத் இடமாக அமைந்துள்ளது. நம் விரோதிகளையும் போக்கி  பெரும் பேற்றினையும் திருமலையாழ்வார் தருவார். இப்பாசுரத்தில் வரும் ‘பிணி’ என்னும் சொல் சரீர சம்பந்தம் காரணமாக வருகின்ற எல்லா நோய்களையும் திருமலையான் தீர்ப்பான் என்பது ஆழ்வாரின் கருத்தாகும். திவ்ய கவியான பிள்ளைபெருமாள் அய்யங்காரும் ‘நோவினையும் நோயினையும் நோய்செய் வினையினையும், வீவினையும் தீர்த்தருளும் வேங்கடமே’ என்கிறார்.

      நமக்கென்று தீர்மானித்த வாழ்நாள் முடிகின்ற நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டாம். உடல் இளைத்து, நெஞ்சு இளைத்து ஏங்க வேண்டாம். அதற்கு முன்பாகவே பெருமானை வணங்கி விடுதல் வேண்டும். படமெடுக்கும் பாம்பினைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம் திருவேங்கடமாகும். அந்த திருமலையின் அழகிய சோலைகள், மணமிக்க மலர்கள் நிறைந்த பெரிய தடாகங்களைக் கொண்ட திருவேங்கடத்தை நோக்கி இளமைக் காலத்திலேயே சென்று சேருங்கள். தன்னுடைய ஸ்பரிசத்தாலே விரித்த படங்களையுடைய திருவனந்தாழ்வானை படுக்கையாகக் கொண்ட பெருமான் அப்படுக்கையைக் காட்டிலும் விரும்பி உறையும் இடம் திருமலையாகும் என்கிறார் ஆழ்வார்.    

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.   2929 

      கடினமான இடத்தில் மலர்களைத் தூவியது போன்று திருவடிகளைப் பரப்பி பூமியை அளந்து கொண்ட சர்வேஸ்வரனை, உயர்ந்த சோலைகளையுடைய ஆழ்வார் திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச் செய்த ஒப்பில்லாத ஆயிரம் பாசுரங்களுள் இந்த பத்து பாசுரங்களை அர்த்தத்துடன் சொல்ல வல்லவர்கள் கைங்கர்ய சாம்ராஜ்யத்தைப் (வைகுண்டம்) பெற்று உலகம் புகழும்படி பெருமானுக்கு அடிமை செய்து வாழப் பெறுவார்கள். ஆத்மாவினுடைய சொரூபத்திற்குத் தக்கதான கைங்கர்யத்தை விரும்பிய, இப்பாசுரத்தை ஓதுபவர்கள் உலகம் புகழ வாழ்வர். கொடியராயிருக்கும் பிரபுக்களை, அவர்கள் செய்யும் கொடுமையும் நெஞ்சிலே கிடக்கவும், பிழைக்க வேண்டி பெருமானை ஏத்துவார்கள் அன்றோ, என்ற கருத்தோடு இப்பாடல் அமைகிறது. 

வார் புனல் அம் தண் அருவி
     வட திருவேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
     பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
     உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
     அமரர் தொழப்படுவாரே.    2948 

      சம்சார நிலையிலுள்ள இப்பரந்து விரிந்த மண்ணுலகில் சிறந்த தீர்த்தங்களையுடையதும் அழகு மிக்க குளிர்ந்த அருவிகளையுடையதுமான, வடக்கு திசையில் அமைந்துள்ள மலைகளடர்ந்த திருவேங்கடத்தில் நின்றருளுகின்ற எம்பெருமானான வேங்கடவனையும், அதுபோன்று ஒவ்வொரு திவ்யதேசத்தில் மக்களுக்குக் காட்சி தருகின்ற பெருமான்களின் எல்லாவித திருநாமங்களையும் நாள்தோறும் வாயாரச் சொல்லியபடியும், இவ்வாறு அடிக்கடி பெருமானின் பெயரைச் சொல்லி வருவதால் அவர்கள் பித்தர்கள் என்று பல்வேறு நபர்களால் பரிகசித்துக்கூற, பல ஊர்களில் புகுந்தும், பல மனிதர்களின் நடுவில் புகாமலிருந்தும், உலக மக்கள் நகைக்கும்படியாகவும், அந்த நகைப்பொலியே தாளமாகக் கொண்டு நர்த்தனமாடிக் கொண்டும், ஆவல் பொங்க மகிழ்ச்சி கொள்வார்கள். அத்தகையவர்கள் வானவர்களாலே போற்றி வணங்கப் பெறுவார்கள். 

சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே.   2985 

      சொன்னால் விரோதம் வரும். ஆனாலும் சொல்லுகிறேன் கேளுங்கள். வண்டுகள் தென்னா! தெனவென ரீங்காரமிடும் மலர்கள் நிறைந்த திருவேங்கடத்தில் யானையைப் போன்ற கம்பீரமான என் அப்பன், பகவான் இருக்க என் நாவிலிருந்து வரும் இன்பப் பாடல்களை நான் வேறு ஒருவர் மீது இயற்ற மாட்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார். இதனைச் சொன்னால் மற்ற சமயத்தவரால் எனக்கு விரோதம் வரும் என்று மறைமுகமாக கூறுகிறார். பரம்பொருள் ஒன்றே என்பதை நம்மாழ்வார் பலமுறை கூறியுள்ளார். அந்தப் பரம்பொருள் திருமால் மட்டுமே என்று உறுதியாகக் கூறுகிறார். இத்தகைய உறுதியானது நமக்கும் வரவேண்டும். ஒரே பரம்பொருளை மனத்தில் நிறுத்தினால்தான் மன ஒருமைப்பாடு ஏற்படும் என்பதை இங்கு கூறுகிறார் ஆழ்வார்.  

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே     3061 

மழை ஒரு நாளும் மாறாதபடியாலே குளிர்ந்த அழகிய திருவேங்கட மலையிலே தாழ்ந்தாருக்கு முகங்கொடுக்கைக்காக வந்து நிற்கின்ற சீலம்பொருந்திய எம்பெருமான் விஷயமாக பணித்ததாம் இப்பதிகம். ஜலஸ்மிருத்தி குறையாத பரந்த பூஞ்சோலைகளால் சூழப்பட்ட குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் அவதரித்த காரிமாறன் சடகோபன் அருளிச் செய்த ஆயிரத்தில் இப்பத்துப் பாசுரங்களைப் படிப்பவர்களுக்கு, பரிமளம் மாறாத மலரில் நித்யவாசம் செய்கின்ற பிராட்டியானவள் எல்லாப் பாபங்களையும் போக்கி அருள்வாள். இத்திருவாய் மொழியை கற்பாருடைய தீவினைகளையெல்லாம் தீர்த்து வைப்பாள். பிராட்டியைப் போன்றே பெருமானும் அனைவருக்கும் அருள்வார். நம்மையும் எம்பெருமானோடு சேர்வதற்கான நிலையினை தீவினைகள் தடுத்து வருகிறது. அதனை பிராட்டியானவள் தீர்த்து வைப்பாள் என்பது இப்பாசுரத்தின் கருத்து. 

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந்தாமரைக் கண்ணற்கு என் கொங்கு அலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.    3282 

      அடியார்களுக்கு அருகில் வியாமோகித்துள்ளவரும், திருவிக்ரம அவதாரமெடுத்து பூமி முழுவதும் அளந்து கொண்ட மணவாளரும், கார்மேக வண்ண நிறத்தவரான அழகிய செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவரான எம்பெருமான் விஷயத்தில் ஈடுபட்டதனால், தேனொழுகும் மலர்களிலிருந்து நறுமணம் மிக்க கூந்தலையுடையனான எம்பெருமானை நினைத்து உடல் மெலிந்து, என் கை இளைத்து, அதனால் கைவளை நழுவி விழுகிறது. என் மகள் மாலுக்குச் சங்கிழந்தாள், வையமளந்த மணாளற்குச் சங்கிழந்தாள், நீலக்கருமேக நிறத்தவனுக்கு சங்கிழந்தாள், கோலச் செந்தாமரைக் கண்ணற்குச் சங்கிழந்தாள், அவன் வையமளந்த சீலகுணத்தை நினைத்தவாறு சங்கிழந்தாள், அவனது திருநிறத்தை நினைத்தவாறு சங்கிழந்தாள் என்று திருத்தாயார் வருந்திக் கூறுகிறாள். 

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனிவாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே.    3283 

      சங்கு, வில், வாள், தண்டு, சக்கரம் ஆகிய பஞ்சாயுதங்களைக் கையில் ஏந்தியவர் எம்பெருமான். கோவைக்கனி போன்று அதரத்தைக் கொண்டவர் என் போன்ற காதலிகள் பருகுவதற்கன்றோ என்று நினைந்து நினைந்து உருகுகிறாள். சிவந்த தாமரை போன்று திருக்கண்களைக் கொண்டவர், தேன் சிந்தும் மலர்களைக் கொண்ட, குளிர்ந்த அழகிய துழாய் மாலையைச் சூடிய திருமுடியைக் கொண்டவர், அத்தகைய பெருமானை எண்ணி எண்ணி துன்பம் கொண்டு என் மகள் தன்னுடைய மாந்தளிர் நிறத்தை இழந்துவிட்டாள். இப்பாசுரத்தில் தன்னானவள் பெண்மைக்கு அசாதாரன நிறமான மாமை நிறமிழந்து விட்டதாகக் கூறுகிறாள். பெருமானின் திருக்குணங்களைக் கண்டு நாம் அவருடன் இருக்க இயலவில்லையே என்று மகள் கூறும் கூற்றினை நினைத்து வருந்துவது போன்று தாயார் கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது. 

நிறம் கரியானுக்கு நீடு உலகு உண்ட
திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வன் அவற்கு
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என்
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே.    3284 

      கார்மேக நிறத்தவனும், பிரளய காலத்தில் சகல லோகங்களையும் உண்டு, பின் அதனை உமிழ்ந்த திருப்பவளத்தை உடையவரும், சிறிய வடிவில் மிகப் பெரிய உலகங்களை மறைத்து வைத்தவரும், சுழலும் திருவாழியை கையிலேந்தியவருமான பெருமானை நினைத்து அடர்ந்த கூந்தலை இழந்துதவிட்டாள்.  என் மகள் அக்கூந்தலை இழந்தது பெருமையாகக் கூறுகிறாள். நான் பிரிவாற்றாமையாலே உடல் வெளுத்துக் கிடக்க, அவரது மேனியழகு மட்டும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. உலகத்தைக் காத்தவனின் ரக்ஷகத்தன்மை நம்மிடத்திலே இல்லையே என்று வருந்துகிறாள். கையில் உள்ள திருச்சங்கைக் காட்டி என்னுள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெருமான் இப்போது திருமலையில் வாசம் செய்கிறான் என்கிறார் ஆழ்வார். 

பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு
மாடு உடை வையம் அளந்த மணாளற்கு
நாடு உடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடு உடை அல்குல் இழந்தது பண்பே.    3285 

      ருத்ரனை நான்முகன் படைக்க, அந்த பெருமை பொருந்திய நான்முகப் பிரமனை தனது திருநாபிக்கமலத்தில் படைத்தவனும், வசுமதியான பூமிதேவியை திருவிக்கிரம அவதாரமெடுத்து அப்பூமியை அளந்து கொண்ட மணாளனும், இராமாவதாரத்தில் இராமனுக்காக அனுமன் தூது சென்றதைக் கண்டு தனக்கு இவ்வாறு தூது செல்லும் பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்க, அந்த ஏக்கத்தைப் போக்க கிருஷ்ணாவதாரத்தில் நாட்டுரிமைக்காக பாண்டவர்களுக்காக தூது சென்றான் பெருமான். அத்தகையவனின் விஷயத்தில் ஈடுபட்டதனால் பரந்த இடையையுடையவளான என் மகள் தன் பண்பிணை இழந்து நிற்கின்றாள் என்று தாயார் மிகவும் வருந்திப் புலம்புவதாக ஆழ்வார் கூறுகிறார்.

பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு
மண் புரை வையம் இடந்த வராகற்கு
தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண்புனை கோதை இழந்தது கற்பே.   3286 

      சீர்மைமிக்க வேதங்களைப் பிரமனுக்கு உபதேசித்தருளின பரம புருஷனும், மண்மிக்க பூமித்தாயை இடர்ந்தெடுத்த வராகமூர்த்தியும், தெளிந்த நீரையுடைய பிரளய வெள்ளத்தில் பள்ளிகொண்ட தேவபிரானுமான எம்பெருமான் விஷயத்தில் ஈடுபட்டு கண்ணைக் கவர்கின்ற கூந்தலையுடையவளான என் மகள் கற்பை இழந்ததாக திருத்தாயார் புலம்புகிறாள். சந்தேக உணர்ச்சியும், விபரீத உணர்ச்சியும், மறப்பமுடைமையும் எம்பெருமான் தனது அடியார்களுக்கு அவ்வப்போது வழங்குவான். அதெல்லாம் உண்மையாக இருக்குமோ இருக்காதோ என்று தன் மகள் சிலசமயம் சந்தேகிக்கிறாள். அறிவற்றவர்களுக்கு தக்க நேரத்தில் அறிவு தந்து காப்பது போன்று இத்தருணத்தில் என் மகளைக் காப்பான் பெருமான் என்கிறாள் தாயார். 

கற்பகக் கா அன நல் பல தோளற்கு
பொன் சுடர்க் குன்று அன்ன பூந் தண் முடியற்கு
நல் பல தாமரை நாள் மலர்க் கையற்கு என்
வில் புருவக்கொடி தோற்றது மெய்யே.    3287 

      இப்பாடலில் தாயார் தன் மகளானவள் பெருமானை நினைத்து நினைத்து துன்புற்று சரீரத்தை இழந்தவளாக இருக்கிறாள். அழகிய கற்பகச் சோலை போன்ற திருத்தோள்களை உடையவனும், சுடர்மிக்க பொற்குன்றம் போன்ற மிக அழகிய திருஅபிஷேகத்தை உடையவனும், அப்போது மலர்ந்த அழகிய தாமரைப் மலர் போன்ற விலக்ஷணமான பல திருக்கைகளைப் பெற்றவனான எம்பெருமான் திறத்தில்  ஈடுபட்டதனால் வில் போன்ற பெரிய புருவத்தைக் கொண்டவளான என் பொற்கொடியாள் தன் உடம்பை இழந்து வாடுகிறாள். காலழும், நெஞ்சழியும், கண்சுழலும் என்னும்படியான நிலைமையினை எய்தினாள் என் மகள். தன் உடம்பை வாடி இழந்து வரும் இந்நிலை மாறாதா என வினவுகிறாள் திருத்தாயார். 

மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு
பை அரவின் அணைப் பள்ளியினானுக்கு
கையொடு கால் செய்ய கண்ண பிரானுக்கு என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே    3288 

      பெருமானின் மணம் கமழும் திருமேனியில் அன்றலர்ந்து பூத்தாற்போல் பொருந்தியிருந்துள்ள திருமுடி முதல் நூபுரம் வரையுள்ள திருவாபரணங்களைக் காட்சிக்கு இனியதாகும்படி அணிந்திருப்பவனுக்கு, தனது மெல்லிய ஸ்பரிசத்தினாலே விரிந்த படங்களையுடைய, வாசம், மென்மை, குளிர்ச்சி ஆகியவற்றைக் கொண்டவனும் சீற்றத்தைக் கண்ணில் தேக்கி வைத்தவனான ஆதிசேஷனைப் படுக்கையாக உடையவனுக்கு, திருக்கரங்களும், திருவடிகளும் செந்நிறத்தோடு கூடியவனான கண்ணபிரானுக்கு, என் பெண்ணானவள் தன்னுடைய சோபையை இழந்தாள். திருப்பாற்கடலில் கண்வளர்கின்றவனுடைய ஆபரணசோபை முதலானவைகளிலே அகப்பட்டு இவள் தனது லாவண்யத்தை இழந்தாள் என்கிறாள் திருத்தாயார். 

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பால் உண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.   3289 

      கண்ணபிரான் யமுனையில் நீராடும் ஆய்ச்சியர்களின் துகிலை வாரிக்கொண்டு குருந்த மரத்தில் ஏறுவது வழக்கம். அசுரனாக வந்தவனை தன் ஆவேசத்தாலே தழைத்துப் பூத்து நின்ற குருந்த மரத்தை வேரோடு சாயும்படி முறித்த தனிவீரனுக்கு, சகடாசுரன் இறக்கும்படியாக உதைத்த மணவாளனுக்கு, பூதனையானவள் பிணமாகும்படி அவளது விஷப் பாலினைக் குடித்த உபகாரனுக்கு, என்னுடைய வாசனை பொருந்திய கூந்தலையுடைய பெண்ணானவள் தனது மாண்பினை இழந்தாள். இவ்விதம் குருந்தொசித்தும், மாயச்சகடினை உதைத்தும், பூதனையென்கிற பேய்ச்சியினை அழித்தும் அவன் செய்த சிறு செயல்களை என் மகள் பாடிப் பாடி மகிழ்கிறாள். எவ்வளவோ பெருமையாக வாழ்ந்தவள் இவ்விதம் தனது மாண்பினை இழந்து தரைப்பட்டுக் கிடக்கிறாள். என்னே ஒரு பரிதாபத்தில் இவள் இருக்கிறாள் என்கிறாள் திருத்தாயார். 

மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண் புனை மென்முலை தோற்றது பொற்பே    3290 

      அழகு பொருந்திய வடிவத்தையும் வஞ்சனையையும் உடைய வாமனனாக அவதரித்தவனுக்கு, உயர்ந்த பிரகாசம் பொருந்திய மலை போன்ற சிவந்த ஒளியையுடைய திருமேனியை உடையவனுக்கு காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய, ஸ்ரீராமபிரானான காகுத்தநம்பிக்கு, நற்குணங்கள் நிறைந்த சக்ரவத்தி திருமகனுக்கு, குணங்களுக்கெல்லாம் நிலைகளமானவன், என்னுடைய ஆபரணங்களைத் தரித்த, மெல்லிய தனங்களையுடைய விரகதாபத்தைப் தாங்கிப் பொறுத்துக் கொண்டிருக்கும் என் பெண்ணானவள் பெருமானை நினைந்து தன்னழகாலே புறம்பு (பொய்யுரைத்தல்) ஒன்று அறியாதபடி அனுபவிக்கும் இவள் தனது அழகினைத் தோற்று நிற்கிறாள். தன்னழகாலே அவனை வசப்படுத்திக் கொள்ள பிறந்த இவள் அவனழகில் ஈடுபட்டு தன்னழகை இழந்து நிற்கிறாள் என்கிறாள் திருத்தாயார். 

பொற்பு அமை நீள் முடிப் பூந் தண் துழாயற்கு
மல் பொரு தோள் உடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என்
கற்பு உடையாட்டி இழந்தது கட்டே.    3291 

      அழகு பொருந்திய  நீண்ட திருமுடியிலே தரித்த அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையை உடையவனுக்கு, சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்லர்களோடு போர்செய்த தோள்களையும் வியப்பிற்குரிய செயல்களையுமுடைய உபகாரகனுக்கு, எல்லாமுமாக எல்லாவற்றிலும் சரீரமாக உடையவனாய் அவற்றின் குற்றங்களைத் தன்பக்கல் தட்டாமலே நிற்கின்ற மாயவனுக்கு அறிவுடைய என் மகளானவள் தன் மரியாதையை இழந்து நிற்கின்றாள் என்கிறாள் தாயார். ஒவ்வொரு பாடலிலும் ஒன்றை இழந்து வருகிறாள். நிறைவில் அவள் இழவாதது ஒன்றுண்டோ என்று கேட்கிறாள். அவனது திருமுடியின்மேல் இறைத்தன்மை கொண்ட திருத்துழாய் மாலையானது இவளது ஸ்பரிசம் பட்டு மலரத் தொடங்கியது என்கிறாள். சாத்தின சாந்து அழியாது, மல்லர்களை அழித்தவனை மாயபிரான் என்று அழைத்தாள் என்று பெருமானைப் பற்றிக் கூறுகிறாள். 

கட்டு எழில் சோலை நல் வேங்கடவாணனை
கட்டு எழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே.   3292 

      செறிவினையுடைய அழகு பொருந்திய நல்ல பரிமள வாசம் நிறையப்பெற்ற வண்ண மலர்ச்சோலைகளால் சூழப்பட்ட சிறந்த திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்றவனை, அரண்களின் அழகையுடைய தெற்குத் திசையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் அவதரித்த  ஸ்ரீசடகோபரால் அருளிச் செய்யப்பட்ட ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்த பத்துப் பாசுரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள் அழகிய தொடைகளையுடைய நித்திய சூரிகள் பெற்று வரும் அனுபவத்தை இவர்களும் நன்கு அனுபவிப்பார்கள் என்கிறார். இப்பதிகம் கற்றார்க்குப் பயனுரைத்து தலைக்கட்டுகிற பாசுரமாக அமைந்துள்ளது.  

      பகவானக் குறை கூறுவது போல் அவரது பெருமைகளை இப்பாசுரத்தில் எடுத்தியம்பியுள்ளார். பகவானின் பிரிவால் என் மகள் அடக்கத்தையும், பெருமைகளையும், இலவாண்யத்தையும் இழந்து நிற்கிறாள் என்று தாய் கூறுகிறாள். இது லௌகீக வாழ்வில் உழல்கிறவர்களின் கருத்து என்பதைக் கொள்ளலாம். 

உலகம் உண்ட பெருவாயா
     உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
     நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்கு ஆய் நின்ற
     திருவேங்கடத்து எம் பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம்
     கூடும் ஆறு கூறாயே.     3326 

      பிரளய காலத்தின்போது இவ்வுலகங்களையெல்லாம் திருவயிற்றில் வைத்து காத்தவனே! நிகரில்லா பெரும் புகழ் வாய்ந்த இறைவனே! மங்காத பிரகாசம் வாய்ந்த ஜோதி வடிவானவனே! வடிவத்திலும் குணப்பெருமைகளிலும் உயர்ந்து நிற்பவனே! என் உயிருக்கு ஒப்பானவனே! உலகுக்கு ஒரு திலகம் போன்று வாய்த்திருக்கும் திருவேங்கடமலையில் அனைவருக்கும் நின்று அருளும் அண்ணலே! பல தலைமுறைகளாக உனக்குத் தொண்டு செய்யும் குலத்தில் பிறந்த நான் உனது திருவடிகளை வந்தடையும் வழிவகையினை எனக்கு உறைப்பாயாக! என்று வேண்டுகிறார் ஆழ்வார். தன் ஆன்மாவில் இறைவன் வந்து கலந்துவிட்டதாகக் கூறுகிறார். தனது வடிவழகையும், கல்யாண குணங்களையும் காட்டி ஆழ்வாரை தன் வசம் ஈடுபடுத்திக் கொண்டார் என்பது இதன் கருத்தாகும். 

கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகித்
     கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திரு நேமி
     வலவா தெய்வக் கோமானே
சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ
     மலரும் திருவேங்கடத்தானே
ஆறா அன்பில் அடியேன் உன்
     அடிசேர் வண்ணம் அருளாயே     3327     

      மிகக் கொடிய வலிமைமிக்க அசுரர்களின் கூட்டமெல்லாம் பலப்பல துண்டங்களாகி, பின் சாம்பலாகி, தரைப்பட்டிக்கச் செய்தேயும், பின்னையும் சீறி எறி ஒளியாகி நிற்கின்ற திருச்சக்கரத்தினை வளைக்கரத்தில் ஏந்தியுள்ள, வேங்கடவன் நித்யசூரிகளின் தலைவனாக விளங்குகிறான். சேறுகள் நிரம்பப்பெற்ற சுனைகளிலே செந்தாமரை மலர்கள், சிவந்த தீப்பொறி போன்ற நிறத்தையுடையதாய் கொண்டு மலர்ந்துள்ளது. அளவிடப்படாத அன்பினை அருள்கின்ற திருவேங்கடத்தானே, உன் மீது மாறாத அளவில்லாத அன்புடைய அடியவனான நான் உன் திருவடியை வந்து சேரும்படி அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறார். இப்பாசுரத்தில் பெருமானின் காத்தருளும் கருணை குணத்தை நமக்கு எடுத்துரைக்கிறார்.

      விரோதிகளை எல்லாம் கிழங்கெடுக்கவல்ல திவ்யாயுதத்தினால் ஒளி பெற்றிருக்கிற நீ எனது விரோதிகளையும் போக்கி, நான் உன் திருவடிகளைச் சேரும்படி க்ருபைபண்ண வேணுமென்கிறார் ஆழ்வார். தாமரைக்கு பங்கஜமென்று பெயராதலால் சேறு நிரம்பிய சுனைகளில் அவை சிவந்த தீப்போலே தோன்றி மலர்கின்றனவாம். எண்ணெயாலே எரியும் விளக்கொழிய நீராலே எரியும் விளக்கு கண்டு அனுபவிக்கக்காணும் ஆசைப்படுகிறார். 

வண்ணம் அருள் கொள் அணி மேக
     வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும்
     அமுதே இமையோர் அதிபதியே
தெள் நல் அருவி மணி பொன் முத்து
     அலைக்கும் திருவேங்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர
     அடியேற்கு ஆஆ என்னாயே.   3329 

      அருளே வடிவெடுத்த   வடிவழகை உடைய  அழகிய மேகம் போன்றவனே!  மாய அம்மானே!  மனதில் புகுந்து  தித்திக்கும் அமுதே!  தேவாதிதேவனே!  தெளிந்த நல்ல அருவிகள் மணிகளையும் பொன்னையும்  முத்துக்களையும்  கொழித்துக் கொண்டு வரும்  திருவேங்கடத்திலிருப்பவனே!  ஸ்வாமியே!  உன் திருவடிகளில் வந்து சேரும்படி  அடிமைப்பட்ட அடியேனுக்கு  ஆவாவென்று இரங்கி அருள வேண்டும் என்கிறார்.

      பெருமானே! மருளே (ஒன்றுமறியாத நிலை) வடிவமெடுத்த எனக்கு அதனை நீக்க உனது அருளைப் பொழியலாகாதோ என்கிறார். என் நெஞ்சிலே புகுந்து என்றும் இனிமையாக இருக்கின்றாய். அழகிய கார்மேகம் போன்ற நிறத்தையுடையவனே! வியப்பிற்குரிய குணங்களைத் தன்னகத்தே பெற்றவனே! உயர்வு தாழ்வு பாராமல் அனைவருக்கும் அருளை வாரி வழங்குபவனே! இமையோர்க்கெல்லாம் அதிபதியாக விளங்கி அதன் மூலமாக மேன்மையை தெரிவிக்கின்றாய். அத்தகைய மேன்மை கொண்ட பெருமான் நல்ல நீரைக் கொண்டுள்ள பொய்கைகள் நிறைந்த திருமலையில் உள்ள பெருமானே! என் துன்பங்களைக் கண்டு ஆஹா ஆஹா என்று எனக்கு உன் திருவடிகளில் சேரும்படி அருளக்கூடாதா என்று கேட்கிறார். இப்பாசுரத்தில் நம்பிள்ளை பெருமானை ‘அண்ணலே’ என்கிறார். மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தலைவனை அண்ணல் என்று சொல்லப்படுவது இங்கு புலப்படுகிறது. 

ஆஆ என்னாது உலகத்தை
     அலைக்கும் அசுரர் வாழ் நாள்மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த
     சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
     விரும்பும் திருவேங்கடத்தானே
பூ ஆர் கழல்கள் அருவினையேன்
     பொருந்துமாறு புணராயே.     3329 

      அசுரர்கள் அனைவரும் சேர்ந்து இவ்வுலகிலுள்ள மக்களைத் துன்புறுத்துகிறார்கள். இரக்கமில்லாமல் அவர்களைக் கொல்ல வருகிறார்கள். இம்சிப்பதையே தொழிலாகக் கொண்டு மக்களை வதைத்து வருகிறார்கள். அவர்களை அழிப்பதற்காக பெருமான் நெருப்பைக் கக்குகின்ற அம்பினைக் கொண்டு அவர்களை அழிக்கின்றான். கடலைக் கடைந்து அதில் திரண்டு வந்த அமுதத்தினை தேவர்களுக்கு அளித்தான். ஆனால் அசுரர்களுக்கு அதனை அளிக்காமல் உரிய நேரத்தில் அவர்களை அழித்தான். அவ்விதம் அம்புகளை எய்த பெருமான் திருமாமகளை தன்னகத்தே வைத்துள்ளான்.

தேவனல்லாதவன் பிராட்டியின் சம்பந்தத்தாலே தேவனானான் என்பது வியாக்கியானக் கருத்தாக விளக்குகிறது. தேவர்களும் முனிவர்களும் விரும்பும் திருவேங்கடத்தானே உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் பற்றி வழியாக்கி அருள்வாயாக என்று வேண்டுகிறார் ஆழ்வார். 

புணரா நின்ற மரம் ஏழ் அன்று
     எய்த ஒரு வில் வலவா ஓ
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்
     நடுவே போன முதல்வா ஓ
திணர் ஆர் மேகம் எனக் களிறு
     சேரும் திருவேங்கடத்தானே
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்
     சேர்வது அடியேன் எந்நாளே?.  3330 

      தனித்தனியாக ஒரு நேர்கோட்டில் நின்றாற்போல் உள்ள ஏழு மராமரத்தை ஓர் அம்பால் வீழ்த்தினார் ஸ்ரீராமன். அன்றொரு காலத்தில் இராமாவதாரத்தில் அம்பெய்த திறமையான வில்லாளனாகத் திகழ்ந்தவரே! இரட்டை மரங்களுக்கு நடுவே கட்டிய உரலை இழுத்துச் சென்ற ஆதி முதல் நாயகனே!  நீருண்ட வலிமை மிக்க மேகங்களை ஒத்த கருமையான யானைகள் சேர்ந்து திரியும் திருமலையில் எழுந்தருளியிருக்கும் எங்களது அண்ணலே! வலிமைமிக்க சார்ங்கம் எனும் பெரிய வில்லைத் தாங்கிய எம்பெருமானே!  உனது அழகுமிக்க திருவடிகளை அடியேன் அணுகிப் பற்றுவது எந்நாளோ? என்று கேட்கிறார் ஆழ்வார். இப்பாசுரத்தில் வேங்கடவனை இராமனாகவும், கிருஷ்ணராகவும் பாவித்துப் பாடியுள்ளது சிறப்பாகும்.

பராக்கிரமத்தை உடைய ஶ்ரீராமன் சிவதனுசை முறித்து தனது வலிமைசைக் காட்டினான். கண்ணன் யமலார்ஜுனர்களுக்கு சாபவிமோசனம் தந்து தனது கருணையைக் காட்டினான். வலிமையான சார்ங்கத்தை ஏந்திய வேங்கடவனின் தெய்வீக ஆற்றலை, நினைத்து தாம் எப்போது அந்த திருவடிகளை அடையப் போகிறோம் எனக் கடும் ஏக்கத்தோடு கேட்கிறார் ஆழ்வார். 

எந்நாளே நாம் மண் அளந்த
     இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள்
     ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு
     செய்யும் திருவேங்கடத்தானே
மெய்ந் நான் எய்தி எந் நாள் உன்
     அடிக்கண் அடியேன் மேவுவதே?    3331     

      நாம் எப்போதும் இப்பூவுலகை, அந்த விண்ணுலகமும் தாவியளந்த திருமாலின் திருவடிகளையும் காண்பதற்குரிய நாள் எப்போது அமையும் என ஒரு நாளும் விடாமல் நின்றவண்ணம் பெருங்கூட்டமாய் வானவர்கள் அனைவரும் திரள் திரளாக வந்து துதிசெய்து பரம பக்தியுடன் தொழுது  மனம், வாக்கு காயம் என்ற த்ரிகரணங்களாலும் கொண்டு ஆராதிக்கும் திருமலையில் எழுந்தருளியுள்ள கோவிந்தனே! மெய் நிலையை நான் அடைந்து உன் திருவடிக் கீழ் அடியவனான நான் சேர்ந்து அமையும் நாள் எந்நாளோ என்று வினவுகிறார் ஆழ்வார். இப்பாசுரத்தில் பரமபதத்திற்குத் தேவையான தகுதியைத் தான் பெற அருளவேணுமாறு வேண்டிய பின்னரே திருவடி நிழல் தஞ்சம் புகுவது பற்றிக் கூறுகிறார்.      இப்பாசுரத்தில் மெய் என்பது பணிதல், நோன்பிருத்தலும், உடல் என்பது ஐம்புலன்களை அடக்குதலாகும். மெய்யான நம்பிக்கையுடன், பற்றுதலுடன், நாவினாலும் மனத்தினாலும் வழிபாடு செய்தல் எனக் கொள்ளலாம். 

அடியேன் மேவி அமர்கின்ற
     அமுதே இமையோர் அதிபதியே
கொடியா அடு புள் உடையானே
     கோலக் கனிவாய்ப் பெருமானே
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே
     திருவேங்கடத்து எம் பெருமானே
நொடி ஆர் பொழுதும் உன பாதம்
     காண நோலாது ஆற்றேனே.    3332 

      எம்பெருமானே! நான் அடைந்து அனுபவிக்கின்ற அமுதமே! தேவர்களின் அதிபதியே! பகைவரைக் கொல்லும் கருடனை கொடியில் கொண்டவனே! அழகிய கனிபோன்று திருவாயைக் கொண்ட பெருமானே! துன்பம் தரும் வினைகளைத் தீர்க்கும் மாமருந்தே! திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! உன்னுடைய திருவடிகளைக் காண நான் எந்த நோன்பும் இருக்கவில்லை. பல பாவங்களைப் புரிந்துள்ளேன். ஆனாலும் உனது திருவடி பாக்கியத்தை நான் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். உன்னைப் பிரிந்து ஒரு நாளும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்கிறார் ஆழ்வார். இப்பாசுரத்தில் குழைந்த புன்முறுவலைக் காட்டவே, புன்னகையுடன் கூடிய எளிமைத் தன்மையுடன் அடியவர்க்கு மனமிரங்கும் கல்யாண குணமான சௌலப்பியத்தை குறிப்பதாகச் சொல்லலாம். 

நோலாது ஆற்றேன் உன பாதம்
     காண என்று நுண் உணர்வின்
நீல் ஆர் கண்டத்து அம்மானும்
     நிறை நான்முகனும் இந்திரனும்
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ
     விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன்பால்
     வந்தாய் போலே வாராயே.    3333 

      உன் திருவடிகளை வணங்க விரதம் எதுவும் இருக்கவில்லை என்று நான் மட்டுமா சொல்கிறேன். நுட்பமாக அறியக்கூடிய எல்லாத் தேவர்களும் (பிரம்மாதி தேவர்களும்) மீன் போன்ற விழிகளையுடைய அவரவர் தேவியருடன், அரம்பையர், பணிப்பெண்களுடன் விரும்பி வந்து வழிபடும் திருவேங்கடத்தானே! அவர்களும் அப்படித்தான் முறையிடுகிறார்கள். கண்ணனாய் அவதரித்து எல்லோரையும் மயக்கியது போல் அடியேன் அருகிலும் வரவேண்டும் என்று கூறுகிறார்.

      உனது திருப்பாதங்களை தரிசனம் செய்ய நான் நோன்பு எதுவும் இருக்கவில்லை. ஆனாலும் ஒரு நொடிப் பொழுதும் என்னால் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறேன். தவம், தியானம் என்று எதையும் செய்யாமல் போனாலும் பகவானை அடைய வேண்டும் என்ற விருப்பம் பூர்விக புண்ணியத்தால் ஏற்படுகிறது. ஆழ்வார் அந்த பெரும் பாக்கியத்தைப் பெற்றுவிட்டார் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும். 

வந்தாய் போலே வாராதாய்
     வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய்
     நால் தோள் அமுதே எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப்
     பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம்
     அகலகில்லேன் இறையுமே.   3334 

      உன்னை விரும்பாதவர்கள் விஷயத்தில் வருவதைப் போலே இருந்து வராமல் இருப்பாய். அடியார்கள் விஷயத்தில் வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்திருக்கும்போது அவர்கள் ஆசைப்படி அனுபவத்தைக் கொடுக்க வருவாய். சிவந்த தாமரை போல் அழகாக இருக்கும் திருக்கண்களையும், சிவந்த கனிபோல் இருக்கும் திருவதரங்களையும், அடியார்களை எடுத்தணைக்கும் திருத்தோள்களையும் உடையவனே! அடியார்களுக்கு அமுதம் போன்று இருக்கும் நிலையினை எனக்குக் காட்டிக் கொடுத்து என் உயிராய் இருப்பவனே! நினைத்ததெல்லாம் கொடுக்கக்கூடிய விலையுயர்ந்த இரத்தினங்களினுடைய ஒளியானது இரவைப் பகலாக்கும் ஒளியையுடைய திருமலையில் வாழ்பவனே! ஐயோ! உனது திருவடிகளை அடியேன் சிறிதும் அகலமுடியாதவனாக இருக்கிறேன் என்கிறார் ஆழ்வார். அரிய பொருளை களவாட வரும் கள்வர் எதிர்பாரா நேர்த்தில் அற்றம் பார்த்து நுழைதல் போன்று அரிய பொருளாகிய ஆன்மாவைக் கவர இறைவனும் எதிர்பாரா நேர்த்தில் வருவான் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது.     

அகலகில்லேன் இறையும் என்று
     அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று
     உடையாய் என்னை ஆள்வானே
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள்
    விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்
   அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.    3335 

      பெருமானே! உன்னை விட்டு நான் என்றும் பிரியமாட்டேன் என்று பிராட்டியே பரமன் மார்பில் வந்து குடிகொண்ட திருமார்பினைக் கொண்டவனே! தாமரை மலரில் அவதரித்து திருமகளானவள் வந்து சேர்ந்துள்ள ஒப்பில்லா பெருமை வாய்ந்தவனே! வானுலகம், பூவுலகம், நாகலோகம் ஆகிய மூவுலகங்களிலும் தங்கியிருக்கும் நாயகனே! என்னை அடிமையாக ஏற்றவனே! நிகரற்ற தேவர்கள் மற்றும் முனிவர்களின் பேரன்பிற்குப் பாத்திரமான திருமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணலே! எனக்கு தஞ்சம் புக வேறு இடமில்லாமல் நான் உன் திருவடியில் வந்து சரணடைந்தேனே என்று கூறுகிறார் ஆழ்வார். கல்யாண குணங்களான வாத்சல்யம், சுவாமித்துவம், சௌசீல்யம், சௌலப்பியம் என்ற நான்கு குணங்களைக் காட்டி அடியார்களை தம்பக்கம் ஈர்க்கிறான். அத்தகையவன் திருமலையில் சேவை சாதிக்கிறான். 

 அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்
     வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்
     பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
     திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
     பெரிய வானுள் நிலாவுவரே.     3336 

      தன்னுடைய திருவடிகளின் கீழ் தஞ்சமெனப் புகுந்து நல்வாழ்க்கையை வாழுங்களென்று திருக்கைகளால் தன் திருவடிகளைக் காட்டி எல்லோருக்கும் திருவருள் செய்யும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமானை, பழமையும் பெருமையும் கொண்ட திருக்குருகூரில் வாழும் சடகோபன் தனது வினைப்பயன்களை முடிப்பதற்குச் சொன்ன ஓர் ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களையும் சிக்கெனப் பிடித்தவர்கள் இறைவனின் பரமபதமாம் பெரிய வானில் என்றும் நிலைத்து வாழ்வார்கள்.

எம்பெருமான் தன் அடியவர்களிடம் அமர்ந்து புகுந்து வாழுங்கள் என்கிறார். ஆழ்வார் பாடிய இப்பாடல்கள் உலக வாழ்வின் துயரங்களை முடித்து வைக்கக் கூடியதாக அமைந்துள்ளது எனலாம். ஆழ்வார் தான் பெருமானிடம் சரணாகதி அடைந்தது அனைத்து மக்களுக்கும் சேர்த்துதான். எனவே இப்பாசுரத்தை பக்தியுடன் சொல்லும் நிலையில் நாமும் சரணாகதி அடைந்தது போலாகும் என்பது இதன் கருத்தாகும். 

நங்கள் வரிவளை ஆயங்காளோ
     நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம்
     நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
     தட முலை பொன் நிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
     வேங்கடவாணனை வேண்டிச் சென்றே.     3458 

      அழகிய வளையல்களை அணிந்த நம்முடைய தோழிகளே! நம்மிடத்துப் பகை பாராட்டுகின்ற தாய்மாரின் முன்பு சொல்ல வெட்கப்பட்டு உயிர்த்தோழிகளான உங்களுக்கு மாத்திரம் கேட்கும்படி நான் ஒரு வார்த்தை சொல்லப் பார்க்கிறேன். ஆனாலும் என்னுடைய நிலைமையினை நான் ஒரு விதத்திலும் பாசுரங்களாகப் பாடி அதனைச் சொல்லும் வழி அறியாமலிருக்கிறேன். இருப்பினும் நான் சொல்கிறேன் கேளுங்கள். வெவ்விய பார்வையைக் கொண்ட பெரிய திருவடியையுடைய எம் ஸ்வாமியான திருவேங்கடமுடையானைக் காண ஆசைப்பட்டு புறப்பட நினைத்ததன் காரணமாக கைவளைகள் கழன்று விழும்படி நான் மெலிந்து போனேன். அதனால் என் மேனி ஒளியை இழந்து நிற்கிறேன். எனது இளமையான தனங்கள் பசலைநோய் கண்டு உடலும் தளர்ந்தவளாகி இன்னல் கொண்டு நிற்கிறேன் என்று வருந்திக் கூறுகிறாள். 

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான்
நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே.   3586 

      நம்முடைய நல்வினை தீவினை ஆகிய இருவினைகளையும் இல்லாமல் செய்கிற பெருமான், அதன்மூலம் நாம் இன்னோர் உடம்பில் புகுந்து இன்னொரு பிறவி எடுக்காதபடி செய்து நம்மை உய்யக் கொள்கிறவன். அத்தகைய பெருமான் நின்ற திருக்கோலத்தில் உள்ள திருவேங்கடமலை இந்தப் பரந்த உலகத்திலே உள்ளது. தேவர்களெல்லாம் அங்கு சென்று கைதொழுங்கள் என்கிறார். மேலும் பெருமானிடம் கூறும்போது திருமலை இந்நிலத்தேயுள்ளது, காலமும், நெஞ்சழியும், கண்சுழலுமென்றுக்கின்ற நான் திருமலை சென்று அனுபவிக்க பாக்கியவனானேன், எனவே திருமலையோடு பரமபதத்தை சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று ஆழ்வார் பெருமானிடம் தீர்மானமாகச் சொல்லி விடுகிறார்.

      புண்ணியமென்றும் பாவமென்றும் இரு வகைப்பட்ட கருமங்களானவை வாஸகையோடே போகும்படியுள்ளது. பாவம் போலே புண்யமும் கழியவேணும். பாவம் நரகத்திலே கொண்டு சேர்க்கும். புண்யம் ஸ்வர்க்கத்திலே கொண்டு சேர்க்கும். முமுக்ஷுக்களுக்கு ஸ்வர்ககத்தோடு நரகத்தோடு வாசியற்றிருக்கையாலே புண்யமும் சேர்ந்துள்ளது. அநுபவித்தே அறவேண்டிய இவ்விருவினைகளை எம்பெருமான் க்ருபா விசேஷத்தாலே அறுத்தொழிக்கப்பட வேண்டும்., 

மேயான் வேங்கடம்
      காயாமலர் வண்ணன்
பேயார் முலை உண்ட
      வாயான் மாதவனே3716 

      காயாத மலர் போன்று அன்றலர்ந்த மலரையொத்த திருமேனி நிறத்தையுடையன். கொடிய பூதனையின் தனத்தின் விஷப்பாலை அருந்தி அவளை முடித்தவன் நமக்கெல்லாம் அருளியவன். அப்படிப்பட்ட திருமால் குளிர்ச்சி மிகுந்தத் திருவேங்கட மலையில் வாசம் செய்கிறார். அவன் கண்ணுக்குப் புலப்படாதவன், பற்பல உருவங்களைக் கொண்டவன் என்று சாத்திரங்கள் பகர்கின்றன. அடியார்கள் அனைவரும் அவனுடைய திருவடிகளைப் பற்றுவதற்காகவே அவன் திருவேங்கடத்தில் வாசம் செய்கிறான். திவ்யமங்கள ரூபமான வடிவத்தில் திருமலை முதலான திவ்ய தேசங்களில் கோயில் கொண்டு நமக்கு காட்சி அளிக்கின்றான்.

      எம்பெருமாளுக்கு ரூபமில்லை என்றும், அவன் கண்ணுக்குப் புலப்படாதவனாயுள்ளான். சம்ஸாரிகளான உங்களைத் திருவடி பணிவித்துக் கொள்வதற்காகவே திருமலையிலே பொருந்திவார்த்திக்கிறவன். தன்னுடைய சங்கல்பத்தினால் பாரிக்ரஹிக்கப்பட்ட பல திருவுருவங்களை உடையவன் என்றும் சொல்லியிருப்பதுண்டு..  அத்திருமேனியைக் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின நிலங்களிலே அடியார்க்குக் காட்டிக் கொடுத்தருளா நின்றான். 

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே    3740 

      பிரளய காலத்தில் ஒப்பற்றவனாக, முதல்வனாக இருந்தவன் எம்பெருமான்.  அவன் மாலிருஞ்சோலை மலை போலவும், திருப்பாற்கடல் போலவும் என் சிரசை நினைத்துள்ளான். வைகுண்டத்தைப் போலவும் குளிர்ச்சி மிகுந்த வேங்கடமலை போலவும் என் சரீரத்தை விரும்புகிறான். அரிய  பெரிய மாயமான என் உயிராய், மனமாய், பாடலாய், செய்கைகளாய் இருக்கும் திருமால் ஒரு நொடிப் பொழுதும் என்னைப் பிரிவதில்லை என்கிறார் ஆழ்வார்.

      மாலிருஞ்சோலை, திருப்பாற்கடல், திருநாடு, திருவேங்கடம் போன்ற திவ்ய தேசங்களில் தானெழுந்து அருளியிருக்கும் பெருமான் தனது அன்பினை என்னிடம் காட்டி என்னைவிட்டு பிரியாதிருக்கிறான். இரண்டு திருமலைகளிலும் பரவியூகங்களில் காணும் விருப்பமெல்லாம் தன் மேனியில் காண்கிறான் என்கிறார். ஆழ்வார் பகவானை நொடிப் பொழுது கூட பிரியாத நிலையில் உள்ளார். ஆனால் நாமோ அவரை நினைப்பதே இல்லை. சிற்றின்ப வாழ்வில் சிதறுண்டு, துன்பங்களில் உழன்று பின் மரணத்தைத் தழுவி, அரிதான இம்மனித வாழ்வை வீணடிக்கின்றோம். இத்தகைய நிலை வேண்டாம் என்று ஆழ்வார் நமக்கு அறிவுறுத்துகிறார்.

      


106. திருவேங்கடம் - திருப்பதி

               பெரியாழ்வார்                                                                                      பெரியாழ்வார் திருமொழி      ...